யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி புதிய பொருளாதார முயற்சிகள் | தினகரன் வாரமஞ்சரி

யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி புதிய பொருளாதார முயற்சிகள்

வடக்கில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி புதிய பொருளாதார முயற்சியை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் முதல் கட்டமாகவே விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் தெரிவித்தார். 

வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அவர் வர்த்தகர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

புதியதாக ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்படும் என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, சந்திரிகா, ராஜபக்ச அரசாங்கங்களில் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த நாடு எனும் கருத்துக்களை உள்ளடக்கி, அதனை ஆய்வு செய்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

வவுனியா போன்ற பகுதிகளில் அனைத்து இனத்தவர்களும் வசிக்கிறார்கள். நாம் நினைப்பது நாட்டிலுள்ள அனைவரையும் இணைத்து அதிகார பரவாலாக்கல் என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகும். போரின் காரணமாக பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவற்றை நாங்கள் நிவர்த்தி செய்திருக்கிறோம். எஞ்சியவற்றையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். காணிகளை மீள கையளிப்பதுடன், காணாமல் போனோர் பற்றிய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்துடன் ஒருக்கிணைந்தவாறு சுயாதீனமான ஒரு குழுவை ஸ்தாபித்திருக்கிறோம். இப்போதைக்கு அவர்கள் சிறு சிறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்கள். 

அதேபோல அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் கால எல்லை தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது. காணாமல் போன குடும்பங்களின் துயரம் எமக்கு நன்றாகத் தெரியும். அதே போல பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதுடன், போரில் காயமடைந்தவர்கள் தொடர்பிலும் நாம் கவனமெடுத்து வருகிறோம். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். 

இன்று பயமில்லாத அச்சமில்லாத, சட்டத்தின் மூலம் செயற்படுகின்ற ஒரு சமூகம் காணப்படுகின்றது. இவற்றை நாம் பாதுகாத்துக் கொண்டு முன்செல்ல வேண்டும். முக்கியமாக இங்கு கேட்பது வடக்கிற்கு நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று. வடக்கை அபிவிருத்தி செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதை தெரிவிக்கிறேன். இலங்கையை அதிகூடிய மத்தியதர வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதே எமது நோக்கம். வன்னியில் விவசாய, மீன்பிடி துறைகளை நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நெல் மற்றும் தென்னை, கால்நடை வளர்ப்பு உற்பத்தியை அதிகரிப்பதுடன், நாட்டின் வரட்சியான பகுதிகளிலும் உணவு உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும். 

புதிய ஒரு பொருளாதார முறைமையை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம். அதற்காக விமான நிலையத்தை நாம் அங்கு திறந்து வைத்திருக்கிறோம். அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். மன்னார் மற்றும் பூநகரி, வடமராட்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா வலயத்தை ஸ்தாபித்திருக்கிறோம். நிலாவெளியில் இருந்து வடக்கு நோக்கி சுற்றுலா பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். 

இதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தக துறையின் ஒரு கேந்திர நிலையமாக வவுனியா மாற்றி அமைக்கப்படும்.

தற்போது வவுனியா வளாகம் பல்கலைக் கழகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், மதவாச்சி பகுதிகளிலே கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி தொழில் துறை கல்வியை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கிறது என்றார். 

வவுனியா விசேட நிருபர்  

Comments