ஒரு வேட்பாளரின் வாக்கை இன்னொருவருக்கு கொடுக்க முடியுமென்பது பச்சைப்பொய் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு வேட்பாளரின் வாக்கை இன்னொருவருக்கு கொடுக்க முடியுமென்பது பச்சைப்பொய்

வாக்காளர்கள் சரியாக சிந்தித்து இனம், அடையாளம்  வேறுபாடுகளுக்கப்பால் யார் மிகச் சிறந்த வேட்பாளரோ அவருக்கு  தங்களது  வாக்குகளைப் போட வேண்டும்  என தேர்தல்  ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார். தினகரனுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படவுள்ளன?  

பதில்: ஒவ்வொரு வாக்காளருக்கும் மூன்று தெரிவுகள்  இருக்கின்றன. அதனை ஒன்று, இரண்டு அல்லது மூன்று என்று வழங்க முடியும்.  முதலாம் விருப்பு வாக்கு மட்டும் தான் முதலில் எண்ணப்படும். வாக்குகளின்  அடிப்படையில் முதலில் வெற்றிபெற்ற இரண்டு வேட்பாளர்கள் தெரிவு  செய்யப்படுவர்.

அவர்களில் ஒருவருக்கேனும் 50 வீதமும் 1 வாக்கும் கிடைக்கப்  பெறாவிடில் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். இருவரும்  சமனான வாக்குகளைப் பெறுவார்கள் எனின் நாணய சுழற்சி மூலம் வெற்றியாளரைத்  தீர்மானிப்போம்.  

இந்த விடயம் 1981 ஆம் ஆண்டு சட்டத்தில் இருக்கிறது.  ஆனால் ஒருபோதும் அவ்வாறு வாக்குகளை எண்ண வேண்டிய கட்டம் ஏற்படவில்லை.  அத்தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு 50 வீதமும் 1 (50%+1) வாக்கும்  இருந்தது.  

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல்களில் விருப்பு வாக்கின் முக்கியத்துவம் என்னவென்று கருதுகின்றீர்கள்?  

பதில்: இலங்கையின் கட்சி அரசியல் போக்கில் அனேகர் நம்பிக்கை  இழந்திருப்பதால், ஏன் வாக்களிக்க வேண்டும்? வாக்களிப்பைப் புறக்கணிப்பதே  சிறந்தது என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியான நிலைப்பாட்டில் சிலர்  இருப்பார்களானால் அவர்கள் தங்களது வாக்குப்பலத்தைப் பயன்படுத்தி,  இருப்பவர்களில் நல்லவருக்கு வாக்களித்து அரசாங்கத்தை தம்முடைய அரசாங்கமாக  மாற்ற வேண்டும்.  

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் வாக்குச் சீட்டு பற்றி உங்களது கருத்து என்ன?  

பதில்: சில வேட்பாளருக்குப் பின்னால் போலியாகச் செயற்படும்  வேட்பாளர்கள் இருக்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது  கொள்கைகளை தெளிவு படுத்துவதற்காக அவர்களுக்கு 45 நிமிடம்  வழங்கப்படுகின்றது. இந்த இலவச வசதிகளை பயன்படுத்தி சிலருக்கு வாக்குப்  போடாதீர்கள் என்று கூறுவதற்காக அவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களாக  இருந்து கொண்டு இன்னொருவருக்கு வாக்கு போடுங்கள் என்று சொல்ல முடியாது.  

அது தவறானது என்றாலும் துரதிர்ஷ்ட வசமாக மக்களுக்கு தேர்தலில்  போட்டியிடும் ஜனாநாயக உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையில் அதனை எம்மால்  நிறுத்த முடியாது.  

சட்டத்தின் அடிப்படையில் 35 வயதுடைய சில  நிபந்தனைகளுக்குட்டபட்ட யாருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வழி  இருக்கிறது. சட்டத்தில் அதற்கான ஏற்பாடு இருப்பதால் அதனை நாங்கள்  கட்டுப்படுத்துவது கஷ்டமாகும்.  

கேள்வி: இம் முறை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டு தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?  

பதில்: இந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள்  போட்டியிடுவதால் பயன்படுத்தப்படும் வாக்குச்ச்சீட்டின் அளவு 26  அங்குலமாகும். வாக்குச் சீட்டு நீளமாக இருப்பதால் வாக்குச் சாவடியில்  வைத்து நாம் எழுதும் போது அரைவாசி வெளியில் தெரியக்கூடியதாக நீட்டிக்  கொண்டிருக்கும். அதனால் நீங்கள் யாருக்கு வாக்குப் போடப் போகின்றீர்கள்  என்று தெரிய வரலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு  கடினமானது. இந்த நீளமான வாக்குச் சீட்டுக்களை உள்ளடக்குவதற்கு நாங்கள்  வைத்திருக்கும் தேக்குமரப் பெட்டிகள் காணாது. இந்தளவு பெரிய தேக்கு மரப்  பெட்டிகளை செய்வது அதிக செலவாகும். அதற்காக பிளாஸ்டிக்காலும், காட்போடாலும்  புதிய பெட்டிகளை செய்திருக்கிறோம்.  

எந்தப் பெட்டிக்கும் ஒரு பூட்டுப் போட வேண்டும் என்று  சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. எல்லா தேர்தல் முகாமைத்துவ நடைமுறைகளும்  சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிலர் அதனை சவாலுக்குட்படுத்த  முடியும் என்பதனால் பிய்த்துத் திறக்கக் கூடிய காட்போட் பெட்டிக்கும்  நாங்கள் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறோம்.  

26 அங்குலம் நீளமான வாக்குச்சீட்டில் கிடையாக 35 வரிசைகள்  உள்ளன. ஒவ்வொரு வரிசையும் நிலைக்குத்தாக மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  முதல் வரிசை (Column) 4 அங்குலம் நீளமானது. அதில் வேட்பாளரின் பெயர்  முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் உள்ளது.  அதற்கு அடுத்து ஒரு அங்குல நீளத்தில் பெட்டியொன்று காணப்படும். அதில்  கட்சியின் சின்னம் காணப்படும். கடைசிப் பெட்டிதான் நீங்கள்  வாக்களிப்பதற்கானதானதாகும். இதில் ஒரு புள்ளடியிட்டால் உங்கள் நோக்கத்தை  தெரிந்து கொண்டு வாக்கை எண்ணுபவர் கணக்கிலெடுப்பார். தெரிவத்தாட்சி  அலுவலருக்கு வாக்காளரின் நோக்கத்தை அறிந்து கொண்டு வாக்கை எண்ணுவதற்கு  உரிமையுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடியிடப்பட்டால் அவ்வாக்கு ஏற்றுக்  கொள்ளப்படமாட்டாது. விருப்பு வாக்கு 1,2,3 என்றோ அல்லது 1,2 என்றோ அல்லது  1,3 என்றோ அளிக்க முடியும்.  

அதோடு வாக்குச் சீட்டு நீளம் என்பதால் நேரம் கூட எடுக்கும்.  அதனால் வழமையாக காலை 7.00 மணியிலிருந்து பி.ப. 4.00 மணி வரை என்று  வைத்திருந்த நேரத்தை காலை 7.00 – பி.ப. 5.00 வரை அதிகரித்துள்ளோம்.  

ஒரு வாக்குச் சாவடியில் 1200 வாக்காளர்களுக்கு  வாக்களிப்பதற்காக ஏதுவாக வரிசை அமைத்துக் கொடுக்கப்படும். அதற்கு அதிகமாக  இருந்தால் அவர்களுக்கு இரண்டு வரிசைகள் அமைத்துக் கொடுக்கப்படும். 2400  வாக்காளர்களுக்கு அதிகமான வாக்காளர்கள் உள்ள இடங்களில் பெண்களுக்கென்று  மூன்றாவது வரிசை அமைத்துக் கொடுக்கப்படும்.  

கேள்வி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் அவருக்குக் கிடைக்கப் பெறும் விருப்பு வாக்கை இன்னொருவருக்கு வழங்க முடியுமா?  

பதில்: கிழக்கு மாகாணத்தில் ஒரு வேட்பாளர் இருக்கின்றார்.  அவர் தனக்கு இரண்டாம் வாக்கை இடுமாறு கேட்கின்றார். அவரே தான் வெல்லமாட்டேன்  என்றும் சொல்லிவிட்டு தனக்கு  கிடைக்கும்  இரண்டாம்  வாக்கை இன்னொருவருக்கு கொடுக்க முடியும்  என்று கூறுகிறார். அது ஒரு பச்சைப் பொய். அவர் தோல்வியுற்றால் தோற்றதுதான்.  தனக்குக் கிடைத்த வாக்கை இன்னொரு வேட்பாளருக்கு மாற்ற முடியாது. அந்தக்  கட்டத்தில் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு முதலாவது  அல்லது இரண்டாதாக வந்த வேட்பாளருக்கு கொடுக்கப்படும். இவர் கூறுவது  போலசெய்யப்படாது.  

இது இந்த வேட்பாளரால் முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரமாகும்.  தேர்தலின் நேர்மைத் தன்மையை பாதிக்கிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு  நடவடிக்கையெடுக்கும் என்று நம்புகிறேன்.  

கேள்வி: தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் நடைமுறைகள் தொடர்பில் நீங்கள் கூறும் அறிவுரை என்ன?  

பதில்: வாக்காளர்கள் முதலில் தம்மைப் பதிவு செய்திருக்க  வேண்டும். அதனை அவர்கள் தேர்தல் திணைக்கள வலையமைப்பில் சரிபார்க்கவும்  முடியும். தேர்தல் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் தேசிய அடையாள  அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் என 7 அடையாள அட்டைகளில்  ஏதாவதொன்றை அடையாளத்தை நிரூபிப்பதற்காக தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.   

வாக்காளர்கள் சரியாக சிந்தித்து இனம், அடையாளம்  வேறுபாடுகளுக்கப்பால் யார் மிகச் சிறந்த வேட்பாளரோ அவருக்கு உங்களது  வாக்குகளைப் போட வேண்டும். 

கேள்வி: ஆணைக்குழுவின் கடமைகளை தெளிவுபடுத்த முடியுமா?  

பதில்: வாக்காளர் இடாப்பை தயாரிப்பதும், நீதியானதும்  நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதும் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான  கடமைகளாகும். அதனோடு சார்ந்த நிறுவன ரீதியான இடைப்பட்ட வேலைகளாக கடந்த  தேர்தல் காலங்களில் விட்ட தவறுகளை சீர்திருத்துவது, அடுத்து வரும்  தேர்தலுக்கான திட்டமிடல்களை மேற்கொள்வது என பல தரப்பட்ட வேலைகள்  காணப்படுகின்றன.  

கேள்வி: தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் உடனடி நடவடிக்கை என்ன?  

பதில்: எமது சமுதாயத்தில் பெரியோருக்கு எதிராக நிற்பது  கொஞ்சம் கஷ்டமான காரியம். எல்லோரும் சமன் என்ற வகையில் யார் குற்றம்  செய்தாலும் தண்டிக்க வேண்டும். எங்களுடைய நடைமுறைகளில் அவை நடப்பதில்லை.  

உதாரணமாக கடந்த உள்ளூரா ட்சித் தேர்தலில் ஒரு கட்சியினர்  வடக்கில் புத்த கோயில் கட்டுவதற்கு தாங்கள் 5000 லட்சம் ரூபாய் தருவதாகச்  சொன்னார்கள். சட்டத்தில் சமயத்தையும் தேர்தலையும் இணைப்பது மிகப்பெரிய  குற்றம். அப்போது சிவாஜிலிங்கம் எழுத்து மூலம் ஒரு முறைப்பாட்டைக்  கொண்டுவந்தார். அது கையளிக்கப்பட்டு இரண்டு வருடமாகின்றது. அதுவிடயம்  தொடர்பாக நான்கு தடவையாவது கேள்வி எழுப்பியிருப்பேன் ஒன்றும் நடக்கவில்லை.  ஏனென்றால் பெரியோருக்கு எதிராகப் போவது எங்களுடைய நடைமுறையில் இல்லை. அதன்  படி நாங்கள் எல்லோரும் சமம் என்றதும் ஒரு பொய்க் கூற்று. எல்லாரும் சமம்  என்றால் அது எல்லாருக்கும் சமமான சட்டமாக இருக்க வேண்டும்.  

அதேபோன்று ஒரு கட்சி கோயில் ஒன்றில் ஐயரிடம் பூசைவைத்து தனது  தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது. அதைப்பற்றி ஒரு முறைப்பாடு  கிடைக்கப்பெற்றது. அதேபோன்று ஒரு திருச்சபையில் ஒரு அரசியல்வாதிக்கு எதிராக  அவரை கேலி பண்ணி புத்தகமொன்றையே அடித்துக் கொடுத்தார்கள். அவ்வாறு செய்வது  சட்ட விரோதம்.  

கேள்வி: ஒரு பிரஜை என்ற வகையில் வாக்களிக்கும் உரிமை  எல்லோருக்கும் இருக்கின்றது. வெளிநாடுகளில் இடம்பெயர்ந்திருக்கும் இலங்கைப்  பிரஜைகள் தமக்கான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு  வசதியேற்படுத்துவது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு கவனத்திலெடுத்துள்ளதா?  

பதில்: சட்டத்தை உருவாக்குவது பாராளுமன்றத்தின் வேலை.  சட்டத்தை உருவாக்கிய பின்பு அதை நடைமுறைப்படுத்துவதுதான் எங்களுடைய வேலை.  ஆனாலும் பாராளுமன்றத்துக்கு சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு பிரஜைக்கும்  வாக்களிக்கும் உரிமையுண்டு என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றது.  பாராளுமன்றம் குழுக்களாக கூடி பேசியிருக்கிறார்கள். அவர்களும்  வெளிநாடுகளில் உள்ளவர்களின் வாக்கு யாருக்கு வரவேண்டும் என்பதில் தான்  கரிசனையாக இருக்கின்றார்கள்.  

ஜே.வி.பி. பரீட்சார்த்தமாக கொரியாவில் செய்வோம் என்று  கூறுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் பலர் தொழிலாளர்கள். அவர்கள் எப்படி  வாக்களிப்பார்கள் என்று தெரியும். அதேபோன்று ஏனைய நாடுகளில் செய்தால்  அங்கு இருக்கின்ற வாக்குகள் புலம் பெயர் தமழர்களின் வாக்குகள் .  அதனால் அதை எதிர்க்கிறார்கள். அதுவும் ஒரு குழப்பத்தை உருவாக்கும்.  

ஒவ்வொரு பிரஜைக்கும் வாக்குரிமை உண்டு. அந்த உரிமையை கொடுக்க  வேண்டும். அதனை எல்லோருக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்படியென்றால்  எங்கே வாக்கெடுப்பை நடத்துவது என்ற பிரச்சினையிருக்கிறது.  

தூதுவராலயங்களில் நடத்தமுடியுமா என்றால் அங்குள்ளவர்களில்  அரைவாசிக்கு மேற்பட்டோர் அரசியல் காரணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள்.  அவர்களால் தேர்தலை நடத்தமுடியுமா? அவர்களைக் கொண்டு நடத்தாவிட்டால் நாங்கள்  இங்கிருந்து எமது ஊழியர்களை அனுப்புவதா? அதற்கான செலவுகள் எங்கிருந்து  வரும். தூதுவராலயங்களில் வாக்கெடுப்பை நடத்தினால் சவூதி போன்ற பெரிய  நாடுகளில் பணிப்பெண்களாக பணியாற்றுபவர்கள் வாக்களிப்பதற்கு  விடுமுறையெடுத்து வருவார்களா? அப்படிப் பல கேள்விகள் இருக்கின்றது.  

இதற்கு சரியான வழிமுறை இணைய வாக்கெடுப்பு. அதைத்தான் நானும்  ஆதரிக்கிறேன். ஆனால் அதற்கு அவ்வளவு ஆதரவு இல்லை. வங்கியிலுள்ள எமது பணத்தை  இணையத்தில் பாதுகாப்பாக பாவிக்க முடியுமென்றால் ஏன் இணையத்தில் எமது  வாக்கை பாதுகாப்பாக உபயோகிக்க முடியாது? இதனை மறுப்பதற்கு தகுந்த  காரணமில்லை.  

பலர்சேர்ந்து களவு செய்தால் அதை எல்லோரும் நம்புகின்ற ஒரு  நிலை இலங்கையில் இருக்கின்றது. நம்ப முடியாத கதையென்றாலும் நம்புகின்றோம்.  இணைய வாக்கெடுப்பை கொண்டுவந்தால் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுவார்கள்.  அதனால் தேர்தல் விளைவில் நம்பிக்கையில்லாமல் போகும்.

ஏ.மொஹமட் பாயிஸ்

Comments