சிங்களத்தரப்பிலிருந்து நமக்கென ஒரு தரப்பு | தினகரன் வாரமஞ்சரி

சிங்களத்தரப்பிலிருந்து நமக்கென ஒரு தரப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சூழலில் செயற்படும் அபிப்பிராய உருவாக்கிகளின் சந்திப்பு ஒன்று நடந்தது. அந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது ஊடக நிறுவனமொன்று. சந்திப்பின் நோக்கம், நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கலாம், எடுக்க வேண்டும் என்பதை அறிவது. இதில் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று, “இந்த ஜனாதிபதித் தேர்தலானது ஒரு பொறியாகவே தமிழ் மொழிச்சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்புகளை மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே சிங்களத் தரப்புச் செய்யத் தொடங்கி விட்டது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இதற்கென மிகத் திறமையாகச் செயற்பட்டுத் திட்டமிட்டுள்ளன. தேர்தலில் தமது தரப்பு வேட்பாளரை நிறுத்துவது தொடக்கம், தேர்தல் பிரகடனம் வரையில். மேலும் இனப்பிரச்சினை தொடர்பாக எதைப்பேசுவது, எதை விடுவது என்பதைக் கூட. ஆனால், தமிழ்த்தரப்பில் இதைக்குறித்த எந்த விதமான ஆயத்தங்களும் செய்யப்படவில்லை.

இவ்வளவுக்கும் தமது எதிர்கால அரசியலைக் குறித்து மிக மிக அவதானமாக இருந்திருக்க வேண்டிய தமிழ்த்தரப்பு முறையாகச் சிந்திக்காமல், சரியாகப் பேசாதிருந்ததன் விளைவே இன்றைய நிலை. இதன் விளைவையே தமிழ்ச்சமூகம் அனுபவிக்க வேண்டியுள்ளது” என்பதாகும். 

இது முற்றிலும் உண்மையே. தமிழ்ச்சமூகம் இன்று அரசியல் ரீதியாகக் கையறு நிலைக்கு வந்துள்ளமை இதற்குச் சான்று. இதனால்தான் எந்த வேட்பாளரை ஆதரிக்கலாம் என்று எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகும்.

ஐந்து கட்சிகள் அவசரமாகக் கூடி (இதற்குக் கூட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது) முன்வைத்த 13கோரிக்கைகள் செல்லாக் காசாகியதும் இதனால்தான். 

இந்த நிராகரிப்புக்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதும் இதனால்தான். இதன் வெளிப்பாடே தமிழ் மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுத்ததாகும். ஆக மொத்தத்தில் தமிழ் அரசியல் என்பது செயற்திறனும் சிந்தனைத்திறனுமற்றுப் பலவீனமடைந்துள்ளது. மக்களுக்கு வழிகாட்டக்கூடிய ஆற்றலை இழந்துள்ளது. வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளது. 

இதனாலேயே அறுபது ஆண்டுகாலமாகப் பேசு பொருளாகவே – ஏற்றுக்கொள்ளப்பட்ட விவகாரமாகவே - இருந்த இனப்பிரச்சினையைப் பற்றியும் இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றியும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பேசத் தேவையில்லை என்ற நிலைமை இன்று உருவாகியது. 

இது எவ்வளவு மோசமான – ஆபத்தான ஒரு நிலை? அப்படியென்றால், தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் இனி எந்த வகையில் அமையப்போகின்றன?  

திருத்தச்சட்டத்தில் குறிப்படும்) “இலங்கை ஒரு பல்லினச்சமூகங்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்குமான அதிகாரம் சமநிலையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்பதை இல்லாமலாக்குவதற்குத் தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் “பௌத்தத்துக்கு முன்னுரிமை” என்ற அரசியல் சாசனம் இன்னொரு நெருக்கடியும் அபாயமுமாகும். 

இதற்கெல்லாம் வாய்ப்பை அளித்ததும் அளித்துக் கொண்டிருப்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. 

தமிழ்ச்சமூகத்துக்கான தலைமைப்பொறுப்பைக் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே வகித்து வருகிறது. ஆனால், அதற்கு முன்பே அது பாராளுமன்றத்தில் தமிழ்ச்சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பெருந்தரப்பாக இருந்து வந்துள்ளது. ஆக இந்த நீண்ட காலப் பகுதியில் அரசியல் அதிகாரத்திலும் தலைமைப் பொறுப்பிலுமிருந்த கூட்டமைப்பின் அரசியல் வெற்றிகள் என்ன? அதனுடைய பங்களிப்புகள் என்ன? அது விட்ட தவறுகள் என்ன? அது செய்யக் கூடியதாக இருந்தவை எவை? அவற்றைச் செய்யத் தவறியதற்கான காரணங்கள், நியாயங்கள் என்ன? அதனால் உண்டாகிய விளைவுகள் என்ன என்பதைப்பற்றியெல்லாம் நாம் இன்று மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 

இதைச் செய்யவில்லை என்றால், எதிர்கால அரசியல் என்பதும் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் என்பதும் கேள்விக்குரியதாகி விடும். 

முதலில் மிக எளிய உதாரணம் ஒன்று. அல்லது கேள்வி. 

மேலே சுட்டப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தத்திலும் தயாரிப்பிலும் சிங்களத்தரப்பில் உள்ள பெருங்கட்சிகள் எல்லாம் செய்து கொண்டிருக்கும்போது இதையிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைப்பற்றிச் சிந்திக்காதிருந்திருக்கிறது. இது ஏன்? கூட்டமைப்பைப்போலவே தமிழ்த்தரப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் பிற அமைப்புகளும் ஆழமாகச் சிந்திக்கவில்லை. அப்படி எவராவது சிந்தித்திருந்தால் அந்தச் சிந்தனை வெளியே முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு பொது வடிவமாகவோ பொது உடன்பாடாகவோ வடிவமெடுத்திருக்கும். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் வரையில் தமிழ்ப்பரப்பில் இதுவொரு கனதியான விடயமாகப் பார்க்கப்படவே இல்லை. இதனால்தான் குறித்த ஊடக நிறுவனம் இதைக்குறித்துச் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருந்தது. பெருங்கட்சிகள் செய்யத் தவறிய ஒரு விடயத்தை ஒரு ஊடக நிறுவனமாவது செய்ததே என்று அந்தச் சந்திப்பின்போது நான் குறிப்பிட்டிருந்தேன். சமகாலத்தில் தமிழ் மக்கள் பேரவையும் இதையொத்த கலந்துரையாடல்களிலும் செயல் முனைப்பிலும் ஈடுபட ஆரம்பித்திருந்தது. பிறகு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். 

மற்றும்படி கட்சிகள் எவையும் இதைக்குறித்து பெரிதாக எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. சிந்திக்கவுமில்லை. இவ்வளவுக்கும் ஏராளம் கட்சிகள் பெருகி நம்முடைய கால்களுக்கிடையில் தடக்குப்படுகின்றன. எவையும் உருப்படியாக எதையும் செய்யக் காணோம். செய்யக் கூடிய கட்சிகளை தமிழ்ச்சமூகம் (ஊடகங்களும் புத்திஜீவிகளும் சனங்களும்) கண்டுகொள்வதில்லை. 

இந்தப் பலவீனத்தையே ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் ஜே.வி.பியும் தமக்கு வாய்ப்பாக்கிக் கொண்டன. ஆக இதற்கான தண்டனையை தமிழ்ச்சமூகம் பெற்றுத்தான் ஆக வேண்டும். 

இது ஏதோ தனியே இந்த ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் மட்டுந்தான் விடப்பட்ட அல்லது நடந்த குறைபாடு என்றில்லை. தமிழ்ச்சமூகத்தின் அரசியலே இந்த மாதிரித்தான் பல நிலைகளிலும் சிந்திக்கப்படாமலும் செயற்பாட்டு வடிவமில்லாமலும் தொய்ந்து போயுள்ளது.

அவ்வப்போது விடப்படும் அதிதீவிர அறிக்கைகளும் ஆண்டுக்கொரு தடவை நிகழ்த்தப்படும் சிறு எழுச்சிக் கூட்டங்களும் ஒரு இனத்தின் நீண்டகால அரசியல் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்காது. அதாவது பலவீனமான அரசியலைச் செய்து கொண்டு பலமான அறிக்கைகளை விடுவதால் எந்தப் பயனுமில்லை. 

இதனால்தான் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படாமலும் தீர்வு காணப்படாமலும் அப்படியே உள்ளன. தீர்க்கப்படாத பல பிரச்சினைகளோடு வாழ்கின்ற மக்கள் கூட்டமாக தமிழ்ச்சமூகம் தொடர்ந்துமிருக்கிறது. தீர்க்கப்படாத பிரச்சினைகளோடு வாழும் சமூகமொன்றானது ஆறாத – சீழ்ப்பிடிச்ச புண்களோடு வாழ்வதற்குச் சமம். சந்தேகமில்லை. தமிழ்ச்சமூகம் அப்படித்தானுள்ளது. 

இதற்குப் பிரதான காரணம், தமிழ்ச்சமூகத்தினுள்ளிருக்கும் அகச் சிக்கல்களே. இந்த அகச்சிக்கல்களைக் குறித்து திறந்த ஆய்வுகளைச் செய்ய வேண்டும். கூரிய விமர்சனங்களைச் செய்ய வேண்டும். இவற்றினால் கண்டறியப்படும் உண்மைகளைத் துணிச்சலோடு ஏற்றுக்கொண்டு முன்செல்லத் தயாராக வேண்டும். அப்படியென்றால்தான் வெற்றிகளை நோக்கிப் பயணிக்க முடியும். 

ஆனால், இது எளிய விசயமல்ல. ஏனெனில் படித்தவர்கள் முதல் ஊடகங்கள் வரையில் இதற்குத் தயாரில்லை. பெரும் அமைப்புகள் முதல் கட்சிகள் வரையில் தயாரில்லை. சமானியர்கள் முதல் தலைவர்கள் வரையில் இதற்குத் தயாரில்லை. மேன்மையானவர்களைப் பெறாத, மேன்மையானவர்களைப் புரிந்து கொள்ளாத, மேன்மைகளை உணராத நிலை இருக்கும் வரையில் இதுதான் நிலை. 

எப்போதும் தம்மை நியாயப்படுத்துவதிலும் எதிரிகளை உருவாக்குவதிலும் எதிர் நிலைகளோடு மல்லுக்கட்டுவதிலுமே தமிழ்ச்சமூகம் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது – இந்த ஜனாதிபதித் தேர்தலில் - கூட தமிழ்ச்சமூகமும் தமிழ்க்கட்சிகளும் தம்முடைய தவறுகளைக் கண்டடையவும் திருத்திக் கொள்ளவும் தயாரில்லை. மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்வதிலேயே கவனமாக உள்ளன. இது மேலும் நிலைமைகளை மோசமாக்கும். நிச்சயமாக இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அதைத் தெளிவாகத் தமிழ்ச்சமூகத்துக்கு உணர்த்தும். 

சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாகினால் ஏற்கனவே ஐ.தே.க அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அதன் வழியாகத் தமிழ்ச்சமூகத்தையும் பலவீனமாக்கிய நிலையே தொடரும். இது தமிழ் அரசியலை மேலும் கீழிறக்கிப் பலவீனமாக்கி விடும். தமிழ் அரசியல் பகுப்பாளர்கள் சிலர் சொல்லி வரும் தமிழ்க் கூட்டுப் பிரக்ஞை என்பதற்கு அப்போது அடையாளமே இல்லாத நிலை ஏற்பட்டு விடும். 

கோட்டபாய ராஜபக்ஸ தெரிவாகினால் தமிழ் அரசியல் பற்றிய சொல்லாடல்களைக் கவனிக்காமல் கடந்து செல்லும் நிலையே காணப்படும். அதிகாரத்தைப் பகிர்வதற்குப் பதிலாக உங்களுக்கு என்ன தேவையோ அதை நாம் (மத்தியே) தருகிறோம். உங்கள் பசிக்கு நாம் விருந்தளிக்கிறோம் என்ற மாதிரியான ஒரு நிலையே காணப்படும். 

அநுரகுமார திசநாயக்க (தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி) க்கு வாக்களித்தால் சிங்களச் சமூகத்திடம் உரையாடுவதற்கான இன்னொரு – புதிய – வாசல் திறக்கப்படும். 75ஆண்டுகளாக மாறி மாறி தமிழ் மக்களுக்கு அல்வா கொடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இந்தத் தடவை தமிழ் மக்கள் அல்வா கொடுத்தால் என்ன? என்று கேட்கிறார் பெரியதம்பி அண்ணை. தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரவைத் தெரிவு செய்வதன் மூலமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாய்ப்பில்லை என்றாலும் பாராளுமன்றத்தில் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் அதற்காக ஆதரவுக் குரல் கொடுக்கவும் கூடிய ஒரு தரப்பை உருவாக்கலாம். அதாவது சிங்களத்தரப்பிலிருந்து நமக்கென ஒரு தரப்பை உருவாக்கலாம். அவர்களிடையே நமக்கென ஒரு தரப்பிருப்பது பல விதங்களிலும் நன்மைகளையே தரும். 

பழகிய வழிகளில், உடனடிப்பிரச்சினைகளை மட்டும் பார்க்காமல் நீண்ட கால அடிப்படையில் விடயங்களைக் கையாளக் கூடிய ஒரு அரசியல் மார்க்கமே இன்று தமிழ் மொழிச் சமூகங்களுக்குத் தேவை. இல்லையெனில் மயானத்தில் படுக்கையைப் போட வேண்டியதுதான்.  

கருணாகரன்

Comments