‘சிங்கள பிரபாகரனின்’ பாசிசம் மிகவும் ஆபத்தானது | தினகரன் வாரமஞ்சரி

‘சிங்கள பிரபாகரனின்’ பாசிசம் மிகவும் ஆபத்தானது

அன்புள்ள ஆசிரியருக்கு,  

வணக்கம்,  தனது நக்கல் தொனியில் கருணாகரன் ஏதோ எழுதியிருக்கிறார். இது பற்றி தெளிவுபடுத்த விழைகின்றேன்.  

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கருணாகரனின் எழுத்தில் ஒரு கேலி, நையாண்டி தொனி சொட்டுகிறது. வழக்கமாகவும் அவர் அதைக் கைக் கொள்பவர் தான். இப்பொழுது அது அதிகமாகவுள்ளது. வன்னிப்பகுதியில் வசிக்கும் யாரோ ஒரு வயோதிபரின் பெயரைச் சொல்லி அவரூடாக தனது கருத்துக்களை சொல்லி வாசகரை திசை திருப்புகிறார் இந்த போலி. முதலில் ஐந்து கட்சிக் கூட்டைப் பற்றி பார்ப்போம். அது ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு தற்காலிக இணைவு என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். அதில் தவறில்லை. சூழ்நிலைக்கேற்ப ஜனநாயக அரசியலில் சந்தர்ப்பவாத கூட்டணிகள் ஏற்படுவதுண்டு. இந்தக் கூட்டும் அப்படியான ஒன்றுதான். சரி, ஒரு பேச்சுக்கு இந்த கூட்டு ஏற்படவில்லை என்று வைத்துக் கொள்வோம். கருணாகரன் என்ன எழுதியிருப்பார்? ஐயோ, தமிழ்த் தலைவர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை பொதுக் கருத்து இல்லை பொதுவேலைத்திட்டம் இல்லை இங்கே மக்கள் வயிற்றோட்டம் வந்து சாகிறார்கள். பொன்னம்மா அப்படி சொல்றா சின்னையா இப்படி சொல்றார் என்று ஏதும் உளறியிருப்பார். இப்போது அவருக்கு எழுதுவதற்கு சரக்கு இல்லை. உடனே கூட்டைச் சாடுகிறார்.  

சஜித் பிரேமதாசவை உடனடியாக ஆதரித்தால் என்ன? என்று ‘கருணா’ வின் சின்னத்தம்பி ஐயா கேட்கிறார். தனிப்பட்ட முறையில் வாக்காளர்கள் அப்படி செய்யலாம். ஆனால் அரசியல் கட்சிகள் அப்படி செய்ய முடியாது. தமது கொள்கை சார்ந்து கருத்துநிலை சார்ந்து விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியே முடிவெடுக்க முடியும். அதை ‘ஆலோசனைகள் – உடன்பாடுகள்’ (Consultations - consensus) என்று கூறுவார்கள். அதற்கான அடிப்படை ஆவணமாகத் தான் 5கட்சிகள் முன்வைக்கின்ற 13அம்சங்களும் உள்ளன. அது பற்றிய உத்தியோக பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் பல மட்டங்களில் நடந்து வருகின்றன. எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று யாரும் நினைக்க முடியாது.  

கோத்தாபய ராஜபக்ச எப்படியானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தற்செயலாக வெற்றிபெற்றால் சஜித்தை ஆதரித்த எல்லா சிறுபான்மைக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் பழிவாங்குவார். ஐக்கிய தேசியக் கட்சியை உடைப்பார். எதிர்த்து நிற்பவர்கள் கொல்லப்படுவார்கள். பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவார்கள். இலங்கையில் பின்னர் எந்தத் தேர்தலும் நடக்காத நிலை உருவாகும். சிறுபான்மைக்கட்சிகள் தடை செய்யப்படும் நிலை உருவாகும். கட்சியின் பெயரில் இனப்பெயரோ அல்லது மதப்பெயரோ இருக்கக்கூடாது என்று கூறி இத்தடையை கொண்டு வருவார்கள். ஏப்ரல் 21பயங்கரம் நடைபெற்ற காலத்தில் அதற்கு சற்று பின்னாக ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான கர்தினால் மல்கம் ரஞ்சிக் பகிரங்கமாக இந்த மதப்பெயர், இனப்பெயர் பற்றி கூறியிருந்தார். இதையெல்லாம் கவனத்திலெடுக்க வேண்டிய பொறுப்பு 5கட்சி கூட்டின் தலைவர்களுக்கு உண்டு.  

அடுத்ததாக கருணாகரன் மிகவும் விரும்புகிற ‘படுகுழி’ அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவார். தமிழரசுக்கட்சிதான் தமிழர் அரசியலை படுகுழியில் தள்ளியதாக இந்த வேடதாரி கூறுகிறார். இது அப்பட்டமான பொய்யான கடுமையாக கண்டிக்கத்தக்க கருத்தாகும். தமிழர் அரசியலை ஆயுத, பின்னர் பாசிசவழிக்கு கொண்டு சென்ற இயக்கங்களே இந்த ‘படுகுழி’க்கு பொறுப்பு கூற வேண்டும்.

தமிழர் அரசியலை விட இன்று வடக்குத் தமிழர்கள் தான் பெரும் இக்கட்டான நிலையில் உள்ளார்கள். இக் காலத்தில் இலங்கையில் மிகவும் கற்ற மிகவும் செல்வந்த உயர் மத்தியதர வர்க்கம் ஒன்று யாழ்ப்பாணத்தில் காணப்பட்டது. இன்று அந்நிலை இல்லை. யாழ்ப்பாணத்தில் இன்று வசிப்பவர்களில் 75%க்கும் அதிகமானோர் தாம் மத்திய தர வர்க்க பின்னணியைச் சேர்த்தவர்களாக அல்லது தொழிலாளர்களாக உள்ளனர். யாழ்ப்பாணம் இன்று ஒரு பெரிய கிராமம் போல உள்ளது. இந்நிலை ஒரு பாசிச இயக்கத்தையும் அதன் பிழையான தலைவனையும் நம்பியதால் ஏற்பட்டது.  

இன்று நாடு அந்தத் தெரிவுக்கு முகம் கொடுத்துள்ளது. சஜித் பிரேமதாச ‘சிங்கள பிரபாகரனை’ எதிர்த்து போட்டியிடுகிறார். பிரபாகரனின் பாசிசத்தை விட ‘சிங்கள பிரபாகரனின்’ பாசிசம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது ஜனநாயக ஸ்டிக்கருடன் வருகிறது. மக்களுக்கு இந்த தெளிவு இருக்கும் என்று நம்புவோமாக.

மொழி அரசன்...  

Comments