இராசம்மா | தினகரன் வாரமஞ்சரி

இராசம்மா

மீன்பாடும் தேனாடாம் மட்டு. நகரிலிருந்து தெற்குப் புறமாக இருபது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுதான் செட்டிபாளையம் என்னும் பழம் பெருங்கிராமம்.

இக்கிராமத்தில் எண்பது வீதத்திற்கு மேலான நிலப்பரப்பில் காடுகள் நிறைந்திருந்தன. பாலை, சுரபின்னை, பனிச்சை, நாவல், சமுளை, முதிரை போன்ற மரங்களும் இடைக்கிடையே காணப்பட்டன. இக்காடுகளில் நால், பனிச்சை, துவரை, காரை, கிளா, ஈச்சை, பாலைப்பழங்கள் நிறைந்து காணப்பட்டன. இவை தவிர, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், தோடம்பழம் என்பவற்றிக்கும் குறைவேயில்லை.

இற்றைக்குச் சுமார் ஏழு சகாப்த காலத்திற்கு முன்பு அந்தக் கிராமத்தில் சுமார் நூற்றி ஐம்பது குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. அத்தனை குடும்பங்களும் ஒரு தாய் பிள்ளைகள் போல அன்னியோன்னியமாகவும், அன்பாகவும், பண்பாகவும் பாசமாகவும் வாழ்ந்து வந்தார்கள். இக்கிராமத்தில் கிராமத்தலைமை அதிகாரியாகக் கடமையாற்றியவர் வேலாயுதம் விதானை இவரின் குடும்பந்தான் இக்கிராமத்தின் தலைமைக் குடும்பமாக விளங்கியது.

இக்கிராமத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலரே அரசாங்க உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றினார்கள். அவ்வாறு கடமையாற்றிய அத்தனை பெயரும் இக்குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர்.

இத்தகைய சிறந்த குடும்பத்தில் பிறந்தவள்தான் இராசம்மா. இவர் வேலாயுதம் கிராமத் தலைமை அதிகாரியின் பேத்தியாவர்.

இராசம்மா இக்கிராம மக்களை நேசித்ததுடன், அவர்களுடன் அன்பாகவும் பாசமாகவும் பழகிவந்தாள்.

அக்காலத்தில் பெண்கள் படிப்பதைச் சமுதாயம் விரும்பவில்லை. அதனால் அவளது கல்வியும் ஐந்தாந்தரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது. எனினும், தையல் பயிற்சிக்காக மட்டு.நகரில் தங்கி அதில் சிறந்த தேர்ச்சியும் அனுபவமும் பெற்றுக் கொண்டாள்.

அக்காலத்தில் அக்கிராமத்தில் ஓலையால் மேயப்பட்ட குடிசைகளும், களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளுமே காணப்பட்டன.

அத்துடன் கல்வீடுகள் ஏழு மட்டுமே காணப்பட்டன. இத்தகைய ஒரு கல்வீட்டின் சொந்தக்காரனான வேலாயும் கிராம அதிகாரியின் வீட்டில்தான் இராசம்மாவும் வாழ்ந்து வந்தாள்.

இராசம்மா பொதுவாக இரக்க சுபாவம் கொண்டவள். ஏழை எழியவர்கள் மீது இயல்பாகவே பாசங் கொண்டவள். இவர்களை எங்கு கண்டாலும் அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, உணவும் பொருளும் கொடுப்பதில் தவறமாட்டாள். தனக்கென எதுவும் சேமிக்காது பிறருக்கே உதவி செய்து வந்தாள்.

இராசம்மா அக்கிராம மக்களை மட்டுமன்றி அயற்கிராமங்களான குருக்கள் மடம், மாங்காடு, கிரான்குளம், அம்பிளாந்துறை ஆகிய கிராமமக்களுடன் அன்பாவும் பாசமாகவும் பழகி வந்தாள். அக்கடி அக்கிராமங்களுக்குச் சென்று தனது தொடர்பை இறுக்கமாகக் கட்டிக்காத்து வந்தாள். 

அக்கிராமம் வனவளம் செறிந்து காணப்பட்டதால் மாரிமழை நாட்கணக்கில் தொடர்ந்து பொழியும் வெள்ளம் வீதியெல்லாம் கரைபுரண்டு ஓடும் மீன்களெல்லாம் நீரில் துள்ளிக் குதிக்கும்.

மாரிமழை பெய்யுங் காலங்களில் மக்கள் வெளியிற் செல்லமுடியாமல் நான்கு, ஐந்து நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். வெளிச்செய்திகளோ தகவல்களையோ பெறமுடியாத காலமது. அதுமட்டுமல்ல மின்சார வெளிச்சங்கூடக் கிடையாது. கிராமம் முழுவதையும் கொடிய இருள் கௌவிக் கொள்ளும்.

பொதுவாக அக்காலத்தில் தொழில் வசதி மிகக்குறைவு வயல் நிலங்களும் மிகக் குறைவு. உழவர்கள் வருடத்தில் ஒன்பது மாதங்களை வயல் வேலைகளிலே செலவிடுவர். எஞ்சிய மூன்று மாதங்களையும் கூத்தாடுவதில் செலவிடுவார்கள்.

சில காலங்களில் மாரிமழை குறைவடைந்தால் உழவர்களின் வருமானமும் குறைந்துவிடும். அவர்களால் உணவு கூட உட்கொள்ள முடியாதநிலை ஏற்படும் ஒருசில செல்வந்தவர்களிடம் கடனுக்கு நெல்லைப் பெற்றுத் தங்கள் காலத்தை ஓட்டுவார்கள்.

அன்றாடம் கூலிவேலை செய்பவர்களுக்கு உணவு ஒழுங்காகக் கிடைப்பதில்லை. காரணம் இவர்களுக்குக் கூலி வேலை தினமுங் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வறுமையில் வாடுவதுடன், ஒருசில நாட்கள் உணவின்றித் துன்பத்துடன் காலத்தைக் கடத்துவார்கள்.

இராசம்மாவுக்கு ஒரு பெண்குழந்தையும், மூன்று ஆண்டு குழந்தைகளும் இருந்தனர் இவர்களுக்கு எப்பாடுபட்டாவது காலையில் ஏழு மணிக்கும் பகல் பன்னிரெண்டு மணிக்கும் இரவு ஏழு மணிக்கும் என்ற ஒழுங்குகமைய உணவு கொடுப்பதில் தவறமாட்டாள்.

அதிகாலை நான்கு மணிக்கே படுக்கையைவிட்டு எழுந்து விடுவாள். இராசம்மா தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு, முற்றத்தையும், வீட்டையும் கூட்டுவாள் பின்னர் அடுக்களைச் சாமான்களைக் கிணற்றடியில் அள்ளிப்போட்டு, உமிக்கரியையும், தேசிக்காயையும் கொண்டு சட்டிபானைகளையும், தட்டுக்களையும் பளபளக்கும் படி பூசி முடிப்பாள். பின்னர் பிள்ளைகளுக்குரிய உணவினைத் தயாரிப்பாள். பின்னர் பிள்ளைகளுக்கு உடை அணிவித்து, உணவு கொடுத்துப் பாடசாலைக்கு அனுப்புவாள். அதன் பின்னர் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்த பின்னரே உணவு உட்கொள்ளுவாள்.

இராசம்மா அக்கிராமத்தை ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு தடவையாவது வலம் வந்து விடுபவாள். சுமார் ஒரு மைல் நீளமான அக்கிராமத்தைச் சுற்றிவர ஒரு மணி நேரம் அவளுக்குத் தேவை.

இராசம்மாவின் நடை வினோதமானது, அக்காலத்தில் பாதணி அணியும் பழக்கம் கிடையாது. சில இடங்களில் ஒன்றையடிப் பாதையாக இருக்கும். அப்பாதையில் சிறு புதர்களும் கற்களும், முட்களும் செறிந்து காணப்படும். அவற்றில் பக்குவமாகப் பார்த்து கால் அடிஎடுத்து வைத்து நடக்க வேண்டும். தினமும் நடப்பதால் என்னவோ, இராசம்மா அப்பாதையில் விறுவிறு என விரைவாக நடந்து செல்லுவாள்.

இராசம்மா   முதலில் அயல் வீடுகளுக்கே செல்லுவாள். அப்பொழுது அவர்கள் “இராசம்மாக்கா! வாங்க வாங்க?” என அன்புடன் வரவேற்பார்கள்.

சிலர் “இராசம்மா சின்னம்மா” என்றும் “இராசம்மா பெத்தா” என்றும் உரிமையோடு அழைப்பார்கள்.

இராசம்மா அவர்களிடம் உரையாடி விட்டு அடுப்பங்கரைப் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவாள். அங்கு அடுப்பு எரியாத நிலை காணப்பட்டால், தனது வீட்டுக்குச் சென்று அரிசி, மரக்கறிகளை எடுத்து வந்து அவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் பிள்ளைகளின் பசியைப் போக்குவாள்.

இக்கிராமத்தில் நான்கு, ஐந்து குடும்பங்கள் மிகவும் வறுமையானவை. இத்தகைய வீடுகளுக்கு அவள் சென்று அவதானிக்கத் தவறுவதில்லை.

இக்குடும்பங்களில் முருகனின் குடும்பமே மிகவும் வறுமைப்பட்டது. ஒன்பது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்திருந்தன. மூத்த மகனுக்குப் பதினான்கு வயது. கடைக்குட்டிப் பெண்ணுக்கு ஆறுமாதம்.

ஒருநாள் அடைமழை பெய்து கொண்டிருந்தது. வெள்ளம் எங்கும் பெருககெடுத்து ஓடியது. முருகன் வாழ்ந்த குடிசை தாழ்நிலத்திலே அமைந்திருந்தது. சில வேளை நீர் ஓடாவிட்டால் அக்குடிசை நீரல் மூழ்கிவிடும்.

வெள்ளம் பெருகுவதைக் கண்ட இராசம்மாவுக்கு முருகனின் குடும்பத்தைப் பற்றிய கவலை எழுந்தது. தான் கடந்த இரண்டு நாட்களாக முருகனின் குடும்பத்தைப் பார்க்கவில்லை என்ற ஏக்கம் ஏற்பட்டது.

இராசம்மா வீட்டின் ஒதுக்குப் புறத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தளபத்து ஓலையை விரித்து, அந்த கொடூர மழையில் விறுவிறு என முருகனின் வீட்டை நோக்கிச் சென்றாள்.

அவள் செல்லும் பாதையெல்லாம் வெள்ளக் காடாகத் தெரிந்தது. சில இடங்களில் முழங்காலுக்கு மேற்பட்ட வெள்ளம் கரைபுரண்டோடியது. இவற்றை எல்லாம் தாண்டி இராசம்மா முருகனின் வீட்டை நெருங்கினாள்.

முருகனின் குடிசையைச் சுற்றி எல்லாம் இடங்களிலும் வெள்ளம் பரவியிருந்தது. 

இராசம்மா முருகனின் குடிசைக்குள் சென்று பார்த்தாள். முருகன் உட்பட பதினொரு பேரும் உணவின்றிச் சோர்ந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

“முருகா.... முருகா....” என ஆவேசத்துடன் கத்தினாள் இராசம்மா.

முருகன் பசிக்களையோடு கொட்டாவி விட்டுக் கொண்டு “என்ன இராசம்மாக்கு? இப்பதான் வந்தியள் போலக் கிடக்கு?” எனக் கேட்டான்.

“என்னடா செய்யிற? நீ மிருகமாடா? பச்சக் குழந்தைகள் பசியோட போட்டிருக்க? எத்தன நாளா சோறு குடுக்கல்ல?” என ஆவேசத்துடன் கேட்டாள் இராசம்மா.

“இல்லக்க. நேத்து மத்தியானந்தான் சாப்பிட்டதுகள். இரண்டு மூனு நாளா மழையும் பெய்யுது? அதால வேலயும் கெடக்கல்ல. அக்கம் பக்கத்தில் கேட்டும் பாத்தம். ஒன்டுமில்ல ஒண்டுமில்லா எண்டு சொல்லுதுகள்? என்ன செய்யிற எண்டு எனக்கு தெரியல்ல. ஆண்டவன் மேல பாரத்தப் போட்டுட்டுக் கிடக்கம்” என முருகன் இழுத்து இழுத்துக் கூறினான்.

“ஏண்டா! எண்ட நெனப்பு உனக்கு வரல்லையாடா?” எனக்கும் ஒடம்பு சரியில்லாததால் வர முடியல்ல? நீ கடவுள்ட பாரத்த போட்டுட்டு குழந்தைகளை சாகடிக்க போறயா?” என இராசம்மா தனது மனக்கொதிப்பை அள்ளி வீசினாள்.

‘இலக்க! ஒங்கட நெனைப்பு வரல்ல’ என முருகன் இராசம்மாவைப் பார்த்துக் கூறினான்.

“ஓண்டா! ஓம்! ஒனக்கு எண்ட நெனைப்பு எங்கட வரபோவுது. அதுதான் போகட்டும் நீ ஒண்ட புள்ளையல கூட நெனச்சி பாக்கல்ல. அதுகள்ர பசி பட்டினி ஒனக்கு எங்கட தெரியபோகுது?” எனக் கூறியபடி இராசம்மா தளப்பத்து ஓலையை விரித்துக் கொண்டு, தனது வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்.

வீட்டுக்குள் நுளைந்ததும் அரிசி வைக்கப்பட்டிருந்த அண்டாப் பானையைப் பார்த்தாள். பானையின் அடியில் கொஞ்ச அரிசி கிடந்தது. அதனை எடுத்து அளந்து பார்த்தாள். மூன்று கொத்தும் ஒரு கைப்பிடி அரிசியும் கிடந்தது.

அதனை எடுத்து தன் முந்தானையில் கொட்டினாள். பின் அதனைத் தன் மடியில் கட்டினாள். அங்கிருந்த மரக்கறிகளையும், தேங்காயையும் எடுத்துக் கொண்டு தளபத்து ஓலையை விரித்து தலைமீது கவுட்டுக் கொண்டு முருகனின் வீட்டை நோக்கி விரைந்து சென்றாள்.

அங்கே முருகனின் குழந்தைகள் “பசிக்குது சோறு சோறு!” என அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். முருகன் தண்ணீரைப் பெருக்கி அவர்களைச் சமாளித்துக் கொண்டிருந்தான்.

இராசம்மா தான் கொண்டுவந்திருந்த அரிசியையும், மரக்கறிகயையும், தேங்காயையும் முருகனின் மனைவி மாரியிடம் கொடுத்து விட்டுத் தன் வீட்டை நோக்கி விரைந்தாள்.

அவளின் மனதில் முருகனின் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய சந்தோஷம் ஒரு புறம். தனது குழந்தைகளுக்கு உணவு வழங்க என்ன செய்வேன் என்ற ஏக்கம் மறுபுறம் அவளை வாட்டி வதைத்தது.

அப்பொழுது நேரம் பதி னொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஓடோடிச் சென்று தன் பிள்ளைகளுக்கு உணவு சமைப்பதற்காக பானை அடுத்துகளை ஒவ்வொன்றாகத் துளாவிக் கொண்டிருந்தாள்.

அக்காலத்தில் அரிசியை உலைவைக்கு முன் ஒரு பிடி அரிசியை எடுத்து ஒரு பானையில் சேமித்து வைப்பது வழக்கம். இத்தகைய சந்தர்ப்பத்தில் அந்த அரிசியை எடுத்து சமைப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அரிசி ஏதாவது கிடைக்காதா என்ற ஆவலில் இராசம்மா தேடிக் கொண்டிருந்தாள்.

இறுதியாக, பானை ஒன்றில் அரைக்கொத்து குறுநல் அரிசியே கிடந்தது.

வீட்டின் அருகிலிருந்து முருங்கை இலைகளை உருவினாள்.

குருநலைச் சுளகில் போட்டுப் புடைத்து உமிகளை நீக்கிய பின் தேங்காய்ப் பாலுடன் பானையிலிட்டு பாற்கஞ்சி தயாரித்தாள். குறுநல் பதமாக அவிந்ததும் முருங்கை இலைகளைப் போட்டு மெருகூட்டினாள்.

இதனிடையில் பிள்ளைகளும் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொருவருக்கும் பாற் கஞ்சியைக் கொடுத்து பசியாற வைத்தாள்.

இராசம்மாவுக்குத் தெரியும் இது குழந்தைகளுக்கு திருப்தியளிக்காது என்பது. எனவே, இவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக ஆயத்தமானாள். அப்பொழுது மாரி மழையும் அகோரமாகக் கொட்டுகொட்டெனக் கொட்டிக் கொண்டிருந்தது. மழை என்ன புயலே வந்தாலும் தனது குழந்தைகளுக்கு வயிறு நிரம்பச் சோறு கொடுக்க வேண்டும் என்ற மன வைராக்கியத்துடன், நெல் மூடையில் இருந்து ஒரு மரைக்கால் நெல்லை எடுத்துப் பானையில் போட்டு அவித்து எடுத்தாள். பின் அதனை ஒரு தாச்சி ஒன்றில் சிறுகச் சிறுகப் போட்டு அகப்பையால் வறுத்து எடுத்தாள். பின் அதனை உரவில் போட்டு உலக்கையால் குற்றி அரிசியாக்கினாள்.

உடனடியாக அரிசியைக் களைந்து உலையில் வைத்தாள். சோறு பதமாக அமிழ்வதற்கு முன் அடுத்த அடுப்பில் இரண்டு கறிகளையும் சமைத்து விட்டாள்.

இப்பொழுது நேரம் நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது தன் பிள்ளைகளை அழைத்து உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது இராசம்மாவின் அக்கா வள்ளி அங்கு வந்து சேர்ந்தாள்.

அவள் வாயில் கையை வைத்தபடி “என்னடி? இப்ப நேர மென்னடி? இப்பதானா புளையலுக்கு சோறு குடுக்கிறா. என்னிட்ட சொல்லியிருந்தா, நான் அதுகளுக்கு வேளைக்கி சோறு குடுக்கமாட்டோனா? என்ன பஞ்சமா பாதம் செய்யிறாயடி” என இராசம்மாவைப் பார்த்து சற்று கோபத்துடன் கூறினார்.

“இல்லக்க, நம்மட முருகண்ட புள்ளகள் சாப்புட்டு ரெண்டு நாளாகுது, என்னிட்ட கிடந்த அரிசியை கொடுத்திட்டு வந்ததாலே பிந்திப் போச்சி” எனக் கூறினாள் இராசம்மா.

“டீயே! ஒண்ட புள்ளயல பட்டினி போட்டுட்டு, ஊராண்ட புள்ளக்கி சோறு போட உனக்கெப்படி மனசு வந்த தடி?” என வள்ளி தன் ஆதங்கத்தை இராசம்மா மீதி கொட்டித் தீர்த்தாள்.

“அக்கே! குடுத்தாருக்கு குறையில்ல எண்டு சொல்லுவாங்கே. அது ஒனக்கு தெரியாதா?” எனக் கூறி வள்ளியைத் திசைதிருப்ப முயன்றாள் இராசம்மா.

“நீ இப்படி சொல்லி சொல்லித் தானே எல்லாத்தையும் தொலச்ச? நீ எவ்வளவுதான் கொடுத்த. அதிலேதாச்சும் ஒனக்கு கெடச்சதாடி. விளங்கதய உட்டுட்டு இனியாவது திருந்தி நடக்கபாரடி?” எனக் கடுகடுத்த குரலில் கூறினாள் வள்ளி.

“அக்கே! கெடைக்காட்டி கூட பரவாயில்லை. அதுகளுக்கும் குடுக்க முடியாததாலே தரல்ல. அதுக்காக பட்டினியில துடிக்கிற புள்ளைகளுக்கு சோறு குடுக்காட்டி அது பெரிய பாவமில்லையா?” எனக் கூறி தனது செயலை நியாயப்படுத்தினாள் இராசம்மா.

வள்ளி இதற்கு மேல் அங்கு இருக்க மனமில்லாதவளாக மறுமொழி எதுவும் கூறாது முகத்தைச் சுளித்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள் வள்ளி.

இராசம்மா வள்ளியின் கோபத்தை உணர்ந்தவளாக தன் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டாள். 

அருள் அரசன்

Comments