ஏமாற்றங்கள் பின்னடைவுகளுக்கு மத்தியிலும் நீங்கள் வாக்களிக்க மறந்துவிடக் கூடாது! | தினகரன் வாரமஞ்சரி

ஏமாற்றங்கள் பின்னடைவுகளுக்கு மத்தியிலும் நீங்கள் வாக்களிக்க மறந்துவிடக் கூடாது!

தலைமைப் பதவி வைத்தே தங்களின் சுயநலத்தால்  விலையது பேசி மக்கள் வீணாக நொந்து சாக மலையதில் நின்றே சிலர் மாற்றுகிறார் முகவரியை  பிழையது கண்டும் மக்கள் பிதற்றுகிறார் உண்மை பேச  நிலையது மாற்றிடவே நிமிர்வரோ நமது மக்கள்.

மக்கள் கவியொருவர் மனமொடிந்து பாடி இருக்கிறான் இப்படி. அரசியல் என்பது கொடுக்கல் வாங்கல் சமாச்சாரமாகிவிட்ட   நிலையில் மக்கள் மனக்கசப்படைவது நியாயமே அப்படித்தான் மலையகத்திலும் வாக்காளர்கள் அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளைப் பார்த்து அதிருப்தி கொள்கிறார்கள். இவர்களின் கேள்வி நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதே. 

இன்று மலையக மக்கள் ஓரளவிற்குத் தானும் தமது நிலைமையைப் புரிந்து கொள்ளும் தன்மைக்கு வந்துள்ளனர். அதனால்தான் தேர்தல் என்றாலே அவர்களுக்கு அலர்ஜி.

தமது திருப்தியை அறிவிக்கவே நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். மலையகத்  தலைமைகள் எதனையுமே செய்யவில்லையா என்று கேட்கலாம். செய்திருக்கலாம், ஆனால் யானைப் பசிக்குச் சோளப்பொரி சங்கதிதான்.

இ.தொ.காவைப் பொறுத்தவரை நாடற்றவர் பிரச்சினையைத் தீர்க்க உதவியது பெரிய காரியம். அத்துடன் அனைவருக்கும் குடியுரிமை வாய்ப்பை வாங்கித் தந்தது. அவர்களுக்கு இவை சாதனைகளாக இருக்கலாம். ஆனால்  தார்மீகக் கடமை.

இதேவேளை  இக்கட்சி சில சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்திய அரசிடம் கேட்டு வாங்கிய 4000வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் அது அசட்டையாக இருந்துவிட்டது. அதன்  அறுவடை  தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி வசம். ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது பெருந்தோட்ட மக்களுக்கு 50000வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கினார். தோட்ட தரிசு நிலங்களை மலையக இளைஞர்களின் விவசாய முயற்சிகளுக்காக பிரித்துக் கொடுப்பேன் என்றார்.  இவைகளை ஓரளவிற்காவது நிறைவேற்ற இ.தொ.கா. என்ன முயற்சி எடுத்தது என்பது சிலரது கேள்வி.  

இ.தொ.கா.விடம் உருப்படியான திட்டங்கள் இருக்கவே செய்தன. இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்படுத்திவரும் வேலைத் திட்டங்கள் இ.தொ.காவின் எண்ணக் கருக்கள் என்று அது உரிமை கொண்டாடுகின்றது. அது நிஜமாக இருந்தாலும் ஏட்டுச் சுரைக்காய் எப்பொழுதுமே கறிக்கு உதவாது என்பது பழமொழி அன்றோ! அரசியல் ரீதியில் மலையக சமூகம் உள்வாங்கப்பட, அதிகாரம் பெற, தேசிய ரீதியில் அங்கீகாரம் அடைய அடிகோலிய இ.தொ.கா. அதன் அசிரத்தையால் அதற்கான முழுப் பயனையும் அடையும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதில் சோடை போனதாக  சாட்டப்படும் குற்றச்சாட்டை புறம் தள்ள முடியாது. 

ஆனால் இவற்றில் சிலவற்றையாவது ஏற்படுத்தித் தருவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வெற்றி கண்டுள்ளது. தனிவீட்டுத் திட்டம், காணி உறுதிப்பத்திரம்,  பிரதேச சபை அதிகரிப்பு, பிரதேச சபை சட்ட திருத்தம், மலையக அபிவிருத்திக்கான அதிகாரசபை என்று சில உச்சங்கள். இன்னும் பல சொச்சங்கள் வாக்குறுதிகளாக. ஆனால் அதன் பயன்பாடுகள் பெருந்தோட்ட மக்களை உடனடியாக அநுபவிக்க முடியாமல் செய்யும்படியான அரசு நிர்வாக இயந்திரத்தின் மெத்தனம், பெருந்தோட்டக் கட்டமைப்பின் இறுக்கம் என்பன காணப்படுகின்றன. எனவே இது கண்ணுக்குப் புலப்படாத காரியங்களாகவே கொள்ளப்படுகின்றன. 

தமிழ் முற்போக்கு முன்னணி வாங்கித் தருவதாக வாக்களித்த 50ரூபா  விசேட கொடுப்பனவு பெற்றுள்ள விளம்பரமும் அது ஏற்படுத்தியுள்ள தாக்கமும்  அம் முன்னணியின் அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கிடைப்பதாய் இல்லை. 2005இல் நாடற்றவர் பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வைப் பெற்றுத் தந்தது இ.தொ.கா. இதன் பின்னணியிலேயே கல்வி ரீதியான விழிப்புணர்வு, தோட்டங்களுக்கு வெளியிலான வேலை வாய்ப்பு, கிடைக்கப் பெற்ற சலுகைகள் உரிமைகள் என்பன மலையக தேசிய இனத்தின் அடையாளங்களாக நோக்கப்படும் சிறப்பு உருவாகியுள்ளது.  

ஆனால் இதன் வெளிப்பாடுகளை மலையக மக்கள் முழுமையாக அநுபவிக்க முடிவதில்லை. 1000ரூபா சம்பள அதிகரிப்பு 50ரூபா மேலதிக கொடுப்பனவு போன்றவற்றுக்காக மக்களே போராட வேண்டுமெனில் அரசியல் பிரதிநிதித்துவங்கள் ஏன் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. இதனால் தான் மக்கள் தேர்தல் என்றாலே குளிர்காய்ச்சல் வந்தது போல் ஆகிவிடுகின்றார்கள். கடந்த தேர்தல் காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்களும் வேண்டாம் சாமி என்கிறார்கள். ரணிலுக்கு ஆதரவளித்தவர்களும் போதுமடா சாமீ என்கிறார்கள். 

இதற்காக வாக்களிக்கமால் தேர்தலைப் புறக்கணிப்பது புத்திசாலித்தனமா? ஒருக்காலும் இல்லை. வாக்களிப்பது ஜனநாய கடமை. குடிமகனுக்கான உரிமை. இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் எமது பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டியது முக்கியம். 

நடைபெறப் போவது ஜனாதிபதித் தேர்தல். தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களில் சஜித் பிரேமதாசவும், கோட்டபய ராஜபக்ஷவும் நேரடி போட்டியாளர்களாக கருதப்படுகின்றார்கள். இருவருமே மலையக மக்கள் பற்றி அதிகமாகவே அக்கறை கொள்வதாக காட்டிக் கொள்கிறார்கள். குறிப்பாக வாழ்வியல் வாழ்வாதாரம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவரப்படும் என்கிறார்கள். இரண்டு பேருமே நலிவடைந்து வரும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை மீளவும் கட்டியெழுப்பப் போவதாக சூளுரைக்கின்றார்கள். இருவருமே மலையக சமூகத்தின் யதார்த்த நிலைமையைப் புரிந்து வைத்துக் கொண்டுதான் பேசுகிறார்களா அல்லது யாரோ தயாரித்து தரும் குறிப்புகளை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. 

ஆனால் கேட்பதற்கு என்னவோ நன்றாகவே இருக்கின்றது. இதேவேளை இவர்களின் வாக்குறுதிகளையே இ.தொ.காவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மக்களிடம் எடுத்துச் செல்கின்றது. தவிர கையிலும் மடியிலும் இருப்பதை சேர்த்தும் சொல்ல முயற்சிக்கின்றன. 

இன்று பெருந்தோட்ட விவசாயம் சீரழிந்து காணப்படுகின்றது. கொக்கோ, தென்னை என்பன தேற்ற முடியாதவாறு பாழ்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் தேயிலையும் இறப்பரும் சவால்களுக்கு உள்ளாகி வருகின்றன என்று ஆதங்கப்படுகிறார்கள் அவதானிகள்.  குறிப்பாக பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே இந்நிலைமை உக்கிரமடையலானது. விளைச்சல் காணிகள் குறைவடைந்து வருகின்றன. மாற்றுப் பயிர்ச்செய்கை என்னும் பெயரில் மலை நிலத்துக்குப் பொருத்தமில்லாத பயிர்கள் நடப்படுகின்றன. காடுகள் மண்டி வருகின்றன. 

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் வேலை இல்லாப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வேலைதேடி தோட்டங்களைவிட்டு வெளியிடங்களுக்குப் புலம்பெயரும் நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எஞ்சியிருக்கும் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான சம்பளம் வழங்க கம்பனி தரப்பு தயாரில்லை. 1000ரூபாவும் இல்லை. 50ரூபாவும் இல்லை. 

கோட்டபய வந்தாலும் சஜித் வென்றாலும் கம்பனி தரப்பை வளைக்க முடியுமா என்பது ஐயமே. எந்த அரசாங்கம் என்றாலும் கம்பனி தரப்பை பகைத்துக் கொள்ளவோ அதனோடு முட்டிமோதவோ தயாரில்லை. ஏனெனில்  இந்தக் கம்பனிகள் பல்தேசிய முதலீட்டாளர்களுக்கு உரிமையானவை. கம்பெனிகளின் தாளத்துக்கு ஏற்ப ஆடும் போக்கையே சகல தேசிய தலைமைகளும் கையாளும். இதை மறந்துவிட முடியாது. 

இதுவே யதார்த்தம் என்றாலும் இதற்காக வாக்களிக்காமல் இருந்து விடுவது சரியா? தேசிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை கைநழுவ விடுவது உசிதமானதல்ல என்பதே ஜனநாயகத்தை நேசிப்போர்களின் பார்வை.

மலையக மக்கள் 1920ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை இலங்கை அரசியலில் பலம் கொண்ட சக்தியாக இருந்தார்கள். இதன் பின்னரான அரசியல் மாற்றங்கள் அரசியல் தலைமைகளின் தொலை நோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தேசிய நீரோட்டத்தோடு மலையக சமூகம் சங்கமிப்பது தடைப்பட்டது. இதனால் 1977 வரை அரசியல் அநாதைகளாக கணிக்கப்படலாயினர். இதற்குப் பிறகு வாக்களிக்கும் உரிமை கிடைத்தாலும் இம்மக்கள் வாக்களிக்கும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டார்கள்.  தற்போது அந்நிலை படிப்படியாக மாற்றமடைந்து வருகிறது. 

இம்மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்  இதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களது வாக்களிக்கும் உரிமை பயன்படுப்படுவது அவசியம். நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பார்கள். அதை சேதாரம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. 

ஏனெனில் 2015 ஆம் ஆண்டினைப் போன்றே இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மலையக மக்களின் வாக்குகளும் தீர்க்கமானவையாக அமையப் போகின்றன. யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்க  உதவப் போகின்றன. 

அந்த அருமையான வாய்ப்பை அலட்சியப்படுத்தலாமா? ஆகாது. ஆதவினால் நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். மனமுடைந்த மக்கள் சினமடைந்து சொல்லும் வார்த்தையை சிறு பிள்ளைத் தனமாக எண்ணிவிடக் கூடாது யாரும்.      

பன். பாலா

Comments