அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் | தினகரன் வாரமஞ்சரி

அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்

ஜனநாயக அரசி யல் நீரோட்டத்தில் கலந்து 25 வருடங்களாக நேர் மையுடன் கூடிய அரசியல் நடத்தி வந்ததாகவும். அந்த உறுதியான நிலைப்பாட்டிலிருந்து ஒரு போதும் விலகப்போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங் கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த சிறப்புப் பேட்டியின்போது தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளில் இரவு பகல் பாராது ஈடுபட்டுவரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை தினகரன் வாரமஞ்சரிக்கு பேட்டியொன்றை வழங்கினார். அந்த பேட்டி விபரம் வருமாறு.

கேள்வி – நீங்கள் கடந்து வந்த அரசியல் பயணப்பாதை குறித்து சற்று விளக்கமாக சொல்ல முடியுமா? 

பதில் – எனது 25 வருட அரசியல் பயணம் ஒன்றும் பஞ்சு மெத்தைப் பயணமல்ல. கரடு முரடான கடும் பயணம் ஆனால் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய பலத்தை அந்தப் பயணம் எனக்கு பெற்றுத்தந்துள்ளது. எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காட்டித்தந்த அரசியல் பாடத்தை நான் தொடர்ந்து பேணி வருகின்றேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் எதிர்கொண்ட சவால்கள் ஒன்றும் இலகுவானதாக இருக்கவில்லை. நான் எதிர்கொண்ட சவால் வேறு. எவராவது எதிர்கொண்டிருந்தால் இந்த அரசியல் பாதையிலிருந்து வெருண்டு ஓடி ஒளிந்திருப்பார்கள். 

இன்று நான் எனது சமூகத்துக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஆல விருட்சத்தை பட்டுப்போகாமல் நீரூற்றி வளர்ப்பதில் பெரும் சிரமங்களைக் கூட எதிர்கொண்டேன். இன்றும் அப்படித்தான் எம்மோடு கூடியிருந்தவர்களின் நெருக்குவாரங்கள், சவால்கள், அச்சுறுத்தல்கள் ஒரு புறம். வெளியே இருந்து எதிர்கொண்ட சவால்கள் மறுபுறம் ஆனால் நான் உறுதியான ஈமானுடன் கூடிய எண்ணத்துடன் நேர்மை தவறாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இந்தப் பயணம் சற்றும் தடம் புறளாத வகையில் தொடரும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன். 

கேள்வி – உங்கள் மீது கொடுக்கப்பட்ட, இன்றும் தொடுக்கப்படுகின்ற அம்புகளை எப்படி எதிர்கொள்கின்றீர்கள்? 

பதில் – இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முற்பட்டால் நான் கடந்து வந்த 25 வருடகாலப்பகுதியை திரும்பிப் பார்க்க வேண்டிவரும். அவ்வளவு தூரம் பயணிப்பது என்பது இந்த நேரத்தில் சாத்தியப்படக் கூடியதல்ல. ஆனால் இந்தக் கட்சியை கருவறுக்க வேண்டுமென்பதில் நிறையப்பேர் கங்கணம் கட்டிச் செயற்பட்டதை மறக்க முடியாது. ஒவ்வொருவராக பெயர் சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. அந்தளவுக்கு அரசியல் நாகரீகமற்றவனாக நான் நடந்துகொள்ள விரும்பவில்லை. 

எமது தலைவரின் மறைவுக்குப் பின்னர் கட்சி எந்தளவுக்கு நெருக்கடிகளை சந்தித்தது என்பதை முஸ்லிம் சமூகம் நன்கறியும். தலைவரின் பெயரை விற்றுப் பிழைக்கும் கூட்டம் தத்தமக்கென மரத்திலிருந்து கிளைகளை உடைத்துக் கொண்டு நாம் தான் தலைவர் வழி செல்கின்றோம் எனக் கூறித்திருந்தனர். இன்றும் கூட அது நடந்துகொண்டு தானிருக்கின்றது. 

என்மீது சேறு பூசும் அரசியல் கலாசாரம் பல கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதை நாடே அறியும். எனக்குச் சவால் விடுத்தவர்களில் சிலர் இன்று காணாமல் போய்விட்டனர். எவ்வளவு ஈட்டிகள், அம்புகள் என்னை நோக்கி எறியப்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு உடைத்தெரியும் பலம் என்னிடம் காணப்படுகின்றது. படைத்த நாயகன் அந்த தைரியத்தை எனக்குத் தந்து கொண்டே இருக்கின்றான். இந்தக் கட்சியால் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் பலர் இன்று கட்சியையும், தலைமையையும் அநாகரிகமான முறையில் விமர்சித்துக் கொண்டும், தாக்குதல்களை நடத்திக் கொண்டுமிருக்கின்றனர். ஆனால் அவர்களால் இன்றளவும் எம்மை வெல்லமுடியாது போயுள்ளது தான் யதார்த்தம்.   

கேள்வி – மிக அண்மையில், அதாவது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உங்கள் மீது சேறு பூசும் ஒரு அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்பட்டது இதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டுள்ளீர்கள்? 

பதில் – இந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்தது. தீர்மானம் என்பதைவிட சஜித்தை களமிறக்க வேண்டும்மென்பதில் அரசுக்குள்ளிருந்து கொண்டு போர்க்கொடி தூக்கியவர்களில் நான் முதன்மையானவன். இதனை பொறுக்க முடியாத ராஜபக்ச தரப்பு மேடையேற்றிய சேறுபூசும் கலாசார நாடகத்தின் கதாநாயகன் ஹிஸ்புல்லாஹ் ஆவார். அவர் அமர்த்திய கூலிப்படைதான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றது. 

அத்துடன் ஊடக தர்மத்தை காற்றில் பறக்கவிட்ட ஒரு தனியார் ஊடகம் ஊடக ஒழுக்க விழுமியங்களை மறந்து பணத்துக்காக அந்தத்தரப்புக்கு சோரம் போய்க்கொண்டிருக்கின்றது. அது போதாதென்று. என்னை மிரட்டும் தொனியில் என்னை காப்பாற்ற கப்பமாக ஒரு கோடி ரூபாவை பேரம் பேசியது. இதில் சம்பந்தப்பட்ட நபர் ரிஷான் மரூஸ் என்பவராவார். இவரை நான் ஒருபோதும் ஊடகத்துடன் தொடர்புபட்டவராக கண்டதே கிடையாது. 

றிஸாம் மரூஸ் எமது கட்சியின் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்கை அடுத்தடுத்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அமைச்சரை பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புபடுத்திப் பேசியமைக்கு வருந்துவதாகவும், அது தொடர்பில் தன்னுடன் பேசுவதற்கான அவகாசத்தை பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளார். 

றிஸாம் மரூஸ் ஒருநாள் சிப்லி பாரூக்குடன் என்னை சந்திப்பதற்கு வந்தார். இச்சந்திப்பின் போது நான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக அவர் குற்றம் சாட்டியதில் எவ்வித உண்மைகளும் இல்லையென்பது தனக்கு நன்றாக தெரியுமென்று தெரிவித்தார். அத்துடன் தனது பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவ்வாறு செய்ய முற்பட்டதாகக் கூறியதோடு, இது சம்பந்தமான மறுப்பை ஊடக மாநாடொன்றில் தெரிவிக்க முடியும் என்று கூறினார். 

இந்தப் பேர்வழியின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் கொண்ட நான், அவரது தொலைபேசி உரையாடலை பதிவு செய்து கொள்ளுமாறு சிப்லி பாரூக்கிடம் கூறியிருந்தேன். 

அதனைத் தொடர்ந்து, சிப்லி பாரூக்கை மீண்டும் தொடர்புகொண்டு ஒரு கோடி ரூபா பணத்தை கப்பமாகத் தருமாறு கேட்டிருக்கிறார். அவர் அதற்கு உடன்படாத காரணத்தினால், பின்னர் பேரம்பேசி அந்த ஊடக சந்திப்புக்கு முன்னர் 25 இலட்சம் ரூபாவும் அதன் பின்னர் 25 இலட்சம் ரூபாவும் தருமாறு கோரியுள்ளார். 

எனக்கு எதிராக புனையப்பட்ட இந்தக் குற்றச் சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு பெருந்தொகை பணத்தை ஹிஸ்புல்லாஹ் வழங்கி வருகிறார் என்றும், அவருக்கும் மொட்டு கட்சியின் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையிலுள்ள தொடர்பினாலேயே இவையெல்லாம் நடப்பதாகவும் கூறினார். நாகரீகம் கருதி குறித்த அரசியல்வாதியின் பெயரை வெளியிடுவதற்கு நான் விரும்பவில்லை. 

றிஸாம் மரூஸ் என்ற அந்த நபர், ஹிஸ்புல்லாஹ்வின் பின்னணி மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் பல விடயங்களை என்னிடம் கூறியிருந்த போதிலும், அவற்றை முழுவதுமாக பகிரங்கப்படுத்தி அரசியல் இலாபம் தேட விரும்பவில்லை. என் மீது குற்றம்சாட்டியவர்கள் பணம் கொடுத்து இயக்கப்பட்டவர்கள். 

றிஸாம் மரூஸ் தன்னுடன் முஹம்மத் மிப்லால் மௌலவி, “மவ்பிம வெனுவென் ரணவிரு” என்ற அமைப்பைச் சேர்ந்த அஜித் பிரசன்ன ஆகியோருக்கும் இவ்வாறு பணம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். 

எனது 25 வருட பாராளுமன்ற அரசியலில் நேர்மையாக நடந்துள்ளேன். எனது நற்பெயருக்கு களங்கமேற்பட இடமளிக்கமாட்டேன். 

தேவையேற்படின் குறித்த குரல் பதிவுகளை சிங்கப்பூர் அல்லது வேறேதும் நாடுகளுக்கு அனுப்பி பரிசீலனை செய்யமுடியும். அரசாங்க பகுப்பாய்வாளருக்கும் அதனை பரிசீலனைக்கு அனுப்ப முடியும். 

என்னை பற்றி அவதூறு பரப்பிவரும் இவ்வாறான இலத்திரனியல் ஊடகங்கள், இதன் பின்னரும் எனக்கு சேறுபூசும் மட்டரகமான காரியங்களில் ஈடுபடுமானால் அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை. எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

நேர்காணல்: எம்.ஏ.எம். நிலாம்

Comments