ஆபத்து குறைந்தவர்களுக்கு வாக்களிப்பதே தமிழர்களின் வரலாறு | தினகரன் வாரமஞ்சரி

ஆபத்து குறைந்தவர்களுக்கு வாக்களிப்பதே தமிழர்களின் வரலாறு

தமிழ் மக்கள் தெரிவு இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிந்த பின்னர்தான் தங்கள் நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன், குறித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள் எனக் கேட்பது வாக்களிப்பு வீதத்தைக் கூட்ட உதவும் என்கின்றார். இதன் மூலம், வெற்றி பெறும் வேட்பாளர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தம்முடன் பேச வேண்டிய தேவையும் வலியுறுத்தப்படும் என்கிறார். .

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை ஒன்று சேர்ப்பதற்​ெகன முயற்சிகள் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அது தற்போது பிசுபிசுத்துப் போயிருக்கின்றது. அதன் தோல்விக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?  

பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. தமிழ் தலைமைகள் ஓரணியில் செயற்பட வேண்டும் என்கிற ஆதங்கம் எங்கள் மக்கள் மனங்களில் இருக்கின்றது. கூட்டமைப்பில் இருந்து நாங்கள் எவரையும் எப்போதும் வெளியேற்றவில்லை. எங்களுடன் இருந்தவர்கள் விலகிப்போனதாலேயே தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை ஏற்பட்டது. நாங்கள் ஒருவரையும் ஒருபோதும் விலக்கவில்லை. அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த முயற்சியை எடுத்தபோது நாங்கள் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினோம். மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி என்ற வகையில் தமிழ் தேசிக் கூட்டமைப்பு பல முயற்சிகளை ஏற்கனவே எடுத்திருந்தது. வேட்பாளர்களுடன் பேசியிருந்தது. ஆதலால் தமிழரசுக்கட்சியின் தலைவர் முதலாவது கூட்டத்திலேயே அதனை அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருந்தார். நாங்கள் ஏற்கனவே சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம் ஆனாலும் நாங்கள் எல்லோருடனும் இணைந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றோம். என்று. நாங்கள் ஏற்கனவே ஏனைய கட்சிகளோடு பேசி எடுத்திருந்த முடிவுகளை நாங்கள் குறித்து அனுப்பியிருந்தோம். அவைதான் அந்த 13 அம்சக் கோரிக்கைகளிலும் காணப்பட்டன. நாங்கள் முழுமையாக ஒற்றுமைக்காக ஒத்துழைத்தோம். மூன்று கூட்டங்கள் முடிவடைந்த பின்னர் அந்த ஆறு கட்சிகளில் ஒன்று தன்னிச்சையாக வெளியேறியது. ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பது என்று தீர்மானித்த பிறகும் ஒரு கட்சி இவ்வாறு வெளியேறியது குறித்து நான்காவது கூட்டத்தில் நான் கேள்வியெழுப்பியிருந்தேன். அவர்கள் 13 அம்சக் கோரிக்கையை தயாரிக்கும்போது உடனிருந்தார்கள். அவர்களது கோரிக்கைகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அவர்கள் தாங்கள் கையெழுத்திடமாட்டோம் என நொண்டிச் சாட்டு சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்கள்  

ஆனால் அந்த 13 அம்சக் கோரிக்கை வெளியிடப்பட்டவுடனேயே தெற்கில் அது பெரியதொரு எதிர்ப்பலையைத் தோற்றுவித்திருந்தது. அந்த எதிர்ப்பலையைத் தொடர்ந்து எந்தவொரு வேட்பாளரும் எங்கள் கோரிக்கைகளை பார்ப்பதற்குக் கூடத் தயாராக இருக்கவில்லை. அப்போதே அது அதன் முடிவைச் சந்தித்து விட்டது. அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்காக முதலில் எடுத்த முற்சியை நாங்கள் கைவிடத் தயாராக இருக்கவில்லை. அதனது விளைவைத்தான் இப்போது வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அறிக்கையில் காணக்கூடிதாக இருக்கின்றது. வேறு சில தேர்தல் அறிக்கைககளிலும் சில விடயங்கள் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்தக் கூட்டிலிருந்த இன்னொரு கட்சியும் தனது நிலைப்பாட்டை அறிவித்தது. முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்குப்போடுமாறு தாங்கள் கோர மாட்டோம் என்று கூறியிருந்தார். விரும்பியவாறு வாக்களியுங்கள் என்று அறிக்கை விட்டார். அப்படியானால் சிவாஜலிங்கத்துக்கு வாக்களிக்குமாறுதான் அவர் சொன்னதாகக் கொள்ள வேண்டும். விரும்பியவாறு வாக்களிக்கச் சொல்ல தலைவர்கள் எதற்கு, அதனையும் நாங்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். இல்லையில்லை தவறிருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்றார்கள்.  

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக் ஆதரவளிப்பதென்ற முடிவினை எடுத்திருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் அந்த முடிவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை எப்போது அறிவிப்பது என்பது தான் முடிவெடுக்கப்படாமல் இருந்தது. அதனை அறிவிக்கும் பொறுப்பை அவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் விட்டுவிட்டார்கள்.  

எனவே இதனை அறிவிப்பதற்கு உத்தியோகபூர்வ முடிவொடுப்பது அவசிமானதாகியது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, எல்லோரும் சஜித்தை ஆதரிப்பதென்ற கருத்தோடு ஒத்துப்போனதால், செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுத்த பின்னர் அதனை அறிவிக்காமல்விட இயலாது என்று எண்ணினோம்.

சித்தார்த்தன் தனக்கு மறுப்பேதும் இல்லை என்றார். ஆனால் அடைக்கலநாதன் தனது கட்சிக்கூட்டம் இம்மாதம் 6ஆம் திகதி முடியும்வரை அவகாசம் கேட்டார். அதனால்த்தான். தமிழரசுக்கட்சியின் முடிவை அறிவித்த பின்னர் கூட்டமைப்பின் முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி ஒரே முடிவை எடுக்க வேண்டுமென விரும்பினாலும் அந்தக் கூட்டில் இருந்து இரண்டு கட்சிகள் விலகி தமது முடிவைம் அறிவித்து விட்டன. எனவே எங்களது அறிவிப்பால் தமிழர்களின் ஒருமித்த குரல் உடையவில்லை. ஏற்கனவே இரண்டு கட்சிகள் அதனை உடைத்துவிட்டன,  

13 அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்கிய கடசிகளுக்கு யாரை ஆதரிப்பதென்ற முடிவில் ஒற்றமைப்பட முடியாமைக்கான காரணம் என்னவாக இருக்கலாம்?  

இது நீங்கள் அவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. ஒன்றாகப் பேசும்போது ஒரு கட்சி பகிஷ்கரிப்பதாகச் சொன்னால், அதன் பின்னர் எதனைப் பேசுவது, இன்னொரு கட்சி சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாதென முடிவெடுத்தால் என்ன பேசுவது? இதில் ஒன்று மட்டும் தெளிவாக விளங்கப்பட வேண்டியது. இன்று தேசிய ரீதியில் மக்களின் ஆணையைப் பெற்ற ஒரே கட்சி தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு மட்டும்தான். வடக்கு கிழக்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 18 பாராளுமன்ற உறுப்பினர்களில்16 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஏனைய இருவரும் மேற்கூறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களல்ல.

அந்த ஆணையை வைத்துக்கொண்டு இந்தக் கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள் நாங்கள் தான். அவ்வாறிருந்த போதும், தமிழர்களின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டுதான் அனைவரோடும் சேர்ந்தியங்க எங்களால் இயன்றளவு நாங்கள் முயன்றோம். அவர்கள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள் என்பதற்காக நாங்கள் எங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க இயலாது.  

13 அம்சக் கோரிக்கைள் தயாரிக்கப்பட்டபோது உங்களது கட்சியும் உடனிருந்தது. 13 அம்சக் கோரிக்கைள் தெற்கில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதில் அடங்கியிருக்கும் சாத்தியமற்ற விடயங்கள் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்காததேன்?  

இந்த 5 கட்சிகளின் கூட்டில் நான் நான்காவது கூட்டத்தில் இருந்துதான் பங்கேற்கத் தொடங்கினேன். ஆரம்பம் முதலே நான் முன்வைத்த கருத்து எங்களது 13 கோரிக்கைகளையும் சஜித் பிரேமதாச மறுத்துரைக்க கோட்டாபய சம்மதித்தால் நாங்கள் கோட்டபயவுக்கு ஆதரவளிக்கப் போகின்றோமா என்பதுதான். இந்த 13 அம்சக் கோரிக்கைகளை ஆதரிப்பதாக கோட்டாபய கூறியிருந்தால் கூட அவருக்கு தெற்கில் ஒரு வாக்கேனும் குறையப் போவதில்லை. ஒரு வேட்பாளருடன் மட்டுமான பேரம் பேசுதலாக இருக்கக் கூடாதென்றேன்.

ஆனால் ஆறு கட்சிகள் சேர்ந்து முயற்சிக்கும்போது அதற்கு தடங்கலாக இருக்கக் கூடாதென்றே நான் யோசித்தேன். அந்த 13 கோரிக்கைகளும் எங்களது சரித்திர பூர்வமான நிலைப்பாடு. ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் அதன் வீரியத்தில் எனக்கு உடன்பாடில்லாதபோதும் அப்படித்தான் சொல்ல வேண்டுமென எல்லோரும் முடிவெடுத்தபோது நாங்களும் சம்மதிக்க வேண்டியிருந்தது  

ஆனால் அவ்வாறு கோரிக்கைகளை தேர்தல் காலங்களில் ஆவணப்படுத்தும்போது அது நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கு அல்லது ஆதரிக்க எண்ணியிருந்த வேட்பாளருககு பாதிப்பினை ஏற்படுத்தும் என்று எண்ணவில்லையா?  

நான் முன்னரேயே அதனை அறிவுறுத்தியிருந்தேன். நாங்கள் ஏற்கனவே வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தோம். அது இவ்வாறான நிபந்தனைகள் நிறைந்ததல்ல. அது நாட்டு சூழ்நிலையையும் அனுசரித்ததாக இருந்தது. ஆனால் ஆறு கட்சிகளின் முடிவை நாங்கள் எதிர்க்க விரும்பவில்லை. ஆனால் அதற்கான விளைவுகள் நான் எதிர்பார்த்த விதமாகவே இருந்தது. உண்மையில் ஒற்றுமைக்கு நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்ற பழிச்சொல்லுக்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை. நாங்கள் சொன்னது போலவே எந்தவொரு வேட்பாளரும் அந்தக் கோரிக்கைகளைப் பற்றிப் பேசவே விரும்பவில்லை.  

மக்கள் என்றுமே கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் தெரிவில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதால் நீங்கள் உங்கள் முடிவை அறிவித்திருக்கின்றீர்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றதே?  

இது இரண்டு விதமாகப் பார்க்கப்பட வேண்டும். மக்களின் மனோநிலையை அறிந்துதான் நாங்கள் தீர்மானமெடுக்க வேண்டும். அதற்காக மக்கள் விரும்புவதை மாத்திரம் நாங்கள் கொடுக்க இயலாது நாங்கள் தலைமைத்துவமும் கொடுக்க வேண்டும். இந்த இரண்டும், ஒன்றோடொன்று இணைந்ததுதான். கூட்டமைப்பு யாரைக் கைகாட்டுகின்றது என்பதை அறிய மக்கள் ஆர்வமாய் இருக்கின்றார்கள். தமது தெரிவாக அது இருந்தாலும் கூட்டமைப்பும் அதனைச் சொல்லவேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தேர்தலில் வென்ற பின்னர் அந்த வேட்பாளர் தமிழ் மக்கள் எனக்கு வாய்ப்புத் தந்திருக்கின்றார்கள் நீங்கள் அல்ல என்று எம்மைப் பார்த்துச் சொல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை தீரும்வரை அவர்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களாயிருக்க வேண்டும். எனவே நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்பது அந்தவகையில் முக்கியமானது. நாங்கள் அவ்வாறு அறிவித்தால்தான் வாக்களிப்பு வீதத்தையும் கூட்ட முடியும்.  

பொதுஜன பெரமுனவின் வேட்பாளருடன் நீங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டீர்களா? அவரை நிராகரிப்பதற்கான வலுவான காரணிகள் என்னென்ன?  

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நான் தனியாகச் சந்தித்திருந்தேன். அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினேன். அரசியல் தீர்வைப் பற்றி என்னுடன் பேசிப் பயனில்லை. அண்ணனுடன் தான் அதைப் பற்றிப் பேசவேண்டும் என்றார். அப்போது நான் சொன்னேன் மற்றைய வேட்பாளர்கள் தரும் வாக்குறுதிகளிலும் பார்க்க அதிகளவில் நீங்கள் தரலாம்.

ஏனென்றால் உங்களை ஒருபோதும் துரோகியாக சிங்கள மக்கள் பார்க்க மாட்டார்கள் என்றேன். அதனை நான் ஏன் கேட்டேன் என்றால் ஒருவேளை அவர் வென்றால் தான் சொன்னதை அவரைக் கொண்டு செய்விக்கலாம். அல்லாமல் தோற்றால், மற்றையவர் செய்வதைத் தடுக்கமல் இருப்பதற்காகவது அது உதவும் என்பதற்காகக் கேட்டேன். ஆனால் அவர் எதனையும் சொல்லவில்லை. சொல்ல விரும்பவும் இல்லை. ஆனாலும் அவர் கேட்டுக்கொண்டதற் கிணங்க அவரது தமயனாரையும் நான் சந்தித்தேன். அவரும் உருப்படியாக எதனையும் கூறவில்லை.

உத்தியோகபூர்வமாக தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு அவர் இணங்கினார். ஆனால் இறுதிவரை அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் வரவில்லை. எனவே அவர்களது நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு வேறு தெரிவிருக்கவில்லை. ஒரு வேளை தேர்தலில் அவர் வென்றாலும் கூட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும். யார் வெல்கின்றார் என்பது முக்கியமல்ல எங்கள் நிலைப்பாடென்பது முக்கியமானது.  

கோட்டாபய குறித்த அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அவர் ஜனாதிபதியாகத் தெரிவானாலும் அவ்வாறே செயற்படுவார் என்று எதிர்பார்க்கின்றீர்களா?  

அவ்வாறு சொல்ல இயலாது. பொதுத் தேர்தல் வரைக்கும் அவ்வாறு செயற்படமாட்டார் என்று எண்ணலாம்.

முன்றாவது அணியாக ஜே.வி.பியின் வேட்பாளர் குறித்து ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை,  

எனது தெரிவு ஆரம்பத்தில் அதுவாகத்தானிருந்தது. ஜே.வி.பியுடன் இணைந்து செயற்படுவதற்கான முயசிற்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது கனிந்து வரும்போதுதான் ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.  

நீங்கள் சஜித்தை ஆதரிப்பதற்கான வலுவான காரணங்களாக எவற்றைக் கூறுவீர்கள்?  

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு பற்றி தெள்ளத்தெளிவாக முதல் பக்கத்திலேயே கூறப்பட்டிருக்கின்றது. அது மாத்திரமல்ல ஏனைய பிரச்சினைகள் பற்றியும் அவரது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

சஜித் பற்றிய தப்பபிப்பிராயங்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. அவரைப் போலவே அவரது தந்தையைப் பற்றியும் நல்லெண்ணமே அவர்களிடமிருக்கின்றது.   

நான் சில காலங்களுக்கு முன்னர் இந்து பத்திரிகையின் பேட்டியொன்றில் கூறியிருந்தேன். இதுகாலவரையில் நாங்கள் குறைந்த தீயதற்கே வாக்களித்து வருவதாக. நீண்டகால அடிப்படையில் நோக்குவதானால் தெற்கில் இருக்கும் முற்போக்கு சக்திகளோடும், ஜே.வி.பி போன்ற கட்சிகளோடும் இணைந்து செயற்பட்டால்தான் ஆரோக்கியமான அரசியல் களமொன்றை உருவாக்கலாம் என்று கூறியிருக்கின்றேன். 

இளையகனி   

Comments