சு.கவை அழிக்க சந்திரிகாவுக்கு இடமளிக்க மாட்டோம் | தினகரன் வாரமஞ்சரி

சு.கவை அழிக்க சந்திரிகாவுக்கு இடமளிக்க மாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து கட்சியை நாசம்செய்யும் செயற்பாட்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையில் எடுத்துள்ளார். அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் எனது தந்தையும் இணைந்து உருவாக்கிய சுதந்திரக் கட்சியை நாமே பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரது முழுமையான நேர்காணல் வருமாறு

கேள்வி : ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் ஒருவாரம்தான் உள்ளது. உங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? 

பதில்: எமது வெற்றி நிச்சயமானதும் உறுதியானதுமாகும். நாம் எமது தேர்தல் செயற்பாடுகளையும், பிரசாரத்தையும் வெற்றியின் உறுதியிலேயே ஆரம்பித்திருந்தோம். தினம் தினம் அது வளர்ச்சிக்கண்டதே தவிர வீழ்ச்சியடையவில்லை. 

கேள்வி : இவ்வாறு அசைக்க முடியாத நம்பிக்கை எவ்வாறு ஏற்பட்டது? 

பதில் : நாம் தேர்தல் பிரசாரத்தை 100இற்கு 50 சதவீதமான பெறுபேறுகளை கையில் வைத்துக்கொண்டுதான் ஆரம்பித்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எம்முடன் இணைந்துக்கொண்டுள்ளது. எமது முற்போக்கு முகாம் மிகவும் பலம்வாய்ந்தது. தாய் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் எம்முடன் கைக்கோர்த்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை இழந்தால் எமது நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அதனை மக்களும் நன்கு புரிந்துக்கொண்டுள்ளனர். இனத்துக்காக தமது கடமையை செய்வதற்கு மக்கள் தயாராகவுள்ளனர். 

கேள்வி : அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்படிக்கை உங்களது ஆட்சிக்காலத்தில்தான் முதல் முதலாக கைச்சாத்திடப்பட்டது. சஜித் பிரேமதாச, நாட்டுக்கு பாதகமான உடன்படிக்கைகள் எதனையும் கைச்சாத்திட மாட்டேன் எனக் கூறுகிறாரே? 

பதில் : நாட்டுக்கு எவ்வித பாதகமும் இருக்காதமையின் காரணமாகவே அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டோம். இந்த அரசாங்கம் கைச்சாத்திடுவது அவ்வாறான உடன்படிக்கையல்ல. இந்த உடன்படிக்கை மூலம் முழு நாடும் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் நாட்டுக்குப் பாதகமான எவ்வித உடன்படிக்கைகளிலும் நாம் கைச்சாத்திட மாட்டோம். அதற்கான உறுதியை நாட்டுக்கு கொடுத்துள்ளோம். நாட்டுக்குப் பாதகமான எவ்வித தீர்மானங்களையும் எடுக்க மாட்டோம். 

கேள்வி : 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட குடும்ப ஆட்சி மற்றும் சகோதார்களின் ஆதிக்கம் மீண்டும் எதற்கு கொண்டுவரப்பட வேண்டுமென்ற கேள்வியொன்று உள்ளதே? 

பதில் : எமது குடும்பம் ஓர் அரசியல் குடும்பமாகும். எனது தந்தை சு.கவின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். எனது மாமனார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள். எனது சகோதரர் சமால் மற்றும் மகன் நாமல் ஆகியோர் மக்கள் வாக்குகளால் பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர்கள். பலவந்தமாக எவரும் வரவில்லை. டி.எஸ்.சேனாநாயக்க இந்நாட்டின் பிரதமராக தெரிவாகியிருந்தார். அவருடைய மகன் டட்லி சேனாநாயக்க இந்நாட்டின் பிரதமரானார். ருக்மன் சேனாநாயக்க, வசந்த சேனாநாயக்க ஆகியோர் தற்போது இருக்கின்றனர். 

சேனாநாயக்கர்களின் பரம்பரை அரசியலில் உள்ளது. மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால்  பிரச்சினையில்லை. எமது நாட்டில் மாத்திரமல்ல ஆசியாவில் பெரும்பாலான நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளிலும் இவ்வாறு காணப்படுகிறது. சமவுடமை பொருளாதாரத்தை பின்பற்றும் கியூபா போன்ற நாடுகளை பாருங்கள். கெஸ்ரோ சகோதரர்களை தாண்டி எவருக்கும் அதிகாரத்தை கொடுக்க மறுக்கின்றனர். 

மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லையா? என்பதையே பார்க்க வேண்டியுள்ளது. இது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மக்கள் அனுமதிக்காது எவருக்கும் ஆட்சிக்குவர முடியாது. மறுபுறம் தகுதியையும் பார்க்க வேண்டும். ராஜபக்ஷ என்பதற்காக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் அது ஜனநாயகமல்ல. 

கேள்வி: நாடு சுதந்திரமடைந்து 71 வருடங்கள் ஆகியும் தொடரும் குடும்ப ஆட்சியின் காரணமாகவே முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளதென குற்றச்சாட்டொன்று உள்ளதே? 

பதில்: எப்படி எவ்வாறு கூற முடியும்? குடும்ப ஆட்சியின் காரணமாக நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 71 வருடத்தில் 30 வருடங்களாக நாட்டில் பாரிய யுத்தமொன்று நிலவியது. யுத்தம் காரணமாக அனைத்து மக்களும் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியிருந்தனர்.  

மரண பீதியில்தான் அனைவரும் வாழ்ந்தனர். இந்த நிலைமையை மாற்றியது யார்? யுத்த வெற்றிக்கான தலைமைத்துவத்தை கொடுத்தது யார்? நாம் ஏற்படுத்தியிருந்த ஆட்சியும் அபிவிருத்தியும் தொடர்ந்திருந்தால் நாடு இன்று எவ்வளவு தூரம் முன்னேறியிருக்குமென எண்ணிப்பார்க்க வேண்டும். அதிவேகப் பாதைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் இவ்வாறு பரந்துப்பட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்தோம்.

உயரிய பொருளாதார வளர்ச்சியையும் காட்டினோம். பொய்களை கூறி இதனை வீழ்த்தினர். இன்று 2.6 சதவீதம்தான் பொருளாதார வளர்ச்சியாகவுள்ளது. 

கேள்வி : இம்முறை தேர்தல் பிரசாரத்துக்காக இனவாதமென்ற ஆயுதத்தையே உங்கள் தரப்பு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறதே? 

பதில்: தேசியவாதம், இனவாதம் என்பது இரண்டு வெவ்வேறு அர்த்தமுடைய சொற்கள். நாம் இலங்கை என்ற இனத்தை பற்றியே பேசுகின்றோம். எமது தாய் நாட்டின் தேசியவாதத்தையே பேசுகின்றோம். நாடு பற்றி பேசும்போது இதனை இனவாதமென கூறுவது தவறாகும். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை எடுத்துக்கொண்டால் அது அடிப்படைவாதிகள் செய்த செயலாகும். முஸ்லிம் மக்கள் அதற்கு பொறுப்பானவர்கள் அல்ல. அடிப்படைவாதிகளை பாதுகாப்பதற்கான தேவை எமக்கில்லை. சகல இன மக்களும் சகோதாரத்துவத்துடன் வாழும் நாடே எமக்கு அவசியம். 

கேள்வி : வடக்கின் பிரதான தமிழ் கட்சிகள் இம்முறையும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துள்ளன. அதாவது இம்முறையும் வடக்கு உங்களுக்கு இல்லை என்பதா? 

பதில் : வடக்கின் அரசியல் மாற்றங்கண்டுள்ளதென நீங்கள் காணவில்லையா?. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு எதிராக தாய்மார்கள் நடுவீதியில் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு முன்னர் அவ்வாறான நிலைமைகள் இருக்கவில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 நிபந்தனைகளை வைத்துள்ளது. அவை நாட்டுக்கு நாசகரமானவையாகும். அவை குறித்து கதைப்பதற்குகூட நாங்கள் எண்ணவில்லை. சில தமிழ் தலைவர்கள்கூட இந்த நிபந்தனை நாட்டுக்குப் பாதகமானதென எண்ணுகின்றனர். இந்த நிபந்தனைகளை நாம் முற்றாக நிராகரித்தோம். ஆனால், சஜித் பிரேமதாச அத்தகைய நிபந்தனைகளை ஒருபோதும் நிராகரிக்கவில்லை.   

Comments