பழிவாங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் | தினகரன் வாரமஞ்சரி

பழிவாங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்

இந்த நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய தன்னம்பிக்கை தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கும் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வேட்பு மனு தாக்கல் செய்த நாளிலிருந்து இது வரை நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்ததாகவும் இந்த மக்கள் தன்மீது நம்பிக்கை கொண்டிருப்பதை காண முடிவதாகவும் கூறினார்.  வார இறுதியில் ஊடகங்களுடன் கலந்துரையாடும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்ட வாறு தெரிவித்தார். 

கேள்வி – உங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் சாதகத்தன்மை எவ்வாறாக அமைந்துள்ளது? 

பதில் – நாட்டுக்கு புதியதொரு தலைமைத்துவத்தின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஒரு தலைவர் வரவேண்டுமென்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். என்மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நான் போகுமிடங்களில் எல்லாம் மக்கள் அலைஅலையாகத்திரண்டு வருகின்றனர். 

நான் எனது கருத்துக்களைத்தான் மக்கள் முன்பாக வைக்கின்றேன். வாக்குறுதிக் கலாசாரத்தின் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை. வாக்குறுதிக்கலாசாரத்தை மக்களும் இன்று நம்புவதாக இல்லை. அது காலம் கடந்து போனதொன்றாகும். மக்கள் அணிதிரண்டு சஜித்தைக் கேட்டனர். கட்சித்தலைமைத்துவமும் அதனையே எதிர்பார்த்தது. நல்லெண்ணத்துடன் தான் எனது பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். நிறையவே மக்கள் தமது தொழில் துறவுகளைக்கூட விட்டுவிட்டு எனது கூட்டங்களுக்கு வருகின்றனர். அது என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையாகவே நான் கருதுகின்றேன். 

கேள்வி – புதிய ஜனாதிபதியிடமிருந்து நாட்டு மக்கள் எதனை எதிர்பார்ப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்? 

பதில் – மிக முக்கியமாக அவர்கள் எதிர்பார்ப்பது நிம்மதியாக வாழக் கூடிய சூழலைத்தான். குடும்பத்தோடு உண்டு, உடுத்து சந்தோஷமாக வாழும் ஒரு நிலைமை ஏற்பட்டாலே போதும் என எதிர்பார்க்கின்றனர். வன்முறை மற்றும் வெள்ளைவேன் கலாசாரம் மீண்டும் தலைதூக்ககூடாது என்றே எதிர்பார்க்கின்றனர். இவற்றை என்னிடமிருந்து தான் பெற முடியும் என மக்கள் நம்புகின்றனர். 

கேள்வி – எதிர்வரும் 16ஆம் திகதி மக்கள் உங்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால் உங்களது முதல் பணியை எங்கிருந்தது ஆரம்பிப்பீர்கள்? 

பதில் – முதலில் மக்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்துவேன். பழி வாங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் ஊழல் மோசடிகளுக்கும், போதைப்பொருள்பாவனை, விற்பனை இரண்டுக்கும் முற்றுப்புள்ளிவைப்பேன் சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் மிக கூடுதல் கவனம் செலுத்துவேன். 

யாரையும் பழி வாங்கும் எண்ணம் என்னிடம் கிடையாது. நான் தெரிவு செய்யப்பட்டால் என்னை ஆதரித்தவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்குமான உண்மையான தலைவனாகவே செயற்படுவேன்.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எனது இலட்சியம் சகல மக்களதும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பேன் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு இடமளிக்க மாட்டேன். இனவாதம், மதவாதம் என்பவற்றுக்கு துளியளவும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான இலங்கையை கட்டியெழுப்புவதே எனது பிரதான குறிக்கோளாகும். 

எமது விவகாரங்களில் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப்போவதில்லை. சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வேன். ஆனால் அவர்கள் அநாவசியமாக எமது விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார். 

எம்.ஏ.எம். நிலாம்

Comments