சுவர்க்க சிட்டு | தினகரன் வாரமஞ்சரி

சுவர்க்க சிட்டு

அருளும் அன்பும் நிறைந்த
ஆதியும் அந்தமுமான அல்லாஹ்வின்
அருட்கொடையாம் கவனத்தில்
அலைஅலையாய்ப் பறக்கும் சிட்டுக்களில்
அதோ! அந்த ‘ஹம்தா’ வையும் காண்கிறேன்
ஆடிப்பாடித் திரிகிறது அந்தச் சிட்டும்
இம்மையில் எண்பத்தாறு நாட்களே
இன்புற்று வாழ்ந்தாள் நம் “ஹம்தா”
இறையருள் தேடி மறுவுலகம்
இனிதாய்ப் போய்ச் சேர்ந்துவிட்டாள்
இறைநியதி எல்லோர்க்குமே ஒன்று என்பது
ஈமானியப் புனிதர்களின் நம்பிக்கையே!
கைநழுவிப் போனதுவே அந்தச் சின்னஞ் சிட்டு
கண் கலங்க வைத்ததுவே அந்தத் தளிர் மொட்டு!
சுவனத்தைக் கண்டு தானோ அந்தச் சிரிப்பு
சுற்ற இருந்தோருக்கோ அது பெரும் மலைப்பு
நடந்ததுவோ எதிர்பாரா ஒரு விளைவு
மடிந்ததுமே நம் ஹம்தாவின் வாழ்வு!
சுவனத்தில் பெற்றோர்க்கு இடமொதுக்க
சிட்டாய்ப் பறக்கிறது நம் “ஹம்தா”
பெற்றோர்க்குப் பெரும் பாக்கியம் தான்
பெருமானார் நல்கிய நற்செய்தி தான்
எல்லோர்க்கும் இப்பாக்கியம் கிடைப்பதில்லை
நல்லோர்க்கே நாயன் ஈந்திடுவான்
பொறுமை தான் இவ்வேளை நலமளிக்கும்
மறுமையில் நல் கூலி மிக கிடைக்கும்
பெற்றோர்க்குப் பொறுமையைத் தந்தருள்வாய்!
மற்றோர்க்கும் படிப்பினை ஊட்டிடுவாய்!
நம்மனைவரையும் ‘ஹம்தா’வுடன் சுவனபதியில்
நலமுடனே ஒன்றுசேர்த்திடுவாய் ரஹ்மானே!
 
எம். ஏ. ஹபீபர் ரஹ்மான்

Comments