அதிகாரம் மிக்க தனி மனித ஆட்சி ஜனநாயக நாட்டுக்கு ஏன் பொருத்தமற்றது? | தினகரன் வாரமஞ்சரி

அதிகாரம் மிக்க தனி மனித ஆட்சி ஜனநாயக நாட்டுக்கு ஏன் பொருத்தமற்றது?

லெபனான்  பிரதமர் மற்றும் அவரின் அரசாங்கத்துக்கு எதிராக இரண்டு வாரங்கள்  இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் இறுதியில் பிரதமரின் பதவி விலகலுக்கு காரணமாயிற்று. மக்கள் ஆர்ப்பாட்டமானது ஊழல் மோசடி, ஜனநாயகம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி என்பவற்றையும் அரசியல் மறுசீரமைப்புகளையும் முன்வைத்து வெற்றிகொள்ளப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இதுபோன்று ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்குமான போராட்டங்கள் பல நாடுகளில் தொடர்கின்றன. ஆகவே, இக்கட்டுரையானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்களுக்குள்ள தெரிவுகளை ஆராய்வதாக அமைகின்றது.  

இலங்கையில் அண்மைக்காலமாக பலமான தனிநபர் ஒருவரின் ஆட்சி தொடர்பாக பேசப்படுகின்றது. இத்தகைய கருத்தாடல் இன்று அரசியல்வாதிகளாலும் மதத்தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 1960களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற பெளத்த மதத்தலைவராக விளங்கிய ராஜகீய பண்டித என்பிடரகெதர தேரர் இத்தகையதொரு கருத்தினை முன்வைத்தார். அதன் பின்னர் MDBஅண்மையில் கண்டி அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த பிரிதொரு பெளத்த மதகுருவும் இக்கருத்தினை முன்வைத்தார். இத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்படுவதற்கு ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு  தீர்வுகாண முடியாமல் போனமை ஒரு காரணமாக அமையலாம். உலகில் நன்கு வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் நீண்ட ஜனநாயக பாரம்பரியம் ஒன்று காணப்படுகின்றது. அந்நாடுகளின் அபிவிருத்தி, தரமான ஆட்சிமுறைக்கு   ஜனநாயகப் பண்புகள் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளன என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால், இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா போன்ற பல நாடுகளில் ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சி இடம்பெற்றாலும் அவை உண்மையான ஜனநாயக விழுமியங்களை தழுவியதாக அமைவதில்லை. 

ஜனநாயகத் தேர்தல் மூலம் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்படுகின்றது. ஆயினும், அதன் பின்னர் ஆட்சியதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமே காணப்படுகின்றது. இதன் போது ஊழல் மோசடிகள், சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் என்பன சாதாரணமாக ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் இடம்பெறுகின்றன. இங்கு அரச அதிகாரம் ஒரு பலமான அல்லது உயர் குழாமினரால் கைப்பற்றப்படுகின்றது. இதனை  இலங்கை, இந்தியா,  பங்களாதேஷ், ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என்பவற்றில் பரவலாக அவதானிக்கலாம். இவை இன்னும் ஜனநாயக நாடுகளாகவே  அடையாளப் படுத்தப்படுகின்றன. 

ஆகவே, தேர்தல் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் எந்தளவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மதிக்கின்றார்கள், சட்டத்தை மதித்து ஆட்சி செய்கின்றார்கள், பழிவாங்கும் அரசியலை மறந்து செயற்படுகின்றார்கள் என்பன சிந்திக்க வேண்டிய முக்கிய வினாக்களாகும். ஜனநாயகத்தை பின்பற்றும் வழிமுறைகளில் அல்லது அதன் நடைமுறைகளில் குறைபாடுகளை வைத்துக்கொண்டு நாம் ஜனநாயத்தைப் புறக்கணிக்க முடியாது. உலகின் பெரிய நாடுகளில் இன்றும் ஜனநாயக ஆட்சிமுறையே காணப்படுகின்றது.  இதற்கு அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள் நல்ல உதாரணங்களாகும். இத்தகைய பெரிய நாடுகளில் கூட பலமான தனிநபரின் ஆட்சி குறித்து பேசப்படுவதில்லை. காரணம், அந்நாடுகளில் நன்கு முதிர்ச்சியடைந்த ஜனநாயக அரசியல் கலாசாரம் ஒன்று காணப்படுகின்றது. ஆகவே, ஆட்சிமுறையில் குறைபாடுகளை களையாது நாம் பலமான தனிநபர் ஆட்சி குறித்து பேசுவது பொருத்தமற்றது. 

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Pew Research Center  2017ஆம் ஆண்டு ஜனநாயகம் தொடர்பான மக்களின் எண்ணப்பாங்கினை மதிப்பிடும் நோக்குடன் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 38நாடுகள் இவ்வாய்வுக்கு உள்வாங்கப்பட்டன. இதன் முடிவுகள் உலகில்  ஜனநாயக ஆட்சிக்கான வரவேற்பு இன்னும் வீழ்ச்சியடையவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகின்றது. அந்தவகையில், 78வீதமானவர்கள்  ஜனநாயக ஆட்சியை ஆதரித்துள்ளார்கள். இதில் சுமார் 66வீதமானவர்கள் நேரடி ஜனநாயக ஆட்சியையும், 26வீதமானவர்கள் பலமான தனிமனித ஆட்சியையும், சுமார் 24வீதமானவர்கள் இராணுவ ஆட்சியையும் 49வீமானவர்கள் நிபுணர்களின் ஆட்சியை விரும்புவதாக ஆய்வு முடிவுகள் காணப்படுகின்றன. 

இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், நீண்ட ஜனநாயக பாரம்பரிய ஆட்சிமுறை சட்டகத்தில் வாழும் நாடுகளில் மக்கள் ஜனநாயக ஆட்சிமுறையையே தொடர்ந்தும் விரும்புகின்றார்கள் என்பதாகும். இதனை நன்கு வளர்ச்சியடைந்த செல்வந்த நாடுகளிலும் காணமுடியும்.  ஆகவே, இலங்கையில் பலமான தனிமனித ஆட்சியினை மக்கள் கோரவில்லை. இது ஆட்சியாளர்கள் தமது விருப்பங்களை அல்லது நிகழ்ச்சி நிரல்களை அடைந்துகொள்ள எடுக்கும் முயற்சியாகவே நோக்க வேண்டும். மறுபுறமாக, கல்வித்துறையில் முன்னேற்றம் காணாத எழுத்தறிவில் மோசமான நிலையில் காணப்படும் நாடுகளில், ஜனநாயகம் மக்கள் விரும்பும் தேவைகளை பெற்றுக்கொடுக்காத நாடுகளில், ஊழல் மோசடிகள் மலிந்து காணப்படும் நாடுகளில் ஜனநாயக ஆட்சிக்கான மாற்று வழி குறித்தும் மக்கள் சிந்திக்கின்றார்கள். அத்தகையதொரு வீழ்ச்சி நிலைக்கு இன்னும் இலங்கை செல்லவில்லை. 

அதேபோல், இவ்வாய்வின் மூலம் 66வீதமான மக்கள்  ஜனநாயக செயன்முறையில் நேரடியாக பங்குபற்ற விரும்புகின்றார்கள் என்பது தெளிவாகின்றது. மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முறைக்கும் உலகில் ஆதரவு அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. நிறைவேற்றுத்துறையின் அதிகாரம் பலப்படுத்தப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இடம்பெற்றது. இதனை மக்கள் வரவேற்கின்றார்கள். வட அமெரிக்கா,  ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள்  ஜனநாயகமற்ற ஆட்சியை முழுமையாக எதிர்க்கின்றன. இவ்விடயமானது ஜனநாயகத்திற்கான ஆதரவு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவில் அமைந்துள்ள பிரிதொரு நிறுவனமான The Economist Intelligence Unit ஜனநாயகம் தொடர்பான ஆய்வுகளை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனநாயகத்தை அளவீடு செய்ய சுட்டெண் ஒன்றை தயாரித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாடு எந்தளவுக்கு ஜனநாயகத்தன்மைக் கொண்டது என அறிய முடியும்.  

இதன்படி, பூஜ்ஜியம் தொடக்கம் 10வரையிலான புள்ளிகள் வழங்கப்படுகின்றன. பூஜ்ஜியம் என்பது ஏதேச்சதிகார ஆட்சியியையும் 10என்பது பூரண ஜனநாயக ஆட்சியையும் குறிக்கின்றது. ஐந்து பிரதான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு இடம்பெறுகின்றது. அவற்றில் (1) தேர்தல் செயன்முறை மற்றும் பன்மைத் தன்மை, (2) சிவில் சுதந்திரம், (3) அரசாங்கத்தின் செயற்பாடு, (4) அரசியல் பங்கேற்பு, (5) அரசியல் கலாசாரம் என்பன அடங்கும். அதன்படி பார்க்கும்போது, (2017) உயர் வருமானம் பெறும், வளர்ச்சியடைந்த நாடுகளில், கல்வியறிவு உயர் நிலையில் காணப்படும் நாடுகளில் மக்கள் தொடர்ந்தும் ஜனநாயக ஆட்சியை விரும்புகின்றார்கள். முன்னேற்றம் காணாத ஆட்சி நிலவும், ஊழல் மோசடிகள் மலிந்த, மானிட அபிவிருத்தியில் பின்னடைந்து காணப்படும் நாடுகளில் ஜனநாயக ஆட்சிப்பண்புகள் மிகவும் குன்றிய நிலையில் காணப்படுவதை இவ்வாய்வின் மூலம் அவதானிக்க முடியும். இதனை தன்சானியா, நைஜீரியா, இந்தோனேசியா, கானா, சிலி, செனகல், பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில் அவதானிக்க முடியும். 

இவ்வாய்வு முடிவுகள் சுமார் 15வீதமான மக்கள் பலமான தனிநபர் ஆட்சியை விரும்புவதை காட்டுகின்றது. உதாரணமாக, ஹங்கேரி, ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் தென்கொரியா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இத்தகைய எண்ணப்பாங்கு ஜனநாயகத்தின் தொட்டில் என கருதப்படும் இத்தாலியில் தோற்றம் பெற்றிருப்பது வியப்புக்குரிய விடயமாகும். இங்கு நீண்ட ஜனநாயக பாரம்பரியம் ஒன்று காணப்படுகின்றது. நினைவில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், எழுத்தறிவு உயர்வாக இருக்கும் நாடுகளில் ஜனநாயக ஆட்சிக்கான வரவேற்பு அதிகமாகவே காணப்படுகின்றது. படிப்பறிவில்லாத பாமர மக்கள் ஒப்பீட்டளவில் தனிநபரின் ஆட்சியை, இராணுவ ஆட்சியை விரும்புவதைக் காணமுடியும். மறுபுறமாக, தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் ஜனநாயகத்திற்கான ஆதரவு சற்று வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆகவே, இலங்கையில் பொருளாதார கொள்கைகளில் ஒரு சமநிலையைப் பேண வேண்டும். - உற்பத்தி, விநியோகம், வருமான பங்கீடு என்பவற்றில் சமநிலை  பேணுதல் அவசியம்.  இதற்கு சிறந்த வழி சமூக ஜனநாயக மரபாகும். இங்கு வெளிப்படும் பிரிதொரு விடயம் யாதெனில், பொருளாதாரம் நல்ல நிலையில் காணப்படும் நாடுகளில் ஜனநாயகத்தின் மீது மக்கள் ஆதரவு காட்டுகின்றார்கள் என்பதாகும்.  

இலங்கையைப் பொறுத்தவரையில் சுதந்திரத்திற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள், ஜனநாயக ரீதியான தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும், அவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதேச்சதிகார ஆட்சியாளர்களாகவே இருந்துள்ளனர். சுதந்திர இலங்கையில் முழு அளவிலான ஜனநாயகத்தை நாம் காணவில்லை. இலங்கையில் ஒருபோதும் ஏதேச்சதிகார ஆட்சி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை. அத்தகையதொரு நிலைமைக்கு இன்னும் நாம் செல்லவில்லை. அத்தகைய தெரிவு ஒன்று இன்னும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். ஆயினும், மாறிமாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மை அதிகாரத்தை பிரயோகித்தார்கள். இதனை 1970களின் பின்னர் தெளிவாகவே காணமுடியும். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி இடம் பெற்ற  சம்பவம் ஜனநாயத்தை சவாலுக்குட்படுத்தியதுடன், எதேச்சதிகாரத்துக்கான கதவைத் திறந்தது. ஆயினும், ஜனநாயகத்திற்கான தொடர்ச்சியான போராட்டம் அல்லது மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பன மீண்டும் 52நாட்களுக்குப் பிறகு மக்கள் ஆட்சியை நிறுவியது. இங்கு கவனிக்கத்தக்க விடயம் யாதெனில், எவரும் ஜனநாயம் மீண்டும் நிலைநாட்டப்பட்டமைக்கு எதிராக அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஆகவே, இலங்கையர்கள்   ஜனநாயகமற்ற தனிமனித ஆட்சிக்கு ஆதரவளிப்பவர்கள் அல்ல. அது ஒரு சிறு குழு முன்னெடுக்கும் பிரசாரம் மாத்திரமே. இது பெளத்த-தேசிய அடிப்படைவாத பின்புலத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. 

பொதுவாக எல்லாக் காலங்களிலும் ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. - 2015க்குப் பின்னர் இந்நிலை சற்று மாறியது. எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், சிறுபான்மையினர் உரிமைகள் மிக மோசமாகவே மீறப்பட்டுள்ளன. இதனை 1970களில் இருந்து தொடர்ச்சியாகவே நாம் அவதானித்துள்ளோம். ஆட்சியாளர்கள் ஜனநாயகத் தத்துவங்களை மீறி செயற்பட்ட வரலாறு பல உண்டு. ஆயினும், அத்தகைய எதேச்சதிகார ஆட்சி எப்போதும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கோ, செழிப்புக்கோ வழிகோலவில்லை.

உதாரணமாக, 1969ஆம் ஆண்டு இலங்கையின் தலா மொத்த தேசிய உற்பத்தி 160அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. சுமார் 50வருடங்களின் பின், 2017ம் ஆண்டு ஒரு சிறு அளவிலான அபிவிருத்தியைக் கண்டு சுமார் 4000அமெரிக்க டொலர்களுக்கு சற்று அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறைந்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சுமார்  22வருடங்களுக்கு மேல் கீழ் நடுத்தர வருமானம் பெரும் நாடாக காணப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னரேயே இலங்கை உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடு என உலக வங்கி அறிவித்தது. மாறாக, 1969ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலா மொத்த தேசிய உற்பத்தி 186அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. 2017ம் ஆண்டு அது 6500அமெரிக்க டொலர்களாக அதிகரித்தள்ளது. இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில் எதேச்சதிகார ஆட்சியாளர்கள் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்தகைய ஆட்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரியளவில் பங்களிப்பு செய்யவில்லை என்பதாகும்.  

பலமான தனிநபர்களை அல்லது எதேச்சதிகார ஆட்சியினை கொண்டு வருவதில் உள்ள ஆபத்தினை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவரும் போது அதன் தாக்கம் எமக்கு தெரியாது. ஆனால், பின்னர் அவர்களின் நடத்தைகளை எதிர்வுகூற முடியாது. அவர்களைப் பதவியில் இருந்து இலகுவில் அகற்ற முடியாது. அதிகார ஆசைகள் அல்லது அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அவர்கள் இலகுவில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனையே 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தினை அவசரமாக,  ஜனநாயக மரபுகளை மறுதலித்து கொண்டு வந்தபோது அவதானித்தோம். சுதந்திர இலங்கையில் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்குட்பட்ட ஆட்சிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்தாக இதனைக் குறிப்பிட முடியும். இச்சீர்திருத்தத்தின் உள்ளடக்கம், அது நிறைவேற்றப்பட்ட  விதம் என்பன முற்றாகவே சட்டத்தின் ஆட்சியை மறுதளிப்பதாக அமைந்தது. இதனை ஜனநாயகத்தை, சட்டத்தின் ஆட்சியினை ஆதரிக்கும் எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. பலமான தனிமனிதர்களின் ஆட்சி இவ்வாறுதான் அமையும் என்பதற்கு இதனை விட வேறு உதாரணங்கள் இலங்கைச் சூழலில் அவசியமில்லை.  

ஆயினும், பாராளுமன்றத்தில் தெளிவான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த, ஒரு பலமான அரசாங்கத்தைக் கொண்டிருந்த பலமான ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷ கூட பிரமாண்டமான பொருளாதார அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்தவில்லை. ஆகவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு பலமான ஆட்சியாளர் வேண்டும், அதன் மூலமே பொருளாதர அபிவிருத்தியை அல்லது தேசியப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் போன்ற வாதங்களில் எந்தளவுக்கு நியாயம் இருக்கின்றது என்று சிந்திக்க வேண்டும். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்ய பலமான பொருளாதாரம் ஒன்று அவசியம். உயர் தரத்திலான சமூக வாழ்க்கைக்கு வருமானம், சமத்துவம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என்பன தேசிய பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்தும் என்பதனை மனங்கொள்ள வேண்டும். 

இலங்கையில் காணப்பட்ட 10ஆண்டுகால குடும்ப ஆட்சி அதிகாரத்தை இயன்றளவுக்கு தம்மிடம் குவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டன. செல்வத்தை தம்மிடம் இயன்றளவு குவித்தார்கள். சமூகத்தில் சவாலுக்குட்படுத்த முடியாத அதிகார தளத்தை கட்டியெழுப்பினர். தமக்கு விசுவாசமான இராணுவத்தை, துணை இராணுவ குழுக்களை உருவாக்கினர். இவற்றுடன், வரம்பற்ற சிறப்புரிமைகளை ஒட்டுமொத்த குடும்பமும் அனுபவித்தது. 

தனிநபர்களின் அல்லது ஒரு குழுவின் அல்லது குடும்பத்தின் ஆட்சி ஊழலில் ஈடுபடும் எனவும், பணத்திற்காக ஏமாறக்கூடியவர்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. தமது செல்வத்தை சேமிப்பதற்கு, பொருளாதார பலத்தை பலப்படுத்த பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவர். அதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக பணம் பெற்றுக்கொள்வர். இதனை வர்த்தக செயற்பாடுகளில், உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் பொதுவில் காண முடியும். பொது மக்கள், இத்தகைய வர்த்தக மற்றும் கட்டுமான வேலைத்திட்டங்களாக எதிர்காலத்தில் நன்மையளிக்கும் ஒன்றாகக் கருதுவர். இதற்கு இலங்கை உட்பட பல நாடுகளில் நாம் உதாரணங்களை முன்வைக்கலாம். நேபாளத்தின் பெரும் செல்வந்தரான பினோத் செளத்ரி தனது சுயசரிதையில் நேபாள அரச குடும்பத்திற்கு 51%இலவச பங்கினை வழங்காமல் எந்த ஒரு பெரும் அளவிலான வர்த்தக செயற்பாட்டினையும் முன்னெடுக்க முடியாது என குறிப்பிடுகின்றார்.  இந்தோனேசியாவில் சுஹாட்டோவின் 32ஆண்டு தொடர் ஆட்சியில் 25பில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி அல்லது பொதுமக்களின் நிதி சூறையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவின்  முன்னாள்   பிரதமர் நஜீப் ராசக் 1MDB என்ற தனியார் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்து அதன் மூலம் 4.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிமனிதர்களின் குடும்ப ஆட்சி பொதுமக்களின் பணத்தை எவ்வாறு சூறையாடுகின்றது என்பதற்கு இவை சிறந்த உதாரணமாகும். 

இத்தகையதொரு ஆட்சிமுறையில் காணப்படும் பிரிதொரு ஆபத்து யாதெனில், பொதுமக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமை, சுதந்திரம் மிக மோசமாக அதிகாரத்தினால் அடக்கப்படுவதாகும். மக்கள் மீது தேசியவாத மற்றும் மதவாத சிந்தனைகள் திணிக்கப்படும். அத்துடன், சட்டத்தை ஒழுங்கினை அமுல்படுத்த பொறுப்பான நிறுவனங்களின் எதேச்சதிகார குடும்பங்களின் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும். அதன் மூலம் சாதாரண மக்களுக்குள்ள நீதிக்கான உரிமை அடக்கப்படும். 

மிக முக்கியமாக, தேசியவாத, மதவாத சிந்தனைகளால் மக்கள் கட்டப்படுவார்கள்.தமது சொந்த நாட்டுக்குள்ளேயே கைதிகளாக வாழும் நிலை ஏற்படும். ஆட்சியாளர்களை கேள்வி கேட்காது அவர்களின் சகல கட்டளைகளுக்கும் அடிப்பணிந்து செல்வர். மக்கள் ஆட்சியாளர்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். அவர்கள் எது செய்தாலும் தமது நன்மைக்கே என்ற தோற்றப்பாட்டினை ஆட்சியாளர்கள் உருவாக்குவார்கள். மக்களின் பகுத்தறிவு சிந்தனை முற்றாக மழுங்கடிக்கப்படும். இதன் மூலம் ஆட்சியாளர்களும் , அவரின் குடும்பமும் எதிர்ப்புக்கள் அற்ற நிலையை உருவாக்கி தொடர்ந்தும் பதவியில் இருப்பர். சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் அடக்கப்படும்.

ஜனநாயகத்தின் வெற்றிக்கு உயிர்துடிப்புள்ள    ஜனநாயகம் அடிப்படையானது. ஆயினும், எதேச்சதிகார ஆட்சி நிலவுமாயின் சிவில் சமூக அமைப்புகளுக்கு தவறான முத்திரைகள் குத்தப்பட்டு இராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படும். புத்தாக்கச் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும். அச்சத்துடன் வாழும் நிலை உருவாகும்.

ஆகவே, இன்றைய நவீன உலகில், உலகம் பாரிய வளர்ச்சிக் கண்டு வரும் காலத்தில் மனித உரிமை, ஜனநாயகம் போன்றன பெரும் கவனத்தை பெற்று வரும் காலத்தில் பலமான தனிநபர் ஆட்சி அல்லது குடும்ப ஆட்சி அல்லது கும்பல் ஆட்சி என்பன எந்தளவிற்கு நியாயப்படுத்தக்கூடியது என்பதனை சிந்திக்க வேண்டும். ஒரு பலமான குடும்ப ஆட்சியில் ஏற்படும் விளைவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை சமூக அபிவிருத்தியை வெகுவாகவே பாதிக்கும். ஆகவே, அதிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அதிகாரத்தை சமன்படுத்தக்கூடிய நிறுவனக் கட்டமைப்புகளைக் கொண்ட ஆட்சிமுறையொன்றின் கீழ் ஆட்சி இடம்பெற வேண்டும். அது ஜனநாயக சட்டத்திற்குட்பட்ட ஆட்சியாக மாத்திரமே அமைய முடியும். அவ்வாறு அல்லாது, பலமான ஒரு தனிமனித அட்சி அதிகாரத்தை கைப்பற்றுமாறுகோருவது ஆபத்தான விடயமாகும். இது சிந்திப்பதற்கு நல்ல விடயமாக தோன்றலாம். ஆனால், அத்தகையதொரு ஆட்சி உருவாகிவிட்டால் அகற்றுவது இலகுவான காரியம் அல்ல.  

அதன் ஆபத்தை சரியாக பகுப்பாய்வு செய்யாத நிலையிலேயே இது பற்றி பேசி வருகின்றோம். ஆகவே, இலங்கைக்கு சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால்பட்ட, அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாத தனிமனித குடும்ப ஆட்சி அல்ல. மாறாக ஒரு நிலையான தலைமைத்துவம் அவசியம். நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சட்டத்தின் ஆட்சி, தனிமனித சொத்துரிமை,அரசியலமைப்புக்கு உட்பட்ட ஆட்சி, மக்களின் அதிகாரத்தை பிரயோகிப்பதில் காணப்படக்கூடிய வரையறைகள் என்பவற்றுக்கு மதிப்பளிக்கும் ஆட்சியாளரே அவசியம்.

1995ஆம் ஆண்டு டைம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் ஒருவர், நெல்சன் மன்டேலாவை நீங்கள் ஏன் ஆட்சியில் இருந்து விலக தீர்மானித்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர், சரியான நேரத்தில் பதவியில் இருந்து விலகுவதும் தலைமைத்துவம்தான் எனப் பதிலளித்தார்.

இதனை இலங்கையின் எதிர்கால தலைவர்களும் நல்ல உதாரணமாக கொள்ள முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இனவாதம் அற்ற ஆட்சி இலங்கையில் உருவாகப்போவதில்லை. ஆயினும், ஆகக் குறைந்த தாராள ஜனநாயக விழுமியங்களை மதிக்கக்கூடிய ஒரு தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் .  அதன் மூலமே இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகத்தையேனும் பாதுகாக்க முடியும். 

கலாநிதி இரா. ரமேஷ்,   
சிரேஷ்ட விரிவுரையாளர், 
அரசியல் விஞ்ஞானத்துறை, 
பேராதனைப் பல்கலைக்கழகம்.

 

 

Comments