ஊரோடு ஒத்தோடும் ஆழ்துளை கிணற்றுக் கலாசாரம் | தினகரன் வாரமஞ்சரி

ஊரோடு ஒத்தோடும் ஆழ்துளை கிணற்றுக் கலாசாரம்

ஒரு மாதத்துக்கு முன் நல்லதொரு நாளில் என் மகளை பார்க்கப்போனேன். அவள் நல்ல பிரயாசைக்காரி. சும்மா இருக்கமாட்டாள். முற்றத்தை சுற்றி சில வாழை மரங்கள், தரையில் படர வல்லாரை, சிறு மிளகாய்க்கன்றுகள், சில முருங்கை மரங்கள், நான்கு பப்பாசி என போட்டிருந்தாள். வாராந்தம் அறுநூறு எழுநூறு ரூபாவுக்கு வல்லாரை விற்றவள். பப்பாசிப்பழங்களை குளிர்பானக் கடைகளுக்கு விற்றும், அயலவர்களுக்கு முருங்கைக்காய், மிளகாய் போன்றவற்றை விற்றும் தன் வீட்டுச் செலவை சமாளித்து வந்தவள். ஆனால் நான் நீண்ட நாட்களுக்குப்பின் அங்கு போனபோது அவளுடைய தோட்டம் கருகிப்போய், அவர்களும் காய்ந்து போய் மலசல கூடத்துக்கு கூட நீர் போதாமலும் குளிப்பதை ஒன்றுவிட்டு ஒரு நாளிலும் கொண்டிருந்தார்கள். பாளைவிடும் பருவத்தில் மூன்று தென்னை மரங்கள் வாடிச்சரிந்திருந்தன. 

அது இந்திய வீட்டுத்திட்டம். அரை ஏக்கர்  நிலத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுத்திட்டம் எந்தளவுக்கு தொடந்து வெற்றிகரமாக நடைபெறும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அங்கே நீர் வழங்கல் நடந்து கொண்டிருந்தது. ஒரு சுண்டுவிரல் நுழையக்கூடிய குழாய் வழியே ஒரு மணித்தியாலம் நீர் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் சகல பாவனைகளையும் நடத்தினார்கள். இப்போது அந்தக் குடியிருப்புக்கு கிணறுகள் முக்கியமான தேவையாகிவிட்டது. 

 வெளிநாட்டுப்பணம் கிடைக்கக்கூடிய சிலர் தமது நிலத்தில் கிணறுகளை அமைத்துக் கொண்டனர். அவை சுமார் பதினைந்து முதல் இருபது முழம்வரை அமைந்ருந்தது. அந்த நான்கைந்து கிணறுகளில் அயலவர்கள் நீரள்ள வீட்டுக்காரர்கள் அனுமதிக்கவில்லை. சரி ஒரு கிணற்றை அமைக்க இப்போது கிணறு வெட்டும் தொழிலாளர்களும் இல்லை. அந்த தொழிலும் தொழில் நுட்பமும் போன தலைமுறையோடு முடிந்துவிட்டது..  

 கிணற்றுக்குள் வெட்டிக்கொண்டிருக்கும் போதே நிலையம் பழுதறாமல் அதை வட்டமாக வடிவமைப்பது ஒரு நுட்பம் இதற்காக அவர்கள் எந்த நவீன கருவிகளும் பாவிப்பதில்லை. இந்த சைற் அடிக்கும் வேலையை எல்லாத் தொழிலாளியும் செய்ய மாட்டார்.  அதற்கும் அவர்களிடையே ஒன்றிரண்டு விற்பன்னர்கள் இருப்பர். வெறும் இளக்கயிற்றுத் துண்டொன்றும் ஒரு தடியும்தான். அழகான வட்டத்தில் எந்தப்பகுதியும் தொய்யாமல் அடிவரை சுத்தமான வட்ட வடிவமாக இருபத்தைந்து முப்பது அடிக்கும் அப்பால் கூட வெட்டி அதை நல்ல வைரம் கண்ட இடத்தில் பிள்ளைக்கிணறு வகிர்ந்து வைப்பார்கள். அந்த ஒன்றரை இரண்டு அடி பிள்ளைக்கிணற்றிலிருந்து மேற்புறத்தை சீமெந்துக்கட்டிடம் கட்டி கிணற்றை அரண் செய்வார்கள். நிலத்துக்கு மேலே மூன்றடிக்கு குறையாமல் கட்டு உயரமாக இருக்கும். இதை தொப்பிக்கட்டு என்பார்கள். எக்காரணம் கொண்டும் பாராயம் வராத சிறுவர்கள் தாமாக கிணற்றை எட்டிப்பார்க்க முடியாது.  

 ஆயினும் அந்தக் குடியிருப்பில் வெட்டப்பட்ட கிணறுகளும் ஓரு சில மணித்தியாலங்களில் இயந்திரங்களால் தோண்டப்பட்டவையேயாகும். எனவே அவை உடனடியாக கட்டியே ஆகவேண்டும் இல்லையேல இடிந்து விழும் அபாயம் இருந்தது. கட்டு வேலை என்பது இப்போது பெரு அலைச்சலைக் கொண்டதாகவே உள்ளது. காரணம் சீமெந்தை ஆயிரம் ரூபாவுக்கு வாங்கினாலும் மணல் பெறுவது அவ்வளவு இலகுவானது அல்ல.  

 பின்னே திட்டமிடுவோர் தடுக்கில் நுழைந்தால் நாங்கள் கோலத்தில் நுழைவோம் என்பதை மக்கள் காட்ட முயன்றதன் விழைவு. ஆழ்துளைக் கிணறுகள் உருவாகத் தொடங்கின. பெரிய பெரிய கம்பனிகள் இந்த மெசின்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதையும், அவர்களின் இலக்குகள், பாவப்பட்ட மக்கள் என்பதையும், யாரறிவார்.

என்னைப்போல பூலோக த்தில் நன்மைகளை எதிர்பாரக்கும்  சிலர் இந்த ஆழ்துளைக்கிணறுகள் எமது மண்ணுக்கு விளைவிக்கப்போகும் ஆபத்தை சொன்னாலும்.   'அப்படியா.. அடடா அதை தடுக்க வேண்டும். ஓகோ அரச அனுமதியில்லாமல் இந்த கிணறுகளை அமைக்க விடக்கூடாது ஆரடா அவன் எடடா கத்திய' என்று கிழம்பினாலும், இந்த காப்ரேட் முதலாளிகள் அதையெல்லாம் ஒரு சொடுக்குப்போட்டு அடக்கிவிடுவார்கள் என்பதை அனைவருமே அறிவர். மேற் சொன்ன இந்த குடியிருப்பிலும் ஒவ்வொருவராக ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தொடங்கிவிட்டனர். விளைவுகள் மோசமாகி வருகிறது. முன்னர் வெட்டிய கட்டுக் கிணறுகளின் ஊற்றை கீழ் இறங்கிவிட்ட ஆழ் துளைக்கிணறுகள் அபகரிக்கத் தொடங்கிவிட்டன. அதைப்பற்றி யாருக்கென்ன கவலை. நூறு அடி கிணறுகள், பணம் பெருக்கமானால் நூற்றிருபத்தைந்து அடி என கிணறுகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன.  

குளத்துக்கு உள்ளேயே நிலத்தை அபகரித்த ஒருவர் என்னிடம் தனக்கு கிணறு வெட்டி கட்ட இடம் போதாது. எனவே நானும் குழாய் அடிக்கப்போறன் என்றார். அது எதற்கு இதோ மண்வெட்டியால் மண்ணைக் கிளறினாலே தண்ணீர் கொப்பளிக்குமே என்றேன். 

இதில் இன்னுமொரு லாபம். கட்டுச் செலவில்லை. அதற்கு அமைவாக கிணற்றினுள்ளேயே இறக்கக் கூடிய நீரிறைக்கும் யந்திரம். அவற்றைப் பொருத்தும் தொழில் நுட்பவியலாளர்கள் என பல துறைகளில் விற்பன்னம் பெருகி வருகிறது.  

 நிலத்தடி நீரில் கடல்நீர் வேகமாக கலந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் அநேகமான கிணறுகள் நிலத்தடி நீரில் உவர் சேர்ந்து விட்டதை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. இந்த நீரில் விவசாயமும் பண்ண முடியாது என்பதுடன் குடிக்கவோ குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ முடியாது. என்பதும், ஏதாவது உள்ளே விழுந்து விட்டால் எடுக்க முடியாது. என்பதும். எல்லோருக்கும் ஏன் எனக்கும் தெரியும். ஆனால் நானும் எனது மகளுடைய நிலத்தில் ஓர் ஆழ்துளைக்கிணற்றை அமைப்பதை ஊக்குவித்திருக்கிறேன். காரணம் ஊரோடினால் ஒத்தோடு என்பதுதான். 

இங்கேயும் கிணறு வெட்டும் ஒப்பந்தகாரர்கள் ஊற்று வராத கிணற்றை தவிர்த்து வேறிடத்தில் வெட்டித்தரும் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள் மூடப்படும் கிணறுகளில் உயிரினங்கள் விழுந்து விட்டால் எம்மிடம் அவற்றை மீட்க எந்த தொழில நுட்பமும் அதற்கேற்ற அரசாங்கமும் இல்லை என்பதை புரிந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments