கண்டியம்பதியில் மத்திய கைலாசம்: | தினகரன் வாரமஞ்சரி

கண்டியம்பதியில் மத்திய கைலாசம்:

கட்டுக்கலை  செல்வவிநாயகர் திருக்கோயில் வரலாறு

இலங்கையின் மத்திய மாகாணத்தில், மரபுரிமை நகரமான கண்டி மாநகரில், கங்கவட்ட கோரளை பிரதேச செயலாளர் பிரிவில் கட்டுக்கலையில் அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தொடர்பாக காலத்திற்கு காலம் வரலாற்று ரீதியாக மிகவும் தொன்மையான பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. “கண்டி” எனப் பெயர் வர சிவ வழிபாட்டு சான்றுகள் ஆரம்ப காலந்தொட்டே உள்ளன. செங்கந்தன் என்ற சிவபக்த பிராமணர் உடவத்தகெலேயில் வாழ்ந்ததாகவும், அவர் வாழ்ந்த இடம் செங்கந்தகாடு. மக்களால் செங்கந்தகெலே எனவும், பின்னர் “செங்கந்தபுரம்” என்றும், இது மருவி, கெலே – காடு செங்கடகெலே என்றும், இது பிற்காலத்தில் மருவி ‘செங்கடகல’ எனவும் வழங்கப்பட்டது. கந்த – மலை (“Kanda”) என்பது பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் கண்டி “Kandy” என உச்சரிக்கப்பட்டு இப்பெயர் வரக்காரணமாயிற்று. 

காலத்திற்குக் காலம் இலங்கையையும் கண்டி இராச்சியத்தையும் பல்வேறு வெளிநாட்டார்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னர்களிடையேயும் காலத்திற்கு காலம் யுத்தங்கள் ஏற்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டின் பின் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முயற்சித்துள்ளனர். இதன் பின் ஆங்கிலேயர் 1815இல் கண்டி இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றினர். இவ்வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் காலங்களில், தமது கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பரப்புவதற்காக இந்துக் கோயில்களை அழித்துள்ளனர். பெரும்பான்மைச் சமூகத்தினரும் தமது இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை ஒளித்துள்ளனர். ஆகவே, ஆதாரங்கள் தேடுவதும், ஆவணங்களைத் தேடுவதும் கடினமாகும். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

உலகத்தின் முதலாவது தேசப்படமான தொலமியின் தேசப்படத்தில் இலங்கையும், மத்திய மலைநாடும் குறிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் சிவனொளிபாதமலையும், கண்டி அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர்  செல்வவிநாயகர் திருக்கோயிலும் முக்கிய சிவத்திருத்தலங்களாகும். இதில் கண்டிக்கோயில் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.  

18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட “அஸ்கிரிய தல்பொத்த” என்ற ஒலைச்சுவடியில் கண்டி பைரவகந்த பற்றிக் கூறப்பட்டுள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வு நூல்களிலும், கண்டி மரபுரிமை பற்றிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது போல “லோறி கெசட்டியரில்” பைரவகந்த பெயர் வரக்காரணம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது மகா பராக்கிரமபாகு (1164 – 1197) ஆட்சிக் காலத்தில் பௌத்த பிக்குக்கு கண்டி அஸ்கிரிய பகுதியில் ஓரு ஆசிரமம் (பிற்காலத்தில் அஸ்கிரிய பௌத்த பீடம்) அமைத்தார். அந்த ஆசிரமத்திற்குத் தெற்குப்பகுதி ‘பைரவகந்த’ ஆகும். எனவே, 12ஆம் நூற்றாண்டிலிருந்தே வரலாற்று நூல்களில் பைரவகந்த பற்றிக் கூறப்பட்டுள்ளது. வைரவர்மலை என்பதே பைரவர் - வைரவர் கந்த - மலை என அழைக்கப்பட்டது.  

அக்காலந்தொட்டு பைரவருக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் பற்றி மேற்கூறப்பட்ட வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது வைரவரை சந்தோசப்படுத்தும் நரபலி பூசையாகும். பிள்ளைகள் இல்லாத ஓர் அரசிக்குப் பிள்ளைவரம் வேண்டியே முதலாவது நரபலி கொடுத்ததாக அஸ்கிரிய தல்பொத்தவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணிக்கு பேய் கனவில் வந்து இதனைக் கேட்டதாகவும், இதற்காக மன்னர் குழந்தை வேண்டி உயர்குலப் பெண்ணை பலி கொடுக்க தீர்மானித்ததாகவும், இதன் பின் நீண்ட காலமாக நரபலிச்சடங்கு இல்லாமல் இருந்ததாகவும், இராஜசிங்கனின் ஆட்சிக் காலத்தில் அரசியல் முரண்பாடுகளினாலும், சாஸ்திரக்காரர்களது வேண்டுகோளுக்கிணங்கவும் உயர்குலப் பெண்ணைக் கொண்டு சென்று இரவில் பைரவரிடம் விட்டு விட்டு வந்ததாகவும், அவளது காதலன் அவளைக் காப்பாற்றியதாகவும் கர்ண பரம்பரைக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. 

இராமாயணத்தில் இராவணனை வதை செய்த இராமன் பாவவிமோசனம் வேண்டிப் பாபநாசத்தில் குளித்துச் சிவனை வழிபட்டதாகவும், இராமேஸ்வர தீர்த்தத்தில் நீராடிப் பாவத்தினைப் போக்க ஈஸ்வரனை வழிபட்டதாலேயே, இராமர் ஈஸ்வரனை வழிபட்ட இடம் இராமேஸ்வரம் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுவது போல, நரபலி கொடுத்த பின், வைரவர் மலையின் நீர் சேரும் போகம்பரை குளத்தில் நீராடிச் சிவனை வழிபட்டுப் பாவ விமோசனம் வேண்டியதாகப் பண்டைய கதைகளில் கூறப்படுகிறது. அக்காலத்தில் இக்கோயில் சிவன்கோயிலாகவே, காணப்பட்டுள்ளது. இன்று வரை கட்டுக்கலை கோயிலில் மூலஸ்தானத்தில் மூலவராகச் சிவனும், மூலவருக்கு நேராக நந்தி வாகனமும், கொடிக்கம்பமும் காணப்படுகிறது. இக்கோயிலில் இராஜகோபுரங்கள் சிவனுக்கும் அம்பாளுக்குமே அமைக்கப்பட்டுள்ளன.  

கண்ணகி அம்மன் குழந்தையாகப் பேழையில் மிதந்து வந்த போது, மாநாயக்கன் எடுத்து கண்ணகி என்ற பெயரிட்டு வளர்த்துக் கோவலனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததாகவும், கோவலனுக்கும் மாதவி என்ற கணிகையுடன் தொடர்பு ஏற்பட்டதால், தனது செல்வங்களை எல்லாம் இழந்து, பின்னர் கண்ணகியிடம் தஞ்சமடைந்து, வணிக நோக்கத்துடன் மதுரை சென்றதாகவும், காற் சிலம்பை விற்கச் சென்ற போது, பாண்டிய மன்னனால் கள்வனெனக் கருதப்பட்டுக் கோவலன் கொல்லப்பட்டதாகவும், நீதி கேட்டுக் கண்ணகி விரித்த கூந்தலுடன் மன்னனைச் சந்தித்து, மற்றைய காற்சிலம்பைத் திருகி எறிந்து, அது தனது காற்சிலம்பு என நிரூபித்ததாகவும் கோபத்தில் மதுரையை எரித்தபின் மலையேறி மறைந்ததாகவும், அதனைச் செங்குன்றக் குரவர்கள் கண்டதாகவும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. கண்ணகியின் பெருமையை உணர்ந்து, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்தான் எனவும், சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தபோது இலங்கை மன்னன் கஜபாகு (கி.மு.113--135) விழாவில் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.  

கஜபாகு மன்னன் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியபோது, சந்தன மரத்திலான கண்ணகி சிலையையும் காற்சிலம்பையும் இலங்கைக்குக் கொண்டு வந்தான் எனவும், வடபுலக் கடற்கரையில் இறங்கிய மன்னன், யானை மீது ஊர்வலமாக கண்டிவரை சிலையைக் கொண்டு சென்று கண்டி ஆலயத்தில் வைத்து வழிபட்டான் எனவும் கூறப்படுகிறது. இதனைக் ‘கடல்சூழ இலங்கை கயபாகு வேந்தனும்’ என இளங்கோவடிகளின் (வரந்தகு காதை (160 -164) எனும் பாடல் மூலம் அறியலாம்.  

“அது கேட்டுக் கடல் சூழ்

இலங்கை கயபாகு என்பான் 

நங்கைக்கு நாட்பலி பீடிகைக்

கோட்டம் முந்தறுத்து 

ஆங்கு அறத்தை கெடுத்த

வரந்தரு இவனென 

ஆடித்திங்க ளவையின் ஆங்கோர் 

பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப 

மலைவீற் றிருந்த வளம்பல பெருகி 

பிழையா விளையள நாடாயிற்று” எனக் கூறியுள்ளார். 

சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டத்தில் மங்கள வாழ்த்துப் பாடலில் “இந்திர” விழாவெடுத்த காதை” என்பதும் ஒன்றாகும். சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்ற இத்திருவிழா பூம்புகாரில் கொண்டாடப்பட்ட விழா.  

இந்திரன் கோயிலான வச்சிரக் கோட்டத்திலுள்ள முரசை வெள்ளானைக் கோட்டத்திற்கு எடுத்துச் சென்று, அதனை யானை மேலே ஏற்றி வீதி வலம் செல்வதன் மூலம் இந்திரவிழா உத்தியோகப்பூர்வமாக நகர மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த இந்திரவிழாவில் சிவன் கோயில், குமரக்கோட்டம், திருமால்கோட்டம், பலராமன்கோட்டம் ஆகிய எல்லாக் கோயில்களிலும் விழா நடைபெற்று வீதிவலம் வந்தன. இதனைக் கண்ணுற்ற கஜபாகு இலங்கையிலும் இதைப்போலவே நடைபெற வேண்டும் என விரும்பி கண்டி பெரஹராவுடன் நாத, விஷ்ணு, கதிரேசன், பத்தினி தேவாலயங்களில் இருந்தும் ஊர்வலங்கள் புறப்பட்டு எசலபெரஹராவுடன் இணையும்படி செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  

எனவே, தமிழில் காணப்படும் பெருங்காப்பியங்களுடன் கண்டிப் பெரஹராவுக்கு தொடர்பு காணப்படுகின்றது. இந்த கண்ணகி சிலை பிற்காலத்தில் ஏற்பட்ட யுத்தங்களினால் புதையுண்டு, பின்னர் போகம்பரை வாவியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, கண்டி கட்டுக்கலை மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் செல்வ விநாயகர் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகப் பரம்பரைக் கதைகளூடாக அறியப்படுகிறது. 

மாயாதுன்னையின் மகன் யஸ்மின் பண்டார மற்றும் பேராதனை வீரசுந்தர முதலியின் மகன் கொணப்பு பண்டார ‘தொன் பிலிப்’ என்ற பெயர் மாற்றத்துடன் கிறிஸ்துவத்தைத் தழுவிப் போர்த்துக்கேயர் உதவியுடன் ‘செங்கடகல’ ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்தனர். இக்காலத்தில் பலர் கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றனர். மக்களின் எதிர்ப்பு காரணமாக தொன்ஜீவான் கிறிஸ்தவமதத்தைத் துறந்து பௌத்தனாகி, முதலாவது விமலதர்மசூரிய என்ற பெயருடன் செங்கடகலயை (1592) ஆட்சி செய்தான். இக்காலத்திலேயே தலதா மாளிகை கட்டப்பட்டுள்ளது.

தெலுகமவில் இருந்து புத்தபெருமானின் புனிதப்பல் செங்கடகலவுக்குக் கெண்டுவரப்பட்டது. இவன் சிதைவுற்ற இந்து, பௌத்த ஆலயங்களை கட்டுவித்தான். திருவிழாக்களையும், பூசைகளையும் நடாத்தினான். பெரஹராவையும் மீள அறிமுகம் செய்தான். இக் காலத்திலேயே இந்துக் கோயில்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக வலராற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. இக்காலத்திலேயே கட்டுக்கலை சிவன் கோயிலும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.  

இவரது தம்பி செனரத் (1605 – 1635) ஆட்சிபுரிந்தான். செனரத்தின் இரண்டு புதல்வர்கள் தமிழ் பெண்களையே திருமணம் செய்துள்ளனர். மூன்றாவது மகன் இராஜசிங்கன் ஆட்சிபீட மேறியுள்ளான். இந்த இரண்டு மருமகள்மாரும் இந்துவாகவே இருந்துள்ளனர். இராஜசிங்கள் (1635 – 1687) பின்னர் இவனது மகன் இரண்டாம் விமலதர்மசூரியன் (1687--1706) தஞ்சாவூரில் திருமணம் செய்தான். இக்காலத்தில் இந்தியத் தமிழர்கள் பலர் இவனது படையில் போர்வீரர்களாக இருந்தனர். இவர்கள் ‘வடக்கத்தையான்’, ‘வடுகர்கள்’ என அழைக்கப்பட்டனர். இக்காலத்திலேயே இந்திய விஜயநகர் ஆட்சியுடன் தொடர்புகள் பலப்படுத்தப்பட்டன. இவனது தஞ்சாவூர் அரசியின் மகன் ஸ்ரீ நரேந்திரசிங்கன் (1706 – 1739) ஆட்சியுரிமை பெற்றான்.  

இதன் பின், விஜயராஜசிங்கன் (1739-1747) கோயில்களையும், விகாரைகளையும் கட்டினான். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747_-1782) காலத்திலேயே திருவிழாக்கள், பூசைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. சித்திரை விழா, ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளன. எல்லாத் தேவாலயங்களையும் இணைத்து பெரஹரா நடத்தப்பட்டுள்ளது. இவரே ‘பெரஹரா’வில் கண்டிக் கோயிலையும் சம்பந்தப்படுத்தியுள்ளார். இக்காலத்தில் அரசமாளிகையைச் சுற்றியுள்ள தேவாலயங்களிலும், அரசநிர்வாகத்திலும் தமிழர்கள் இருந்துள்ளனர். கோயில் அமைந்துள்ள பிரதேசத்தையும் சுற்றி தமிழர்கள் வாழ்ந்தார்கள். தமிழ்மக்கள் இக் கோயிலை நாளாந்த சமயக்கடமைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். இக்காலத்தில் இந்து பிராமணர்களின் செல்வாக்குக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வெளிநாடுகளிலிருந்து பௌத்த பிக்குகள் வரவழைக்கப்பட்டனர்.  

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 -_1782) காலத்திலேயே சிவனொளிபாத மலை பௌத்தர்களின் புனித யாத்திரைத் தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் சிவனொளிபாத மலைக்குத் தரிசிக்க சென்றவர்கள் கண்டி, கம்பளை ஊடாகவே சென்றுள்ளனர். இப்னுபதூதா (1304 - _1377) சீலத் என்ற அரபு நூலில் அவரது விஜயம் பற்றியும், மலை நாட்டு வருகை பற்றியும் சிவனொளிபாதமலை தரிசனம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவரை, வடபகுதியை ஆண்ட ஆரியச் சக்ரவர்த்தி நான்கு யோகிகள் பதினைந்து பிராமணர்களுடன் இம்மலைநாட்டு பயணத்திற்கு அனுப்பி உதவியுள்ளார். இவர்கள் கண்டி கங்கசிறிபுர ஊடாக சென்றுள்ளனர். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் 1765இல் கண்டி கட்டுக்கலை கோயில் திருப்பணிகள் ஆரம்பமாகின எனவும், ராஜசிங்கனே கண்டிப் பெரஹராவில் நான்கு தேவாலயத்திற்கான பெரகராவைச் சிறப்பாக நடத்தினான் என்றும் கூறப்படுகிறது. இக்காலத்தில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்திய நடனக்கோஷ்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஹரிச்சந்திரன், சத்தியவான் சாவித்திரி, ராமாயண, மகாபாரதக் காட்சிகள், இந்திய வாத்திய மேளங்கள், நாதஸ்வரம், பஜனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பஜனையே பின்னர், “பஜாவு” எனச் சிங்கள வார்த்தையாக மாறியுள்ளது. இந்திரவிழா நாட்டிய நடனங்கள் பற்றிக் கலாநிதி சரத்சந்திர ‘நாட்டியம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கலைஞர்கள் வாழ்ந்த வீதி, கவிகாரவீதி (தற்போது கொட்டுகொடுல்ல வீதி) என அழைக்கப்பட்டுள்ளது. 

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 – 1782) காலந்தொட்டு கண்டி எசல பெரஹராவில் தலதா பெரஹராவிற்கு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆசியை வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. அத்தோடு கண்டி வாழ் இந்து மக்கள் பிரமுகர்கள் ஒன்றுகூடி கண்டி கட்டுக்கலையில் அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலின் சிவாசாரியார்களுடன் புனித தேவ வஸ்திராபரணம் ஒன்றை ஊர்வலமாக எடுத்து சென்று, தலதா மாளிகை ‘தியவதன நிலமே’ ஆசிர்வதித்து புனித பேழைக்கு பூசை செய்து வருவது வழக்கம்.

இதனைத் தொடர்ந்து பத்து நாள் பெரகரா முடிந்த பின் கெட்டம்ப மகாவலி நதிக்கரையில் நீர் வெட்டு தீர்த்தோற்சவம் முடிந்த பின் நான்கு தேவாலங்களாக நாத்த, விஷ்ணு, கதிரேசன் மற்றும் பத்தினி தேவாலயங்களின் தீர்த்தத்துடன் பஸ்நாயக்க நிலமேக்கள் யானைகளில் கட்டுக்கலையில் அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலுக்கு வந்து தமது தேவ வஸ்திராபரணங்களை இறக்கி வைத்து யானைகளை இளைப்பாறவிட்டு, பகல் தேவ வஸ்திராபரணங்களை மீள அணிந்து பகல் பெரகரா இக் கோயிலிலிருந்தே தீர்த்தக் கலசங்களுக்கு பூசைகள் நடத்தி ஆரம்பிக்கப்படுகிறது. 

கண்டியில் அக்காலத்தில் மூன்று குளங்கள் இருந்துள்ளன. கிரிமுகுத (பாற்கடல்), போகம்பர குளம், பொறலேவர் குளம் என்பனவே அவை. பைரவகந்த மலையின் நீரூற்றுகள் அடிவாரத்திலுள்ள போகம்பரை குளத்திலேயே சேர்ந்துள்ளது. போகம்பரைக் குளத்திற்கு அருகிலேயே கட்டுக்கலை அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் அமைந்திருந்தது. போகம்பரைக் குளத்தின் அருகிலிருந்து பைரவகந்தைக்கு செல்லும் வீதி ‘லேக் ரோட்’ என அழைக்கப்பட்டுள்ளது. இவ்வீதி இன்றும் கட்டுக்கலை சினிமா தியேட்டருக்கு மேற்குபுறமாக உள்ளது. இதனை 1600களிலும் 1700களிலும் உள்ள கண்டி வரைப்படங்களில் காணமுடிகிறது. இக்குளத்தில் தெய்யன்னவெல பகுதியில் அரச குடும்பங்களின் ஆடைகளைச் சலவை செய்வோர் குடியிருந்தனர்.  

 இக்காலத்தில் இலங்கையின் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்க இந்தியாவிலிருந்து குருசாமி என்பவர் கண்டிக்கு வந்துள்ளார்.

இவர் கண்டி கட்டுக்கலையில் சிவ வழிபாடு செய்து, இப்பிரதேசத்திலேயே குடியேறியுள்ளார். ஒரு நாள் குருசாமியின் கனவில் விநாயகர் தோன்றி “நான் குளக்கரையில் துணிகள் துவைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறேன். என்னை கொண்டு வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்வாய்” எனக் கூறியுள்ளார்.

குருசாமி பக்தி பூர்வமாக குளத்தருகில் சென்று பார்த்தபோது, துணிகள் துவைப்பதற்கு பயன்படுத்திய கற்களில் ஒன்றின் மறுபக்கம் விநாயகப்பெருமானின் திருவுருவ வடிவமாக இருந்தது. குருசாமியும் கூடி நின்றவர்களும் அதனைக் கொண்டுவந்து கட்டுக்கலை ஸ்ரீ சோமசுந்தரேசுவரர் ஆலயத்தில் சோமசுந்தரேசுவரருக்கு வலப்பக்கமாக பிரதிஷ்டை செய்தனர். இதனாலேயே இக்கோயில் விநாயகர் கோயில் என்றும், பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சமகாலத்தில், கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் கட்டடப்பணிகள் ஆரம்பமாகியிருந்தன. இப்பணிகளுக்காக வந்த ஸ்தபதி மகிழவணனி மூத்தபுதல்வன் செல்லக்கண்ணு மகிழவணன் ஸ்தபதியாரே இக்கோயிலையும் வடிவமைத்துள்ளார். 

1815இல் கண்டி இராச்சியத்தின் மன்னராகக் கண்ணுசாமி என்ற ஸ்ரீ விக்ரமராஜசிங்கன், அவனது மனைவி ரங்கம்மாள் இக்கோயிலை வழிபட்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் கண்டி இராச்சியத்தில் அடிக்கடி போர் ஏற்பட்டு, கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சியோடு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு பொதுமக்களான கண்டி வர்த்தகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பின் 1982ஆம் ஆண்டிலிருந்து அறங்காவலராகக் கோவிந்தசாமி கிருஷ்ண மூர்த்தி இக்கோயிலை பொறுப்பேற்று சிறப்பாக நிர்வகிப்பதோடு மூன்று கும்பாபிஷேசகங்களை சிறப்பாக மேற்கொண்டுள்ளார்.

1988, 2000, 2019ஆகிய ஆண்டுகளில் இக் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. கோயில் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக 2000ஆம் ஆண்டிலேயே ஐந்து தள இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

கண்டி மாநகரில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒர் ஒற்றுமைச் சின்னமாகக் கட்டுக்கலையில் அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் விளங்குகிறது.

நாத, விஷ்ணு, கதிரேசன், பத்தினி கோயில்கள் வரலாற்றில்; இந்துக்கோயில்களாக இருந்து, பின்னர், சரணங்கர தேரோவின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் 1752இல் தலதா மாளிகையை பெரஹராவில் சேர்த்ததோடு தலதாமாளிகைப் பெரஹராவை முதலில் செல்லவும் வழி வகுத்தார்.

இதன் பின் இத்தேவாலங்களின் நிர்வாகம், இந்துக்களை விட்டு பௌத்தர்களிடம் சென்றதால், இந்துக்கள் கட்டுக்கலையில் அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோயிலை வழிபடத் தொடங்கினர். எனவே, இக்கோயில் நீண்ட வரலாற்றினைக் கொண்ட, புராணக் கதைகளை கொண்ட கோயிலாக இப்பொழுது விளங்குகின்றது. அத்துடன் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் உறவுப்பாலமாக இத்திருக்கோயில் விளங்குகின்றது.

இராசையா மகேஸ்வரன் 
நூலகர்,  
பேராதனைப் பல்கலைக்கழகம். [email protected]

Comments