கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆங்கிலேயர் தமது குடும்பங்களை காப்பாற்றியது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆங்கிலேயர் தமது குடும்பங்களை காப்பாற்றியது எப்படி?

கண்டி அரச மாளிகையில் ஆங்கிலேயர் தமது ஆட்சி பீடத்தைக் கொண்டிருந்த போது ஊவாவில் துரைசாமி நாயக்கரின் அரச மாளிகையிலிருந்து சுதேசிகளின் ஆட்சி நடைபெற ஆரம்பித்தது. இது கெப்பெட்டிப் பொலையின் சாதனையாகும்.  

சுதேசிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத ஆங்கிலேய இராணுவம் தனது பல படைமுகாம்களைவிட்டு வெளியேற ஆரம்பித்தது. இவ்வாறு பின்வாங்கியவர்களில் லெப்டினண்ட் கேர்ணல் கோத்தர் குறிப்பிடத்தக்கவராகும். சப்ரகமுவ பிராந்திய பாதுகாப்புக்கு அவன் பொறுப்பாக இருந்தான். லெப்டினண்ட் கேர்ணல் கெலீ கண்டி பிராந்தியத்துக்கு பொறுப்பு வகித்தான். ஊவா – வெல்லஸ்ஸ பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மெக்டொனல்ட், பரணகம பிராந்தியம் வரை பின்வாங்கும் நிலையை கெப்பெட்டிப் பொல ஏற்படுத்தியிருந்தான். தும்பறை பிரதேசத்தில் ஆங்கிலேய இராணுவம் பின் வாங்கியமை காரணமாக மேஜர் ஹெக்ஸ்ட் தனது படையுடன் அங்கு சென்றான்.  

இதேவேளை மூன்று கோறளையின் முகாம் ரூவான்வெல்லையில் அமைந்திருந்தது. அம்முகாமுக்குள் மலேரியா வியாதி பரவியமை மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு வியாதியுற்றவர்களுக்கு உதவுவதற்காக மேஜர் லீமன் ரூவான்வெல்லைக்கு அனுப்பப்பட்டான்.  

கெப்பெட்டிபொலையின் தலைசிறந்த போராளிகளைக் கொண்ட அணியொன்று குருணாகலையில் அமைந்திருந்த வெள்ளையரின் இராணுவ முகாமை முற்றுகையிட முயற்சிப்பதாக தகவல் அறிந்து அதிர்ச்சியுற்ற ஆளுநர் ஹூக் மற்றும் கேப்டன் ஹாடி தலைமையிலான படையணிகள் இரண்டை குருணாகலைக்கு அனுப்பிவைத்தான். இரு முனைகளிலிருந்து இப்படையினர் குருணாகலையை நோக்கி நகர்ந்தனர். இப்படைகளும் வழியில் சுதேசிய போராளிகளின் பலத்த தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. துப்பாக்கி வேட்டுகள் அப்பிராந்தியத்தை அதிர வைத்தன. இரு சாராரும் பரஸ்பரம் எதிர்த்து போராடினர். ஆங்கிலேயரின் படைபலம் உயர்ந்து காணப்பட்டமையினால் சுதேசிகள் மோதலிலிருந்து பின்வாங்க முயற்சித்தனர். (இளைய) பிலிமத்தலாவை தலைமையிலான சிங்கள வீரர்கள் பின்வாங்கிய போது அவர்களின் மூன்று யானைகளையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர்.  

மார்ச் மாதம் 7ம் திகதி பிலிக்கடை வழியாக மோதல் இடம்பெறும் இடத்தை அடைந்தான் மேஜர் ஹூக். வழியெங்கும் போடப்பட்டிருந்த தடைகளைத் தகர்த்தபடியே அவன் முன்னேற வேண்டியிருந்தது.  

அப்பிராந்தியம் சுதேசிகளினால் கைப்பற்றப்பட்ட பிரதேசமாக இருந்தமையினால் மிக மோசமான தாக்குதல்களை ஹூக் எதிர்கொள்ள நேர்ந்தது. முள்வேலிகளால் தடுக்கப்பட்டிருந்த அப்பாதையை பயன்படுத்த இயலாத நிலை ஆங்கிலேய படையினருக்கு ஏற்பட்டது. உட எல்லேப்பொல மொஹட்டால தலைமையில் சுதேச படைமுகாம் அங்கு அமைந்திருந்தது. எட்டு திக்குளிலுமாக சுதேச படையினர் ஆங்கிலேய இராணுவத்தைச் சுற்றி வளைத்தனர். எவ்வாறாயினும் இத்தாக்குதல்களைச் சமாளித்து கேப்டன் ஹாடியின் படையணியுடன் இணையும் முயற்சியை தொடர்ந்தான் ஹூக்.  

சுதந்திர போராளிகளினால் சுற்றி வளைக்கப்பட்ட ஹூக் ஈவிரக்கமற்ற தாக்குகதல்களை ஆரம்பித்தான். முள்வேலிகளையும், இதர தடுப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு பயணத்தைத் தொடர திட்டமிட்டான். மார்ச் 8ம் திகதி சுதேசிகள் எதிர்பார்த்திராத பலத்த தாக்குதல்களை தொடுத்தான் ஹூக். சில மணித்தியால முயற்சியின் பின்னர் அப்பாதை தடுப்புகளை உடைத்தெறிந்து அப்பாதையை முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டு சுதேசிய படை முகாமையும் நிர்மூலமாக்கினான். இதனால் உட எல்லேப்பொல அங்கிருந்து பின்வாங்கி தப்பியோடினான். தப்பியோடும் சுதேச போராளிகளை துரத்திச் சென்ற ஹூக் பின்னர் திரும்பி வந்தான். அதன் பின்னர் ஆங்கிலேயர் அக்கிராமத்தின் மீதும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தமது கைவரிசையை காட்டத் தொடங்கினர். வீடுகளையும், உடைமைகளையும், விவசாய நிலங்களையும் தீயிட்டு கொளுத்தினர். அந்த பிராந்தியமே புகை மண்டலத்திற்குள் தத்தளித்தது. ஹுக்தனது படையுடன் குருணாகலையை நோக்கி நகர்ந்தான். உட எல்லேபொலையின் வீடும் சொத்துக்களும் முற்றாக எரியூட்டப்பட்டது.  

ஊசன்வெல்ல, வியலுவ, அஹூபொல ஆகிய இராணுவ முகாம்களை ஆங்கிலேயர் அரசுமூடியது. இதன் காரணமாக பதுளைக்கு தகவல்களை இரத்தினபுரி வழியாக அனுப்பவேண்டியிருந்தது. இவ்வாறு இப்பிராந்தியத்தில் இராணுவ முகாம்கள் மூடப்பட்டமை காரணமாக இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் பீதிக்குள்ளாகினர்.  

இதனால் பதுளைக்குப் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாகவிருந்த சோவர்ஸ் முன்னிலையில் பிரசன்னமாகி தமது குறைகளை முஸ்லிம்கள் எடுத்துக்கூறினர் ஆங்கிலேய அரசுக்கு சார்பான செயற்பாட்டைக் கடைப் பிடித்தமையினால் சிங்கள பிரபுக்களின் ஆத்திரத்திற்குள்ளாகியிருப்பதாகவும். அவர்களின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்கள் சோவர்சிடம் புகார் செய்தனர்.  

பூட்டாவ ரட்டேரால புரிந்துவரும் இனவாத அட்டகாசங்களைப் பற்றியும் முஸ்லிம்கள் சோவர்சிடம் விளக்கமாக எடுத்துக்கூறினர்.  

நாட்டில் நிலவும் மோசமான கால நிலை காரணமாக முகாம்களை மூட வேண்டியேற்பட்டதாக முஸ்லிம்களிடம் தெரிவித்தான் சோவர்ஸ். காலநிலை சீராகும் வரையிலும் தற்காலிகமாகவே முகாம்கள் மூடப்பட்டிருப்பதாகவும் சீரானதும் மீண்டும் திறக்கப்படுமெனவும் உறுதியளித்தான். இது இப்படியிருக்க, போராளிகளிடம் விழுந்துவிட்ட எந்த இராணுவமுகாமும் மீண்டும் ஆங்கிலேயரால் கைப்பற்ற முடியாமல் போயிற்று என்பதையும் மேலும் சுதந்திர போராளிகள் அம் முகாம்கள் நிர்மூலமாக்கப் பட்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  

பாதுகாப்பு தேடியலைந்த ஆங்கிலேய இராணுவ வீரர்கள், தமக்கு மத்திய மலைநாட்டிலிருந்து மீள்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டுமென்ற எதிர்பார்ப்புடன் உயிருக்காக போராட வேண்டியிருந்தது.  

பிந்தென்னை முகாமுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் மட்டக்களப்பிலிருந்தே கிடைத்து வந்தன.  

இந்நிலையால் ஊவா, வெல்லஸ்ஸ, பிந்தென்னை ஆகிய பகுதிகளில் கிளர்ச்சிகளை மீண்டும் தொடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தான் கெப்பெட்டிபொல. மட்டக்களப்பிலிருந்து ஆங்கிலேயருக்கும் ஊவா பிராந்தியத்துக்கும் உணவு விநியோகிக்கும் பணி பல முட்டுக்கட்டைகளை சந்திக்க வேண்டியிருந்தது. இந்நேரம் ஹன்வெல்ல இராணுவ முகாமில் மலேரியா காய்ச்சல் தலை விரித்தாடத் தொடங்கியது.  

தோல்விமேல் தோல்விகளும், பின்வாங்குதல், நோய் வாய்ப்படுதல் என ஆங்கிலேயரின் போர் நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படவே, புதிய உத்திகளைக் கையாள முயற்சித்தனர். கண்டியில் கூடிய இராணுவ அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி மந்திராலோசனைகள் நடத்தினர்.  

அதன்பிரகாரம் பிந்தென்னை, வெல்லஸ்ஸ, ஊவா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டிருந்த இராணுவ முகாம்களை படிப்படியாக நீக்கிக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. மேற்படி முகாம்கள் அனைத்துக்கும் பாதுகாப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை நிரந்தரமான கட்டடங்களாக பாதுகாப்பான இடங்களில் அமைந்திருந்தன. இக்காப்பரண்களில் பணிபுரிந்த அதிகாரிகளின் குடும்ப வதிவிடங்களும் இங்கேயே அமைந்திருந்தன. இங்கு வசித்துவந்த அதிகாரிகளின் குடும்ப அங்கத்தவர்களை இவ்விடங்களிலிருந்து வெளியேற்ற ஆங்கிலேயர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். எனினும் ஆங்கிலேய படை ஒரு மாற்று உபாயத்தைக் கண்டுபிடித்தது.  

அதன்படி காப்பரண்கள் மற்றும் முகாம்களைச் சூழவும், அண்மித்தும் அமைந்திருந்த கிராமங்களுக்குள் இராணுவத்தினர் புகுந்து அட்டகாசம் புரிய ஆரம்பித்தனர். பெரும்பாலும் அங்கு ஆண்கள் காணப்படவில்லை. அவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள கெப்பெட்டிப்பொலையின் புரட்சி நடவடிக்கைகளுக்காகச் சென்றிருந்தனர். வயோதிபர்களாகிய ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் அவர்களது கால்நடைகளும் மாத்திரமே கிராமங்களில் தங்கியிருந்தனர்.  

அயுதம் தரித்த ஆங்கிலேய இராணுவம் எவ்வித இடையூறுமின்றி அங்கு கிராமங்களில் தமது அட்டகாச நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி மேற்கொண்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். கற்பிழந்த பெண்களும் கதறியழும் பிள்ளைகளுமாக ஊவாவின் நிலை பரிதாபகரமாகியது. வீடுகளையும், சொத்துக்களையும், விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்திய ஆங்கிலேய படையினர், விவசாய தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசன கால்வாய்களையும், அணைக்கட்டுகளையும் நிர்மூலமாக்கி பேரழிவை ஏற்படுத்தினர்.  

இவ்வெறியாட்டம் காரணமாக கிராமங்களிலிருந்து மக்கள் தப்பித்தோம் பிழைத்தோமென தலைமறைவாகினர். சன நாட்டமற்ற சூன்ய வெளிகளாக கிராமங்கள் வெறிச்சோடின. அதனைத் தொடர்ந்த முகாம்களிலும் கோட்டை விடுதிகளிலும் வசித்து வந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

அப்பிராந்தியத்தில் ஆங்கிலேயருக்குச் சார்பான போக்குடனும் கெப்பெட்டிப் பொலையின் எதிரியாகவும் செயல்புரிந்து வந்த பிந்தென்ன அதிகாரம், சில இராணுவ முகாம்கள் மூடப்பட்டமை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டான். பொதுமக்களின் எதிர்ப்புகளும், கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களும் எந்நேரமும் பிந்தென்னை அதிகாரத்தின் மீது தொடுக்கப்படலாம் என்ற சூழ்நிலை அண்மித்துக் கொண்டிருந்தது.  

தன்னையும் தனது உறவினர்களையும் மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லுமாறு ஆங்கிலேயரிடம் மண்டியிட்டான் பிந்தென்னை அதிகாரம். அதனை ஏற்றுக்கொண்ட காலனி அரசு, நாற்பது பேர் கொண்ட பிந்தென்னையின் உறவினர்களையும், அவனையும் பாதுகாப்பாக மட்டக்களப்புக்கு அழைத்துச் சென்றது. அச் சந்தர்ப்பத்தில் அவனது சொத்துக்கள் பெரும்பாலும் மக்களின் தாக்குதல்களுக்குள்ளாகி அழிக்கப்பட்டிருந்தன. அவனது நிலை அறிந்து மனிதாபிமான நோக்குடன் மாதாந்த கொடுப்பனவினையும் ஆங்கிலேயர் வழங்கி வந்தனர்.  

கெப்பெட்டிப்பொல இவ்வாறு ஊவா பிராந்தியத்தில் ஆங்கிலேயரின் நிருவாகத்தை ஒடுக்கிவைத்திருந்த அதேசமயம், மாத்தளை பிராந்தியத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டம் வெற்றிகரமாக வளர்ச்சி கண்டது.

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(கண்டிச் சுதந்திர போராட்டங்கள்)
சி.கே. முருகேசு

Comments