ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி காலை 7மணி முதல், மாலை 5மணிவரை நடைபெறுகிறது.  

இந்தத் தேர்தலில் வாக்களிக்கவென ஒரு கோடியே 60இலட்சம்பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தடவை வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல்களைவிடவும் இந்தத் தடவையே கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பென்னம்பெரிய வாக்குப் பெட்டிகள், நீளமான வாக்குச் சீட்டுகள், பெரிய பெரிய வாக்களிப்பு நிலையங்கள் எனப் பல்வேறு விசேட அம்சங்கள் நிறைந்த இந்தத் தேர்தலில் எப்படி வாக்களிப்பது?  

போட்டியிடும் 35வேட்பாளர்களுள் உங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு நீங்கள் வாக்ைகச் செலுத்தலாம்.  

எப்படி?  

வேட்பாளரின் கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இட வேண்டும். அல்லது 1என்ற இலக்கத்தைக் குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமானால், முதலாவது தெரிவுக்கு நேரே 1என்றும் ஏனைய இருவருக்கும் 2, 3என்றும் குறிப்பிட வேண்டும். புள்ளடியிட்டால், நீங்கள் அந்த வாக்ைக ஒருவருக்கு மட்டுமே வழங்க முடியும்.புள்ளடியிட்டுவிட்டு இரண்டாவது 2, மூன்றாவது 3விருப்பத்தை அளிக்க முடியாது. அவ்வாறான வாக்கு நிராகரிக்கப்படும் என்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.  

வாக்களிக்கும்போது ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், மற்றொரு புதிய வாக்குச் சீட்டைப் பெற்று மீண்டும் வாக்ைகச் செலுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

வேட்பாளர்களின் எண்ணிக்ைக அதிகம் என்பதால், வாக்குச் சீட்டின் நீளம் 26அங்குலமாக அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வாக்குப் பெட்டிகளின் அளவும் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இம்முறை வாக்ெகடுப்புக்கான செலவு பன்மடங்கு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது  

வாக்காளர் அட்டை,  

தேசிய அடையாள அட்டை,  

செல்லுபடியான கடவுச்சீட்டு,  

செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்,  

முதியோர் அடையாள அட்டை,  

மதகுருமார் அடையாள அட்டை  

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது வாக்களிப்பதற்கென வழங்கப்பட்டிருக்கும் விசேட அடையாள அட்டையையோ கொண்டு செல்ல மறவாதீர்கள்.  

இந்தத் தேர்தல் பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறுவதால், சிலவேளை வரலாற்றில் முதற்தடவையாக இரண்டாவது விருப்பினை எண்ணுவதற்கான தேவை ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

1988இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளார்கள். ஆனால், முதலாவது தேர்தலில் ஆறுபேர் போட்டியிட்டதுடன் ஏனைய தேர்தல்களில் 22பேர் வரை போட்டியிட்டுள்ளனர். எனினும், இம்முறை 35வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதனால், இந்தத் தேர்தல் பல்வேறு விடயங்களில் முக்கியத்துவமிக்க தேர்தலாகக் கருதப்படுகிறது.  

பொதுவாக ஜனாதிபதி தேர்தலொன்றில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கும் பட்சத்தில், வாக்காளர்கள் மூன்று விருப்பைத் தெரிவுசெய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். பல தேர்தல்களில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருப்பதால், விருப்பத் தெரிவுகளுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பதை வாக்காளர்கள் அறிந்துவைத்திருப்பார்கள். என்றாலும், இந்தத் தடவை 35பேர் போட்டியிடுவதால், வாக்களிப்பு முறையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடுமோ? என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். ஆனால், அப்படி எந்தச் சந்தேகமும் தேவையில்லை. புதிதாக பதிவுசெய்து கொண்டுள்ள வாக்காளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு மீண்டும் அதுபற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  

ஏனெனில், இந்தத் தேர்தலிலும் ஒன்றுக்கு மேற்பட்டவரைத் தெரிவுசெய்ய முடியும்.  

ஆனால், வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்படுவது ஒருவர் மட்டுமே! 35பேர் போட்டியிட்டாலும், அவர்களுள் 50%இற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். போட்டிக்கு வந்துள்ள இரண்டு வேட்பாளர்களுள் எவரும் தேவையான வாக்குகளைப் பெற்றுக்ெகாள்ளாத பட்சத்தில்தான் இரண்டாவது விருப்பு எண்ணப்படும். அதாவது, முதலாவது வாக்கை ஒருவருக்கு அளித்துள்ள வாக்காளர், தனது இரண்டாவது விருப்பை, தற்போது போட்டியின் அந்தரத்தில் இருக்கும் இருவரில் ஒருவருக்கு அளித்திருந்தால், அந்த வாக்கு சம்பந்தப்பட்ட வேட்பாளருக்குச் சேர்க்கப்படும். அதுபோல், மூன்றாவது விருப்பாக அந்த இருவரில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அந்த வாக்கும் சேர்க்கப்படுமே தவிர, வேறு ஒரு வேட்பாளர் தமக்கு அளிக்கப்பட்ட வாக்ைக பிரதான இடத்திற்கு வந்திருக்கும் எவருக்கும் அளிக்க முடியாது என்பதே உண்மை.  

இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் கடந்த 1994ஆம் ஆண்டில் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே 62.28%வாக்குகளைப் பெற்றிருக்கிறார். எனினும், மொத்த வாக்காளர்களில் 47இலட்சத்து 9205பேர் மட்டுமே சந்திரிகாவுக்கு வாக்களித்திருந்தனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிமா திசாநாயக்க 27இலட்சத்து 15ஆயிரத்து 283 (35.91%) வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும், ஹட்சன் சமரசிங்க சுயேச்சையாகவும், சிங்களயே மகா சம்மத்த பூமிபுத்திர கட்சியின் சார்பில் ஹரிச்சந்திர விஜேதுங்க, இலங்கை முற்போக்கு முன்னணியின் சார்பில் நிஹால் கலப்பத்தி, ஏ.ரி.ரணசிங்க (சுயேச்சை) ஆகியோருமாக ஆறுபேர் போட்டியிட்டிருந்தார்கள்.  

1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர், 1982இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஆறுபேர் போட்டியிட்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 34இலட்சத்து 50ஆயிரத்து 811வாக்குகளைப் பெற்று (52%) ஜனாதிபதியானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ 25இலட்சத்து 48ஆயிரத்து 438 (39%) வாக்குகளைப் பெற்றிருந்தார். மூன்றாவதாகப் போட்டியிட்ட ஜேவிபியின் தலைவர் ரோஹண விஜேவீர 273,428வாக்குகளைப் பெற்றிருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் 173,934வாக்குகளைப் பெற்றிருந்தார். 1982ஒக்ேடாபர் 20ஆம் திகதி நடைபெற்ற அந்தத் தேர்தலில் வாசுதேவ நாணயக்கார, கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகியோரும் போட்டியிட்டிருந்தார்கள்.  

1988இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தல்தான் வன்முறைகள் நிறைந்திருந்ததும் வாக்களிப்பு வீதம் குறைவாகவிருந்ததுமான ஒரு தேர்தலாக அமைந்திருந்தது. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை இந்திய சமாதான உடன்படிக்ைகயின் பின்னரான நிகழ்வுகள், மக்கள் விடுதலை முன்னணி, புலிகள் இயக்கம் ஆகியவற்றின் செயற்பாடுகள் மலிந்திருந்த அந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச, சிறிமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க, ஒஸி அபேகுணசேகர ஆகிய மூவர் மட்டுமே போட்டியிட்டார்கள். அதில் 25இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றே பிரேமதாச ஜனாதிபதியானார்.  

2000ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது ஜனாதிபதி தேர்தலில் 13பேர் போட்டியிட்டிருந்தார்கள். இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 43இலட்சத்து 12ஆயிரத்து 157 (51.12%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 36இலட்சத்து 2748 (42.71%) வாக்குகளைப் பெற்றார். ஜேவிபியின் சார்பில் களமிறங்கிய நந்தன குணதிலக 344,173 (4.08%) வாக்குகளைப் பெற்றார்.  

2005இல் நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்க, சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட 13பேர் போட்டியிட்டார்கள். இதில் சுமார் 49இலட்சம் (50.29%) வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று புலிகள் இயக்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

2010ஆம் ஆண்டிலும் 2015இலும் நடைபெற்ற இரண்டு தேர்தல்கள்தான் மிக மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், 2009இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதோடு, தமது பதவிக்காலம் 2011இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010ஜனவரி 26ஆம் திகதி தேர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில் 22வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள். பதவிக்காலம் ஆறு வருடங்கள் என்றபோதிலும், நான்கு ஆண்டுகளின் நிறைவில் விரும்பினால், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தில் இருந்ததன் காரணமாகப் 18ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதி பதவிக்கு இரண்டு தடவை மட்டுமே ஒருவர் போட்டியிடலாம் என்ற சரத்து 2010 செப்டம்பரில் நீக்கப்பட்டது.  

இந்நிலையில், அவரது இரண்டாவது பதவிக்காலம் 2010நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பமாகுவதாக உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருந்தது. இந்தப் பின்புலத்திலேயே, பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே 2014டிசம்பரில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2015ஜனவரி எட்டாந்திகதி தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில்தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார். புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட அவர், 62இலட்சத்து 17ஆயிரத்து 162 (51.28%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.  

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, 57இலட்சத்து 68ஆயிரத்து 90 (47.58%) வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில்தான் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதன் பின்னர் நடைபெற்ற குளறுபடிகள், அல்லோலகல்லோலங்கள் நீங்கள் அறிந்தவைதான்.  

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் தேர்தலிலும் கூடுதலானோர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் மக்களுக்கு வெறுப்புணர்வு நிலவியபோதிலும், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் வாக்காளர்கள் பலர் வாக்களிக்கச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அவ்வாறானவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவுகூட முன்வைக்கப்பட்டிருந்தது.  

ஓர் அரசினால் நாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கப்படும் அனைத்து சட்ட ரீதியான உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கும் உரித்து உடையவர்களாகவும், அவர்கள் அச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிவானவர்களாக இருத்தலும், அவர்களுக்குக் கையளிக்கப்படும் கடமைகளைச் சரிவர நிறைவேற்றும் கடப்பாடு உள்ளவர்களாகவும் இருக்கும் ஒருவரே நாட்டின் பிரஜை என அழைக்கப்படுகிறார்கள்.  

அதேநேரம், தேர்தலில் வாக்களிக்கவும் தேர்தலில் பங்கேற்கவும் உரிமையுள்ளவர்கள், 18வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குரிமை உள்ளவர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஆனால், வாக்காளர்கள் என்பவர்கள் இவர்களிலிருந்து வேறுபடுகிறார்கள். வாக்குரிமை இருந்து அந்த வாக்கினைப் பயன்படுத்தும் வகையில் தம்மைப் பதிவுசெய்துகொண்டுள்ளவர்கள் மட்டுந்தான் வாக்காளர்கள் என்று கருதப்படுவார்கள். அதுவும் வாக்களிக்கச் செல்பவராகவும் இருக்கவேண்டும்!

விசு கருணாநிதி

Comments