பலவந்த வெளியேற்றத்தின் பல்பரிமாணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பலவந்த வெளியேற்றத்தின் பல்பரிமாணங்கள்

(​சென்றவார தொடர்) இன்று தோப்பு வீழ்ந்து தோழமையான உறவே நிலவுகிறது.  முஸ்லிம்கள் மீதான சகோதர வாஞ்சைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.  இறைதூதர் முஹம்மது நபியவர்களும் மக்காவை  விட்டு மதீனாவுக்கு புலம்பெயர்ந்து சென்றபோது, காட்டப்பட்ட அதே சகோதரத்துவம் (Brother Hood), புத்தளம்  மாவட்டத்திலும் காட்டப்பட்டுள்ளது. சொத்தில் பாதி, உழைப்பில் பாதி, படிப்பில்  பாதி என அனைத்தையும் பாதியாகப் பங்கிட்ட புத்தளம் மாவட்ட மக்கள், சகோதரத்துவ  வாஞ்சைக்கு சிறந்த உதாரண புருஷர்களே.

இதே போன்று கம்பஹா மாவட்டத்தில் 1050  குடும்பங்கள், அநுராதபுரத்தில் 865குடும்பங்கள், குருநாகலில் 487  குடும்பங்கள், கொழும்பு மாவட்டத்தில் 425குடும்பங்களும் அடைக்கலம் புகுந்தன. 

களுத்துறை, மாத்தளை, கண்டி, கேகாலை மாவட்டங்களையும் அகதிகளாக வந்த முஸ்லிம்கள், தமது அடைக்கல மண்ணாக அரவணைத்துக் கொண்டனர். எத்தனை வருடங்களுக்கு  இந்த வாழ்க்கை. கட்டுக்கடங்காத சனத்தொகை வளர்ச்சியாலும் அதனாலுண்டாகும்  பௌதீகப் பிரச்சினைகளையும் தாங்குவதில் புத்தளம் மாவட்டம் மூச்சுத்திணறுகிறது. 

பாடசாலைகளில் இட நெருக்கடி, வீடுகளைக் கட்டுவதில் பொருளாதாரச் சிக்கல்,  விவசாயம், வியாபாரம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பி வாழ்ந்த வடமாகாண  முஸ்லிம்களுக்கு, புத்தளம் மாவட்ட மண்ணும் சீதோஷ்ண நிலையும் பொருந்திப்  போகவில்லை. மீனவர்கள் மாத்திரம் தமக்கிருந்த திறமைகளைப் புத்தளம், கற்பிட்டி  கடல் பிரதேசங்களில் பயன்படுத்திக்கொண்டனர். கால்நடை வளர்ப்பிற்கும், விவசாயம்,  வியாபாரத்துக்கும் இப்பிரதேசம் இணங்காதமை இவர்களைப் பொருளாதார பின்னடைவுக்குள்  மேலும் திணித்தது. இந்தத் திணிப்பும் திண்டாட்டமும் தமது பூர்வீக  வாழிடங்களுக்குத் திரும்பும் இவர்களது ஆசைகளை மிகைப்படுத்திக்  கொண்டிருக்கிறது. 

தம்மை வெளியேற்ற புலிகள் தீர்மானித்த போது, அதற்கெதிராக எதுவும் பேச முடியாது  திகைத்து நின்ற தமிழ் சகோதரர்களின் பரிதாபப் பார்வைகள், இயலுமான வரை  புலிகளுக்குத் தெரியாமல் முஸ்லிம்களின் சொத்துக்களைப் பாதுகாத்துப்  பத்திரப்படுத்திய தமிழர்களின் மனிதாபிமானம், தீர்மானத்தை கைவிடுமாறு புலிகளைக்  கோரிய கிறிஸ்தவ பாதிரிமார்களின் வேண்டுதல்கள், எல்லாவற்றையும் நன்றியுடன்  நினைத்துப் பார்க்கும் வடபுல முஸ்லிம்கள், பயங்கரவாதத்தின் கொடிய பிடிக்குள்  மனிதாபிமானத்தைக் கட்டிப்போட முடியாதென்று, இந்த வெளியேற்றக் காட்சியில்  கற்றுக்கொண்டனர். இந்த மனிதாபிமான நம்பிக்கையும், தென்னிலங்கை மாவட்டங்களில்  பத்து பேர்ச் காணிகளுக்குள் முடங்கிய அகதி வாழ்வின் வலிகளுமே இம்மக்களின்  தாயகம் நோக்கிய தாகத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. 

எனினும் மத்திய, நடுத்தர குடும்பத்து மக்கள் அடைக்கலம் புகுந்த மண்ணின்  வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுள்ளதால், பூர்வீக இடங்களுக்குச் செல்வதில்  விருப்பமின்றி உள்ளனர். பிள்ளைகளின் கல்வி, பாடசாலைகள், சுகாதாரம், தொழில்  வாய்ப்புக்களை எண்ணியே இவர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலைமைகள்  மீள்குடியேற்றத்தில் பின்னடைவுகளையும் ஏற்படுத்துகின்றன. மன்னார், முசலிப்  பிரதேசங்களில் கட்டித் திறக்கப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளை வாங்கியுள்ள சிலர்,  மாதத்துக்கு ஒரு முறையே பூர்வீக இடங்களைப் பார்வையிட்டுத் திரும்புகின்றனர். 

மேலும் தாயகம் திரும்புவோர் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சிலரை  மீளக்குடியேற்றுவதில் விருப்பமிழக்கச் செய்கின்றன. 

காணிகளை அடையாளங் காணமுடியாத நிலை, அடையாளங் கண்டாலும் எல்லைகளை அறிந்துகொள்ள  முடியாத அளவுக்கு காடுகள் வளர்ந்துள்ளமை, காணி உறுதிகளைப் பெறுவதற்கான  ஆவணங்கள் இல்லாமை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகள். அத்துடன், புலம்பெயர்  வாழ்க்கையில் தென்னிலங்கை மாவட்டங்களில் பிறந்த இவர்களின் பிள்ளைகளுக்கு  வெளியூர் மாவட்ட பிறப்புச்சான்றிதழ்களே உள்ளன. இதனால் வெளியூர் பிள்ளைகளை  வடக்கில் குடியமர்த்துவதாகவும் விமர்சனங்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. 

எதையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாத இம்மக்கள், உயிரைக் கையில்  பிடித்துக்கொண்டு வெளியேறுகையில் காணி உறுதி, பிறப்புச்சான்றிதழ், வாக்காளர்  அட்டைகளை எடுத்துச்,செல்ல அவகாசம் இருக்கவில்லை. குறிப்பாக, முப்பது வருட  புலம்பெயர் வாழ்வில் பிறந்த வடபுல முஸ்லிம்களின் பிள்ளைகள் இன்றைய  காலகட்டத்தில், முப்பது வயதுக்கு கீழான வயதுகளை எட்டியிருப்பர். ஆனால்,  இவர்கள் பிறந்த மாவட்டங்கள் புத்தளமாகவோ, குருநாகலாகவோ, அநுராதபுரமாகவோ  பதியப்பட்டிருக்கலாம். அதற்காக இப்பிள்ளைகளின் பூர்வீகம் வட மாகாணம் இல்லை  என்று கூற முடியாது. புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்  சகோதரர்களின் இளைய வாரிசுகளும் இன்று இதே வயதுகளிலேயே இருப்பர். பிறப்பிடம்  லண்டன், பிரான்ஸ், நோர்வேயாகவே இருந்தாலும் இப்பிள்ளைகளின் பூர்வீகம் வடக்கு,  அல்லது கிழக்காகவே கொள்ளப்படுகிறது. இதற்காகவே இப்பிள்ளைகளுக்கு இரட்டைப்  பிரஜாவுரிமையும் வழங்கப்படுகின்றது. இதேபோன்ற பார்வையிலேயே வடபுலப்  பெற்றோர்கள், வேறு மாவட்டங்களில் வாழ்ந்து அங்கு பிறந்த அவர்களின்  பிள்ளைகளையும் பார்க்க வேண்டும். 

மேலும், முப்பது வருடங்களைக் கடந்த புலம்பெயர் வாழ்க்கையில் சில குடும்பத்து  மூத்தவர்கள் உயிரிழந்துள்ளனர். மூத்தோர், அல்லது பாதுகாவலர்கள் உயிரிழந்த  குடும்பங்களின் காணிகள், சொத்துக்களுக்கான பின்னுரித்தாளிகள் பற்றித்  தெளிவில்லாதுள்ளன. கிராம சேவை அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கச்சேரிகளில்  இம்மக்கள் வாழ்ந்த அடையாளங்களுக்கான ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. இவை  திட்டமிட்டுத் தொலைக்கப்பட்டுள்ளதா? அல்லது இயற்கையாகத் தொலைந்ததா? என்பதையும்  விட, இவ்வாறு தொலைந்த ஆவணங்களை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளைத்  துரிதப்படுத்த வேண்டியுள்ளன. 

இந் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படாததாலே காணி உறுதிகள், இங்கு  வாழ்ந்தோருக்கான பிறப்புச்சான்றிதழ்கள், வாழ்வாதார உரிமைகள் மற்றும்  வாக்குரிமைகளைப் பெறுவதில் சிரமங்களை ஏற்படுத்தி, மீள்குடியேறுவதிலும் சில  தடங்கல்களை ஏற்படுத்துகின்றன. 1990இல் வெளியேறும் போது இரண்டு, மூன்று  பிள்ளைகளுடன் ஒரு குடும்பத்தில் சாதாரணமாக ஐந்து பேர் இருந்திருப்பர்.  மீளத்திரும்புகையில் பேரன், பேத்தி, பாட்டி, பாட்டன், மகன், மருமகள் எனக்  குடும்பங்கள் பெருகியுள்ளதால், காணிகளும் போதாதுள்ளன. இன்னும் பௌத்த  கடும்போக்குவாதத்தின் எச்சரிக்கைகள், எரிச்சல்களும் மற்றொரு இனவாதமாகவே  பார்க்கப்படுகிறது. 

ஆயுத முறையிலான அடக்கு முறைக்குள் அழிந்துபோன வடபுல முஸ்லிம்களின்  இருப்புக்கள், சிங்கள, பௌத்த கடும்போக்கின் செயற்பாடுகளாலும் அழிக்கப்படுமோ?  என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வில்பத்து இயற்கை சரணாலயத்தை அழித்து,  முஸ்லிம்களைக் குடியேற்றுவதாக அமைச்சர் ரிஷாட்டைக் குற்றம் சுமத்தும்  பின்னணிக்குள் மறைந்துள்ளவை எது? தமிழ் மொழிச் சமூகத்துக்கு சொந்தமான வடக்கு,  கிழக்கின் எல்லைக் கிராமங்களில் ஒட்டுமொத்தமாக சிங்களவர்களைக் கொண்டுவந்து  குடியமர்த்தும் தூரநோக்கம் இப்பின்னணிக்குள் உள்ளது.

மீள்குடியேற்றத்துடன்  தொடர்புடைய, மன்னார் மாவட்டத்தைச் சாராத இவ்வில்பத்தை அண்மித்த முசலிப்  பிரதேசத்திலே, முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்திருந்தனர் 

கவனிப்பாரற்று கைவிடப்பட்ட இம்மக்களின் வாழிடங்களில் காடுகள், புற்கள்  வளர்ந்து வில்பத்து வனத்துக்குப் போட்டியாக நிற்கின்றன. 

இந்நியாயத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் மாத்திரம் புரியவைக்க முடியாது.  தமிழ்தேசம் ஒட்டுமொத்தமாகத் திரண்டு இவற்றைப் புரியவைப்பதிலேயே வடக்கு,  கிழக்கில் வாழும் தமிழ்மொழிச் சமூகங்களின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரே  வழியுள்ளது. இவ்விடயத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பழையவற்றை மறந்து  பணியாற்ற வேண்டும். கடைசி யுத்தத்தில் இடம்பெற்றதை தமிழினப்படுகொலையாகக்  கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, வடபுல முஸ்லிம்களின்  வெளியேற்றத்தை, திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானிக்கவில்லை. 

ஆகக்குறைந்தது இவ்வெளியேற்றத்தைக் கண்டித்தேனும் ஒரு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டிருந்தால், மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கும்.  எனவே வடக்கு, கிழக்குத் தமிழர்கள் விடயத்தில் சர்வதேசம் கொண்டுள்ள அக்கறை  போன்று, தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் விடயத்திலும்  சர்வதேசம் அக்கறைகொள்ள வேண்டும். இதற்கு அவசரமாகத் தேவைப்படுவது முஸ்லிம்  சமூகத்துக்கான ஏக அரசியல் பலமே.

அகதி வாழ்வில் அவதியுறும் முஸ்லிம்களின்  துயர்களைப் போக்கவும், வடபுல முஸ்லிம்களின் பூர்வீக இருப்பு இழக்கப்படுவதை  தடுக்கவும் முஸ்லிம் தலைமைகள் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வது  காலத்தின் தேவையாகின்றது.

சுஐப் எம்.காசிம்

Comments