ஜனாதிபதியின் மீலாதுன் நபி தினச் செய்தி | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் மீலாதுன் நபி தினச் செய்தி

முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினமான மீலாத் நபி, உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கான அவரது போதனைகளை மீள நினைவூட்டுவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மீலாத் தினசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே. இனம், குலம், நிறம் போன்ற எந்தவொரு விடயத்திலும் ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்பது அவரது போதனையாக அமைந்தது. அனைத்து மனிதர்களுக்கும் சமமான உரிமை கிடைக்கப்பெற வேண்டுமென நபி அவர்கள் போதித்தார்.

தனது முழு வாழ்வையும் அடிமைச் சமூகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த நபி அவர்கள், சுரண்டலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் வியர்வை காயும் முன்னரே அவர்களுக்கான கூலி குறைவின்றி கொடுக்கப்பட வேண்டுமென அவர் போதித்தார்.

அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடித்த நற்பண்புகள் மற்றும் மனிதநேயத்திற்கான அவரது அர்ப்பணிப்புகள் ஆகியன மனிதர்களுக்கிடையில் பிரிவினைகளும் குரோதமும் வளர்ந்து காணப்படும் இக்காலத்தில் எம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைகின்றன.

அனைத்து உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபி அவர்களின் தத்துவம் எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுவதாக அமையவேண்டுமென நபி அவர்களின் இந்த பிறந்த தினத்தில் நான் உளப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Comments