ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் 13ஆம் திகதியுடன் நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் 13ஆம் திகதியுடன் நிறைவு

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நீண்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில்,  சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானிக்கும் சூழலில் தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நடைபெறுவது ஜனாதிபதி தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா? என்ற சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் தீர்வைப் பெற்றுக்கொடுத்ததையடுத்து எட்டாவது ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைஎடுத்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு கோடியே 59இலட்சத்து 92ஆயிரத்து 96பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக நாடு முழுவதும் 12,845வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாகவும் எண்ணும் நிலையங்களாகவும் பயன்படுத்தப்படவிருப்பதால், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

16ஆம் திகதி காலை 7மணி முதல் மாலை ஐந்து மணிவரை வாக்கெடுப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு

35வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்ெகடுப்பு நேரத்தை ஒரு மணித்தியாலமாக அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்ைக எடுத்தது. இதனால், தபால் மூல வாக்குகளை எண்ணும் பணியும் ஒரு மணித்தியாலத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால், இம்முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் சட்ட விதிகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்ைக எடுத்திருக்கிறார்.

வேட்பாளர்களுக்கு மாத்திரமன்றி வாக்காளர்களுக்கும் கடுமையான எச்சரிக்ைகயை அவர் விடுத்துள்ளார். அதன்படி, வேட்பாளர்கள் எவரும் தமக்கு அன்றி வேறொரு வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்ய முடியாது. வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. தமது ஆதரவாளர்களுக்கு மதுபானம் வழங்கக்கூடாது. இவ்வாறு தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள செயல்களை மீறிச் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், எதிர்காலத்தில் அவர்கள் தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதிக்கப்படும்.

அதேநேரம், வாக்களிக்கும் ஒரு வாக்காளர் தாம் வாக்களிப்பதைப் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால், அவர்களுக்ெகதிராகவும் சட்ட நடவடிக்ைக எடுக்கப்படும்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் செல்லுபடியான ஏதாவதோர் அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்து இதுவரை அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்படும் அடையாள கடிதத்தைக் கொண்டு செல்ல வேண்டும். இல்லையேல் கிராம சேவையாளரிடம் விசேட அடையாள அட்டையைப் பெற்றுக்ெகாள்ள வேண்டும.

வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதோர்

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் (09) பூர்த்தியாகியுள்ளன. நேற்றுவரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தங்களின் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் ெகாள்ள முடியும். 35வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அனைவரதும் பெயர் விபரங்ளைகளையும் கட்சியின் சின்னங்களையும் தாங்கியதாக இம்முறை 26அங்குலம் (66செ.மீ) நீளத்தில் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. சில வாக்ெகடுப்பு நிலையங்களின் அளவும் பெரிதாக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள விசேட 'கார்ட்போட்' வாக்குப் பெட்டிகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

பொலிஸ் பாதுகாப்பு

தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை சுமுகமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கினிகத்தேனையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தவிர வேறு பாரிய சம்பவங்கள் இதுவரை பதிவாகவில்லை. மொனறாகலையில் அலுவலகம் தாக்கப்பட்டதாகக் கிடைத்துள்ள முறைப்பாட்டைத் தவிர, சிறு சிறு சம்பவங்கள் தொடர்பில் சுமார் 3000முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

எனினும், பதற்றமான இடங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை மேற்கொள்ள ஆணைக்குழு நடவடிக்ைக எடுத்துள்ளது. அது தவிரவும், ஒவ்வொரு வாக்ெகடுப்பு நிலையத்திற்கும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் வீதம் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ், அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புப் பிரிவினர் என சுமார் 40ஆயிரம்பேரை கடமையில் அமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் இராணுவத்தினரைக் களமிறக்கவும் ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்துள்ளார்.

கண்காணிப்பாளர்கள்

தேர்தலை சுமுகமாக நடத்துவதற்காக உள்ளூரில் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளிலிருந்தும் சர்வதேச கண்காணிப்பாளர்களுமாக சுமார் ஆறாயிரம்பேர் கடமையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாயம், ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான் அமைப்பு உள்ளிட்டவற்றிலிருந்து 145பேர் வருகை தந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

வாக்கு எண்ணும் நிலையங்கள்

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 16ஆம் திகதி மாலை 5.15அளவில் ஆரம்பமாகும். வாக்குகளை எண்ணுவதற்கு 1550நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தரப்படும் முடிவுகளை ஆணைக்குழு ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கும். 16ஆம் திகதி இரவு 10மணிக்குப் பின்னர் முடிவுகள் வெளியாகத் தொடங்கும். கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இறுதி முடிவு 18ஆம் திகதி காலையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலவேளை, இரண்டாவது விருப்பத் தெரிவையும் எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டால், 18ஆம் திகதி மாலையிலேயே முடிவைத் தரக்கூடியதாக இருக்கும் என்று ஆணைக்குழுவின் தலைவர் முன்னாயத்த அறிவிப்பொன்றைச் செய்திருக்கிறார்.

வித்தியாசமான தேர்தல்

2010ஆம் ஆண்டு 22வேட்பாளர்கள் போட்டியிட்டதைப்பார்க்கிலும், வரலாற்றில் கூடுதலானோர் களமிறங்கிய தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபடுகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகள் சார்பில் அவற்றின் தலைவர்கள் போட்டியிடாத ஒரு தேர்தலாகவும், பதவியில் இருக்கும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ, முன்னாள் ஜனாதிபதியோ களமிறங்காத தேர்தலாகவும் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இதுவரை காலம் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வந்த ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னமும் இல்லாத தேர்தலாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற கூட்டணிகள் தவிர்ந்த ஒரு தேர்தலாகவும் இந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தல் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. (வி)

எம்.ஏ.எம். நிலாம்

Comments