தேர்தல் முடிந்ததும் பதவி விலகுவேன் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் முடிந்ததும் பதவி விலகுவேன்

ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்றதுடன் தான் பதவி விலகப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை ஊடகங்களிடம் இவ்வாறு அவர்​தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு தேர்தலை நடத்துவதற்கு தான் தலைமை தாங்கப்போவதில்லை என்ற முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே எடுத்ததாக அவர் கூறினார். தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு மேஜையில் தயாராக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது அங்கு நின்ற ஊடகவியலாளர்களுடன் பேசும் போதே தனது இந்த முடிவை பகிரங்கப்படுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவே முனைப்புக்காட்டியதாகவும் அது சாத்தியப்படாது போனால் பதவி விலகத் தீர்மானித்திருந்தேன். ஆனால் இடையே ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால்,இதனை நடத்திவிட்டு பதவி விலகத் தீர்மானித்ததாகவும் கூறினார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் கூட சில அரசியல்தரப்புகள். மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல முனைப்புக்காட்டி வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆணைக்குழுத் தலைவர் இந்த விடயத்தில் தம்மால் உடன்பட முடியாதிருப்பதாகவும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதை விட பதவி விலகுவதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Comments