நபிகளார் மேற்கொண்ட முயற்சி இன்று எமக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது | தினகரன் வாரமஞ்சரி

நபிகளார் மேற்கொண்ட முயற்சி இன்று எமக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி இறைவன் தெரிவுசெய்த இறுதி நபியான முஹம்மத்  நபியவர்கள் சமாதானம், நல்லிணக்கம், மனிதாபிமானம் மிகுந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த உன்னத இறைதூதர் ஆவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மீலாதுன் நபி தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச்செய்தியில் பிரதமர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

அக்காலத்தில் கோத்திரச் சண்டைகள் காரணமாகப் பிளவுபட்டுப் பிரிந்து காணப்பட்ட அரேபிய மக்களுக்கு சகோதரத்துவம், சமாதானம், தியாகம் என்பவற்றின் வாழ்க்கைப் பெறுமானங்களை அறிமுகப்படுத்தி, அமைதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நபியவர்கள் மேற்கொண்ட முயற்சி இன்று எமக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

நபியவர்கள் மார்க்கத்தையும் வாழ்வையும் இரண்டாகப் பிரித்து நோக்காது அது இரண்டும் ஒன்றே என எடுத்தியம்பிய ஆன்மீகத் தலைவராகக் காணப்பட்டதுடன், சமய வாழ்வின் உண்மையான சமூகப் பெறுமானத்தைத் தெளிவுபடுத்திக் காட்டிய சிறந்த சமூகத் தலைவராகவும் காணப்பட்டார்.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், நபியவர்களின் வாழ்வு தொடர்பான நோக்கு, ஆன்மீகப் பெறுமானங்களுக்கு ஏற்ப அனைத்து தீவிரவாதங்களையும் தோற்கடித்து சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு முழு சமூகத்தினரும் முழுமையான பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடும் அனைத்து சகோதர முஸ்லிம்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

Comments