யாழ்ப்பாணம் - சென்னை விமானசேவை நாளை ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ்ப்பாணம் - சென்னை விமானசேவை நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு நாளை 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நேரடி விமானசேவை ஆரம்பமாகிறது. வாராந்தம் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 'எயார் இந்தியா' விமான சேவையின் துணை விமான சேவையான 'எலியொன்ஸ் எயார்' விமான சேவையே யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கமைய 9ஐ102எனும் விமானம் யாழ்ப்பாணத்திலிருந்து நாளை பகல் 12.45மணிக்கு பயணத்தை தொடங்கி பிற்பகல் 2.10மணியளவில் சென்னையை சென்றடையவுள்ளது.

அதேபோன்று சென்னையிலிருந்து 10.35மணிக்கு பயணத்தை தொடங்கும் விமானம் நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலியொன்ஸ் எயார் விமான சேவையானது இந்தியாவின் 53இடங்களுக்கு விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது. அப்பட்டியலில் 54ஆவது விமான நிலையமாக யாழ்ப்பாணம் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இது எலியொன்ஸ் எயாரின் முதலாவது சர்வதேச கன்னிப்பயணமாக அமையும்.

இவ்விமான சேவையூடாக 41ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்பாணமும் இந்தியாவும் ஒன்றிணையவுள்ளது. இச்சேவை மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் விமானப் பயணிகள் திருச்சி, மதுரை, டெல்லி, திருவனந்தபுரம், கோவா, ஹைதராபாத்,குவைத்,மஸ்கட்,துபாய் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான ஆரம்ப விமான கட்டணமாக 45 அமெரிக்க டொலர்களும் வரிகளுக்காக மேலதிகமாக 53 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படும். இதேவேளை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ஆரம்ப விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாவுடன் மேலதிக வரியும் சேர்த்து அறவிடப்படவுள்ளது.

Comments