இத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையா? | தினகரன் வாரமஞ்சரி

இத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையா?

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய இனப்பிரச்சினை விடயம் பிரதான தொனிப்பொருளாக இடம்பெற்றிருந்தது. இம்முறை தேசிய இனப்பிரச்சினை பிரதான பேசுபொருளிலிருந்து நீங்கியுள்ளது. ஆகக்குறைந்தது ஜே.வி.பி கூட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினாலும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான விடயத்தினை பரிந்துரைக்கவே இல்லை.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நட்பு சக்தியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், தேசிய பிரச்சினை தொடர்பில் முற்போக்காக சிந்திக்கிற ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைமைப்பொறுப்பிலும், பிரதமராகவும் இருந்தபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைத்திருக்கவில்லை.  

இவ்வாறான நிலையில் தற்போதைய வேட்பாளர்களிடத்திலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சஜித் பிரேமதாஸ மென்போக்கினை கடைப்பிடித்தாலும் அவரால் தீர்வு வழங்க முடியுமா என்பது கேள்விக்குள்ளாகின்ற விடயமாகவே உள்ளது.  

இவ்வாறு, தேசிய இனப்பிரச்சினை உட்பட தீர்வளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தேர்தலின் பிரதான பரப்பிலிருந்து நீங்கியுள்ள நிலையில் தான் தமிழர்கள் பிரதான வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.  

சிங்கள அரசியல் சூழமைவுகள் மாற்றம் கண்டுள்ள நிலையில் எவர் ஆட்சியின் தலைமையினை ஏற்றாலும் இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நான் கருதவில்லை.  

2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் வழங்கினாலும் அதனை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவில்லை. இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதென்றால் சிங்கள தேசிய அரசியல் தரப்புக்களிடையே ஒற்றுமையும், தமது மக்களை மனதளவில் தயார்படுத்தும் மனநிலையும் அவசியமாகின்றது. அந்த வகையான தயார் நிலையில் சிங்கள தேசிய அரசியல் தரப்புக்கள் இல்லை  

தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு உலக நாடுகளிடையில் இல்லை. பிரச்சினைகள் தீர்க்கப்படாது காலம் நீடித்துக்கொண்டு செல்லப்பட்டமையால் தான் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.  

தற்போது உலகநாடுகளின் ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள். அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் ஐஸ் பயங்கரவாதம் சம்பந்தமாகவே அவர்கள் சிந்திக்கின்றார்கள். மேலும் உலகநாடுகள் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான கரிசனைகள் குறைந்துள்ளன. சிறுபான்மையினர் தமது ஆட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றே உலக நாடுகள் கருதுகின்றன.  

பல்லின கலாசாரத்தினை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்வதிலிருந்து விலகியுள்ளன. தற்போது சிறுபான்மையினம், தனிநபர் உரிமைகளை விடவும் தேசிய பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கும் நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட.  

உயன்கொடவின் பார்வையில் மாறுபாடு நமக்குண்டு. குறிப்பாக அமெரிக்கா தொடக்கம் இந்தியா வரையில் மாற்றம் கொண்டுள்ள அரசியல் தலைமைகள் இன்று கொண்டிருக்கும் அரசியற் போக்கே வேறானது.  

ஆனாலும் உயன்கொட புரிந்து கொண்டுள்ள அளவுக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இன்றைய அரசியற் சூழலையும் சர்வதேச சமூக நிலைமையையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று துணிந்து கூறலாம். இதற்குச் சான்று தமிழ்க்கட்சித் தலைவர்கள் எடுத்திருக்கும் அரசியல் தீர்மானங்களும் அரசியல் வெளிப்பாடுகளுமாகும்.  

இது மட்டுமல்ல -  

“தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் முக்கியமானதாக இருக்கின்றதே தவிர சிங்கள தேசிய பரப்பினுள் அதற்கான இடமில்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கள தேசிய பரப்பில் ஒருசில தலைவர்களே அவ்விடயம் சம்பந்தமான கரிசனை கொண்டவர்களாகவும் இருக்கின்றமை துரதிர்ஷ்டவசமானதாகும்” என்ற உண்மையைக் கூறித் தன்னுடைய கவலைகளையும் வெளியிட்டிருக்கிறார் உயன்கொட.  

இதுதான் உண்மையும் யதார்த்தமும்.  

ஆனால், நம்மிற் பலரும் இதையெல்லாம் புரிந்து கொண்டும் புரியாத மாதிரித் தீவிர நிலைப்பாட்டில் கம்பு சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

இனப்பிரச்சினை என்பதையே பேசாமல் தவிர்க்குமளவுக்கு சிங்கள அதிகார வர்க்கம் மாறியுள்ளதொரு சூழலில் அவற்றுக்கு நேரெதிரான 13 கோரிக்கைகளை ஐந்து கட்சிகளும் இணைந்து தயாரித்ததை என்னவென்று சொல்வது?  

இதனால்தான் இந்தக் கோரிக்கைகளுக்கு எந்த மதிப்புமில்லாமற் போனது. இந்தக் கோரிக்கைகள் தமிழ்ச்சமூகத்தின் அபிலாஷைகளை உள்ளடக்கியது என்று யாரும் சொல்லக் கூடும். இது தமிழ் மக்களுடைய வரலாற்றுக் கோரிக்கை. அபிலாஷைகளின் வெளிப்பாடு. இதற்காகக் கொடுக்கப்பட்ட விலை அதிகம். தமிழ்க்கூட்டுப் பிரக்ஞை. நீண்டகாலமாக இதையே அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆகவே இதற்குக் குறைவாக எப்படி அவர்களால் சிந்திக்க முடியும் என்றும் கேட்கலாம்.  

ஆனால், இந்தக் கோரிக்கை நிபந்தனையாகியபோது அது எதிர்த்தரப்பை வேறுவிதமாகவே சிந்திக்க வைத்திருக்கிறது. இதை உடனடியாகவே பார்த்து விட்டோம். அவர்கள் அப்படியே இந்தக் கோரிக்கையைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு திமிர்த்தனமாக தங்களுடைய வழமையான நடவடிக்கையில் இறங்கி விட்டார்கள்.  

இலங்கையின் அரசியல் அவலமும் யதார்த்தமும் இதுதான்.  

ஆனால், தமிழ்த்தரப்பினராக நாமோ பத்து நாட்களுக்கு முன்பு ஒரு கோரிக்கையைக் குந்தியிருந்து படு சீரியஸாக உருவாக்கினோம். அதை வலுவானதொரு நிபந்தனையாக முன்வைத்தோம். ஆனால், அதை உரியவர்கள் பொருட்படுத்தவேயில்லை. அதனாலென்ன? அடுத்த பத்து நாட்களுக்குள் அதை நாமே கை விட்டுவிட்டு ஒரு தரப்புக்கு (சஜித்துக்கு) ஆதரவளிக்கத் துணிந்து விட்டோம். அதற்கொரு நியாயத்தைக் கண்டு பிடித்தோம். ஆம், ஐந்து கட்சிகளில் மூன்று கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. பேயை விடப் பிசாசு பரவாயில்லை என்ற மாதிரி... இப்படியென்றால் எதற்காக அந்த 13 அம்சக் கோரிக்கைகளும்? இதிலே இன்னொரு கொடுமை என்னவென்றால், இந்தப் 13 கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கையை வலியுறுத்தியதே சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி)தான்.  

யதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் எந்தத் தீர்மானமும் புறக்குடத்து நீராகவே மாறும். இதுதான் கடந்த காலத்தில் நடந்தது. இதனால்தான் வரலாற்றுத் தோல்விகள் தொடர்கின்றன.    தற்போது தேர்தற் களத்திலிருக்கும் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டபாய ராஜபகஸ இருவரும் ஒரே நாணயத்தில் இரண்டு பக்கங்கள் என்று சொல்லக்கூடியவாறே சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயத்தில் செயற்படுகின்றனர்.  

இதனால் தவிர்க்க முடியாதவாறு சிறுபான்மைத்தேசிய இனத்தினர் இன்னொரு மாற்றுப் பொறிமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.  

எழுபது ஆண்டுகளாக ஐ.தே.கவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (பொதுஜன பெரமுன சுதந்திக் கட்சியின் குழந்தையே) தாராளமாக வாய்ப்புகளைக் கொடுத்தாச்சு. இந்த எழுபது ஆண்டுகளிலும் இந்த இரண்டு தரப்பும் இலங்கை என்ற தேசத்துக்கும் இலங்கையர் என்ற மக்கள் குழுமங்களுக்கும் செய்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று நாடு எதிர்கொண்டிருக்கும் அத்தனை சிக்கல்களும் சீரழிவுகளும் வீழ்ச்சியும் அழிவும் நெருக்கடியும் இவற்றினால்தான். இதை யாருமே மறுக்க முடியாது.  

எனவே நாம் மாற்றாக ஒன்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உங்களை இனியும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை. அப்படியொரு தவறை நாம் செய்யப்போவதில்லை. உங்களுக்குப் பதிலாக நாம் இன்னொன்றைத் தெரிவு செய்கிறோம். அதை வளர்த்தெடுக்கவுள்ளோம். அதில் பண்பு மாற்றங்களைச் செய்யவுள்ளோம் என இன்னொரு தெரிவுக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது.  

இதைப்பற்றி கலாநிதி அமீர் அலி பின்வருமாறு கூறுவது கவனத்திற்குரியது.  

“அனுர குமர திஸநாயக்க 1960களில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் புதிய சகாப்தத் தலைவர். ஆனால், ரோஹண விஜயவீரவின் அன்றைய இனவாத விடுதலை முன்னணியல்ல அதன் இன்றைய அவதாரம். வரலாறு அக்கட்சியினருக்குப் புகட்டிய பல கசப்பான பாடங்களைக் கற்றுணர்ந்து, அதனால் விழிப்படைந்து முதிர்ச்சிபெற்று ஓர் இனவாதமற்ற தேசிய இடதுசாரி மக்கள் எழுச்சி இயக்கமாக அம்முன்னணி இன்று இயங்குகின்றது.  

தமிழர்களின் கோரிக்கைகளுள் நியாயமானவற்றை ஏற்று அமுல்படுத்துவேன் என்று திஸநாயக்க துணிந்து பேசியது இம்முன்னணியின் புதிய முகத்தை வெளிக்காட்டுகின்றதல்லவா?  

அது மட்டுமல்ல, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனங்களையும் மதங்களையும் மையமாகக் கொண்டல்லாது பொருளாதாரக் கொள்கைகளையும், மக்கள் நலன்பேணும் கொள்கைகளையும், யாவரும் இலங்கையரே என்ற அடிப்படையில் ஊழலற்ற ஓர் அரசியலையும், சமவுரிமைகளுள்ள ஒரு தேசிய சமுதாயத்தiயும் இலக்காகக்கொண்டு பேசிவரும் இவ்வேட்பாளனை சிறுபான்மை இனங்களிரண்டும் மிகப் பரிவுடன் நோக்க வேண்டும். ஏனெனில் சிறுபான்மையினரின் எதிர்காலச் சுபீட்சம் இக்கொள்கைகளிலேயே தங்கியுள்ளது. எனினும், இவர் ஜனாதிபதியாக மாட்டார் என்பது உண்மையே. அவ்வாறாயின் ஏன் இவருக்குப் பின்னால் சிறுபான்மையினர் செல்ல வேண்டும்?  

ஆரம்பத்தில் கூறியதுபோல் இவர் ஜெயிப்பதற்காக இக்களத்திற் குதிக்கவில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குள்ள பலத்தை எடைபோடுவதற்கான ஒரு வெள்ளோட்டமே அவரின் முயற்சி. அதேபோன்று சிறுபான்மை மக்களும் தமது இலக்குகளையும் இலட்சியங்க​ளையும் ஜனாதிபதித் தேர்தலுடன் மட்டுப்படுத்தாமல் அதற்கப்பாலே சென்று வகுக்க வேண்டும். திஸநாயக்காவின் கரங்களைப் பலப்படுத்துவதால் இந்நாட்டின் எதிர்கால அரசியலின் ஜனநாயகப் போக்கினையும் அனைத்து மக்களின் அமைதியான வாழ்வையும் மேம்பாட்டையும் உங்களால் நிர்ணயிக்க முடியும். எப்படி?

சிறுபான்மை இனங்களிரண்டும் தனித்தனியாகவோ இணைந்தோ பெரும்பான்மை இனத்தவரின் ஆதரவில்லாமல் எந்த உரிமையையோ சலுகையையோ வென்றெடுக்க முடியாது. இதை முக்கியமாக தமிழினம் உணரவேண்டும். முஸ்லிம்களும் தமிழினத்தைப் பணயம் வைத்து இரண்டு தேசியக் கட்சிகளுடனும் அரசியல் பேரம்பேசிச்சலுகைகளைப் பெற்ற காலம் முடிந்துவிட்டதென்பதை உணரவேண்டும். பௌத்த ஆதிக்கவாதத்தின் பிடிக்குட் சிக்கியிருக்கும் இக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு இனிமேலும் பரிவுகாட்டா. உங்களின் வாக்குகளைப் பெற்றபின் உங்களின் சில தலைவர்களுக்குமந்திரிப் பதவிகளை வழங்குவதோடு அவர்களின் கடமை தீர்ந்துவிடும். ஆகவே பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து ஒரு பலமுள்ள குரல் சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய மக்கள் குரலாக ஒலிக்க வேண்டும்.தற்போதைய சூழலில் அந்தக் குரலே திஸநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி” என.  நாமும் மாற்றுத் தெரிவொன்றுக்காகச் சிந்திக்க வேண்டும்.  

அது எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையைத் திறக்கும். 

கருணாகரன்

Comments