ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் வேடிக்கையான கோரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் வேடிக்கையான கோரிக்கை

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள், தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வேட்பாளர் என தன்னைத் தானே பிரகடனப்படுத்திக்கொண்டும் பகிரங்க மேடைகளிலும் அதனைப் பிரசாரம் செய்துகொண்டும் மக்களுக்கு விளக்கம் அளித்துவரும் ஒட்டகச் சின்ன  தேர்தல் வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் கோரிக்கை வேடிக்கையானதாகத் தெரிகிறது.  

ஆனாலும், தான் எப்படி ஒரு ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஆக வரமுடியும் என்பதற்கு அவர் கூறும் விளக்கம் என்னவெனில்

வருகின்ற தேர்தலில் முத்தரப்பு போட்டி காணப்படுவதனால் யாரும் 50 வீதத்தினை கடந்த வாக்கினைப் பெறப்போவதில்லை. இதனால் இரண்டாம் சுற்று விருப்பு வாக்கை கணிப்பிடும் தேவை நிச்சயம் ஏற்படும். அதில் தனக்கு அளிக்கப்படும் விருப்பு வாக்கினை இலக்க அடிப்படையில் இடும்போது 1ஆம் இலக்கத்தை தனக்கிட்டு இரண்டாம் விருப்பு வாக்கான 2 ஆம் இலக்கத்தை தான் தீர்மானிக்கின்ற வேட்பாளரின் பெயருக்கு நேரே இடுகின்றபோது அது அவரினது வெற்றிக்கு உறுதுணையாகும் என்பது அவரது கணிப்பாகவுள்ளது.  

இதன்படி, தனது விருப்பு வாக்கு 1 உடன் இடப்பட்டுள்ள வெற்றி வேட்பாளருக்குரிய 2ஆம் தெரிவுகளை அவருக்கு அளித்து அவரது வெற்றியை தன்னால் உறுதி செய்ய முடியும் என்பதால், தானே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வேட்பாளர் என்று ஹிஸ்புல்லா தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார். இதற்காக தனக்கு இரண்டு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் எமது மக்களிடமிருந்து தேவைப்படுவதாகக் கேட்டு தனது பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்தார். 

இதில், பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகிய இருவரில் யாருக்கு தனது இரண்டாம் விருப்பு வாக்கினை வழங்க வேண்டும் என்பதை தனது தேர்தல் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தன்னோடு உடன்படிக்கை செய்கின்ற வேட்பாளரை பொறுத்து, முடிவு செய்து மக்களுக்கு விரைவில் அறிவிப்பதாக அவர் பேசிக்கொண்டு வந்தார். 

இந்நிலையில், திடீரென ஹிஸ்புல்லா சார்பான சிலர் ஊடக சந்திப்பு ஒன்றினை வைத்து, ஹிஸ்புல்லாவுக்கு வாக்களிப்பவர்களது இரண்டாம் விருப்பத் தெரிவினை மக்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்கள். காரணம் ஹிஸ்புல்லாவினால் விடுக்கப்பட்ட தேர்தல் கோரிக்கைகள் தொடர்பான உடன்படிக்கையை மேற்படி பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலாகும். அதாவது ஹிஸ்புல்லாவை இரு வேட்பாளர்களும் தேவை இல்லை என்று ஒதுக்கிவிட்டார்கள்.  

ஆக, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற ஹிஸ்புல்லாவின் கதை இதன் மூலம் பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது அல்லது ஏமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பிரதான வேட்பாளர்கள் இருவரும் அவரையும் அவரது கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளதால் மக்களிடம் நீங்கள் விரும்புகின்ற ஒருவருக்கு உங்கள் இரண்டாம் விருப்பத் தெரிவினை அளியுங்கள் என அறிவித்திருக்கிறார்கள் என்றால், யாருடைய வெற்றிக்கும் ஹிஸ்புல்லா காரணமாக இருக்கப் போவதில்லை. என்பது அவர்களாலேயே முடிவாக்கப்பட்டுவிட்டது என்பது தெளிவாகிறது.  

எனவே, ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தல் கேட்டதன் நோக்கம் அவரது எடுகோளின்படி இவ்விடத்தில் பிழைத்துவிட்டது. தற்போது அவர் ஒரு டம்மி வேட்பாளர்தான் அவருக்கு அளிக்கும் வாக்குகளால் எந்த பயனும் இல்லை. அவர் சார்பானவர்களின் அறிவிப்பின்படி இரண்டாம் தெரிவினை மக்கள் விரும்புகின்ற ஒருவருக்கு அளித்தல் என்பது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஒரு வீண் வேலையாகும். நேரடியாக மூக்கைத் தொடும்படி மக்கள் தங்கள் வாக்குகளை ஒரே தெரிவாக பிரதான வேட்பாளர்களுக்கே அளித்து தங்கள் வாக்கினை பயனுள்ளதாக ஆக்கிவிடலாம். இடையில்  தரகர் எதற்கு?  

இந்த கேள்விக்குப் பின்னால் உள்ள விடயங்களையும் ஆராய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. அதாவது இப்படிச் சாத்தியமில்லாத ஒரு விடயத்திற்குப் பின்னால் ஹிஸ்புல்லா ஏன் வந்தார்? இதில் ஒரு கோமாளியாக ஏன் அவர் தன்னைக் காட்டிக்கொண்டார்? என்று நோக்கும் போது பலராலும் பேசிக்கொள்ளப்பட்ட விடயம் அவர் கோத்தாவின் ஏஜன்ட் என்பதாகும். சில மேடைகளில் தன்னை கோத்தாவின் ஏஜன்ட் என்கிறார்கள் என்று அவரே இதற்கான பதில்களையும் அளித்தும் வந்திருக்கிறார். 

அதாவது, முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் கோட்டாபாய மீது சமூக வெறுப்புக்கொண்டிருப்பதனால் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்ற கணிப்பு வெளிப்படையான ஒரு பொது முடிவாக இருக்கிறது. இதனால் தனக்கில்லாத வாக்கு சஜித் பிரேமதாசவுக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு அதனை அளிக்கச் செய்யும் ஒரு மாற்றுத் தந்திரத்தில்தான் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபாய தரப்பால் ஹிஸ்புல்லா ஒரு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்றார் என்ற விமர்சனப் பார்வை இதற்குள் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது.  

இதை வைத்தே, ஆரம்பத்திலிருந்து ஹிஸ்புல்லா தனது இரண்டாம் தெரிவு யாருக்கு என்று கூறாமல் ஒரு வெள்ளோட்டமாக மக்கள் நிலையை அறிய பல இடங்களிலும் தனது நிலைப்பாட்டினை எடுத்துரைத்து வந்தார். அதற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை வைத்து அந்த இரண்டாம் தெரிவு யாருக்கு என்று கோத்தாவை அறிவித்துவிடலாம் என்ற கணிப்பில் இந்தக் கதை தொடர்ந்தது.  

ஆனால் மக்களிடத்தில் அவருக்கு கிடைத்த எதிர்ப்பும் தேவையற்ற வேலை என்ற விமர்சனமும் இறுதியில் அவரால் தனது உள்ளார்ந்த வேட்பாளரான கோட்டாவுக்கான இரண்டாம் விருப்பத் தெரிவினை மக்களிடத்தில் வெளிப்படையாகச் சொல்ல முடியாமலே போய்விட்டது. அதனால், இறுதியாக நீங்கள் விரும்புகின்றவர்களுக்கு அளியுங்கள் என்று தனது வேட்பாளர் கதையை முடித்திருக்கிறார் ஹிஸ்புல்லா. 

இதில் இன்னுமோர் விடயம், இது சாத்தியமில்லை என்பதை அறிந்து ஹிஸ்புல்லா இதிலிருந்து ஒதுங்க எண்ணி ஒரு வெளிநாட்டுப் பயணமும் போயிருந்தார். ஆனால் அந்த இடைவெளியில் அவருடைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பஷீர் சேகுதாவுத் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் கட்டிய நிகழ்வு நடைபெறுகிறது. இது அவரால் தானாகச் செய்யப்பட்டதா? அல்லது வேறு யார்மூலமோ செய்விக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. 

இங்கு ஹிஸ்புல்லா, நேரடியாகவே கோட்டாவை ஆதரித்து தனது தேர்தல் பிரசாரங்களை செய்வதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மைத்திரியோடு நின்றபோதும் அவர் மஹிந்தவை ஆதரித்து தேர்தல் களத்தில் பகிரங்கமான அரசியல் செய்தவர். அதுபோன்று இந்த தேர்தலிலும் அவர் நேரடியாக கோட்டாவை ஆதரித்து தனது வழக்கமான அரசியலை செய்திருக்கலாம். அவர் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதைக்கு வந்திருக்கவே தேவை இல்லை என்பது மிக வெளிப்படையான ஒரு விடயம்.  

இருந்தும் இந்த கட்டாயத்திற்கு அவர் ஏன் தள்ளப்படுகிறார் என்றால், பலரும் கூறுவது போன்று முஸ்லிம் வாக்குகளை சஜித்துக்கு செல்லவிடக்கூடாது என்பதற்கான கோட்டா தரப்பினரின் ஏற்பாட்டுக்கு இவர் ஆளாகியதுதான் காரணம். மாறாக இரண்டாம் விருப்பு வாக்கின் மூலம் ஒருவரை வெற்றி பெறச் செய்தல் என்பதெல்லாம் இதனை நியாயப்படுத்த எடுத்த கதையே தவிர அது சாத்தியமான ஒன்றல்ல. 

ஏனெனில், ஹிஸ்புல்லா கூறுவது போன்று நடைபெற வேண்டுமானால் ஒரு வேட்பாளர் 50 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளை பெறவேண்டும். அப்போதுதான் இரண்டாம் தெரிவுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படும். யாரோ ஒரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேலாக எடுத்துவிட்டால் இவருடைய எந்தக் கதையும் அதன் பிறகு முட்டாள்தனமான எதிர்பார்ப்பாகவே ஆகிவிடும். 

எனவே இங்கு ஹிஸ்புல்லாவின் முழு நோக்கமும் முஸ்லிம் வாக்குகளை தனக்கு இட வைப்பதுதான் இரண்டாம் தெரிவு இதில் ஒரு ஏமாற்றுக் கதைதான்.  

வழக்கமாக நேரடியாகச் செய்கின்ற தேர்தல் அரசியலை இம்முறை ஹிஸ்புல்லா விலகியிருந்து செய்வதாக சமூகத்திற்கு காட்டி, அதைச் சமூகத்திற்கு நம்ப வைக்க, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான பேரம் பேசும் சக்தியாக தான் மாறப்போவதாகக் பிரசாரமெல்லாம் செய்து வெளியில் தன்னை ஒரு சமூகப் பற்றாளனாகக் காட்ட முனைந்தாலும் இறுதியில் ஹிஸ்புல்லாவின் சாயம் வெளுத்தே போனது.

இதன்மூலம் அவர் மீது சமூகம் வைத்திருந்த அரசியல் மதிப்பினை அவர் இழந்துள்ளார்.

நவாஸ் சௌபி

Comments