மொழிபெயர்ப்பும் 'முழி 'பெயர்ப்பும்! | தினகரன் வாரமஞ்சரி

மொழிபெயர்ப்பும் 'முழி 'பெயர்ப்பும்!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளில் படு மோசமான தமிழ்ப் பிழைகள். வாக்காளரின் பெயர்கள் மட்டுமன்றி, வாக்களிக்கும் நிலையங்கள்கூடச் சிங்களத்திலும் தமிழிலும் குளறுபடியாக உள்ளதாகச் சொல்கிறார்கள். 

இலங்கை அரசியலமைப்பின்படி, எந்த ஆவணத்திலும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ மாறுபாடு அல்லது வேறுபாடு காணப்பட்டால், சிங்களத்தில் உள்ளதையே முடிந்த முடிவாகக் கொள்ள வேண்டும். அந்த வகையில், வாக்காளர் அட்டைகளிலும் சரி, வாக்காளர் பட்டியலிலும்சரி எல்லா விடயங்களும் சிங்கள மொழியில் மிகச் சரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  

வாக்காளர் பட்டியலை நண்பர் இணையத்தில் தேடிப்பார்த்திருக்கிறார். சிங்களத்தில் அவரது பெயரும் குடும்பத்தவர்கள் பெயரும் மிகச் சரியாக உள்ளதாம். ஆனால், தமிழ் மொழியில் பெயர் கொலை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். கணபதியைக் கனபதி என்றும் ஸ்டானிஸ்லாஸை ஸ்டென்லி என்றும் தட்டச்சு செய்திருக்கிறார்களாம். சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழை இரண்டாம் மொழியாகக் கற்றுக்ெகாண்டுள்ள சிங்கள உத்தியோகத்தர்கள் என்றாலும், அவர்கள் தமிழ்ப் பெயர்களைச் சரியாக எழுதுவார்கள். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும்,  

அரைகுறையாகத் தமிழைக் கையாள்பவர்கள், இன்று மொழிபெயர்ப்புத் துறையில் இருந்துகொண்டு, 'முழி' (விழி) பிதுங்கச் செய்கிறார்கள். அவர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கு அப்பாவி சிங்கள அதிகாரிகளை மக்கள் வைகிறார்கள் என்கிறார் நண்பர். அவர்கள்தான் தமிழைத் தமிழாக அல்லாமல், 'தமிலாக'க் கொடுக்கிறார்கள். இன்று மொழி பெயர்ப்புத் துறையும் பணம் உழைக்கும் வியாபாரமாகிப்போயிருக்கிறது. கண்டவர்கள், நின்றவர்கள் எல்லோரும் மொழிபெயர்ப்பாளர்கள். அவர்களுக்குப் பொறுப்புகளை ஒப்படைக்கும் அப்பாவி சிங்கள அதிகாரிகள், வஞ்சகமில்லாமல்தான் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால், எதுவும் தெரியாது என்பது அந்தப் பெயர்ப்பாளரின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும். அதாவது மூன்றாவது மனிதனுக்குத்தான் அது வெளிச்சம். மீண்டும் சொல்வதாக இருந்தால், அநேகமானவர்கள் முழி பெயர்ப்பாளர்கள்தான். அவர்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால், எதுவும் தெரியாது! 

உடைந்த ஆங்கிலத்திலாவது ஓரிரு சொற்களைச் சொன்னதும், இவரை மாமேதை என்று நம்பிவிடும் அப்பாவிச் சிங்களவர்கள்தான் இன்னமும் அதிகார மட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் அப்பாவித்தனத்தைக் ெகாண்டுதான் இவர்கள் அவித்துக் ெகாண்டிருக்கிறார்கள். ஒழுங்காகத் தமிழை எழுதவும் பேசவும் தெரிந்த ஒருவரால்தான் மொழிபெயர்ப்பையும் சரியாகச் செய்ய முடியும். 

மொழிபெயர்ப்புக் கலைக்கு நீண்ட நெடிய மரபுடைய வரலாறு உண்டு. ஒவ்வொரு துறையின் இயல்புக்கேற்பவும் மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது மிக மேன்மையான ஒன்று. தனித்தனித் துறையின் இயல்பிற்கேற்ப மொழிபெயர்த்தல் தவிர்க்க இயலாதது. ஆகவே, எல்லா நிலையிலும் ஒரே அளவுகோலினைப் பயன்படுத்துதல் பொருந்தாது. மொழிபெயர்ப்பு உத்திகள் வேறுபடுவதைப் போலவே, மொழிபெயர்ப்பைப் பற்றிய மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட நோக்கங்களும் கூட வேறுபடுகின்றன. முரண்பாடு தவிர்த்தல், எளிமை, தெளிவு, விளக்கங்கள், தன்வயமாக்கல், மூலநூல் ஆசிரியர், மொழி மற்றும் மூலநூல் அறிமுகம் என்ற சில அடிப்படைகளில் இவை அமையும்.  

மூலநூலின் கருத்துகளை மற்றொரு மொழிக்கு மாற்றுதல் என்ற நிலையில், மூலநூலின் கருத்துகளில் சிறிதும் மாறுபாடு ஏற்படாது இருத்தல் மிக அவசியமாகும். அவற்றுள் முரண்பாடு தோன்றின் மொழிபெயர்ப்பின் நோக்கத்தில் தடை ஏற்படும். எனவேதான் மொழிபெயர்ப்பாளர் மூலநூலினை நன்கு புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பில் இறங்க வேண்டும்.  

''மொழிபெயர்ப்பென்பது எளிதான வேலையல்ல. மூலபாடம் எழுதவல்ல ஆற்றலுடையவர்களே மொழிபெயர்ப்பில் இறங்க முடியும். மூலபாடம் எழுதுபவர்களாயின் ஒரு மொழிப்பயிற்சி போதுமானது. மொழி பெயர்ப்பாளருக்கோ இருமொழிகளிலும் தேர்ந்த கல்வி அறிவு இருக்க வேண்டுவது இன்றியமையாதது.  

சொல்லுக்குச் சொல் பெயர்த்தடுக்குவது மொழிபெயர்ப்பாகாது. பெயர்க்கப்பட வேண்டியது பொருளே. அங்ஙனம் பெயர்க்கும்போது அந்தந்த நாட்டு வழக்குகளையும் மரபுகளையும் கூட நன்கு தெரிந்திருத்தல் இன்றியமையாதது. 

முரண்பாடுகள் இருப்பின் அவை தவறான கருத்துகளை மாற்று மொழியினருக்கு அறிமுகப்படுத்துவதோடு மொழிபெயர்ப்பு எனும் நிலை மாறி அது தழுவலாகி விடும்'' என்று மு.கோவிந்தராசன் மொழித் திறன்களும் சில சிக்கல்களும் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். 

‘மூலத்திலுள்ள சொல்லும் எழுத்தும் மொழி பெயர்ப்பாளருடைய சுதந்திரத்தைப் பாதிக்கும் விலங்காக அமைந்துவிடக் கூடாது. சில சொற்களை மொழிபெயர்க்காமல் விட்டு விட்டால் அதனால் மொழிபெயர்ப்பு ஒன்றும் கெட்டுப் போய் விடாது. இடப்பெயர்களையும் பிறமொழிப் பெயர்களையும் தமிழாக்கம் செய்யாமல் தவிர்த்துக் ெகாள்வது சிறந்தது என்கிறார்கள் அறிஞர்கள். 

சொல்லுக்குச் சொல் நேரடி மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்பது முக்கியமானது. அண்மையில் அடிக்கடி செய்திகளில் பயன்படுத்தப்பட்ட 'Money Laundering' என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சிலர் "பணச்சலவை" என்று நேரடி மொழிபெயர்ப்பு செய்த அறியாத்தனம், தமிழ் ஊடகப் பரப்பிற்கே ஓர் அவமானம் என்றே சொல்ல வேண்டும். மணி என்பது பணம், லோண்டரிங் என்பது சலவை! இதை எந்தவிதமான வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் அந்தச் சொல்லால் குறிப்பிடும் பொருளையே மொழிபெயர்க்க வேண்டும். "சட்ட விரோத பணப்பரிமாற்றம்" என்பதுதான் அதன் பொருள். 

அதேநேரம், 'Warm Welcome' என்பதை சூடான வரவேற்பு என்று ஒரு தொலைக்காட்சியில் பயன்படுத்தினார்கள். அது சரியென்றால், உற்சாக வரவேற்பு என்று வரவேண்டும் அல்லவா!

அண்மையில் 'நரிபேனா' என்றொரு சிங்கள நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் உடுவை தில்லை நடராஜா. 'நரி பேனா' என்றால், தமிழில் நரி மருமகன். ஆனால், அதனை 'நரி மாப்பிள்ளை' என்று மிக அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் தில்லை. இப்படி, மாக்சிம் கோர்க்கியின் கதைகளை மொழிபெயர்த்தவர்களும் அழகுறத் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

ஆகவே, மொழி தெரிந்த எல்லோருக்கும் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. அது ஒரு கலை! 

எனவே, உப்பரிம, தாவக்காலிக்க, சத்தைக்கு, மட்ட தன்னே நே என்று மொழியைக் கையாள்பவர்களைக் ெகாண்டு நாம் சரியான தமிழாக்கத்தை எதிர்பார்க்க முடியாது. 'தமில்' தெரிந்தோரை 'முழி'பெயர்ப்பாளர்களாக வைத்துக்கொண்டு நாம் சிங்களவர்களைக் குறை சொல்லக்கூடாது!  

Comments