விளக்கு | தினகரன் வாரமஞ்சரி

விளக்கு

விளக்கு வைக்கும் நேரம், மேகம் இழையாத மேற்கு வானத்தின் சரிவில் தங்கக் கம்பியின் பாதி வளையம் போல இளம்பிறை தெரிந்து மறைந்த போது தலைப்பிரசவத்துக்குப் பின் ஏற்படும் ஆசுவாசத்தால் அமைதி கொண்ட இளம்பெண்ணைப் போல் பாவனை காட்டிக் கொண்டு மேற்கு வானம் காட்சியளித்தது. ஆற்றுப்பள்ளியில் பாறை மேல் பிறை காணக்கூடி நின்றவர்களின் தொண்டையிலிருந்து மகிழ்ச்சி நுரைத்துப் பொங்கி வார்த்தைகளாக வழிந்தது.  

‘பெறை கண்டாச்சோ’  

‘ஓ...’  

‘பெறை கண்டாச்சோ’  

‘ஓ...’  

பெரியவர் ஒருவர் குரலை உயர்த்திக் கூறினார். அவரைத் தொடர்ந்து கும்பலாகக் கூடி நின்ற சிறுவர்களின் வெற்றி ஊர்வலம் கிளம்பியது. நோன்புப் பெருநாள் நாளைக்கோ மறுநாளோ என்ற சந்தேகத்தின் பிடியில் கட்டுண்டுக் கிடந்தவர்களின் முகங்களில் சிறையிலிருந்து விடுதலை பெற்ற மகிழ்ச்சி கொடி நாட்டிற்று.  

பிறை கண்ட சேதி தபால் அலுவலகங்களில் தந்திப் பாரங்களில் எழுத்துகளாக உருப்பெற்று ‘கிளிவாயில்’களின் வழியாகத் தந்தி அலுவலரின் கைக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து பக்கத்து ஊர்களுக்குக் கம்பியில் சிதறிப் பறந்தது.  

விடிந்தால் பெருநாள் என்ற உண்மை தையற்காரர்களைத் திக்குமுக்காட வைத்தது. தைக்காத துணிகளைப் பார்த்து அவர்கள் மலைத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் நிம்மதியில்லாமல் தையற்காரர்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். தையற்காரர்களின் கால்கள் தையல் இயந்திரங்களை அதிவேகமாக மிதித்தன. வேகமாகச் சுற்றிய சக்கரத்துக்கு ஈடுகொடுத்து ஊசி ஏறி இறங்கியவாறு இருந்தது. தைத்த துணிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.  

குளத்துப் பள்ளியின் தென்பக்கத்தின் இடைவெளி வழியாகப் பெரியவரும் சிறுவர்களும் பிறை கண்ட செய்தியை உரக்கக் கூவிக் கொண்டு போகிறார்கள். வழிநெடுகிலும் கூடியிருந்த சிறுவர்கள் அந்த ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டார்கள். சத்தம் முன்னைவிட அதிகமாயிற்று.  

அந்தப் பிஞ்சு முகங்களில் அலையடித்துக் கிளம்பிய மகிழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு பெருமாளின் ‘சாயாக்கடை’யின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த அவன் கடந்து வந்த காலங்களைக் குறித்து நினைத்துப் பார்த்தான்.  

நாளை பெருநாளென்று கேட்கும்போது, பிறை பார்க்கும் முன்னிருந்த உற்சாகம் இப்போதெங்கே? வெளியில் ஆறித் தணிந்ததும் சிறுவர்கள் கூட்டமாக ‘யானைப்பாறை’யில் ஏறி நின்று கொண்டு இமைக்காமல் வானத்தின் மேற்குச் சரிவைப் பார்த்து நின்று காலம் எங்கே? ஒரு சிறு மேகக் கீற்றுவந்து நிர்மலமான வானவெளியில் களங்கம் சேர்த்த போது கிளம்பிய எதிர்ப்புக் குரல்கள்? எங்காவது ஒரு மூலையில் ஒரு சிறு ஒளிக்கீற்றுத் தெரிந்தாலும் போதும் பாறை மேலிருந்து குதித்தோட்டம்!  

‘பெறை கண்டாச்சோ, பெறை கண்டாச்சோ!’  

கூவியழைப்பேன். துள்ளிக் குதித்துப் புழுதி கிளப்புவேன். அந்தக் காலம் பறந்தோடி வருடங்கள் பலவாயிற்று.  

இன்றோ...?  

உற்சாகம் என்ற உணர்வே மனத்தில் மூச்சற்றுக் கிடக்கிறது. பிள்ளைப் பருவத்திற்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறேன். சிறுபிராந்தியத்திலிருந்து இளமையை அடைய ஒருநாள் ஆசைப்பட்டேன். கைகூடிய அந்த ஆசை பாழாய்க் கொண்டிருக்கிற வேதனையில் நைந்து போகிற இதயம்.  

கண்ணெதிரில் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறவர்கள். முன்னமே ‘ஆர்டர்’ கொடுத்த சாயாவைச் சிவம்பிள்ளை அவனருகில் கொண்டு வந்து வைத்தார். ஆவி கக்குகிற சாயா. கையிலெடுத்து உதட்டுக்குக் கொண்டுபோனபோது கை சுட்டது. வராந்தாவிலேயே வைத்துவிட்டான்.  

‘சேமதின்’ நடையில் முன்னரில்லாத துரிதம்.  

‘வேகமா எங்கே போற?’  

‘நாளைக்குப் பெருநாளில்லையா? அதுக்குச் சாமான் வாங்கப் போறேன்’ அவனுக்கு நின்று பேச நேரமில்லை.   அவனுக்கு மூன்று குழந்தைகள். மூத்துக்கு வயது நாலாகிறது. உம்மா ஒருமுறை சொன்னதின் நினைவு மனத்தில் குதித்தெழுந்தது. உன்னைப் பெற்ற அன்றுதான் கதீஜா சேமதையும் ‘வீயாத்துமா’ பீர்முஹம்மதையும் பெற்றார்கள்.  

பீர்முஹம்மதுக்கு இப்போ இரண்டோ மூன்றோ? அவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.  

எனக்கோ?  

வாழ்க்கையில் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணையில்லை. கொஞ்சுவதற்கு எனக்கென்று பிஞ்சு முகமில்லை. வருடங்கள் போன்று நீண்ட நிமிடங்கள் என்னெதிரில் அதில் மௌனமான வேதனையின் நெருப்பைத் தின்று அந்த நிமிடங்களைக் கழிக்கின்ற நான்! சிரிப்பு இன்று ஒரு மறந்து போன விஷயம். சிரிப்பை மறந்து நாட்கள் வருடங்களாக நீண்டுவிட்டன. வேதனை மட்டும் நினைவாக நின்று எரிகின்றது. 

நெருக்கடி நிறைந்த நகரத்தின் தெருவினூடே கைகோர்த்துச் செல்லும் தம்பதிகள். கடற்கரையில் சீனி மணலில் கடலையைக் கொறித்துக் கொஞ்சிக் குலாவும் இளம் ஜோடிகள். தாகித இதயத்தின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்ற காட்சிகள். நான் தனித்தவன் என்ற துயர எண்ணங்கள்.  

தூக்கத்தைக் கண்ணிலிருந்து கிள்ளியெடுத்துக் கொண்டு மனத்தில் சஞ்சலமூட்டும் மாலை நேரக் காட்சிகள் போதும். நகரத்தின் பரபரப்பில் ஒரு புழுவைப் போல் நைந்து போன வாழ்க்கை போதும். பைத்தியத்தின் பயங்கர பிடியில் மாட்டிக் கொள்வோமோ என்ற எண்ணம் ஓர் இரவு எரி நட்சத்திரம் போல் மனத்தில் பளிச்சிட்டது. ரயிலேறத் தீர்மானித்தேன்.  

தாமதிக்கவில்லை. ரயிலேறிவிட்டேன்.  

ரயிலில் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்த ஒரு பெட்டியில் ஓர் இரவும் ஒரு பகலும் நின்று கொண்டே பயணம் செய்தேன். சொந்த ஊரின் அமைதியான சூழ்நிலையில் தூய காற்றைச் சுவாசிக்கப் போகிறேன் என்ற நினைவில் களைப்பை மறந்து விட்டேன். ரயில் நிலையத்திலிருந்து இருபது மைல் தொலைவிலிருக்கிறது ஊர். பஸ்ஸில் தொங்கி ஏறிக் கொண்டேன். நாலு பேருக்குள்ள ‘ஸீட்’டில் ஐந்து பேராக நெருங்கி உட்கார்ந்து கொண்டோம்.  

‘இப்பதான் வாறியா?’ பின்னாலிருந்து ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன். ஜைனுலாபினுடைய வாப்பா.  

‘ஓ...’  

‘சுகமா?’  

ஒரு நிமிடம் சிந்தித்தேன் பதில் சொல்ல. ஆமாம் என்று சொன்னால் பொய்யாகிவிடுமோ? இருந்தாலும் வழமையை அனுசரித்துச் சொன்னேன்’, ‘ஓ’  

‘இந்த ஷவ்வால்லெ’ கல்யாணம் நடக்குமா?’  

மனத்துள் விம்மல். சொல்ல பதிலில்லை. வராத சிரிப்பை இழுத்துப் பிடித்து உதட்டில் புரட்டிக் காண்பித்தேன். மனத்துள் ஒரு வினா எழுந்தது.  

எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் தனித்தவன்.  

அருகிலிருந்த சாயா ஆறியது. ஒரே மடக்கில் எடுத்துக் குடித்து விட்டான். பாக்கெட்டில் பீடி தேடினான். ஒரு பீடி கிடந்தது. அதைப் பற்றிப் புகைவிட்டுக் கொண்டே நடந்தான்.  

வீடுகளெல்லாம் ஒளியில் மூழ்கிக் கொண்டிருந்தன. ஆஸ்பத்திரி சந்திக்கு வந்தான். பஸ் நிலையத்தில் இளைஞர் இயக்க அலுவலகத்தில் ஒலிபெருக்கி கட்டியிருந்தது. அதிலிருந்து நல்ல பாட்டுகள் ஒலித்துக் கொண்டிருந்தன.  

அந்தப் பாட்டில் லயித்துத் துக்கத்தை மறக்க முயன்றான். முடியவில்லை. துயர் நிறைந்த எண்ணங்களால் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தெருவோரத்தில் வெகுநாள்களாக நீர் வராத பஞ்சாயத்துப் போர்டு குழாயருகில் சாய்ந்து நின்றான்.  

அப்துல் ஸலாம் குழந்தையொன்றைத் தூக்கிக் கொண்டு அங்கு வந்தான்.  

‘ஏன் இஞ்ச தனியா நிக்கியா?’  

‘சும்மா’  

‘நாளைக்குப் பெருநாளில்லியா?’  

‘உம்...’  

‘பப்பப்ப’ – குழந்தை கைகொட்டிச் சிரித்தது.  

அந்தத் தளிர் முகத்தைக் கண்டபோது இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஓர் ஏக்கப் பெருமூச்சுக் குமிழியிட்டு வெளிவந்தது. நான் ஒரு மலட்டுத் தென்னை.  

‘குழந்தை யாருக்கது?’  

‘தெரியாதா? கண் தெரியாத ஹனீபாவுக்கது!’  

இரண்டு கண்ணும் தெரியாத ஹனீபாவும் மணமானவன். அவனுக்குகாகவும் இந்த ‘துனியா’வில் ஒரு பெண் பிறந்திருக்கிறாள். இரண்டு கண்ணும் நன்றாகத் தெரிகிற எனக்கோ?  

திருமணம் சுவனத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அது சுவனத்தில் இன்னும் நிச்சயிக்கப்படவில்லையா?  

அந்தகனான கணவனின் கண்கள் அவன் மனைவி. முடவனின் கால்கள் அவன் இல்லாள். எல்லா அவயவங்களும் உள்ளவனுக்கோ அவன் வாழ்வின் சரிபாதி அவள். துன்பத்தை இன்பமயமாக்குபவள் அவள்.  

ஆனால், ஒரு பெரிய பளுவைத் தூக்கிக் கொண்டு கற்களும் முட்களும் நிறைந்த காட்டு வழியான இந்த வாழ்வில் நான் தனியனாக நடந்து செல்கிறேன். இல்லை ஊர்ந்து செல்கிறேன். பாம்பைப் போல அரணையைப் போல். அட்டையைப் போல துணையில்லாமல்.  

இதயத்தின் மலர்கள் கட்டவிழ்ந்தன. பின்னர்க் கரிந்தன. மீண்டும் மலர்ந்தன. மீண்டும் கரிந்தன. கொடியும் வாடிக் கரிந்தது. இனித் தளிர்க்குமா?  

கனவுகளென்றாலே சொல்ல முடியாத கசப்பு. இனித்தன முன்னர்க்கனவுகள். இன்றோ? ‘கனவுகளே என் நித்திரையில் வந்து என்னைத் தாலாட்டாதீர்கள். தாலாட்டி என்னைப் பரிகாசம் செய்யாதீர்கள்’ என்று வேண்டுகிறேன். இரவில் என்னுடன் கொஞ்சிய கனவுகள் காலையில் என்னுடைய கண்ணீர் திவலைகளை வடியச் செய்கின்றன. ஏமாற்றுகின்றன. வஞ்சிக்கின்றன.  

இனி அழ என்னிடம் கண்ணீர் இல்லை. அதன் ஊற்றுகள் அடைபட்டுவிட்டன.   இந்த இரவில் முடிவு நாளை வரும் பெருநாளின் துவக்கம். பெருநாளின் இன்ப நினைவுகள் துயில் கொள்ளாக் கண்கள். பூரண திருப்தியில் ஆழ்ந்த நித்திரை கொள்ளும் கண்கள். கும்மாளமிடும் சிரிப்பொலிகள். உற்சாகக் கொந்தளிப்பு. பட்டாசிகள் படபடப்பு. பூ உதிர்கின்ற மத்தாப்புகள்.  

ஆனால்...  

நான் மட்டும் அழுகிறேன்.  

பிரியம் வைக்கவோ பிரியம் வைக்கப்படவோ யாருமில்லை. துக்கம் என்றேர் உணர்ச்சியை மனித மனத்தில் இறைவன் ஏன் உருவாக்கினான்? இந்த வாழ்வின் முடிவு வரை துயரத்தின் அழுக்கு மூட்டையைத் தூக்கித் திரியவா விதித்திருக்கிறான்? சிரிப்பு எனக்கு விலக்கப்பட்ட ஒன்றா?  

உலக முஸ்லிம்களின் மனத்தில் தேங்கிக் கிடந்த துயரங்களை இந்த இரவும் நாளைய பகலும் துடைத்தெடுக்கின்றன. துடைத்தெடுத்த துக்கங்களை என் இதயத்தில் பிழிந்துவிட்டன. என்னிதயம் துக்கத்தின் கழிவுநீரைத் தாங்கி நிற்கும் சாக்கடை.  

அவனிதயம் மௌனமாக விம்மியது.  

ஆஸ்பத்திரி கட்டடத்தின் இரண்டாவது நிலையில் தூங்கி வழிந்த விளக்கு ஒளி அவன் நிழலை நீளமாக்கியது. நகத்தைக் கடித்துத் துப்பினான்.  

‘சுற்றிலும் கடல் நடுவில் ஒரு சிறுதீவு. மனித வாடையற்ற அந்தத் தீவில் நான் தனித்து விட்டேன்.’  

தூரத்தில் சிறுவர்களின் இன்னும் ஓயாத கூப்பாடு.  

‘பெறை கண்டாச்சோ...’  

சிறுவர்களின் அந்த ஆனந்தக் கூப்பாட்டைக் காற்று தன் மெல்லிய கைகளில் ஏந்தி வந்தது.  

பாக்கியம் பெற்ற சிறுவர்கள்!  

‘சிறுவர்களே, இளமையைக் காண நீங்கள் துடிக்கிறீர்கள். நானோ என்னுடைய இளமையின் எண்ணெய் இல்லாது எரியும் விளக்கைப் பார்த்துத் துயருறுகிறேன்.’  

‘மம்மாலிசம் பிள்ளை’ புறங்கை கட்டிக்கொண்டு சிந்தனையில் மூழ்கியவாறே வருகிறார். அந்த முகத்திலும் துக்கம் கூடுகட்டியிருந்தது. அவனருகில் வந்ததும் குழாயடியில் குந்தி உட்கார்ந்தார். அங்குக் கிடந்த குச்சியொன்றை எடுத்து தரையில் கிறுக்கினார்.  

அவர் சிந்தையும் சுட்டுப் பழுக்கிறது.  

‘தரையில் என்ன வரையியோ?’  

‘கல்பு’க்க வேதனையை ஆரூட்ட செல்ல, மண்ணுட்ட செல்லுயேன்.’  

‘என்ன சங்கதி?’  

‘பெண்ணைப் பெத்தவங்களுக்கு வேதனைக் காரணம் வேறே செல்லணுமா?’  (நன்றி : வேர்களின் பேச்சு)    

தோப்பில் முஹம்மது மீரான்

Comments