முஸ்லிமல்லாதோருடன் நபிகளாரின் உறவு | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிமல்லாதோருடன் நபிகளாரின் உறவு

முஸ்லிம் என்றால் ஒரு வித்தியாசமான பார்வை, கருத்து முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது, 'முஸ்லிம்கள் இதர சமூகத்தவர்களுடன் சேர்ந்து வாழாதவர்கள். உறவைப் பேணாதவர்கள். அவர்கள் தனித்து ஒதுங்கி வாழ்பவர்கள். அதனால் அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்றவாறான பார்வையே அது. ஆனால் இப்பார்வைக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வின் வெளிப்பாடு தான் இப்பார்வைக்கான அடிப்படைக் காரணமாகும்.  

அதேநேரம் முஸ்லிம்களில் விரல் விட்டெண்ணக்கூடிய ஒரு சிலரின் செயற்பாடுகளும் இவ்வாறான பார்வை தோற்றம் பெறக் காரணமாக அமைந்திருப்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் முஸ்லிம் என்பவர் அல் குர்ஆனின் கட்டளைகள் மற்றும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாழ வேண்டியவர். வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியவர். இதுவே முஸ்லிமின் அடிப்படை. இந்த உண்மையை உரிய ஒழுங்கில் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளும் போது இவ்வாறான பார்வை ஒரு போதும் ஏற்படாது.  

அதனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏனைய மதத்தினருடன் எவ்வாறு உறவைப் பேணினார்கள் என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாக விளங்கின்றது. ஏனெனில் உலகில் மனித வரலாற்று ஓட்டத்தின் திருப்புமுனைக்கும் மறுமலர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தவர் நபி (ஸல்) அவர்களாவர். சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாகவே இந்த திருப்புமுனைக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டான்.  

சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரில் கி.பி 571 இல் பிறந்து வளர்ந்த நபி (ஸல்) அவர்களை அன்னாரது 40 வது வயதில் இறைத்தூதராக தெரிவு செய்து உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன் இருக்கக்கூடிய இறைவழிகாட்டலான அல் குர்ஆனையும் அதனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியையும் அருளத் தொடங்கினான். அதனை காலம் இடம், சூழலுக்கு ஏற்ப கட்டம் கட்டமாக அருளி 23 வருட காலப்பகுதியில் முழுமையாக செயலுருப்படுத்திக் காட்டி வைத்திருக்கின்றான்.  

மனிதனின் இம்மை மறுமை வாழ்வின் வெற்றியையும் விமோசனத்தையும் இலக்காகவும் அடிப்படையாகவும் கொண்டதாக இவ்வாழ்க்கைநெறி அல்லாஹ்வினால் வகுத்தளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அல்லாஹ் ஒரு பொறுத்தமான சமூகக்கட்டமைப்பை உருவாக்கிவிட்டு ஒரே தடவையில் இவ்வாழ்க்கைநெறியை அருளவில்லை. கட்டம் கட்டமாக அருளி ஈருலக வாழ்வின் வெற்றியையும் விமோசனத்தையும் இலக்காகவும் அடிப்படையாகவும் கொண்ட சமூகத்தை செயற்பாட்டு ரீதியில் உருவாக்கி முன்மாதிரியாக்கினான்.  

அதேநேரம் தான் அல்லாஹ்வின் தூதர் என்பதற்காக தம்மை பின்பற்றுபவர்களுடன் மாத்திரம் தம் தொடர்பாடலையும் உறவையும் நபி (ஸல்) அவர்கள் பேணவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுடனும் அன்னார் பழகக்கூடியவராகவும் உறவைப் பேணக்கூடியவராகவும் இருந்துள்ளார்கள்.  

12 வயதில்  

அந்தவகையில் அன்னார் பிறப்பதற்கு முன்னர் தந்தையையும் பிறந்த குருகிய காலத்தில் தாயையும் இழந்த போதிலும் அன்னாரது சிறிய தந்தையான அபூதாபின் பராமரிப்பில் தான் பெரும்பாலான காலம் அவர் வளர்ந்தார். அவருக்கு 12 வயதாகவிருக்கும் போது ஒரு தடவை அபூதாலிப் அவரை சிரியாவுக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக அழைத்து சென்றார். இக்குழு புஷ்ரா என்ற இடத்தை அடைந்த போது அந்நகரில் வாழ்ந்த பஹீரா என்ற துறவி நேரே வந்து அவர்களைச் சந்தித்தார். ஜர்ஜிஸ் என்ற பெயர் கொண்ட இத்துறவி எங்கும் வெளியே செல்லாத போதிலும் இவ்வியாபாரக்குழுவில் நபி(ஸல்) அவர்கள் இருந்ததால் கூட்டத்திற்கு மத்தியில் நேரே சென்று அவரது கரங்களை பற்றியபடி, ‘இதோ உலகத் தலைவர். இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர். இறைவன் அகில உலகத்தாருக்கான அருட்கொடையாக இவரை அனுப்புவான்' என மகிழ்ச்சி பொங்கக்கூறினார்.  

அப்போது வியாபாரக்கூட்டத்தில் இருந்த அபூதாலிப்பும் குறைஷித் தலைவர்களும் 'அது எப்படி உங்களுக்கு தெரியும்' என வினவ 'நீங்கள் கணவாய் வழியாக வரும் போது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கு சிரம்பணியும். அத்தோடு அவரது புஜத்திற்கு கீழிருக்கும் அப்பிளைப் போன்ற அடையாளம் இறுதித்தூதருக்கான முத்திரையாகும். அதனைக் கொண்டும் நான் அறிவேன். இவை தொடர்பில் எங்களது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது' என்றார். அத்தோடு சிறுவர் நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்டோருக்கு விருந்துபசாரம் அளித்து உபசரித்ததோடு 'சிறுவர் முஹம்மதை ஷாமுக்கு (சிரியா)க்கு அழைத்து செல்லாதீர்கள். அங்குள்ள ரோமர்களாலும் யூதர்களாலும் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் இவரை இங்கிருந்து திருப்பி அனுப்பி விடுங்கள்' என்றார். அதற்கேற்ப அபூதாலிப் சில இளைஞர்களுடன் சிறுவர் முஹம்மத் (ஸல்) அவர்களை மக்காவுக்கு திருப்பியனுப்பினார்.  

(ஆதாரம்; திர்மிதி, பைஹகீ)  

துறவி பஹீராவின் அறிவுரையை ஏற்று சிறுவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷாம் செல்லாது மக்காவுக்கு திரும்பி வந்தார்கள்.  

இறைத்தூது அருளப்பட்ட போது..  

மேலும் நபி (ஸல்) அவர்கள் 40 வயதாகும் காலப்பகுதியில் ஹிராக்குகைக்கு அடிக்கடி சென்று தனிமையிலிருந்து சிந்தனையிலும் இரவு வேளைகளில் இறைவணக்கங்களிலும் ஈடுபடக்கூடியவராக இருந்து வந்தார்கள். இவ்வாறான சூழலில் தான் இஸ்லாத்தின் இறுதித் தூதராக அன்னார் தெரிவு செய்யப்பட்டு வஹி அருளப்பட ஆரம்பமானது. இதன் முதல் நாள் நிகழ்வு நபிகளாரை நடுக்கத்திற்கும் திடுக்கத்திற்கும் உள்ளாக்கியது. முதன் முதல் அருளப்பட்ட அல் குர்ஆனின் 95 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களுடன் இதயம் நடுநடுங்கியபடி வீட்டுக்கு வந்த நபி (ஸல்) அவர்கள் தன்னைப் போர்த்துமாறு மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் கூற அவர் போர்த்தினார். அத்தோடு நடுக்கம் தீர்ந்ததோடு, அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளையும் எடுத்துக்கூறி தமக்கு ஏதும் நடந்துவிடுமோ என அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது கதீஜா (ரலி) நபிகளாரைத் தேற்றும் வகையில் ஆறுதல் கூறியதோடு தமது தந்தையின் உடன்பிறந்த சகோதரரான நவ்பல் என்பவரின் மகனான வரகாவிடம் அழைத்து சென்றார். அவர் ஒரு கிறிஸ்தவராகவும் இப்றானி (ஹீப்ரு) மொழியை அறிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தைக் கற்றவராகவும் இருந்தார். ஆனால் அவர் கண்பார்வை அற்றவராகவும் வயது முதிர்ந்தவராகவும் காணப்பட்டார்.  

அங்கு சென்றதும் கதீஜா(ரலி) , 'என் சகோதரரே.. உம் சகோதரரின் மகன் கூறுவதைக் கேளுங்கள். அப்போது அவர் நீர் எதைக் கண்டீர் என வினவ நபி (ஸல்) அவர்கள் நடந்தவற்றை எடுத்துக்கூறினார்கள். அப்போது முதியவரான வரகா, இவர் தான் இறைவனால் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட நாமூஸ் (ஜிப்ரீல்) எனக்கூறியதோடு உங்களை உங்கள் சமூகத்தினர் உங்கள் ஊரைவிட்டு வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞராக இருக்க வேண்டுமென அங்கலாய்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் என்னை வெளியேற்றுவார்களா? என வினவ 'ஆம் நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் மக்களால் பகைத்து கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமாக உதவி செய்வேன்' என்றார். எனினும் அவர் குருகிய காலத்தில் காலமாகிவிட்டார்.  

இதன்படி வஹி அருளப்பட்ட முதல் அனுபவத்தின் போது தமக்கு ஏற்பட்ட நடுக்கத்திற்கும் திடுக்கத்திற்கும் உரிய தெளிவை அன்றைய மாற்றுமத அறிஞரிடம் நபி (ஸல்) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.  

தாயிபிலிருந்து மக்கா திரும்ப பாதுகாப்பு  

அதேநேரம் ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தாயிபுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து மக்காவுக்கு திரும்பி வர அன்னார் தாயிபின் முக்கியஸ்தரான முத்இம் பின் அதியிடம் பாதுகாப்பு கோரினார். அவர் முஸ்லிமல்லாதவராக இருந்த போதிலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவரும் அவரது ஏழு மகன்மாரும் உருவிய வாளுடன் தாயிப்பிலிருந்து மக்கா வரையும் பாதுகாப்பு வழங்கினார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சுதந்திரமாக மக்கா திரும்ப முடியாத அளவுக்கு எதிர்ப்புக்கும் கொலை அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது.   

ஹிஜ்ரத்திற்கான பயண வழிகாட்டி  

அதேவேளை நபித்துவம் கிடைக்கப்பெற்று 13 ஆம் ஆண்டின் ஒருநாள் மக்கா குறைஷித் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களை படுகொலை செய்து இஸ்லாத்தை ஒழித்துக்கட்டிவிட திட்டமிட்டு அன்னாரது வீட்டை சுற்றி வளைத்தார்கள். அச்சதித்திட்டத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறிய நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களுடன் மதீனாவுக்கு ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டார்கள். அந்த பயங்கரமான சூழலில் மேற்கொண்ட இப்பயணத்தில் குறைஷியரின் மதத்தைப் பின்பற்றிய முஸ்லிமல்லாதவரான அப்துல்லாஹ் இப்னு உரைக்கத் லைஸி என்பவரையே நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கைக்குரிய பயண வழிகாட்டியாக அழைத்துச் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்கு உச்ச மதிப்பளித்து அன்னாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிராத வகையிலும் எதிரிகள் அன்னாரை கண்டு கொள்ளாத படியும் வழமையான பயணப்பாதைகளை மாற்றியபடி மதீனாவுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று சேர்த்தார்.  

மதீனா சாசனம்  

இவை இவ்வாறிருக்க, முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சென்றடைந்த பின்னர் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களை மாத்திரமல்லாமல் யூதர்களையும் உள்ளடக்கி வரலாற்று முக்கியத்துவம் மிக்க மதீனா உடன்படிக்கையைக் கைச்சார்த்திட்டு ஆட்சியமைப்பைக் கட்டியெழுப்பினார்கள். அதன் ஊடாக உலகில் முதலாவது இஸ்லாமிய அரசாங்கம் உருவானது.  

எனினும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் காலப்பகுதியில் மதீனாவின் தலைமைக்கு இப்னு உபை என்பவர் கிறீடம் அணிவிக்கப்படவிருந்தார். என்றாலும் நபி(ஸல்) அவர்களின் வருகையோடு அது கைவிடப்பட்டது. இதனால் இப்னு உபை நபி (ஸல்) அவர்களின் வருகையால் தான் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கருதினார். இது தொடர்பில் ஸாஆத் இப்னு உபாதா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறியிருந்தார்.  

இவ்வாறான சூழலில் ஒரு நாள் நோய் வாய்ப்பட்டிருந்த உபாதா (ரலி) அவர்களை பார்த்து வர கழுதையில் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் இப்னு உபை தமது கோட்டையின் நிழலில் அமர்ந்து தம் கோத்திரத்தவர்களுடனும் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த சிலருடனும் அலவளாவிக் கொண்டிருந்தார். இதனை அவதானித்த நபி(ஸல்) அவர்கள் கழுதையிலிருந்து இறங்கி உபைக்கு சோபனம் கூறியதோடு கூடியிருந்தவர்களோடு அமர்ந்து சிறிது நேரம் அலவளாவினார். அதனைத் தொடர்ந்து அல் குர்அனின் சில வசனங்களை ஓதிக்காட்டி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.  

இவை மாத்திரமல்லாமல் நபி(ஸல்) அவர்கள் தமது இரும்பு கவசத்தை யூதர் ஒருவரிடம் அடமானதாக வைத்து அவரிடம் உணவு பொருளாக கடன் பெற்று இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)  

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களை யூதரொருவரின் பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. அதனை அவதானித்த நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். அப்போது அது யூதரின் பிரேதம் என ஸஹாபாக்கள் கூற அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அதுவும் ஒரு உயிர் அல்லவா' என்றார்கள்.(ஆதாரம்: புகாரி)  

மேலும் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தார். அவர் திடீரென நோய் வாய்ப்பட்டார். அதனால் நபி (ஸல்) அவர்கள் உடனே அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குணநலன் விசாரித்தார்.(ஆதாரம்: புகாரி)  

ஒரு சந்தர்ப்பத்தில் யூதப் பெண்மணியொருவர் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை பொறித்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்தார். அன்னார் அவ்விறைச்சியில் நஞ்சூட்டப்பட்டிருந்தமையை முன்கூட்டியே அறிந்திராத போதிலும் அன்னார் அதனை சாப்பிட அதில் நஞ்சூட்டப்பட்டிருப்பதை அறிந்து கொண்டார். அப்போது உடனடியாக அப்பெண்மணியை ஸஹாபாக்கள் பிடித்து வந்ததோடு அவளை கொன்று விடவா? என வினவ நபி (ஸல்) அவர்கள் 'இல்லை. வேண்டாம். விட்டு விடுங்கள்' என்றார். (ஆதாரம் : புகாரி)  

மாற்றுமதப் பெண்மணி என்றபோதிலும் அவர் கொடுத்த உணவையும் அன்னார் சாப்பிட்டுள்ளார்கள். தான் ஒரு இறைத்தூதராக இருந்தும் அவள் மீதோ அவளது உணவு மீதோ அன்னார் சந்தேகம் கொள்ளவில்லை. அவளது சதி சூழ்ச்சி குறித்து முன்கூட்டியே அறிந்திருந்திருந்தால் அன்னார் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியை சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.  

ஆகவே நபி(ஸல்) அவர்கள் இறுதித்தூதுவராக இருந்தபோதிலும் முஸ்லிமல்லாதவர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் உறவைப் பேணியுள்ளார்கள். அதாவது ஏனைய மதத்தினருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார்கள். நோய் வாய்ப்பட்டிருந்த போது சுகநலன் விசாரிக்கச் சென்றுள்ளார்கள். மாற்றுமதத்தவரை தமக்கு பணிவிடை செய்ய அமர்த்தியிருந்தார்கள். மாற்றுமதத்தவரின் பிரேதத்திற்காக எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார்கள். மாற்றுமதத்தவர் கொடுத்த உணவை சாப்பிட்டுள்ளார்கள். அன்னாரின் முன்மாதிரி உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டம் மிக்கதும் மனித நேயத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுமாகும்.  

ஆகவே முஸ்லிம்கள் தொடர்பில் அண்மைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தவறான பார்வைக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது போதனைகள் வழிகாட்டல்கள் படி வாழும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதற்கு நபிகளாரின் போதனைகளும் செயற்பாடுகளும் சிறந்த முன்மாதிரியாகும்.  

மர்லின் மரிக்கார்

Comments