மலையக வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

மலையக வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும்!

அடுத்தவாரம் இதே நாளில் நாட்டின் 8ஆவது ஜனாதிபதி யார் என்பதை ஓரளவு அறிந்துகொள்ள முடிந்திருக்கும். ஒரு மாறுதலுக்கான தேவையை தேர்தல் முறைமை நிறைவேற்றவே செய்கின்றது. ஜனநாயக கோட்பாடு இதனடிப்படையிலேயே உயிர்த்துவம் பெறுகின்றுது. இதனையே இலங்கை வாழும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள நாடு என்று பெருமிதமாகக் கூறி இருந்தார் அமரர் ரணசிங்க பிரேமதாச. அந்த வகையில் எதிர்நோக்கி வரும் 16 ஆம் திகதி வாக்களிப்பின் மூலம் ஜனநாயகம் வாழ்கின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதுவரை ஜே.ஆர். ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துள்ளனர். இதில் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் நிறைவுக்கு வந்துவிடும்.  

1972 ஆண்டு இலங்கை அரசியல் யாப்பு திருத்தப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை அறிமுகமானது. ஆனால் முதலாவது ஜனாதிபதி மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை. அத்தருணம் பிரதமராயிருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்து கொண்டார். தேர்தல் மூலம் முதலாவது ஜனாதிபதி தெரிவானமை 1982 ஆம் ஆண்டிலேயே நிகழ்ந்தது.  

இதில் ஜே.ஆர். ஜயவர்த்தனவே வெற்றி பெற்றார். அவர் 3,450,811 வாக்குகளைப் பெறமுடிந்தது. இது 52.91 சதவீமாகும். இவருடன் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ 39.07 வீத வாக்குகளை பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச 50.43 சதவீத வாக்குகளால் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 44.95 வீத வாக்குகளை பெற்றிருந்தார்.  

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994 ஆம் ஆண்டு நடந்தது. இதில் சந்திரிகா குமாரதுங்க வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு வீதம் 62.28 ஆகும். இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வளவு அதிகப்படியான வாக்கு வீதத்தைப் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மஹிந்தராஜபக்ஷ நுவரெலியா மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 1,47,210 ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க 1,52,836 வாக்குகளை பெற்றார். 2010இல் போட்டியிட்ட சரத் பொன்சேகா 1,80,604 வாக்குகளைப் பெற மஹிந்த 1,51,604 வாக்குகளை வென்றார். 2015 இல் இங்கு களமிறங்கிய மஹிந்த 1,45,339 வாக்குகளைப் பெற்றிருந்தார். மைத்திரிபால சிறிசேன 2,22,605 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.  

மலையகத்தைப் பொறுத்தவரை ஐ.தே.கட்சி செல்வாக்குப் பெற்றதாகவே விளங்குகிறது. அண்மைக் காலங்களில் மலையக மக்களின் வாக்குகள் தேசிய ரீதியில் அரசாங்கம் ஒன்றையோ ஜனாதிபதி ஒருவரையோ தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. இம்முறையும் அதற்கான வாய்ப்பு அதிகரித்து காணப்படும் பின்புலத்திலேயே தேசிய வேட்பாளர்கள் இம்மக்கள் பற்றி பெரிதும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.  

அடுத்த சனிக்கிழமை இடம்பெறும் தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 15 இலட்சம் மலையக வாக்காளர்களும் அடங்குகின்றார்கள். மேலும் முதன்முறையாக வாக்களிக்கும் வாய்ப்புப் பெற்றோர் தொகை 15 இலட்சமாகவும் இருக்கின்றது. இவற்றை மிதக்கும் வாக்குகள் என்பார்கள். எனினும் நுவரெலியா மாவட்டத்தில் கிடைக்கும் அதிகப்படியான வாக்குகளே தேசிய அரசியலின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்க உதவப் போகின்றது என்பதில் ஐயமேதும் இல்லை.  

இந்தத் தேர்தலில் வாக்களிப்பது என்பது மக்களுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும். இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ள 1000 ரூபா நாட் சம்பளம் தற்போதைய தனி வீட்டுத் திட்டத்துக்கு மாற்றாக மாடிவீடுகள் இரண்டுமே சாத்தியப்படாத சங்கதிகளானாலும் பிரசாரத்துக்கு நிறையவே பயன்படும். ஏனெனில் ஏற்கனவே 1999இல் இதொ.கா. மாடிவீட்டுத் திட்டத்தை மேற்கொண்டிருந்தது. ஆனால் அது லயவரிசை வீடுகளுக்கு மாற்றாக அமையாது என்பதை சிவில் அமைப்புகள் ஐ.நா.வரை எடுத்துச் சென்று அதனைக் கைவிடச் செய்தன. எனவே இடவசதி இல்லாத (1.25 பேர்ச் நிலப்பரப்பு) இன்னுமொரு மாடி லயவரிசையா என்று மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாடிவீட்டு சமாச்சாரம் இ.தொ.கா.வுக்கு சங்கடத்தை தோற்றுவிக்கலாம் என்பதே அவதானிகளின் பார்வை.  

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இதுவரை 9000 தனி வீடுகள் அமைக்கப்பட்டு காணி உறுதிகளுடன் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தனித்தனி கிராமங்களாக மலையக சமூகத்தின் மேம்பாடு கருதி சேவையாற்றியவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது அறிவுஜீவிகளை ஆகர்ஷிக்கவே செய்கிறது.  

மலையக கட்சிகள் இரண்டும் நுவரெலியா மாவட்டத்தையே இலக்காக கொண்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களது நிலையும் இதுதான். கோட்டாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரை சிங்கள வாக்குகளையே பெரிதும் நம்புகிறார். சஜித் பிரேமதாச சிறுபான்மை இன மக்களின் வாக்குகளிலேயே தங்கி இருக்கின்றார். அந்த வகையில் மலையக மக்களின் 15 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் தீர்க்கமானவையாக அமையப் போகின்றன.  

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ.தே.க. அதிகளவிலான வாக்கு வங்கியை மட்டும் தக்கவைத்துக் கொண்டே வருகின்றது. இங்கு இக்கட்சியைத் தவிர்த்து வேறு எக்கட்சியும் கூடுதலான வாக்குகளை இதுவரை பெறமுடியவில்லை. இந்நிலை பாராளுமன்றத் தேர்தலிலும் (2015) காணப்பட்டது. வரும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரமும் இப்படியே அமையலாம்.  

இதே நேரம் பிந்திய கணிப்பின்படி சஜித் பிரேமதாச சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறக்கூடியவராக காணப்படுகின்றார். குறிப்பாக மலையகத்திலும் இதே நிலைமையே நிலவுகிறது. தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் இறுதி தீர்மானத்தைக் கொண்டுவரும் என்பதால் இது குறித்து கட்சிகள் பெரிதும் கவனம் செலுத்துகின்றன. அதேவேளை எதிரணிக்கு வாக்குகள் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதால் பொய்யுரைகளையும் பிழையான தகவல்களையும் பரப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

எனவே மக்கள் எவர் சொல்வதை நம்புவது என்ற குழப்பத்தில் உள்ளார்கள். பொதுவாக இத்தேர்தல் மலையக மக்களுக்கு சவாலாகவே அமையப் போகின்றது என்னவோ உண்மை. தற்போது பரப்பப்படும் பொய்மைகள் வலுவிழக்கும் பட்சத்தில் இறுதி ஆயுதமாக இனவாதத்தைக் கையில் எடுக்கும் அபாயமும் இல்லையென்று கூறமுடியாது. எவ்வாறாயினும் வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்தை வசப்படுத்திக் கொள்ள நடக்கும் போட்டியாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் மாறியுள்ளது. இதனிடையே மலையக மக்களிடத்தில் போதிய தெளிவு ஏற்படாது போகுமானால் அது வாக்குகளைச் சிதறடிக்கவே உதவும். இதனால் மலையக மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு விடும்.  

மலையகத்தில் பாரம்பரிய செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு கட்சியும் வாக்கு வங்கியினைக் கொண்டிருக்கும்  கலாசாரம் இன்று மாறிக்கொண்டிருக்கின்றது. தமது தலைமைகளின் வாக்கினை மட்டுமே வேத வாக்காக கருதும் நிலை மெல்லமெல்ல மறைந்து வருகின்றது. இ.தொ.கா. அரசியலில் தனி சக்தியாக பரிணமித்த காலமொன்று இருந்தது. ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தோற்றமானது இந்நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.  

இதுவே மலையகத்தில் போட்டி அரசியலுக்கான பின்புலத்தை உருவாக்கி விட்டுள்ளது. இதன் பின்னணியில் செயற்படும் சில சக்திகள் மலையக மக்களின் வாக்குகளைப் பிரிக்க முற்படுமாயின் அது அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவுக்கே வலிகோலும் என்பதே புத்திஜீவிகளின் கவலை.  

எனவே வாக்குகளுக்காக மலையக மக்களிடத்து தவறான தகவல்களை பரப்புவது யதார்த்தத்துக்கு மாறாக புனைவுகளை ஒப்புவிப்பது சரியானதாக அமையப் போவதில்லை. ஏனெனில் மலையக மக்களின் வாக்குப் பலத்தின் அடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படபோகிறார். தமது இருப்பினை உருப்படியான தெரிவு ஒன்றுக்கு அர்ப்பணிப்பதன் மூலமே எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்ள பேரம்பேச முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.    

பன். பாலா

Comments