தீர்க்கமான தேர்தல் முடிவு பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் | தினகரன் வாரமஞ்சரி

தீர்க்கமான தேர்தல் முடிவு பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும்

இன்னும் ஒரு வாரத்திற்குள் இலங்கையர்கள் தமது தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் நிறைவு பெற்று விடும். இறுதிக் கட்ட தேர்தல் சூடுபிடித்தவை இவ்வாரத்திற்கும் நாம் எதிர்பார்க்கலாம்.  

தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரு பிரதான வேட்பாளர்களாலும் வெளிப்படுத்தப்பட்டு அவை பற்றிய விமர்சனங்கள் மற்றும் அலசல்கள் பல்வேறு மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'மக்களுக்கு இலவசங்களையும், நிவாரணங்களையும் வழங்கல்' என்பது இரு கட்சி வேட்பாளர்களினதும் பிரதான குறிக்கோளாக இருக்கிறது. அரசாங்க செலவுகளை அதிகரிக்கச் செய்யும் முன்மொழிவுகளும் அரச வருவாயை குறைவடையச் செய்யும் முன்மொழிவுகளும் அரச நிதி முகாமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய நாடு மேலும் கடன்பெற நேரிடும் எனவும் துறைசார்ந்த நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.  

இரு பிரதான வேட்பாளர்களும் தனித்தனியே தேர்தல் பிரசார மேடைகளில் சூறாவளிப் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் ஒரே மேடையில் தத்தமது கொள்கைகளை விளக்க முன்வைக்கப்பட்ட வெகுசில சந்தர்ப்பங்களில் அந்த மேடையில் வைக்கப்பட்ட நாற்காலிகளில் ஒன்று எப்போதும் வெறுமையாக இருப்பதை அவதானிக்க முடிந்தது.  

கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போது அலரிமாளிகையில் மெகா விருந்து வைபவங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். திருவிழாக்காலம் போல பல்வேறு தரப்பினர்களும் அழைக்கப்பட்டு ‘கவனிக்கப்’பட்டமை ஞாபகம் வரலாம். ஆனால் இப்போது அதுபோன்ற ஆர்ப்பரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் இல்லை. அரச ஊடகங்களும் தேர்தல் விதிகளை மதித்து செயற்படும் போக்கு தென்படுகிறது.  

விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனியார் தொலைக்காட்சிகள் துதிபாடித் திரிகின்றன. ‘ராசாவே உன்னை விட்டால் காப்பாற்ற யாருமில்லை’ என்று பக்திப்பாடல்களையும் அவை ஒளி/ ஒளிபரப்பி வருகின்றன.  

கடந்த தேர்தல்களில் வைக்கப்பட்ட மெகா கட்டவுட்களை இம்முறை காணமுடியவில்லை. 'வெள்ளை உடையில் கைகளை விரித்துக் கொண்டு விழுங்க வருவதைப் போல' சந்துக்கு சந்தி வைக்கப்பட்டிருந்த மெகா தோரணங்களை இம்முறை காண முடியவில்லை. ஆனால் இறுதிக் கட்ட காலப்பகுதியான இக்காலப் பகுதியில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டு வருவதையும் காண முடிகிறது.  

வேட்பாளர்களின் தேர்தல் பிரசார மேடை அலங்காரங்களிலும் வித்தியாசம் தெரிகிறது. ராஜபக்சவின் மேடைகள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் வழமை போல  ஜொலிக்கின்றன. செலவழிக்கக்கூடிய அளவுக்கு பசையுள்ளவர்கள் என்பதை அது காட்டுகிறது. பிரேமதாசவின் மேடைகள் அந்தளவுக்கு காசு செலவழித்து பயன்படுத்தப்பட்டவையாகத் தெரியவில்லை.  

இம்முறை கொழும்பை அண்டிய பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனை குறைவடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒலி பெருக்கிகளின் பாவனையிலும் கட்டுப்பாடுகள் பேணப்படுவதாகத் தெரிகிறது. வேட்பாளர்களின் ஆதரவாளர்களின் வாகனப் பவனிகள் ‘கெத்துக் காட்டும்’ ஜயவேவா கோஷங்கள் குறைவடைந்திருப்பதாகத் தோன்றுகிறது. பதவியில் இருக்கும் அரசாங்கம் பொதுவாக தேர்தல்களின் போது அனுகூலமான ஒரு நிலையில் இருப்பது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த தேர்தல்களின் போது பதவிகளில் இருந்த அரசாங்கங்கள் அரச வளங்களை தேர்தலுக்காக எவ்வாறு பயன்படுத்தின என்பது பற்றிய முறைப்பாடுகள் ஏராளம் உண்டு. அவ்வாறான போக்கு இந்தத் தேர்தலில் குறைந்திருக்கிறது. ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் அந்த மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் உலங்கு வானூர்தி குருணாகலில் இறங்க முடியாதவாறு விளக்குகள் அணைக்கப்பட்டமையை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம்.  

நேரடித் தேர்தல் பிரசாரங்களின் போது இவ்வாறான நிலை என்றால் செல்லிடத் தொலைபேசிகளை இணையத்துடன் இணைத்தால் போதும் நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ. சமூக வலைத்தளங்களில் யூ.டியூப் போன்ற கட்புல செவிப்புல பொழுதுபோக்கு தளங்களில் வேட்பாளர்களின் முகங்களும் படங்களும் பிரசாரங்களும் 'வாந்தி வருமளவுக்கு' போதும் போதும் என்ற அளவில் வருகின்றன. அவை ஒவ்வொன்றையும் தடைசெய்யவே நிறைய நேரம் செலவாகிறது.  

டிஜிட்டல் குப்பைகளை நமது கைத்தொலைபேசிகளும், கனணிகளிலும் நன்றாகவே கொட்டுகிறார்கள். அவற்றை கூட்டிப் பெருக்கி அள்ளிப் போடுவதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. எல்லாம் இன்னும் சில நாட்களுக்கு மட்டும் தான். அதுவரையில் அனுபவிக்க வேண்டியது தான்.  

ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், சிலகாலம் லண்டனில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். “இலங்கையில் உள்ளவர்களுக்கு மறதிநோய் அதிகம். இரண்டே வாரத்தில் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்” என்று கூறினார். பெரும்பான்மை இன மக்களை மையப்படுத்தியதாகவே அக்கருத்து அமைந்திருந்தது. "அது தெரிவு செய்யப்பட்ட மறதிநோய்’ (Selective amnesia). தமது வசதிக்கேற்ப தேவையானவற்றை மட்டும் மறந்து விடுவது என்பதே மிகப்பொருத்தம் அதுதான் நீங்கள் சொன்ன இலங்கையர்களுக்கு உள்ளது” என்றேன்.  

“தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்றார். “அவர்களுக்கு நீங்கள் கூறிய அந்த மறதி நோய் இருப்பதாகத் தெரியவில்லை” என்றேன். எது எவ்வாறிருப்பின் அவரவர் வாக்குகளைப் பயன்படுத்துவது அவரவர் விருப்பம்.    “நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள். ஏனெனில் நாங்கள் தான் உங்களை கொடிய பயங்கரவாதிகளிடமிருந்து மனிதாபிமான ரீதியில் யுத்தம் செய்து மீட்டோம்” எங்களுக்கு வாக்களிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் எங்களில் ஒருவருக்கு வாக்களியுங்கள். அதுவும் இல்லையென்றால் வாக்களிக்காமல் விடுவது உத்தமம்”  

இதுதான் தமிழர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி. “நாங்களும் உங்களை உதைத்தோம். அவர்களும் உங்களை உதைத்தார்கள். ஆனால் நாங்கள் உதைத்த வலி ஆறிவிட்டது அவர்கள் இப்போது தான் உதைத்திருக்கிறார்கள் அந்த வலியை மனதில் இருத்தி உங்களுக்கு வாக்களியுங்கள் இது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட செய்தி.  

“எல்லோரும் ஒரே வேட்பாளருக்கு சப்போட் பண்ணினால் சப்போஸ் மற்றைய வேட்பாளர் வென்றுவிட்டால் என்ன பண்ணுவது? சமூகத்தின் நிலை என்னாகும்? ஆகவே மற்றவருக்கு சப்போட் பண்ணத்தான் வேண்டும்” இது சமீபத்தில் ஊடகங்களில் கேட்ட ஒரு முஸ்லிம் குரல்.  

இதுபற்றிய விமர்சனத்தை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம். தமிழர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா? “அவர் ஒருவர் மட்டும் தான் தமிழர்களைக் காப்பாற்ற முடியும் அவரிடம் மட்டும் தான் தீர்வு இருக்கிறது.” 

இது இளைய தலைமுறை தமிழ் அரசியல்வாதி ஒருவரின் குரல். ஒரு முறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் இடையில் சட்டம் கற்ற ஒருவரிடம் “தமிழர்கள் 2009 இன் பின்னர் 'கையறு நிலைக்கு' சென்றிருக்கிறார்கள் இருக்கிற கோவணத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றேன் “கோவணமா? அதையும் கழட்டியல்லோ இப்ப விட்டிருக்கினம்” என்றார் அவர். சிரிப்பாக இருந்தாலும் அவர் சொன்னதன் தீவிரத் தன்மை சிந்திக்கத்தக்கது. அப்படி என்றால் இருக்கிற ஒன்றே ஒன்று வாக்குரிமை மட்டும் தான் போலும். அதை சரியாக பயன்படுத்துவது அவசியம்.  

முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் இரு பிரதான வேட்பாளர்கள் பக்கமும் பிரிந்து நின்று அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புகளையும் பதவிகளையும் அனுபவிக்க தயார் நிலையில் உள்ளனர். வழமை போலவே பிரதானமான ஒரு தமிழர்கட்சி ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.  

கடந்த கால பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டது போல இம்முறையாவது தவறவிடாது அடுத்து வரும் அரசாங்கத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச தீர்வினையாவது பெற முயற்சிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எவ்வாறாயினும் காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஏறி மிதித்து விட்டு போய்க் கொண்டே இருக்கும்.  

குறைந்த பட்சம் சுதந்திரமாக எழுதி பேசி தனது கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரம் இப்போது இருக்கிறது அது இருக்குமா இல்லையா என்பதை எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னர் வெளிவரவுள்ள தேர்தல் முடிவுகள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடும். அதுவரை காத்திருப்போம்.    

Comments