தேர்தல் பிரசாரம் அன்றும் இன்றும் | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் பிரசாரம் அன்றும் இன்றும்

முன்னாள் அமைச்சர் கிராமத்தில் எல்லா இடங்களுக்கும் செல்லும் தினமாக ஞாயிற்றுகிழமை முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமையை பாதையெல்லாம் சிகப்பு நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இடது சாரிகளுக்கு வாக்குகளை அளிக்க விரும்பாதவர்கள் கூட அன்றைய தினம் தமது வீடுகளுக்கு முன்னால் சிகப்பு நிற கொடியை ஏற்றச் செய்ய மெம்பர் ஜேம்சும் அவரது சகாக்களும் நடவடிக்கை எடுத்திருந்தார்கள். தார் ரோட்டில் செல்லும்போது முழு கிராமமுமே இடதுசாரிகளுக்கு வாக்களிக்க தயார் என்ற நிலை காணப்பட்டது.  

தேர்தலுக்கு முன்னர் வீடு வீடாக சென்று பாதைகளை அலங்கரித்து கடைவீதிகள் தோறும் கூட்டங்களை நடத்தும் தேர்தல் பிரசாரம் குறித்து பேராசிரியிர் ஏ. வீ. சுரவீர, எழுதிய நாவலொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 1971ம் ஆண்டு முதற் தடவையாக வெளியிடப்பட்ட இந்த நாவலில் குறிப்பிடப்பட்ட சம்பவம் 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். 70களில் தேர்தல் நடவடிக்கைகள் கிராமிய மட்டத்திலேயே இடம்பெற்றிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.  

அதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தமது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தான் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி கூறுவதும் பிரதேச ரீதியாக தேர்தல் கூட்டங்களை நடத்தி துண்டு பிரசுர விநியோகம் செய்வதும் தேர்தல் பிரசார ஊடகமாக பாவிக்கப்பட்டது. தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அந்நாட்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பத்திரிகையோ வானொலியோ பயன்படுத்தப்படவில்லை. ஆனால் இலங்கை தேர்தல் வரலாற்றில் பலவிதமான பிரசார உபாயங்கள் பாவிக்கப்பட்டதாக உறுதி செய்ய முடியும்.  

1931ம் ஆண்டு இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த பின்னர் 1931ம் ஆண்டு 13ம் திகதி கவுன்சிலுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலே நடத்தப்பட்டது. அங்கு ஒவ்வொரு இனத்துக்கும் வேறு வேறு இன பிரதிநிதித்துவ முறையொன்றே காணப்பட்டது. 1931ல் நபர்களின் சொத்து, கல்வித்தகைமை என்பவை கருத்தில் கொள்ளாமல் அனைத்து இனத்தினருக்கும் கிடைத்த சர்வஜன வாக்குரிமை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கக் கட்டுரைகள் அன்று பத்திரிகைகளில் வெளிவந்தன. அன்று பத்திரிகைகளில் உறுப்பினர்களின் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக அவர்களை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்ற விளக்கங்களே வெளிவந்தன. ‘சிங்கள ஜாதிக’ பத்திரிகையின் ஆசிரியர் பியதாச சிறிசேன 1931ஏப்ரல் மாதம் 21ம் திகதி அப்பத்திரிகையின் 8ம் பக்கத்தில் பிரசுரித்த விசேட கட்டுரையில் அது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.  

அன்று வேட்பாளர் தெரிவு  

வந்ததற்கு போனதற்கு- தன்னுடைய தேவைக்கு,- கோபத்தில் பழிவாங்க, இலாபத்துக்கு,- நட்புக்கு- குலம் கோத்திரத்திற்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு,- ஒருவரை தோற்கடிக்கும் எண்ணத்தில் உறுப்பினர்களை தெரிவு செய்தால் புதிய அரசாங்க அரசியலமைப்பை முற்றாக கைவிட்டு இலங்கையை மீண்டுமொருமுறை அடகு வைக்கும் நிலை உண்டாகும். அதனால் நாம் தெரிவு செய்யும் 50உறுப்பினர்களையும் மிகவும் கவனமாக நன்றாக சிந்தித்து தெரிவு செய்யவேண்டும்.  

மிக நல்ல, அறிவார்ந்த, கற்ற, பொது தொண்டுகள் செய்த அனுபவமுள்ள தேவையான சேவைகளை உடனடியாக செய்யக்கூடிய, பயமற்ற, அடுத்தவர்களுக்காக வேலை செய்யக்கூடிய, உடற்பலமுள்ள, நல்ல ஞாபக சக்தியுடைய, உயர்ந்த கௌரவம் மிக்க கனவான்களை கவுன்சிலுக்கு தெரிவு செய்ய வேண்டும்.  

1931ஆம் ஆண்டு 15,76.706பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தார்கள். அன்று 57.96%மானோர் வாக்களித்திருந்தார்கள். இத்தேர்தல் 7நாட்கள் நடைபெற்றது. சர்வஜன வாக்குரிமையை பணக்கார பலம்வாய்ந்த தரப்பினர் எதிர்த்தபோது அது பொதுமக்கள் பெற்ற வரமென கருதிய பத்திரிகையாசிரியர்கள் பொதுமக்களுக்காக தமது பேனாவை தேசிய பொறுப்பெனக் கருதி பயன்படுத்தி.  

கவிதை பிரசுரங்கள்  

எவ்வாறாயினும் 1931ம் ஆண்டளவில் நாட்டில் படிப்பறிவு மிகக் குறைந்தளவில் காணப்பட்டதால் வாசித்து அறியும் சமூகத்தை விட கேட்டறியும் சமூகமே அன்று காணப்பட்டதால் அன்று தேர்தல் பிரசாரங்களுக்கு கவிதை கலாசாரமே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அன்று கடைகள் போன்ற மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் கவிதைகள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.  

இக்காலப் பகுதியில் வாக்காளர் அட்டைகளை வாசிக்கும் அளவுக்கு படிப்பறிவில்லாததால் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கட்சிச் சின்னங்களுக்குப் பதிலாக நிறங்கள் ஒதுக்கப்பட்டன. அந்தந்த நிறத்திலாக வாக்குப் பெட்டிகள் வெவ்வேறாக வைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் தாம் விரும்பும் வேட்பாளரின் நிற பெட்டியில் வாக்குச்சீட்டை போடவேண்டும்.  

இலங்கை தேர்தல் வரலாற்றில் இரண்டாவது தேர்தல் 1936ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி நடைபெற்றது. அதுவும் கவுன்சிலுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலாகும். 11நாட்கள் தேர்தல் நடைபெற்றது. அக்காலப் பகுதியிலும் கட்சி சின்னத்துக்குப் பதிலாக நிறமே உபயோகிக்கப்பட்டது.  

வெவ்வேறு இனங்களை சந்தேகத்துடனும், பயத்துடனும், குரோதத்துடனும் பார்க்கும் நிலைமை ஏற்படும் என எண்ணிய டொனமூர் ஆணையாளர் 1936ம் ஆண்டு இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பிரதேச பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்தார். தமிழ்த் தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1936ம் ஆண்டளவில் இலங்கை சமசமாஜக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உருவாகின. அதனால் அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் போட்டியிட்டார்கள். தொழில் கட்சியின் ஏ. ஈ. குணசிங்கவும் போட்டியிட்டார். அவருக்காகவும் கவிதை பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அநேகமானோர் இலங்கை சமசமாஜக் கட்சியை விரும்பவில்லை. அதற்காகவும் கவிதை பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.  

இதேவேளை 1934-, 1935காலப் பகுதியில் மலேரியா காய்ச்சல் பரவியது. அதன் காரணமாக சமூக பணியில் ஈடுபட்ட ஒருவர் அதனை தனது தேர்தல் பிரசாரமாக்கிக் கொண்டார்.  

1936ல் 24,51, 323வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டார்கள். அதில்54.69%வாக்குகள் பாவிக்கப்பட்டன. இலங்கையின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் 1947ம் ஆண்டு ஓகஸ்ட் 23ம் திகதி நடத்தப்பட்டது. அத்தேர்தல் 3நாட்கள் நடைபெற்றது. 1952ம் ஆண்டு தேர்தல் 3நாட்கள் நடைபெற்றது. ஒரே நாளில் தேர்தல் நடத்த ஆரம்பிக்கப்பட்டது 1960மார்ச் மாதமாகும்.  

நிறப்பெட்டிகள் அகற்றப்பட்டன  

தேர்தல் வேட்பாளருக்குரிய நிற பெட்டிக்கு வாக்களிக்கும் முறை 1952ம் ஆண்டு நீக்கப்பட்டு ஒரே பெட்டியில் வாக்களிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் கவிதை பிரசுரங்களும் தானாகவே காணாமல் போய்விட்டன. அதற்கு பதிலாக அரசியல் உறவினர்களின் மேடையில் ஏறி கவிதை பாடும் நிலைமை ஏற்பட்டது. இவ்வேளையில் வாக்காளர்களை கட்சிகளை சேர்ந்தவர்கள் மோட்டார் வண்டியில் அழைத்துச் செல்வதையும் தேர்தல் பிரசாரமாக பாவித்தார்கள். மோட்டார் வண்டிகளில் அழைத்து செல்லும் போது சாரதிகள் தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோர தவறுவதில்லை. “நான் அமரசூரியவின் காரில் சென்று பார்லி குடித்துவிட்டு தஹநாயக்கவுக்கு புள்ளடி போட்டேன்” என்று அம்பலங்கொடையைச் சேர்ந்த முதியவரொருவர் பழைய சம்பவத்தை சிரித்தபடி கூறினார்.

ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்.  

1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை பத்திரிகை, வானொலி போன்ற ஊடகங்களை வேட்பாளர்கள் பிரசார ஊடகங்களாக பாவிக்கவில்லை. அவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாகச் சென்று துண்டுப் பிசுரங்களை விநியோகித்தார்கள். போஸ்டர்கள் காணப்பட்டாலும் அவை இன்று போல பெரிதாகக் காணப்படவில்லை. பிரதேச ரீதியான கூட்டங்கள் நடந்தாலும் அவை இன்று போல பெரிதாகக் காணப்படவில்லை. பிரதேச ரீதியான கூட்டங்கள் நடத்தால் கொடிகளினால் அலங்கரிக்கப்படும். ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட வாகனங்கள் ஜனநடமாட்டம் உள்ள இடங்களில் நிறுத்தப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட பின்னர் மக்கள் அவ்விடத்தில் கூடும் போது பிரசாரங்களை மேற்கொண்டார்கள். 19077ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரசார நடவடிக்கைகளுக்கு நாட்டுக்கு நடந்தது என்று ஒரு சிறிய புத்தகத்தை வீடு வீடாக விநியோகித்தார்கள்,  அதனை  ஐக்கிய தேசியக் கட்சியினரே மேற்கொண்டார்கள். அதை தவிர அவர்களது மேடைகளுக்கு பிரபலமான பாடகர்களை அழைத்து வந்தார்கள். அவர்களை காண வரும் கூட்டத்தினர் மத்தியில் அரசியல் கதைகளை கூறினார்கள். 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட பத்திரிகைகள் வானொலிகள் பிரசார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. அன்று அந்தந்த கடசிக்கு ஆதரவான பத்திரிகைகள் அரசியல் உரைகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் நன்றாகத் தெரியும்படி வெளியிட்டார்கள்.  

1977ம் ஆண்டுக்குப் பின்னர் 1982ஒக்டோபர் மாதம் 20ம் திகதி இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் கூட போஸ்டர்கள், துண்டுப்பிரசுரங்கள் போன்ற பிரசார ஊடகங்கள் தவிர பத்திரிகை விளம்பரங்கள் காணப்படவில்லை. ஆனால் 1982ல் இலங்கைக்கு தொலைக்காட்சிகள் வந்தபின்னர் ஒவ்வொரு வேட்பாளரும் மக்களுக்கு உரையாற்ற இடமளிக்கப்பட்டது.  

பத்திரிகைகளிலும் அவர்களின் உரைகள் வெளிவந்தன. 1982ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவ தேர்தல் பிரசார முறையாக மாதிரி அரிசி கூப்பனை அச்சிட்டு விநியோகித்ததால் அவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  

அதன் பின்னர் 1982டிசம்பர் 22ம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 1988ம்ஆண்டு 19ம் திகதி நடத்தப்பட்டதோடு ஜனாதிபதி வேட்பாளர்களின் பத்திரிகை விளம்பரங்கள் முதன் முதலாகக் காணப்பட்டன.  

1989பெப்ரவரி 05ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்ற வேளையில் பத்திரிகை விளம்பரங்கள் காணப்படவில்லை. அதற்கு காரணம் 1989காலப்பகுதியில் நடந்த கலவரமாகும். மேலும் விருப்பு வாக்குகள் முறை எமது நாட்டுக்கு புதியதென்பதாலும் அனைவரும் வழமைபோல் பதாதைகள், போஸ்டர்கள், துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றை பாவித்தார்கள்.  

தொலைகாட்சி ஒளிரப்புகள்  

1994ஓகஸ்ட்  16ம்திகதி கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டியாக தமது பிரசாரங்களை தொலைக்காட்சி வானொலி, பத்திரிகை வாயிலாக மேற்கொண்டன. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2001டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின் போது தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இக்காலப் பகுதியில் தனியார் வானொலிகள், தனியார் தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதால் வர்த்தக நோக்கத்திற்காக தேர்தல் விளம்பர பிரசாரங்கள் ஆரம்பமாகின.  

2001ம் ஆண்டளவில் வீடுகளில் நிலையான தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு வேட்பாளரின் வாக்குறுதிகளும் விருப்பு வாக்கு இலக்கமும் வழங்கும் யுத்தியும் இக்காலப் பகுதியிலேயே பிரபலமானது.  

2015ஆம் ஆண்டுபோல் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் பிரசார நடவடிக்கைகள் முகநூல், டிவிட்டர், இன்ஸ்டகிராம், மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களினூடாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமும் போஸ்டர், பதாகைகள், துண்டுபிரசுரங்கள் என்பவற்றின் மூலமும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது. எது எவ்வாறாயினும் பிரதான வேட்பாளர்கள் இருவரினதும் இரண்டு வார கால பிரசாரங்களுக்கான செலவு 100கோடி ரூபாவென தேர்தல் வன்முறை நடவடிக்கை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் ஆர். வயலட்

Comments