வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் வாக்காளர்கள் அல்லர்! | தினகரன் வாரமஞ்சரி

வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் வாக்காளர்கள் அல்லர்!

நீண்ட எதிர்பார்ப்பும் பரபரப்புக்கும் மத்தியில் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நேற்று முடிவடைந்திருக்கின்றது.  

தமது வாக்குகள் மூலம் தெரிவு செய்தவர்தான் ஜனாதிபதியாக வருகிறாரா, இல்லையா? என்பதை அறிவதற்கு எல்லோரும்ஆவலாகப் பார்த்துக்ெகாண்டிருக்கிறார்கள்.  

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில், வாக்களிப்பதற்கு மேலதிகமாக ஒரு மணித்தியாலம் நேற்று வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, மாலை 5மணிக்குப் பின்னர்தான், வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். போட்டியிட்ட வேட்பாளர்களும் மிகுந்த நம்பிக்ைகயுடன் காத்திருப்பார்கள். அவர்களைப்போலவே இந்த நாடும் எதிர்பார்த்திருக்கிறது. மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகத் தாங்களே வாக்களித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.  

இன்னொரு குழப்பம். அதாவது மக்கள் எதிர்பார்க்கும் புதிய ஜனாதிபதி எத்தனையாவது ஜனாதிபதி? சிலர் ஏழாவது என்கிறார்கள். ஆனால், உண்மையில் நேற்று நடந்த தேர்தல் எட்டாவது ஜனாதிபதி தேர்தல். 1982,1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019. பிறகு எப்படி ஏழாவது ஜனாதிபதி?   சரியான கேள்விதான்.   என்றாலும், இன்று தெரிவாகவுள்ளவர் ஏழாமவர் என்று சொல்லலாம். முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன. இரண்டாமவர் ஆர்.பிரேமதாச, மூன்றாமவர் டீ.பீ.விஜேதுங்க, நான்காமவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐந்தாமவர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆறாமவர் மைத்திரிபால சிறிசேன. இப்ப வரப்போகிறர் ஏழாமவர். அந்த விளக்கத்தையெல்லாம் சாதாரண பொதுமக்களுக்குச் சொல்லிக்ெகாண்டிருக்க ஏலுமா? செய்தியில் போடும்போது எட்டாவது ஜனாதிபதி என்றுதானே போட வேண்டும் என்கிறார் நண்பர். அவர் சொல்வது சரிதான். சிலபேர் இப்பிடித்தான் விதண்டாவாதம் பேசுவார்கள். அதுக்கு நாம் ஒன்றும் செய்யேலாது! 

நேற்று நடந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் ஆட்கள் வந்திருந்தார்கள். ஆனால், உள்நாட்டில் உள்ள பலருக்கு வாக்களிக்க முடியாமற்போனது என்னவோ துரதிர்ஷ்டம்தான்! சிலருக்கு வாக்காளர் அட்டையே வரவில்லையாம். வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் வாக்களிக்கலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சொல்லியிருந்தார். அவரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். நல்ல மனிசன். செய்தியாளர் மாநாட்டுக்கு வந்தால்; அல்லது அழைத்தால், மாநாடு நிறைவடைந்ததும் எல்லாச் செய்தியாளர்களையும் தனித்தனியே சந்தித்துக் கைலாகு கொடுத்து நன்றி சொல்லிச் செல்வார். இந்தப் பழக்கம் யாருக்கும் கிடையாது. சில அமைச்சர்கள் நடத்தும் செய்தியாளர் மாநாடு முடிந்ததும் அவர்களைப் பிடிக்க முடியாது. என்னவோ பெரிய அவசரத்தில் வந்திருந்தவர்கள்போல் விறுவிறெனப் பறந்துவிடுவார்கள். சிலர் அலைபேசியும் கையுமாகச் சென்றுவிடுவார்கள். அப்பிடிப் பார்க்கும்போது மஹிந்த தேசப்பிரிய மனித நேயம் நிறைந்தவர் என்று மனந்திறந்த சொல்ல முடியும். சில ​வேளைகளில் அவரின் நடவடிக்ைககள், அண்மையில் காலமான இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் டி.என்.சேஷனை நினைவுபடுத்துவதாக உள்ளன. அவர்தான் இந்திய தேர்தல்களில் வன்முறைகளையும் இலஞ்சத்தையும் ஒழிப்பதற்கு முன்னின்று உழைத்தவர். அதேபோன்றுதான் மஹிந்த தேசப்பிரியவும் தமது இறுக்கமான அறிவிப்புகள் மூலம் அமைதியான தேர்தலை நடத்துபவர் என்ற பெருமையைப் பெறுகிறார். நடவடிக்ைக எடுக்கிறாரோ இல்லையோ, அவரின் எச்சரிக்ைக அறிவிப்புகள், வன்முறைகள் அற்ற ஓர் அமைதியான தேர்தலுக்கு வழிவகுத்திருக்கின்றன எனலாம்.

சரி, இனி வாக்காளர் அட்டைகள் கிடைக்காத விடயத்திற்கு வருவோம். 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் முறையாகப் பதிவு செய்துகொண்டவர்களுக்கு வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும், அவர்கள் தமது வாக்காளர் அட்டைகளை அஞ்சல் அலுவலகத்தில் பெற்றுக்ெகாள்ள முடியும் என்றும் அவ்வாறும் கிடைக்காவிட்டால், தங்களது பெயரைச் சொல்லி வாக்களிக்க இயலும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்பிடி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யாமல் தவிர்க்கப்பட்டிருக்குமாயின், அது வாக்காளரின் தவறேயன்றி, ஆணைக்குழுவின் தவறு அல்லவென்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!.

ஏன்? ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதலாந்திகதியிலிருந்து முப்பதாம் திகதி வரை வாக்களார் பட்டியலைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்ைக மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராம சேவை அலுவலர் பிரிவுகளில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எம்மில் பலர் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. கிராம சேவை அலுவலர் வீடுகளுக்கு வந்து பதிந்துகொண்டு செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அஃது அந்த அலுவலரின் கடமை என்று வைத்துக் ெகாண்டாலும், தமது பெயர்களைப் புதுப்பித்துக்ெகாள்ள வேண்டிய பொறுப்பு வாக்காளருடையது.

நாட்டின் பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கின்றது. வாக்களிக்கும் உரிமை இருக்கின்றது என்பதற்காக அனைவரும் வாக்காளராகிவிட முடியாது. வாக்ைக அளிப்பதற்காகப் பெயரைப் பதிவுசெய்துகொண்டுள்ளவர்கள் மட்டுமே வாக்காளர் என்ற தகுதியை உடையவர்கள் என்று தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில், எம்மவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்கிறார் நண்பர். இஃதுதான் உண்மை! இந்தத் தடவை வாக்காளராகப் பதிவுசெய்துகொண்டும் பல்வேறு தரப்பினருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளமை பற்றியும் கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆழ் கடல் மீன்பிடிப்புக்காகச் சென்று திரும்ப முடியாதுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள்.

வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள், சிறையில் உள்ள கைதிகள் எனப் பல ஆயிரம்பேர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் மட்டுமன்றித் தொடர்ந்து இவ்வாறான நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே, இவ்வாறானவர்களுக்கும் வாக்களிக்கக்கூடிய ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்படுவது அவசியம். எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களில் இதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்! அப்போதுதான் வாக்காளராகவுள்ள அனைவரும் வாக்களிக்கும் சூழல் இயற்கையாக உருவாகும்!

Comments