ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபுக்கு வித்திட்ட முன்னோடிக் கவிஞர் மஹாகவி | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபுக்கு வித்திட்ட முன்னோடிக் கவிஞர் மஹாகவி

தரமான சமகால ஈழத்துக் கவிஞர்களுக்ெகல்லாம் பல வகைகளிலும் ஒரு முன்னோடியானவர் மஹாகவி. அவர் ஆற்றல்மிக்க கவிஞராக மட்டுமன்றி ஈழத்துத் தமிழ்க் கவிதைக்கான தனி அடையாளங்களை உருவாக்குவதற்குப் பங்காற்றிய ஒரு முன்னோடியுமாவார் (தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீட்டுரை மஹாகவியின் ஆறுகாவியங்கள் தொகுதி – மார்ச் 2000) 

ஆங்கிலேயரின் ஆட்சிகால இறுதி நாட்களிலும் அதாவது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களிலும் சமயம் சார்ந்த விடயங்களே இலக்கியத்தின் பாடுபொருளாக இருந்துவந்தபோதும்கூட சமகாலச் சமூகத் தேவைகளும் பிரச்சினைகளும் ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின. 

பாவலர் துரையப்பா : ப.கு. சரவணபவன் : நல்லதம்பிப்புலவர்: சோமசுந்தரப் புலவர் போன்றோர் இந்த மாற்றத்தின் முன்னோடிகள். இம்மாற்றங்களின் வழிமேற்கிளம்பிய ஈழத்துத் தமிழ் கவிதை என்னும் மரபுக்கு வித்திடடவராக நாம் மஹாகவியைக் கொள்ளலாம். 

அளவெட்டியில் 09.01.1927ல் பிறந்த உருத்திரமூர்த்தி என்னும் இயற்பெயர்கொண்ட மஹகவி 1940களில் கிராம ஊழியனில் எழுத ஆரம்பித்து வரதரின் தேனீ மற்றும் மறுமலர்ச்சியுடன் இணைந்து விஜயபாஸ்கரனின் சரஸ்வதியுடன் ஊடாடி : ஈழகேசரி வீரகேசரி : சுதந்திரன், விவேகி: தேனருவி என தமிழக இதழ்களிலும் ஈழத்துப் பத்திரிகை. சிற்றேடுகளிலும் தனது கவிதை மனம் திறந்தவர் இவர். 

சோலைகடல், மின்னல் முகில், தென்றலினை மறவுங்கள் மனிதனை அதுவும் சாதாரண மனிதனைப் பாடுங்கள் அவனது இன்னல் ஏழ்மை உழைப்பு உயர்வினைப் பாடுங்கள் என்றும் இன்னவைதான் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர் என்று கவிதைக்குள் பிரவேசிப்பவர்களை அறிவுருத்தியவர் அவர். 

மஹாகவியின் ஆரம்பகவிதைகள் யாழ்ப்பாண கிராம மக்களை அவர்களின் எளிமையும் மகிழ்வும் கொண்ட வாழ்வை குதூகலம் நிறைந்த காதலை துன்ப துயரங்களை அந்தக்கிராமிய அடையாளங்களுடன் பாடுவதாக அமைகின்றன. காதல் கவிதைகளைப் பாடும்போது கூட அந்தக்கிராமிய ரம்மியம் அதில் மிதந்துவரும். 

அப்படி அவர் எழுதிய ஒரு காதல் கவிதை பற்றி இப்படி வியக்கின்றார் கவிஞர் முருகையன். 

‘1953என்று நினைக்கின்றேன். ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்திருந்த காதலியின் பிரிவுத்துயர் பற்றிய கவிதை என்னை வியக்க வைத்தது. காதல் கவிதைகளை எழுதுகிறவர்கள் பொதுவாகவே பூங்காவனங்களையும், கடற்கரைகளையும், வயல்வெளிகளையும் கவிதைக்கான களமாகக் கொள்வார்கள். மஹாகவி என்கின்ற ஒரு வினோதமான புனைபெயருடன் இந்த ஆசாமி வீட்டுக்கோடியிலே ஆட்டுக் கொட்டிலுக்கருகே நிற்கின்ற வேப்பமர நிழலை காதலுக்குக் களமாகத் தெரிவுசெய்து பாடியிருந்தது வித்தியாசமாக இருந்தது. அவருடன் தொடர்புகொள்ள மனம் விழைந்தது.  

என் மகிழ்வையும் அவருக்கான வாழ்த்தையும் ஒரு வெண்பாவாக்கி அப்பத்திரிகை மூலமாக அவருக்கு அனுப்பி வைத்தேன் என்று பதிகின்றார் கவிஞர் மருகையன். 

‘வீட்டுக்குப் பின்புறததில் 

வேப்பமரத்தரகில் 

ஆட்டுக்குக் கொட்டில் அதனருகில்  

நீட்டு மைக்கூந்தல் அவிழ்ந்து விழா' என்று ஆரம்பிக்கிறது. முருகையன் வியந்த அந்தக் கவிதை. 1959ல் விவேகியில் இவர் இழுதத் தொடங்கிய கல்லழகி எனும் காவியம் இப்படித் தொடங்குகிறது. 

‘ஆல மரங்கள் அருகே வளர்ந்திருக்கும் 

சாலையினை விட்டுத் திரும்பினேன் 

சத்தமிடும் ஓலைப் பனங்காட்டின் 

ஒற்றையடிப்பாதை....? 

கிராமங்களின் இதயம் குதித்தாடும் நர்த்தன வரிகள் அவருடையவை. 

மகா கவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாண கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை, கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க்கவிதைகளில் வெளிக்கொணர்ந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவராக நிலாவணன் ஒருவரையே கூறமுடயும் என்று அழுத்தமாகக் குறிக்கின்றார் கவிஞர் நுஃமான். 

பிறந்த மண்ணை நேசித்த பிறவிக் கவிஞர் அவர் என்று போற்றினார் கனகசெந்திநாதன். மஹா கவிக்கு முருகையனுடனிருந்ததைப் போலவே நீலாவாணனுடனுடனும் நெருக்கமான தொடர்பும் நட்பும் இருந்தது. 

வரதரின் மறுமலர்ச்சியின் சிறுகதையுடன் தொடங்கினாலும் கவிஞனாகவே உச்சம் தொட்டவர் மஹாகவி. ஈழத்தின் முதல் கவிதை இதழான தேனீயை ஆசிரியராகவிருந்து ஆரம்பித்தவர் வரதர். தேனீ இதழுக்கான கவிதைகளை தெரிவுசெய்தல், ஒழுங்குபடுத்தல் போன்ற அனைத்து பணிகளையும் ஏற்றுச் செய்தவர் மஹாகவியே. 

மஹாகவியின் முதல் கவிதைத் தொகுதியான ‘வள்ளி’ 1955ல் வரதர் வெளியீடாகவே வந்திருக்கிறது. 

தனிக் கவிதைகள் தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்றே ஆரம்பத்தில் பாடியவர் அறுபதுகளின்பின் மானிடவாழ்வை ஒரு பெரும் பரப்பில் நோக்கும தன்மை மேலோங்கிப் பாடத் தொடங்கினார். கலலழகி : சடங்கு : ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் : கண்மணியாள் காதை : கந்தப்ப சபதம் என நெடுங்காவியங்களைப் படைக்கத் தொடங்கினார். முருகையனுடன் இணைந்து ‘தகனம்’ என்னும் காவியத்தையும் ஆக்கியுள்ளார். 

இந்த ஆறு காவியங்களும் ஒரு நூலாக 2000ஆம் ஆண்டின் தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் பெரும் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் வௌிவந்துள்ளது. 

மஹாகவியின் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறை அவருக்கு ஏகோபித்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. எம்.ஏ. ரஹ்மானின் இளம்பிறை உரிய கவனத்துடனும் ஓவியக் கனதியுடனும் இக்குறும்பாக்களை பிரசுரித்ததுடன் 1966ல் ஒரு நூலாகவும் வெளியிட்டிருக்கிறது. 

மகாகவியின் ஆக்கங்கள் பத்துக்கு மேற்பட்ட நூல்களாக (1955 – 2000) வெளிவந்திருந்தாலும் அவர் 1971இல் அமரர் ஆன காலம் வரை நான்கு நூல்கள் மட்டுமே வெளிவந்திருந்தன. 

1955வள்ளி – கவிதைகள். வரதர் வௌயீடு 

1966குறும்பா அரசு வெளியீடு 

1970கண்மணியாள் காதை – அன்னை வெளியீடு 

1970கோடை – பா நாடகம், பூபாலசிங்கம் 

அவர் நீண்ட காலம் வாழாமற் போனது தமிழுக்கும் நமக்குமான பேரிழப்பு.

தெளிவத்தை ஜோசப்    

Comments