இந்திய ‘அரசியல் ரெளடி’களுடன் மோதி வெற்றி பெற்ற தேர்தல் ஆணையாளர் டி.என். சேஷன் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய ‘அரசியல் ரெளடி’களுடன் மோதி வெற்றி பெற்ற தேர்தல் ஆணையாளர் டி.என். சேஷன்

இந்தியாவின் மிகச் சிறந்த குடிமைப்பணி (சிவில்) அதிகாரி யார் என்றால் அவர் டி.என். சேஷன் ஆகத்தான் இருப்பார். அவர் கடந்த 10ம் திகதி தனது 86வது வயதில் தனது மயிலாப்பூர் வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அடுத்த டிசம்பர் மாதம் தன் 87வது பிறந்தநாளை கொண்டாடியிருக்க வேண்டிய அவர், இரவு சுமார் 9.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.  

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரியவை நீங்கள் சிறந்த, நம்பகமான, துணிச்சலான தேர்தல் ஆணையாளர் என்று புகழலாம். அவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்கக் கூடியவரே டி.என். சேஷன்.  

சிறந்த கல்வியாளர், சிறந்த நிர்வாகி எனப் பெயரெடுத்த சேஷனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையாளர் என்ற பதவியை வாங்கித் தந்தவர் சுப்பிரமணியம் சுவாமி. தன்னை தேர்தல் ஆணையாளர் என்ற பதவி தேடி வருகிறது என்பதை அறிந்ததும் அதை ஏற்பதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டதாம். உடனடியாக தன் தந்தையிடம் ஆலோசனை கேட்டாராம். அவரோ, எனக்கு முனிசிபல் தலைவர் பதவிக்கும் தேர்தல் ஆணையாளர் பதவிக்கும் இடையே எந்த வித்தியாசமும் காணத்தெரியாது என்று கூறிவிட்டாராம். தனது அண்ணனிடம் ஆலோசனை கேட்டாராம். அவரோ, நான் தனியாளாகத்தான் இங்கே இருக்கிறேன். உனக்கு பதவி எல்லாம் வேண்டாம். எனக்கு உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தால் போதும் என்று கூறிவிட்டாராம். இதனால் மேலும் குழம்பிப்போன சேஷன், ஒரு ஆளை காஞ்சிப் பெரியவரிடம் அனுப்பி அவரது ஆலோசனையைக் கேட்டாராம். விஷயத்தைச் சொன்னதும் காஞ்சிப் பெரியவர் “அவனை பதவியேற்கச் சொல். அது கௌரவமான பதவி என்று சம்மதம் தெரிவித்த பின்னர்தான் சேஷன் பதவியேற்க சம்மதித்தாராம்.  

இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு சுதந்திரமான நிறுவனம். ஆனால் நடைமுறையில் அது அரசின் கீழ் அரசியல்வாதிகளின் செல்வாக்கின் கீழ் இயங்கி வந்தது. சேஷன் பதவியேற்றதும் இந்த நிலையை மாற்றி அமைத்தார். இந்திய அரசியலமைப்பின் கீழ் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் ஆணையம் செயலாற்ற வேண்டும். இது ஏனைய அரசு நிறுவனங்களைப் போன்றது அல்ல. தேர்தல் ஆணையம் முற்றிலும் சுதந்திரமானது. அமைச்சரவையோ அல்லது பிரதமரோ இதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நடைமுறையில் காட்டினார் சேஷன். தேர்தல் ஆணையத்துக்கு அவர் ஆற்றிய பெரும்பணி, அது முற்றிலும் சுதந்திரமான நிறுவனம் என்பதை உறுதிப்படுத்தியதுதான்.  

திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்பது அவரது முழுப் பெயர். மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பாலக்காட்டில் 1932-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். பாலக்காட்டில் இருந்த விக்டோரியா கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்த அவர், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிந்தார். 1955 பேட்ச் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சேஷன், இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர். கடந்த 1989-ல் மத்திய அரசின் செயலாளராக இருந்தவர், 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி நாட்டின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக அப்போதைய பிதமர் சந்திரசேகரால் நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வரை 6 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த சேஷன், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் முன்னர், அவர் திட்டக்கமிஷன் தலைவராகவும் பதவி வகித்தார்.  

உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுவது இந்தியாவின் பொதுத் தேர்தல். இந்திய தேர்தல் இத்தகைய தனித்துவம் பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் அதைத் திறம்படச் செயல்படுத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம்தான். இத்தகைய அதிகாரம் பொருந்திய இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புதிய முகம் கொடுத்தவரும் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்டிப்பாக அமல்படுத்தியவரும் யார் என்றால் அது டி.என்.சேஷன் தான் செலவு உச்சவரம்பு நிர்ணயித்தது முதல் தேர்தல் நடைமுறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததும் டி.என்.சேஷனே. இவரின் மகத்தான பணிக்கான சர்வதேச அங்கீகாரமாக 1996-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய 'மகசேசே' விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த டி.என்.சேஷன் 10ம் திகதி இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் மறைவுச் செய்தியை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.வை. குரேஷி ட்விட்டரில் வெளியிட்டார். பிரதமர் மோடி மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் பலரும் சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

பாலக்காட்டில் பிறந்த சேஷன், சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று, அங்கு சிறிது காலம் பணியாற்றி வந்தார். 1955-ம் ஆண்டு இந்திய குடிமை (சிவில்) பணிக்குத் தேர்வான சேஷன், குடிமைப் பணியின் மிக உயரிய பொறுப்பான கேபினட் செயலாளர் அந்தஸ்து வரை உயர்ந்தார். 1990-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சேஷன், ஆறு ஆண்டுகாலம் பணியாற்றினார். சேஷன் பதவியேற்றதற்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடே மாறியது. வெறும் பெயரளவில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டன. தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்குக் கடிதம் எழுதினார். அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாக ஆளும் தரப்பாலே விமர்சிக்கப்பட்டார். பலமுறை அவரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.  

அப்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒரே தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்துவந்தார். 1993-ம் ஆண்டுதான் கூடுதலாக இரண்டு நிரந்தர தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு மூன்று பேர் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் உருப்பெற்றது. சேஷனின் அதிகாரத்தைக் குறைக்கவே இந்த மாற்றுவழி மேற்கொள்ளப்பட்டதாகப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. சேஷன் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்த போதும் உச்சநீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டது. தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், 'டி.என்.சேஷன் காலத்து நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்' எனக் கருத்து தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு சேஷன் அளித்துள்ள பங்களிப்பை இதைவிட தெளிவாக யாரும் எடுத்துரைத்திட முடியாது.  

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேஷன் மறைவு தொடர்பாக பேசும்போது, “இந்திய தேர்தல் ஆணையத்தை சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின் எனப் பிரித்துக்கொள்ளலாம். அப்போது வரை ஓர் அரசுத் துறையாக மட்டுமே பார்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தை ஒரு தனித்த அதிகாரம் பொருந்திய அரசியலமைப்பு நிறுவனமாகக் கட்டமைத்ததில் சேஷனின் பங்கு அளப்பரியது. தேர்தல் நேரங்களில் கண்காணிப்பாளர்களை நியமிக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் காரணமாக பல அரசியல்வாதிகளால் வெறுக்கப்பட்டார்.  

“தமிழகத்தில் அவர் நுழைய முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய கடமையைத் துணிச்சலுடன் செய்து முடித்து மிகப்பெரிய முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் செய்த சீர்திருத்தங்களின் பலனை நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம். இன்றைய அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் உண்டு. சட்டத்துக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வைத்தே ஒருவரால் நேர்மையாகச் செயல்பட்டு மிகப்பெரிய மாற்றங்களைச் செயல்படுத்த முடியும்' என்பதே அப் பாடமாகும். அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. அவரின் துணிச்சலான நடவடிக்கைகளுக்காக என்றுமே நினைவு கொள்ளப்படுவார்” என்றெழுத்துகிறார் டி.என். கிருஷ்ணமூர்த்தி.  

வாக்காளர்களை விலைகொடுத்து வாங்குவதோ அல்லது அவர்களை மிரட்டுவதோ கூடாது. தேர்தலின்போது மதுபானங்கள் விநியோகிப்பது கூடாது. அதேபோல், அரசு இயந்திரத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சாதி மற்றும் மதரீதியிலான பிரசாரங்கள் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் வாக்குசேகரிக்கக் கூடாது மற்றும் தேர்தல் நேரத்தில் முறையான அனுமதியின்றி அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது' என சேஷன், தனது பதவிக் காலத்தில் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு கண்டிப்புக் காட்டினார்.  

கள்ள ஓட்டு முறையைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது, இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோதே. அதேபோல், தேர்தல் நடத்தை விதிமுறைகள், வேட்பாளர்கள் அதிகபட்ச செலவுத் தொகை நிர்ணயம் என உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல் முறையிலிருந்து ஊழலை ஒழிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். கடந்த 1993-ம் ஆண்டு அவரது கண்காணிப்பின்கீழ் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது மிகச்சாதார ணமாக நடைபெற்று வந்த அந்தக் காலத்தில், முந்தைய தேர்தலில் 873ஆக இருந்த அந்த எண்ணிக்கை 1993-ம் ஆண்டு தேர்தலில் 273ஆகக் குறைந்தது. வாக்குப்பதிவு நாளன்று நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கையும் 36ல் இருந்து 3ஆகக் குறைந்தது உ.பியில். அதேபோல், முறைகேடுகளால் வாக்குப்பதிவு நிறுத்தப்படுவது அல்லது ஒத்திவைக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையும் முந்தைய 17 என்ற கணக்கில் இருந்து 3ஆக அந்தத் தேர்தலில் குறைந்தது.  

அதேபோல், 1994-ம் ஆண்டு ஆந்திரா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் கோவா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் தினசரி தேர்தல் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் வேட்பாளர்கள் மீது பதியப்பட்டன. 'அரசியல்வாதிகளைத் தனது காலை உணவாக எடுத்துக்கொள்பவர்' என்று சேஷன் குறித்து அப்போது பிரபலமாக கருத்து பகிரப்பட்டு வந்தது.

தனது நேர்மையான செயலுக்காக பலமுறை ஆளும் கட்சியோடும் அதிகார வட்டத்தோடும் நேருக்கு நேர் மல்லுக்கட்டியவர். 1994-ம் ஆண்டு தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர்களான சீதாராம் கேசரி மற்றும் கல்ப்நாத் ராய் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோதமாக வாக்காளர்களைக் கவர முயன்றதாக பிரதமரிடமே புகார் கொடுத்தார். அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக அரசியல் வட்டாரத்தில் அவர் குறித்து புகார் கிளம்பிய நேரத்தில், எந்தச் சலனமும் இல்லாமல் அதைக் கடந்துசென்றார்.  

1995-ல் டெல்லியிலிருந்து சென்னை வந்த டி.என்.சேஷனுக்கு அன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வினர் விமானநிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், ஏறக்குறைய 6 மணி நேரமாக அவரால் விமான நிலையத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டதால், அன்றைய தமிழக டி.ஜி.பி ஸ்ரீபால் தலைமையில் போலீஸார் அவரைப் பாதுகாப்பாக மீட்டுவந்தனர். அதேபோல், சென்னையில் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் அவருக்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எந்த எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் நேர்மையாகத் தனது கடமையைச் செய்துவந்தவர் அவர்.  

தேர்தலில் விளையாடும் பணம் மற்றும் அதிகார பலத்துக்கு எதிராக மட்டும் சேஷன் சட்டையை சுழற்றவில்லை. வாக்குப்பதிவுக்கு 6 நாள்களுக்கு முன்னரே பல மாநிலங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொகுதிக்கு 3 பேர் என மொத்தம் 15,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில அரசுகளின் ஊழியர்கள் 15 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்புப் பணிகளில் மட்டும் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,25,000-த்தைத் தொட்டது.  

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அரசியல்வாதிகள் மட்டுமின்றி உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தவர் டி.என்.சேஷன். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அடுத்த ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் டி.என்.சேஷன் போட்டியிட்டார். ஆனால், கே.ஆர்.நாராயணன் அதில் வென்றார்.  

அவர் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்திய ஜனநாயத்தை வலிமையாகவும் அதேநேரம் மக்கள் அதிக அளவில் பங்கேற்கவும் வழிவகை செய்தது.

ஷோபனா

Comments