பாரத தேசத்தின் பெருமையை பார் அறியச் செய்த அதிசய புருஷர் | தினகரன் வாரமஞ்சரி

பாரத தேசத்தின் பெருமையை பார் அறியச் செய்த அதிசய புருஷர்

அமெரிக்க பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தை சுவாமிஜி தொலைத்துவிட்டார். அவருக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியொன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தார்.  

அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என தெருவோரத்தில் அமர்ந்துவிட்டார். இறைவன் அருளால் ஏதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர்வீட்டின் கதவு திறக்கப்பட்டது. ஒரு பெண்மணி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி "ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்களா?" என வினவினாள். மிஸஸ் ஜோர்ஜ்ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துகொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்பு கிடைத்தது.  

1893ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதியன்று சர்வ சமயப் பேரவை கூடியது. அந்தக் குழுத் தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000பேரைப் பார்த்ததும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் அமெரிக்க சகோதரி சகோதரர்களே எனக் கூறி தன் உரையைத் தொடங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து இரண்டு நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் ஏழாயிரம் பேர் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி ஏற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார்.  

இந்த பேரவையில் இந்துமத தர்மத்தின்படி அனைத்து மதங்களும் உண்மையே, அனைத்து மதங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முழங்கினார். சுவாமிஜியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளிவந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது. பின்னர் நடந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. 1893ஆம் செப்டம்பர் 11ஆம் திகதி சர்வமத மகா சபையில் கலந்துகொண்டு இந்தியாவின் ஆன்மீக சக்தியை உலகெங்கும் அறியச் செய்து உலகப்புகழ் பெற்றார்.  

சோ. வினோஜ்குமார்,  
தொழில்நுட்ப பீடம்,  
யாழ். பல்கலைக்கழகம்,  கிளிநொச்சி.

Comments