ஜனநாயகப் புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

ஜனநாயகப் புரட்சி

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற முடியாதென எதிர்ப்பை வெளிக்காட்டியவர் ரணில் விக்கிரமசிங்க. அந்த 52 நாள் அமளியை இன்னும் மறந்துவிட முடியவில்லை. 

கடந்த 16ம் திகதி (16-.11-.2019) மக்கள் வழங்கிய தீர்ப்பும் உறுதியான ஆணையும் அனைத்துக்கும் பதில் கொடுத்துவிட்டது.  மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியை இராஜினாமாச் செய்தது மட்டுமல்ல, அலரிமாளிகையிலிருந்தும் தானாகவே வெளியேறினார். 

ஆம், நவம்பர்-16, இலங்கையின் அரசியலைப் புரட்டிப்போட்ட ஒரு தினம். அடம் பிடித்த அரசியல் பிரமுகர்களையெல்லாம் ஆட்டங்காண வைத்த தினமாகவும் இதனைக் கொள்ளலாம். சண்டைகள் இல்லை; வன்முறைகள் இல்லை; இரத்தம் சிந்தவில்லை; ஏன்? கள்ளத்தனமும் இருக்கவில்லை. அனைத்துக்குமே முற்றுப்புள்ளி வைத்து நடந்த மிகவும் ஒழுக்கமான தேர்தலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. 

இலங்கை தேர்தல் வரலாற்றில் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களை பேணிய ஒரு தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறதென்பது நமக்கெல்லாம் திருப்தி தரும் ஒருவிடயம். 

தேர்தல் என்றாலே கிலி கொண்டிருந்த மக்களுக்கு, நவம்பர்- 16 ஜனாதிபதித் தேர்தல், புதுத்தெம்பை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை நிறைந்த மனதுடன் நாம் சொல்லித் தான் ஆகவேண்டும். 

ஜனநாயகத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகளுக்கும் ஆரூடங்களுக்கும் பலத்த அடிகொடுத்து மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு புதிய பிரதமரும் பதவியேற்றுவிட்டார். அதேநேரம், 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்பட்டிருக்கிறது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் பதவியேற்றிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு சர்வதேசமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

10 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்து நாட்டுக்கு தலைமைத்துவத்தைக் கொடுத்திருந்த மஹிந்த ராஜபக்ச, சாதாரண எம்.பியாக பாராளுமன்றம் சென்றார். அதன் பின்னர், பிரதமராக அவர் நியமனம் பெற்றிருக்கிறார். அவருடைய இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது உலகமே வியந்து நின்றது. 

குடும்ப ஆட்சி... குடும்ப ஆட்சி என எவர் கூக்குரலிட்டபோதும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும் இந்த நாட்டு மக்கள் முழுமையாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதற்கு, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கட்டியம் கூறியிருக்கிறது.  மக்களின் மனநிலையும், அவர்களது உள்ளக் குமுறல்களும் இந்தத் தேர்தல் முடிவுகளில் தெள்ளத் தெளிவாக பிரதிபலிக்கிறது.

கடந்த நான்காண்டுகால ஆட்சி, நல்லாட்சி என்ற பெயரில் இருந்தாலும் ஒரு ஸ்திரமான ஆட்சியாக அதனை அடையாளம் காணமுடியவில்லை.  

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அப்போதையப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் ஏற்பட்ட பிளவு, நாட்டில் ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்தவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மேடைகளில் தூற்றித்திரிவதும், ஒருவரின் தீர்மானத்தை மற்றவர் நிராகரிப்பதும் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்ததோடு வேடிக்கையாகவும் பார்க்கப்பட்டது. 

குறிப்பாகச் சொன்னால், நல்லாட்சி என்ற பதத்தையே சகல மக்களும் வெறுப்புடன் நோக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது. 

ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்போமென ஆட்சிக்கு வந்த மைத்திரியும் ரணிலும் ஊழலுக்குத் துணைபோனார்கள் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. 

உண்மையும் அதுதான், முன்னைய அரசின் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நல்லாட்சித் தலைவர்களான மைத்திரியும் ரணிலும், ஆட்சிப் பொறுப்பையேற்று சுமார் இரண்டு மாதங்களில் இலங்கை மத்தியவங்கி பிணைமுறி மோசடிகளில் சிக்கிக் கொண்டனர். 

இதேபோல, தீர்மானங்கள் எடுப்பதிலும் ரணிலுக்கும் மைத்திரிக்குமிடையில் மோதல்களே நிலவி வந்தன. அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற ஒரு முடிவு அடுத்த நாள் ஜனாதிபதியினால் ரத்துச் செய்யப்படும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்து கொண்டேயிருந்தது. 

இவை எல்லாம் ஆட்சியில் உறுதியின்மையையே காட்டி நின்றது. நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை மக்கள் வேடிக்கையாகப் பேசும் அளவுக்கு நாடு தள்ளப்பட்டதென்பதுதான் யதார்த்தமான உண்மை. 

இந்நிலையில், நல்லாட்சியில் மக்களுக்கு நிம்மதி ஏற்படாது என்பதை பொதுஜன பெரமுன மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தியதனால்தான் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிக்கனியை தனதாக்கிக் கொண்டார். 

கடந்த ஆண்டு நடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் தென்பகுதியில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்று கூடுதலான உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றிக்கொண்டது. இதற்குப் பின்பாவது மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. 

இருவருக்குமிடையில் ஏற்பட்ட பிளவு. நாட்டின் எதிர்பார்ப்பையே சின்னாபின்னமாக்கியது. இரு தலைவர்களின் எதிர்ப்பு அரசியல் இலங்கையில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியதென்பதை மறுக்க முடியவில்லை. 

கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஏப்ரல் 21 (ஈஸ்டர் ஞாயிறு) தற்கொலைத்தாக்குதல்கள் ஆகும். இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குகிறதென்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல, முழுநாட்டிலும் ஏற்படுத்தியது. 

சுருங்கச் சொன்னால், குண்டுத்தாக்குதல்களால் முழுநாடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ச. 

பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை துணிவுடன் எதிர்கொள்ளக் கூடிய தலைவர் கோட்டாபய தான் என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டனர். இதனால்தான் அதிகமான சிங்கள மக்கள் அவருக்கு வாக்குகளை வாரி வழங்கினர். 90 வீதமான சிங்கள மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து ஆதரவளித்திருக்கிறார்கள்.  அவரை எதிர்த்து வாக்களித்தவர்கள் கூட நாட்டுக்கு பொருத்தமான தலைவர் கோட்டாபய என்பதை மறுக்கவில்லை. 

தேர்தல்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைக் கொண்டே ஒருகாலத்தில் மக்கள் வாக்களித்து ஆட்சிமாற்றங்களைச் செய்தார்கள். ஜே.ஆர். காலத்திலும் சரி, பிரேமதாச ஆட்சியிலும் சரி சந்திரனியிலிருந்தாவது அரிசியைக் கொண்டு வந்து குறைந்த விலையில் தருவோமென வாக்குறுதி வழங்கினர். ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. குறைந்த விலையில் சீனி, பருப்புத் தருவோம் என்றனர். ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. பாணை மூன்று ரூபாவுக்கு வழங்குவோமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே அறிவித்தார். ஆட்சியைக் கைப்பற்றினார். 

ஆனால், நவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலை முற்றிலும் வேறுபடுத்தியே பார்க்க முடிகின்றது. தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போமென்பதே பொதுஜனபெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அறிவிப்பாக இருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென்பதையே தேர்தல் முடிவு உறுதியுடன் கூறி நிற்கிறது. 

பாணும் வேண்டாம்; பருப்பும் வேண்டாம்; இலவசங்களும் வேண்டாம்; நாட்டைக் காப்பாற்றிக் கொடுங்கள் என்பதே தென்பகுதி சிங்கள மக்கள் கொடுத்திருக்கும் அழுத்தமான செய்தியாகும்.  ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் வேறுவிதமான செய்தியையே சொல்லியிருக்கிறார்கள். தமிழ்த்தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் சிறுபான்மை மக்களை திசை திருப்பியிருக்கிறார்கள் என்பது கவலையுடன் நோக்கப்பட வேண்டிய விடயமாகும். சிறுபான்மையினர் மத்தியில் விதைக்கப்பட்ட தவறான பரப்புரைகள், வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை மறுக்க முடியாது. 

உண்மையில், நாட்டு மக்கள் இரண்டாகப்பிரிந்தே வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை மக்கள் சஜித் பிரேமதாசவுக்கும் பெரும்பான்மை மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கும் தங்கள் வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். 

யுத்தத்தை நடத்திய இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு கூடுதல் வாக்குகளை தமிழர்கள் வழங்கினார்கள். (2010 தேர்தலில்) பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்களும் முஸ்லிம்களும் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்க பின்வாங்கியது என்பது? கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.  

தேர்தல் நடந்து முடிந்த கதையாகிவிட்டது. இப்போது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் மஹிந்த ராஜபக்ச. இருவரும் பலம்பொருந்திய தலைவர்கள் என்பதை நாடு மட்டுமல்ல, உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. 

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்பு அவர் ஆற்றிய உரையும், இடைக்கால அமைச்சரவை பதவியேற்றபின் போது அவர் தெரிவித்த அறிவுறுத்தல்கள் நாட்டு மக்கள் மத்தியில். புதுத்தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது.  உண்மையில், நம்பர் 16ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பு, ஒரு ஜனநாயகப் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.

Comments