முற்போக்குக் கவிஞர் ஏ. இக்பால் | தினகரன் வாரமஞ்சரி

முற்போக்குக் கவிஞர் ஏ. இக்பால்

முற்போக்கு சிந்தனையும் முற்போக்கு இலக்கிய அணியினருடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருந்த பல்துறை எழுத்தாற்றல் கொண்டவர் கவிஞர் ஏ. இக்பால். 

ஒரு கவிஞராகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி, ஒரு கவிஞராகவே பிரபல்யம் கொண்டிருந்தாலும் அவர் ஒரு அற்புதமான கட்டுரையாளர். தேடல்கள் மிகுந்த ஆய்வாளர் சிறந்த விமர்சகர் வித்தியாசமான சிறுகதையாளர், எனப் பன்முக ஆளுமை கொண்டவர். 

கவிதை, சிறுகதைகளை விட விமர்சனங்களாகவும் வரலாற்று ஆய்வுகளாகவும் அதிகம் எழுதியுள்ளார். காலத்தால் மறக்கப்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் பலரை இவருடைய வரலாற்று ஆய்வுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அக்கறைப்பற்றில் 11.02.1938ல் பிறந்தவர் கவிஞர் இக்பால். 

தந்தை அலியார் லெவ்வை மரைக்கார் ஆதம் லெவ்வை. தாய் முஹம்மதுத் தம்பி றைகானத்தும்மா. 

அக்கறைப்பற்று ஆர்.ஸீ.எம். றோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்விகற்றவர். பாடசாலைக் கையெழுத்துச் சஞ்சிகையான கலாவல்லியின் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டபோது இலக்கிய ஆர்வம் மிகுந்த ஒரு 16வயது மாணவர் இவர்.  

இதுவே இவருடைய எழுத்து வாழ்வின் ஆரம்ப காலமும் ஆனது (1954) 

கலாவல்லியே தனது கவிதைத் துறைக்கும் எழுத்துத் துறைக்கும் கால்கோலிட்டதாக அவரே பதிவு செய்துள்ளார்.  

1956காலப்பகுதியில் இக்பாலின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. அட்டாளைச்சேனை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு கிளையாக அக்கரைப்பற்று முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அ.ஸ.அப்துஸ்ஸமது தலைமையில் உருவாக்கி செயற்பட்டார். முஸ்லிம் சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடியாகக் கருதப்பட்டவர் அக்கரைப்பற்றூர் அனாசானா. ஏ.இக்பால் எழுத்துலகில் ஆழத்தடம் பதிக்கக் காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவர் அ.ஸ.அப்துஸ்ஸமது.  

 1998ல் வெளியான தனது ‘மாயத்தோற்றம்’ சிறுகதை நூலை அனாசானாவுக்கும், எம்.வை.எம். முஸ்லிம் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் இவர். 

கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1957லிருந்தே ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1962ல் தர்காநகரைச் சேர்ந்த ஆசிரியை றிபாயாவைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டதன் பின் தர்கா நகர்வாசியானார். அரை நூற்றாண்டுகளுக்கு மேலான காலம் அவர் இலக்கியக் கோலோச்சி வாழ்ந்த மண் தர்காநகர். வாழ்ந்து மறைந்த மண் தர்கா நகர். 

1965ல் தனது 27ஆவது வயதில் அவர் வெளியிட்ட முதல் நூல் ‘முஸ்லிம் கலைச்சுடர் மணிகள்’ தர்கா நகரில் இருந்து வெளிவந்ததுதான். இந்த நூலில் ஈழத்து முஸ்லிம் கல்விப் பணிகளுக்குச் சேவையாற்றிய மூத்த கல்விமான்கள் பற்றிய அவர்தம் கல்விப்பணிகள் பற்றிய சுருக்க வரலாறு பதியப்பட்டுள்ளது. அறிஞர் சித்திலெவ்வை. மர்ஹூம், டி.பி. ஜெயா, நீதியரசர் எம்.டி அக்பர். அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ். கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஆசிரியர் ஐ.எல்.எம். மஷ்ஹீர், ஆசிரியர் எம்.ஏ. பாரி, திருமதி பித்தாரா காலித் ஆகியோரை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.  

1969ல் வெளிவந்த இக்பாலின் இரண்டாவது நூல் ‘மௌலானா ரூமியின் சிந்தனைகள்’ இது ஒரு கவிதை நூல். பாரசீகக் கவிஞர் மௌலானா ரூமியின் கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. 

கவிஞர் இக்பாலாக்கு ஏகோபித்த புகழையும், இலக்கிய அந்தஸ்தினையும், அரச சாகித்திய மண்டலத்தின் விருதினையும் பெற்றுத் தந்த நூல் இவருடைய மூன்றாவது நூலாகிய ‘மறுமலர்ச்சித்தந்தை’ 1971ல் வெளிவந்த இந்த நூல் இலங்கையின் முதல் தமிழ் நாவலான அஸன்பேயுடைய கதையைத்தந்த அறிஞர் சித்திலெவ்வை அவர்களை அறிமுகம் செய்கின்ற ஒரு வரலாற்று ஆய்வு நூல். தமிழில் சித்திலெவ்வை பற்றிய ஆய்வில் ஒருமுன்னோடி முயற்சி இந்த நூல். ஈழத்து முஸ்லிம்களின் கல்விக்கும், விழிப்புணர்வுக்கும், உயர்வுக்கும் பல வழிகளிலும் உழைத்தவரான முன்னோடி அறிஞர் முகம்மது காசிம் சித்திலெவ்வை பற்றிய இந்த ஆய்வு நூலுக்காக 1972ல் சாகித்திய விருதினை பெற்றவர் ஜனாப் இக்பால். 

பாக்கீர் மாக்கார் 1990, நம்பமுடியாத உண்மைகள் வரலாற்றுத் துணுக்குகள்- 1992, கல்வி ஊற்றுக்கண்களில் ஒன்று 1994, இலக்கிய ஊற்று 1996, மாயத்தோற்றம் சிறுகதைகள் 1998, புதுமை கவிதைத் தொகுதி 1999, பிரசுரம்  பெறாத கவிதைகள் 2000. வித்து- உருவகக் கதைகள் 2007. மெய்ம்மை – கவிதைக்கதைகள் 2007என்று பத்துக்கும் மேற்பட்ட நூல்களை நமது இலக்கிய உலகிற்கு இந்த ஒரு பன்னூலாசிரியர் இவர். 

இலக்கிய மணி, இலக்கியவாருதி, இலக்கிய விற்பன்னர், கலாபூஷணம், கலைமணிபோன்ற பல அரச மற்றும் தனியார் அமைப்புக்களின் விருதுகளையும் பெற்றுள்ளார். 

ஆசிரியத் தொழிலில் அடியெடுத்துவைத்த நாள்முதல், கற்பித்தலோடும் இலக்கியப் பணிகளோடும், கருத்தாடல்கள், கவியரங்குகள், மூத்த இலக்கியவாதிகளுடனான சந்திப்புகள் உறவுகள் என்று இளம்மாணவ சந்ததியினர் பலரை இலக்கியத்துக்குள் வழிநடத்திய பெருமகன் இந்த கலாபூஷண, கலைமணி, கவிஞர் ஏ.இக்பால். எண்பது வருடம் வாழ்ந்துதான் மறைந்திருக்கின்றார் என்றாலும் அவருடைய மரணச் செய்தி கேட்ட இலக்கிய உள்ளங்கள் துயருற்று வாடின என்பது மறுக்கமுடியாதது. 

தனது 80ஆவது வயதில் 04/08/2017ல் கவிஞர் இக்பால் காலமானார்.   

தெளிவத்தை ஜோசப்

Comments