நாம் மாறாதவரை அரசாங்கத்தால் எதுவும் செய்துவிட முடியாது | தினகரன் வாரமஞ்சரி

நாம் மாறாதவரை அரசாங்கத்தால் எதுவும் செய்துவிட முடியாது

மக்களினம் வாழத் தொடங்கிய காலம் என்பது அவர்கள் விவசாய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கிய காலம்தான். அதற்கு முன்பாக அவர்களிடம் சொந்தமாக கொள்ளக்கூடிய சொத்து என்பது, கால்நடைகள் மட்டும்தான். அவற்றை மேய்சல் நிலங்களுக்கு ஓட்டிச் சென்று மேயவைப்பதும், அவற்றை ஏனைய காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றுவதும் ஒரு பாரிய வேலையாக அவர்களுக்கிருந்தது. அதில்தான் அவர்களது வாழ்க்கையும் இருந்தது. வெறுமனே பாலும் இறைச்சியும் காட்டில் தாமாக விளையும் காய்கறிப் பொருட்களுடன் உணவாயிற்று. இவர்கள் குழுக்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் இதனாலேயே கட்டமைக்கப்பட்டது. அங்கு ஒரு குழுத்தலைமை அவர்களை வழிநடத்தியது அது அநேகமாக பெண்ணாக இருந்தது.  

 காலம் மாறியது இந்த குழுக்கள் வல்லமை கொண்டவர்களால் அடித்து நொருக்கப்பட்டு பெருந்தலைவனின் கீழ் வந்தது. நாடோடிகளின் பொதுச் சொத்தான மேய்ச்சற் தரவைகள் விவசாய நிலங்களாகவும் கட்டடங்களாகவும் மாறிப்போயின. வாழ்க்கையின் நெறிகளும் ஒழுக்கமும் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு மாறிய போது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவை அழிந்து போயின.  

 தேவைகள் அனைத்தும் குழுக்களின் ஒவ்வொரு பிரசைக்கும் என்ற நிலை மாறி அவையனைத்தும் தலைமைக்கும் தலைமையின் சலுகை பெற்றோருக்குமானதாக மாறியது தலைவனும் கூடி வேட்டையாடி பகிர்ந்துண்டது போய் தலைவன் ஏவலாட்களை வைத்தே தனக்கான செல்வத்தை பெற்றுக்கொண்டு சொகுசாக வாழ்ந்தான். சொத்துகளை உருவாக்கும்போதும் அதை அனுபவிக்கும்போதும் பொதுநலம் மறக்கடிக்கப்பட்டு சுயநலம் மிகுந்தது. விளைவுகளைத்தான் நாம் நேரிலேயே பார்க்கிறோம். ஒரு போர்க்களத்திலும் நின்று ரத்தம் சிந்தாத ராணுவத்தலைமைக்கு விருதுகளும் பொன்னாடைகளும் போய்சேர, அந்த களத்தில் நின்று வீர மரணம் அடைந்தவர்களும் தம் உடல் உறுப்புகளை இழந்தவர்களும், தமது குடும்பத்தினரை தவிக்கவிட்டதைத்தான் நாம் பார்க்கிறோம்.  

 ஒரு ராணுவ கடமை என்பது நான் முதற்கூறிய குழு நடைமுறைக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள அனைத்து பொருட்களும் பொதுவானவை. அவரவர் கடமைகளுக்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேற்றளத்தில் உள்ளவரே கட்டளைகளை இடுகிறார். அதை நிறைவேற்றும் பொறுப்பு கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் தலையாய கடமையாகிறது.  

 இதே நடைமுறைதான் போர்க்காலத்தின் இயக்கங்களும் கடைப்பிடித்தன. ெபரிதாக ஒன்றுமில்லை. ஒரு சின்ன பழமொழி மிக ரகசியமாக புழக்கத்தில் இருந்தது. வெண்டா தலைவர் தோத்தா தளபதி என்று. வெற்றிகளின் காரணகர்த்தா தலைமைதான் தோல்விகள் எப்போதும் கீழ்மட்டத்தின் அயண்டையீனமாகவே தெரியும்.  

அநேகமான விடயங்களில் இது மயக்கத்தை ஏற்படுத்திய போதும் பண்டைய குழுக்களாக வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப்போக்கும் இப்படித்தான் அமைந்திருந்தது. அவர்கள் தமது யுத்த தந்திரங்களை விலங்குகளிடமிருந்தே கற்றார்கள். விலங்குளை மறந்து வாழும் காலம் வந்தபோது அவர்களே விலங்குகளாக மாறத் தொடங்கிவிட்டனர். எப்படி மற்றவர்களை அடித்து மடக்குவது. எப்படி பொதுச் சொத்துகளை தமக்கானதாக ஆக்கிக் கொள்ளலாம் எப்படி அதிகார மையத்தை திருப்திப்படுத்தலாம்.  

 பெரிய வளங்களை அழித்தும் அவற்றை நாசப்படுத்தியும் அவர்கள் வாழத்தலைப்படுகின்றனர். அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க அரச அதிகாரிகள் தயாராகவே உள்ளனர். அவர்களை திருப்தி செய்து அனுமதிபெறும் வித்தை இவர்களுக்கு தெரிந்திருக்கிறது.  

 சும்மா ஒரு பேச்சுக்கு என் பேத்தியிடம் கேட்டேன். இவ்வளவு பெரிய கண்டு பிடிப்புகளை செய்த விஞ்ஞானிகளுக்கு இந்த நுளம்பை ஓழிக்க முடியவில்லையே என்று. அவள் என்னை கேவலமாகப் பார்த்து சிரித்தாள். அட அப்பாவி அம்மம்மா நுளம்புகளை முற்றாக அழித்தால் மனித இனமே அபாயத்துக்குள் வந்து விடும். அதை கட்டுக்குள் வைத்திருக்கலாமே தவிர ஒழித்துவிட முடியாது. கூடாது என்று. எனக்கு இது புரியவேயில்லை. சிறு வண்டுகளும், சிறு தேனீயும் இல்லாது போனால் மனித இனமே அழிந்து விடும் என்பதாக ஒரு கட்டுரை படித்தேன். நியாயமான கட்டுரைதான். இப்போது எனது பழங்கால வாழ்க்கைக்கு திரும்பிப் பார்த்தால் பெரிய உயிர்கள் அனைத்தும் சிறிய உயிர்களில்தான் தங்கி வாழ்கின்றன.  

 அண்மையில் நான் படித்த ஒரு வரலாற்று நாவலின் கதாபாத்திரம் ஒன்று இப்படி சொல்கிறது. சின்னஞ்சிறிய புல்தானே என்று நினைக்காதே இந்தப்புல்வெளிகள் அழிக்கப்பட்டால் நமது கால்நடைகள் மேய்ச்சலின்றி செத்துப்போகும். நாமும் உணவின்றி செத்துப்போகலாம். நாம் இறந்த பிறகு எங்கு போவோம். எமது உடல்களையும் எம்மை வாழவைத்த விலங்குகளுக்கு உணவாக வான்புதைப்பு செய்வோம் என்கிறது. பெட்டிகளில் வைத்து புதைக்கப்பட்டு புழுக்களும் பூச்சிகளும் தின்னும் கேவலம் எமக்கு தேவையில்லை என்கிறது அதேபோல ஒரு பெட்டிக்காக ஒரு மரம் உயிர்விடுவதையும் கண்டிக்கிறார். இந்த மக்களிடமிருந்து நாம் பகுத்தறிவை கற்றுக்கொள்ள மாட்டோமா.  

எங்களுடைய பேராசைக்காக பெரிய பெரிய குளங்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வனத்திலும் வனத்துக்கு வெளியேயும் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. மண் அகழப்படுகிறது ஆற்றங்கரைகள் மணற்கொள்ளையர்களால் மாற்றியமைக்கப்படுகின்றன. புல் வளர்ந்து மேய்சற்றரவைகளாக இருந்த பெருநிலங்கள் அடாத்துக் குடியேற்றக்காரர்களால் அழிக்கப்பட்டுவிட்டன.

இப்போது கால்நடைகள் நகர வீதிகளில் அலைவதும், தொடர்வண்டியில் அடிபட்டுச்சாவதும் சரளமாக காணக்கூடியதாக உள்ளது. பொதுச் சொத்துகள் அரச சொத்துக்கள் என்று என்ன மீதமிருக்கிறது. பாவப்பட்ட ஏழைமக்களின் வாழ்க்கைக்கான மூலாதாரங்கள் பெருந்தனக்காரர்களால் கொள்ளையடிக்கப்படும்போது, சட்டம் தனது கண்களை இறுக்கி மூடிக்கொண்டிருப்பதுதான் பெரிய வேடிக்கை. அரசியல்வாதிகளோ தமக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளுக்காக பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய சொத்துகளை அழிக்க துணை போகிறார்கள்.  

படிப்பறிவில்லாத நாடோடி மக்களிடமிருந்த வளங்களைப்பாதுகாக்கும் பண்பு நாகரீகமயப்பட்ட படித்த மனிதர்களிடம் ஏன் இல்லாமல் போனது. நாட்டின் எதிர்காலத்தின்மீது அக்கறையற்றிருக்கும் ஒரு நிர்வாகம் மக்களுக்கு தேவையா? விலங்குகள் கூட தமது குட்டிகள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றுதான் எண்ணுகின்றன. ஆனால் நாம் நமது சந்ததிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம். அவர்களது சுவாசக்காற்றில் நஞ்சேற்றிக்கொண்டிருக்கிறோம். அவர்களது உணவில் நஞ்சேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வாழவேண்டிய மண்ணின் வளங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.  

 நாம் மறுபடி ஒரு நாடோடி வாழ்க்கைக்கு எம்மை தயார்படுத்திக் கொள்கிறோம். ஆம் வளமற்ற வாழ்க்கையை நாம் பணமுள்ள வாழ்க்கையாக மாற்றலாம். ஆனால் பணத்தை அப்படியே சாப்பிட முடியாது பணத்தை சுவாசிக்க முடியாது. பணத்தால் வாங்கமுடியாத எவ்வளோ வளங்களை எமக்கு இயற்கை தந்தது அவற்றை நாமாக அழித்துவிட்டு நாளை அரசாங்கத்தை நோக்கி கதறினால், அதுதான் நாங்கள் தோற்றுப்போனதன் அறிகுறி, ஆம் வென்றால் அரசு தோற்றால் மக்களா? இங்கே அரசு என்பது மக்கள்தான். நாம் மாறாதவரை அரசாங்கத்தால் எதுவும் செய்துவிட முடியாது.

தமிழ்க் கவி பேசுகின்றார்  

Comments