வீரியமிழக்கத் தொடங்கிய ஊவா – வெல்லஸ்ஸ புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

வீரியமிழக்கத் தொடங்கிய ஊவா – வெல்லஸ்ஸ புரட்சி

1818மே மாத பிற்பகுதியில் பெரும் பீதிக்குள்ளாகியிருந்த ஆங்கிலேய இராணுவத்திற்கு போராளிகளின் தாக்குதல்கள் குறைவடைந்து காணப்பட்டமை சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. வெல்லன்க கஸ்ஹின்ன என்னுமிடத்தில் வைத்து கெப்பெட்டிப்பொலையின் பாதுகாப்பு வீரர்கள் இருவர் ஆங்கிலேய இராணுவத்தின் கைதிகளாகியதைத் தொடர்ந்து பல முக்கிய தகவல்களை ஆங்கிலேயர் அவர்களிடமிருந்து கறந்து கொள்ள முடிந்தது. 

கெப்பெட்டிபொல தலைமையில் 2000பேருக்குக் குறையாத போராளிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் எனினும் வெடிமருந்து தட்டுப்பாடு நிலவுவதனால் கெப்பெட்டிப் பொலையின் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொள்ளும் நிலையில் தற்போது இல்லையெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். 

வாக்கு மூலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். அண்மைக்காலமாக கெப்பெட்டிப்பொல வயிற்றோட்ட வியாதியினால் அவதியுறுவதாகவும் அதன் காரணமாகவும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகள் மந்தநிலையடைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  இக்காலக்கட்டத்தில் கெப்பெட்டிப்பொல சுறுசுறுப்பாக கிளர்ச்சி நடவடிக்கைகளில் பங்குகொள்ள இயலாத நிலையில் இருந்தமை சுதந்திர போராட்டத்தின் திருப்பு முனையாகியது. 

கைதிகளின் வாக்கு மூலங்களில்; கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சுதேசிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக சக்திவாய்ந்ததாகவும், எந்நேரமும் எதிரிகளின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கும் தயார் நிலையில் கிளர்ச்சியாளர்கள் தயாராக இருப்பதாகவும் ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் கைதானவர்கள் மூலமாக அறிந்து கொண்டனர். 

மாபெரும் பலத்துடன் ஆங்கிலேயர்கள் கோட்டைகளைத் தகர்த்து முன்னேறிய கெப்பெட்டிப்பொல பின்வாங்க நேர்ந்தது அவனைப் பீடித்த வியாதி காரணமாகவே என ஆளுநர் பிரவுன்றிக் நன்கறிந்து கொண்டான். இதேவேளை கண்டியை அண்டிய ஊராகிய அம்பிட்டிய கிளர்ச்சியாளர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்டியில் அமைந்துள்ள தனது வசிப்பிடத்தைக் கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிடப் போவதாகவும் ஆளுநர் அறிந்தான். கெப்பெட்டிப்பொல சுகதேகியாக இருந்திருப்பின் இந்நேரம் கண்டியைக் கைவிட்டு மீண்டும் கரையோர பிரதேசத்திற்கு தாம் சென்றிருக்க நேர்ந்திருக்கலாமென கவலையுடன் தெரிவித்துக் கொண்டான் பிரவுன்றிக். 

கிளர்ச்சிப் போராளிகளின் தாக்குதல்கள் நாளாந்தம் குறைந்து வந்தன. இதேவேளை கோட்டைக்குள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த ஆங்கிலேயரும் ஓரளவுக்கு ஆசுவாசமடைந்தனர். ஜூன் மாதம் 17ம் திகதி இந்தியாவிலிருந்து வந்து கரைசேர்ந்த மேலதிக இராணுவம் பதுளையை வந்தடைந்தது. கண்டியிலிருந்து பதுளை வரையில் அமைந்திருந்த இராணுவ முகாம்கள் உடனடியாக திருத்தியமைக்கப்பட்டு புத்தூக்கம் கண்டன. ஜூலை மாதத்தில் களத்தில் 5193வீரர்களை ஆங்கிலேய அரசு கொண்டிருந்தது. வெல்லங்கஸ்ஹின்ன இராணுவ முகாமுக்குள் உயிருக்கு அஞ்சி பாதுகாப்புடன் இருந்த மேஜர் கெலி மீண்டும் செயலாற்றத் தொடங்கினான். 

புதிதாக வந்து சேர்ந்த இந்திய மேலதிக இராணுவ படையணியுடன் துப்பிற்றிய வழியாக தம்பவின்ன வரை பயணமானான். ஆங்கிலேய, இந்திய, ஆபிரிக்க வீரர்கள் 280பேரும் கூலிப்படையினர் 500பேரும் அவ்வணியில் அடங்கியிருந்தனர். 17மைல்களைக் கடந்து பரணகம முகாம்வரை அவ்வணி நகர்ந்தது. 

தம்பவின்னையில் வழமை போல போராளிகளின் ‘ஊ’ கூச்சல் வரவேற்பு மேஜர் கெலீக்குக் கிட்டியது. அதனால் கோபமுற்ற கெலீ அதுவரை காலமும் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாதிருந்த தம்பவின்ன கிராமத்தைத் தீயிட்டுக் கொளுத்தினான். அக்கிராமம் முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியதை நேரடியாக பார்த்து புளகாங்கிதம் அடைந்த மேஜர் கெலீ வழியில் அகப்பட்ட சகல கிராமங்களையும் தீமூட்டினான். பரணகம முகாமைக் கடந்து சென்ற கெலியின் படை தொடன்வட்டு மலையிடுக்கையடைந்ததும் அங்கு காவலரண் ஒன்றை அமைந்தான். அதன் பின்னர் அள்கரனோயா நோக்கி தனது படையணியை வழி நடத்தினான் மேஜர். கைது செய்யப்பட்ட கெப்பெட்டிப் பொலையின் போராளிகள் இருவரும் கெலியுடன் இருந்தமையினால் பல்வேறு தகவல்களைச் சேகரித்துக்கொள்ள முடிந்தது. 

அவ்விருவரும் புதிய மன்னனின் தேவைக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு பற்றிய தகவல்களை கூறினர். அதன் பிரகாரம் அள்கரனோயாவில் அமைந்திருந்த மன்னனின் இல்லம் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு எவரும் இல்லாமையினால் பாழடைந்து கிடந்தது அரச மாளிகை. 

பதுளை பிராந்தியத்தில் அப்பாவி மக்களின் உடைமைகளை தீயிட்டுக் கொளுத்தி கிராமங்களை அழித்து மேலும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான் மேஜர் கெலி மக்கள் நடமாட்டமற்ற சூன்ய பிரதேசங்களையே அவன் கடந்து செல்ல நேரிட்டது. வீடுகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன. கிராமத்தவர் ஒருவரேனும் காணக்கிடைக்கவில்லை. அக்கிராமங்களில் இருந்த பலாமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் கனிதரும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுக்கிடந்தன. இது பற்றி விசாரித்தபோது ஒருவாரத்திற்கு முன்னரே மத்துரட்ட பிரதேசத்துக்குள் பிரவேசித்த ப்ளெக்கன் பார்க் சகல வீடுகளையும் கொள்ளையிட்டும் உற்பத்திகளை தீவைத்துக் கொளுத்தியும் அட்டகாசம் புரிந்துள்ளமை தெரியவந்தது. மக்களின் கால் நடைகளை கூட்டம் கூட்டமாக கொண்டுபோய் கொன்றுவிட்டமையும் கிராமங்கள் வெறிச்சோடி கிடப்பதற்குக் காரணமென அறிய முடிந்தது. தம்மிடம் இருந்த அனைத்துச் சொத்துக்களும் அழிக்கப்படபின்னர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் கூட்டம் சுற்றியுள்ள காடுகளிலும், மலை முகடுகளிலும் ஒளிந்திருப்பதாகவும் மேஜர் கெலி அறிந்து கொண்டான். ஏது மறியா அப்பாவிமக்கள் இவ்வாறு காடுமலை நாடி உயிருக்கஞ்சி தவிக்கும் நிலையை ஊவா – வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டம் ஏற்படுத்தியது. 

28ம் திகதி மேஜர் கெலி கண்டி நகருக்கு வந்துவிட்டதாக ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. அவ்வறிவித்தலைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் ஊவாவில் தரித்து நின்று கிளர்ச்சியாளர்களை அடக்கிய வீரனாக கெலியை பாராட்டியிருந்தான் ஆளுநர் பிரவுன்றிக். 

படிப்படியாக சுதந்திர போராட்ட வீரர்கள் களைத்துப்போக ஆரம்பித்தனர். போராட்ட களங்களில் அடைந்த தோல்விகளினால் உற்சாகமிழப்பதும், வெற்றியினால் களிப்படைதலும் இயல்பானதேயாகும். எங்கோ ஓர் இடத்தில் பெறும் பெருவெற்றி மூலம் இழந்த உற்சாகத்தை மீண்டும் போராளிகள் பெறுவது சிரமமாகவே தென்பட்டது. இப்போது எதிரி தம்மை மிஞ்சிய பலசாலிகளாகிவிட்டமையினால் வெற்றிபெறுவது இயலாத விடயமென கருதியமையும் போராளிகளை பலவீனமடையச் செய்தது. 

அடிமேல் அடிவிழுந்தமையினால் நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டும், உறுதுணை புரிந்தும் வந்த சிலர் தம் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக களத்திலிருந்து வெளியேறினர். சலுகைகள், வரப்பிரசாதங்கள் வேண்டி போராளிகளை சிலர் காட்டி கொடுக்கவும் செய்தனர் 

வெளியேறியவர்கள் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கோரினர். அவர்கள் மன்னிக்கப்பட்டனர். மிக முக்கிய தலைவர்களில் ஒருவனாகிய ஹத்தரலியத்தே வத்தே கெதற இவ்வாறு கட்சி மாறி மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவனாகும். பசறை விதானையும் இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டவனாகும். தம்மிடம் சரணடையும் கெப்பெட்டிப்பொலையின் சகாக்களிடமிருந்து அதிக பட்ச நன்மைகளை ஈட்டிக் கொள்வதில் வெள்ளையர் வெற்றிகண்டனர். 

பசறையிலிருந்து பதுளை வரையிலான வழியில் இடைமறித்து ஆங்கிலேய இராணுவத்தைத் தாக்கிய சுதந்திர போராளிகள் சிலர் பற்றிய விபரங்களை மேற்படி அணிமாறிய இருவரும் நன்கறிவர். எனவே தாக்குதல் மேற்கொண்டவர்களின் பெயர் விபரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் ஆங்கிலேயரிடம் வழங்குவதறகும், அவர்களை கைது செய்வதற்கும், தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்கள் கிஞ்சித்தும் தயங்கவில்லை. 

கெப்பெட்டிப்பொலையின் போராட்டத்திற்காக வெடி மருந்துகளை தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் மொனராகல குன்றில் இருந்தனர். இவர்களை வஞ்சகமாக அழைத்து ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுப்பதிலும் அம்முன்னாள் போராளித் தலைவர்கள் முன்நின்றனர். வெடி மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட குழுவின் தலைவன் விசாரணைக்குட்படுத்தப்பட்டு இராணுவ நீதிமன்றத்தினால் அவன் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்கிலிடப்பட்டான். 

ஆங்கிலேயருடன் இணைந்திருந்த சில சிங்கள தலைமைகளின் செயற்பாடுகள் சுதந்திர போராட்டத்தை வலுவிழக்கச் செய்தன. கையூட்டு வழங்கி சிங்கள மக்களை அரசின் பக்கம் இணைத்துக் கொள்வதன் மூலம் போராட்டத்தை நிலைகுலைய வைக்கும் பணியில் ஈடுபட்ட தலைவர்களில் மிக முக்கியமானவனாக எக்னெலிகொடை காணப்பட்டான். 

இச்சந்தர்ப்பத்தில் சப்ரகமுவ முழுவதும் கிளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக உறுதுணை புரிந்த கீழ்மட்ட பிரதானிகள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்பஆடைப்பொதிகள் வழங்கப்பட வேண்டுமென ஆங்கிலேய அரசிடம் எக்னெலிகொடை வேண்டுகோள் விடுத்தான். அதனை ஏற்றுக் கொண்டது அரசு. 

அது மட்டுமன்றி ஆங்கிலேய எதிர்ப்புணர்வு கொண்டுள்ள சிவில் குடிமக்கள் பற்றி விழிப்பாக இருந்தான் எக்னெலிகொடை. அவ்வாறானவர்களை பிடித்து சித்திரவதை செய்தும், ஆங்கிலேயருக்கு சார்ப்பானவர்களாக அவர்களை திசை திருப்புவதற்குமான வேலைத்திட்டமொன்றை முழு சப்ரகமுவ பிராந்தியமெங்கும் எக்னெலிகொடை மேற்கொள்ளலானான். 

இந்நடவடிக்கைக்காக லெப்டினண்ட் ஓனில் முழு ஒத்தாசை புரிந்தான். எக்னெலிகொட கிஞ்சித்தும் இரக்க சுபாவமற்றவனாக தனது வன்முறைகளையும், கெடுபிடிகளையும் பிராந்தியமெங்கும் அவிழ்த்து விட்டிருந்தான். வீடுகள், உற்பத்தி நிலங்கள் மற்றும் மக்களின் சொத்துக்கள் எக்னெலிகொடையினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. நெல்முதலான அத்தியாவசிய பண்டங்கள் பெருமளவில் சூறையாடப்பட்டன. அவை ஆங்கிலேயர்களின் முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இத்தகைய இன்னோரன்ன காட்டிக் கொடுப்பு செயற்பாடுகளுக்காக ஆங்கிலேய அரசு எக்னெலிகொடைக்கு தங்கப்பதக்கம் வழங்கியதோடு ரூவான்வெல்ல, கபுலுமுல்ல பிரதேசங்களில் நிலபுலன்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இராணுவ தளபதி ஓனிலுக்கும் பதக்கம் சூட்டப்பட்டது.  

கெப்பெட்டிப்பொல எதிர்பாராத விதமாக வயிற்றுப் போக்கு வியாதிக்குட்பட்டமை காரணமாக 1818ம் ஆண்டின் ஊவா – வெல்லஸ்ஸ புரட்சி இறங்குமுகம் கண்டது. (தொடரும்) 

தகவல் –தயாவன்ச ஜயகொடி

(கண்டிச் சுதந்திர போராட்டங்கள்)

சி.கே. முருகேசு

Comments