வடக்கு மக்களுக்கு சேவை புரிவதென்றால் ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து கூட்டமைப்பு செயலாற்ற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு மக்களுக்கு சேவை புரிவதென்றால் ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து கூட்டமைப்பு செயலாற்ற வேண்டும்

பாதுகாப்புச் செயலர் அழைப்பு

அசேல குருலுவங்ச

 

வடக்கு மக்களுக்கு சேவைபுரிய வேண்டுமென்ற உண்மையான தேவை இருக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண நேற்று தெரிவித்தார். அத்துடன் அண்மையில் வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தில் நடத்தப்பட்ட நினைவு கூரல் நிகழ்வுகளின்போது எந்தவித சட்டமீறல்களும் இடம்பெறவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நேற்று (30) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அவசியமான இடங்களில் படை முகாம்கள்

 

இருக்க வேண்டியது அவசியம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. எவரதும் கோரிக்கைக்காக வேண்டுகோளுக்காக படை முகாம்களை அகற்றுவதற்கு அரசு தயாரில்லை.

படை முகாம்கள் இருப்பது பிரதேச மக்களுக்கு சேவையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமே தவிர, எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதுமில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த காலத்தில் நோய்வாய்க்குட்பட்டவர்களை இராணுவ வாகனங்களில் படை வீரர்களே ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுசென்றனர். அத்துடன், க.பொ.த. சாதாரணதர, உயர்தர பரீட்சைகளின் போது முன்னேற்பாடாக திறமையான ஆசிரியர்களை கொண்டு அந்தப் பிள்ளைகளுக்கு கருத்தரங்குகளை நடத்த ஒழுங்கு செய்ததும் படை முகாம்களின் ஊடாகவே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திலும் அதேபோன்று உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இன, மத மொழி பேதங்களுக்கு அப்பால் இந்த நாட்டில் வாழும் வயது முதிர்ந்தவர் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சேவையை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றதெனவும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்தார்.

மாவீரர் தினத்தில் நினைவு கூரல் நிகழ்வுகள் நடைபெற்றபோது எந்தவித சட்டமீறல்களும் இடம்பெறவில்லையென குறிப்பிட்ட அவர், வடக்கு மக்களுக்கு சேவைபுரிய வேண்டுமென்ற உண்மையான நேர்மையான தேவை இருக்குமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு திசைநோக்கி செல்லாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அன்று வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டதையும் பாதுகாப்புச் செயலாளர் நினைவு கூறினார்.

எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தொல்பொருள்களை பாதுகாக்கும் கடப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருசிலர் அடிப்படைவாத நோக்கில் கருத்துகளை வெளியிடுவது சில சந்தர்ப்பங்களில் அவர்களது அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், அந்த அடிப்படைவாதக் கருத்துகளால் ஒரு மதத்திற்கு அல்லது ஒரு சமூகத்திற்கு அபாயம் அல்லது அபகீர்த்தி ஏற்படுமானால் அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. தாம் பின்பற்றும் மதத்தின் வழிநடக்க கலாசார பண்பாடுகளை பின்பற்ற இருக்கும் உரிமையைப் பாதுகாத்துக்கொடுக்க வேண்டியிருக்கின்றது.

எவராக இருந்தாலும், மற்றொரு தரப்புக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

எந்தக் காரியமாக இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் சட்டம், ஒழுங்குகளுக்கு அமையவே நடக்கவேண்டுமெனவும் அநீதியாக கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் படைவீரர்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரைவாக விடுவிப்பதற்கு ஜனாதிபதி உறுதிபூண்டிருப்பதாகவும் அதனை அவர் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Comments