‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம் இரத்து செய்யப்படாது | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம் இரத்து செய்யப்படாது

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம் பயனுள்ளதாக உள்ளதால், அதனை இரத்துசெய்வதற்கு எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனக் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்காக அண்மைக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய திட்டமாக இதுவுள்ளது. அதனை இரத்துச்செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதெனவும் அவர் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

 

‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தை இரத்து செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இந்த காப்புறுதி பயனுள்ள திட்டமாகும் என்று அடையாளம் கண்டுள்ளது.

தேவையற்ற விடயங்களை நீக்கி இதனை நடைமுறைப்படுத்துவோம். மாணவர்கள் ஆகக்கூடிய நன்மைகளைப் பெறக்கூடிய வகையில் இது செயற்படுத்தப்பட வேண்டும்.

4 மில்லியனுக்கு மேற்பட்ட பாடசாலை மணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தயாரில்லை.

சில ஊடகங்களிலும், சில இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் பொறுப்பற்ற வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுரக்ஷா காப்புறுதித்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றியமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் கல்வி அமைச்சர் மூலம் இக்காப்புறுதித்திட்டம் முறையான டென்டர் இல்லாது மேலும் 10 மாதங்களுக்கு நீடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காப்புறுதி நிறுவனம் மற்றும் தனியார் காப்புறுதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments