இதய கதவுக்குள்ளிருந்து... | தினகரன் வாரமஞ்சரி

இதய கதவுக்குள்ளிருந்து...

கொடுமையான புளுக்கத்தின் கடினத்தைக் குறைக்க வலிமையாக உழைத்துக் கொண்டிருக்கும் மின் விசிறியின் கீழமர்ந்து கவலைப்படவில்லை. தோட்டத்து தொங்கூஞ்சலில் காற்று வாங்கியபடி திறன் பேசியைத் தடவிக்கொண்டு கவலைப்படவில்லை. சிறைக்காவலர்கள் மத்தியில் கம்பிக் கூண்டுக்குள்ளிருந்து கவலைப்படுகின்றேன். “ஏன் தான் இப்படிச் செய்கிறார்கள்...? தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமையென்று மக்களை உசுப்பேற்றும் மகுட வாசகங்களைச் சூடிக்கொண்டு எம்மவர் மனங்களின் ரணங்களை நூலூருவாக்க உதவுகிறார்களில்லையே...”  

இரண்டாயிரத் தெட்டில் காட்டிக்கொடுக்காமல் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருப்பவன் குயிலன். அவனது கைதின் காரணப்பெயர், “புலிக்கு உதவியது” ஏற்கனவே இரும்புச் சிறைக்குள் இறுகிக்கிடப்பவர்களுடன் இவனும் இணைக்கப்பட்டு ஆண்டிரண்டு தீர்ந்துவிட்டிருந்தது. ஏதோவொரு வகையில் தன் கைக்கெட்டிய பத்திரிகைகள் பல்வேறுபட்ட புத்தகங்கள் போன்றவற்றைப் பசியோடு மேய்ந்து தள்ளி சிறைக்காலத்தை செலவழித்தான் குயிலன். ‘சில புத்தகங்களை சுவைப்போம்! சிலவற்றை அப்படியேயே விழுங்வோம்! சிலதை மென்று ஜீரணிப்போம்!’ என பிரான்சிஸ் பேக்கன் கூறியுள்ளாரல்லவா. அதற்கமையப் போலும்.   

வாசிப்புக்கள் அவனை வரி எழுதத் தூண்டியது. எழுதினான். ஊரில்... உறவில்... சிறையில்.... எனச் சிலாகித்தெழுதினான். சலசலவென ஓடியது நினைவோடை. அவனும் அதில் நீந்தி நனைந்தான். உடனிருருந்த ஒருசிலர் ஊக்கமளிக்க காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இடையூறுகளை விளைவித்தார்கள். அது அவனை இன்னுமின்னும் எழுதத் தூண்டியது. இடைத்தரப்பட்டவர்கள். ‘இன்னும் நீ திருந்தவில்லையா...?’ என்றனர். “அப்படியென்றால்..., இது சீர்திருந்தப் பள்ளியா...? இல்லையே குற்றங்களை கற்றுக்கொள்ளும் சிறைக்கூடம் தானே!...’ என நகைத்தபடி அப்பால் நகர்ந்து சமாளித்தான் குயிலன்.  

சட்ட மாஅதிபரின் அறிக்கை வருவதற்கு குறைந்தது வருடம் மூன்றாவது செல்லும். அதற்குப் பிற்பாடே வழக்கினுடைய தாற்பரியங்கள் புரியம். உறவு வாழ்க்கையா? அன்றி, துறவு வாழ்க்கையா? என்பதெல்லாம் அவன் முடிவு. எவன் முடிவு? ‘கொட்டியாக்களை’ போட்டுத்தள்ள கட்டளையிடுபவன் முடிவு.  

நெருக்கடிக்குள்ளிருந்து அவ்வப்போது எழுதிய படைப்புகளைத் தரம்பிரித்து காவலர்கள் கண்ணில் புலப்படாமல் பார்க்க வந்த துணைவியிடம் பக்குவமாக அனுப்பிவைத்தான் குயிலன். அவை பத்திரிகை வாசலை அடைந்தபோது, அதைப் பிரசுரித்து ஆட்சியரின் ஆட்சேபனைகளை ஏன் அதிகப்படுத்திக்கொள்வான்? என்று சிலர் மாநகரசபை குப்பை வண்டிக்கு ஒதுக்கினர். அவனது ஆக்கங்கள் பத்திரிகையில் வரவில்லையென்று பார்த்தவர்கள் சொன்னார்கள். “அப்படியா? அடுத்த மாதம் கண்டிப்பா ஓர் ஆக்கமாவது வரும்” என உறுதியாக சிந்தித்துக்கொண்டு பதிலளித்தான். பொதுமையைப் புறம் தள்ளி புனைவுகளையும் போலிகளையும் புகுத்தி ஆட்சியரை புகழ்ந்துருகி ஓர் ஆக்கத்தை எழுதி அனுப்பியபோது, வர்ணப் பின்னணியில் வடிவானதொரு கருத்தோவியம் தீட்டி ‘ஆட்டக்காரியில்’ எனது பெயரை அச்சிட்டு பிரசுரித்தது பத்திரிகை. பத்திரிகையை நாடிபிடித்தறியும் பரிசோதனை வெற்றி.   

அதே நேரம், கீரைக் கடைக்கு எதிர்க்கடை என்பதைப் போல, “உங்களது உள்ளக்கிடகைகளைப் பொதுவெளிக்கொணர உங்களுக்காக நாங்கள் ‘இருக்கிறம்’ என்று வேறொரு சஞ்சிகை அவனது படைப்புகளுக்கு களமமைத்தது. அஃது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சிறையறையில் தன்னை மறந்து ஒரு கணம் சிரித்தாரவாரித்து அன்றுதான்.  

குயிலனின் மூளைக்குள் குறுகுறு என்று ஒரு குடைச்சல். “ஏன் எனது ஆக்கங்களை அல்லது மனத்தாக்கங்களை ஒரு தொகுப்பாக வெளியிடக்கூடாது?” பிரதியாக்கினான். பேனாவுக்குத் தட்டுப்பாடு, பேப்பருக்குத் தட்டுப்பாடு, பக்கத்திலிருக்கும் சக கைதிகளின் பச்சாதாபம், காவலர்களின் சோதனை நடவடிக்கைகளின் போது காலால் மிதித்து சேதப்படுத்தல், புகை பிடிப்பாளிகளிடமிருந்து பாதுகாக்க படாத பாடு எனப் பல பாடுகளுக்கு மத்தியில் பூக்கத்துடிக்கிறது குயிலினின் கவிதைத் தொகுப்பு.  

அடிப்படை எல்லாம் முடித்து குறுகிய அறைக்குள் குந்தியிருந்து மங்கிய வெளிச்சத்தில் தன்னுரை எழுதத் தொடங்கியபோது, இலங்கை சட்ட மா அதிபரால் ஈழத்தமிழனவனுக்கு வழக்குத் தொடரப்பட்ட சங்கதி வருகிறது. அதுவும் வடக்கு நீதிமன்றில். “தமிழ்ப் பிரதேச நீதிமன்றம் தானே... வழக்கை விரைவாகவும் வெற்றியாகவும் முடித்துவிடலாம். இது நப்பாசையில்லை. நாலுபேர் அப்படித்தான் விடுதலையானார்கள்...” குயிலனின் எதிர்பார்ப்பது. பயங்கர சட்டங்களையெல்லாம் கரைத்துக் குடித்து ஒப்பம் விட்ட சட்டத்தரணிகள், “சொந்த விஷயத்துக்காகவா சிறை சென்றீர்கள்...? இல்லையே. சமூக விடுதலைக்காகத்தானே. சளைக்காதீர்கள். வழக்குடைத்து வீடு செல்லலாம்...” என மிடுக்குடன் கூறினர். கையோடு தமது கணக்கையும் கணக்காக சொல்லத்தவறவில்லை.  

அவனைப் பெற்றவள், கட்டியவள் மட்டுமன்றி அவன் பெற்ற பிள்ளையும் என அனைவரும் அகமகிழ்ந்தனர். “பிறகென்ன வெளியில் போய் புத்தகத்தை வடிவா வெளியிடலாம்...” இது அவனது ஆழ்மனத்தீர்மான அரங்கேற்றம். உவகையாயிருந்தது அவன் உள்ளத்துக்கும்.  

பிறகென்ன, மன்றில் விசாரணைகள் வலுப்பெற்று விவாதங்கள் சூடேறின. குற்றவாளிக் கூண்டிலிருந்து குறுக்கும் நெடுக்குமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் குயிலன். கொடுப்பனவுக்கு பாதிப்பில்லாமல் வாதாடிய வக்கீல் வந்து சொல்கிறார், “மே-11, உமக்குத் தீர்ப்பு!” மே மாதமென்றாலே மேனி சிலிர்க்கிறது குயிலனுக்கு. முள்ளிவாய்க்கால் தீர்ப்பையும் மேயில் தானே எழுதினார்கள்.  

மே-11வழக்கிலக்கம் 2037/09மன்றில் அழைக்கப்படுகிறது. குற்றவாளிக் கூண்டில் குயிலன். கூட்டிச் செல்லவந்த உறவுகள் பார்வையாளர் பகுதியில். வலது கை பெருவிரலை நிமிர்த்து “வெற்றியே...” எனும் தொனியில் காட்டிவிட்டுக் கோட்டைத் தூக்கிப் போட்டுக்கொண்டு எழுந்தார் சட்டத்தரணி. நிசப்த மன்றில் நீதிபதி, “குயிலன் என்ற எதிரிக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளின் 36(5) இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிப்பதற்கு இச்சட்டம் இடமளிக்கிறது. அதற்கமைய சாட்சி ஆதாரங்களின் பிரகாரம் குயிலன் என்ற எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கப்பால் நிரூபிக்கப்படுவதாக மன்று கருதி, எதிரிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படுகின்றது” என்று கூறி மன்றின் நடவடிக்கைகளை நிறைவுக்கு கொண்டு வந்தார் நீதிபதி.  

மன்று ஒரு தடவை மரண வீடாக மாறியது. உறவுகள் உதிரக் கண்ணீர் உதிர்க்க குயிலன் கூண்டில் ஏற்றப்பட்டான்.  

ஆம், ஓர் ஆயுள் சிறைக் கைதியாக வெள்ளை உடையணிந்து வெறுமையாக குந்தியிருக்கிறான் சிறைக்குள் குயிலன். ஆறு மாதங்கள் உறவுகளின் ஆற்றுப்படுத்தலில் நிறைவுற பத்திரமாய் வைத்திருந்த தனது புத்தகத்தின் தொடர்ச்சியாக ‘ஆயுள் கைதி’ என்ற அரச சட்டத்துடன் ஆரம்பித்தான். மிச்சம் மீதிகளை சரி பார்த்து சிறைச் சுவருக்குப்பால் புத்தகத்தை அனுப்ப காவலர் ஒருவரை நாடி, கையூட்டும் கொடுக்கப்படுகிறது.  

தமிழனைத் தெரிந்து தமிழ் தெரியாத சிறைக்காவலர் பார்த்துச் சிரித்துவிட்டுப் பார்க்க வந்த மனைவியிடம் புத்தகத்தைக் கொடுத்தார். சிறைக் கம்பி கடந்து வெளியில் சென்ற படைப்பினை பதிப்பித்து வெளியிட தமிழ் தேசியம் மீது பற்றுதிகொண்டவர்களாக பேசிய பலரிடம் கோரிக்கை விடுத்தாள் குயிலனின் மனைவி. பட்டும் படாமலும், பவ்வியமாகவும், பயந்தும் வந்தன மறுப்புப் பதில்கள். அதைக் கடந்து துணிவற்ற ஒரு தேசியவாதியிடம் படைப்பு சென்றபோது பலதை தணிக்கை செய்யுமாறு தொல்லையோ தொல்லை. சரியென்று அதையும் செய்து எடுத்துச் சென்ற குயிலனின் மனைவிக்கு கிடைத்ததெல்லாம் சாட்டுப் போக்குகளும் சம்மந்தமில்லா பதில்களுமே. குயிலனோ விட்டபாடில்லை. இன்னும் சிலரின் பெயர்களைக் கூறி அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள் எனக் கட்டியவளை நெட்டித் தள்ளினான். இறுதியில் இரு தரப்பு ஒப்புக்கொண்டது. “செலவுப் பொறுப்பில் பாதியை ஏற்கிறோம். நீங்களே பதிப்பியுங்கள்...”  

குடாநாட்டுப் பதிப்பகத்தில் குந்தியது குயிலனின் படைப்பு. அலுக்காது நேரில் சென்று ஆக்கினைகள் கொடுத்த மனைவி, இறுதியில் கடுப்புடன் வெடுக்கெனப் பிடுங்கி வசிப்பிட வடமராட்சிப் பதிப்பகத்தில் படைப்ைப ஒப்படைத்தாள். “பதிப்பக உரிமையாளர் பாரதம் போனதால், வேலையாகவில்லையாம்.” பத்து மாதத்தில் கிடைத்த பெறுபேறு இது. “இது என்ன சோதனை ஆண்டவா...” வேண்டுமென்றே எல்லோரும் இப்படிச் செய்கிறார்களா...? தமிழர் தம் வரலாறு, கலை, பண்பாடு, கலாசாரம், துன்பம், துயரம், வலி, வேதனை என எல்லாவற்றையும் காலாகாலத்துப் பதிவுகளாய் ஆவணப்படுத்த வேண்டும். இலக்கியத்துறையை ஊக்குவிக்கவேண்டும் என்றெல்லாம் வாய் கிழிய மேடைபோட்டு பேசுகிறார்களே... ஊருக்கு தானா உபதேசம்...?” என்று தனக்குள் பொங்கி வெடித்தான் குயிலன். “சரி பார்ப்போம். சோதனைகள் கடந்தது தானே சாதனை...” அவனே அவனுக்கு ஆறுதலும் சொல்லிக்கொண்டான்.  

குயிலனது ஆற்றா ரணங்களுக்கெல்லாம் வடிகாலாய் இருப்பது அவன் துணையே. புத்தகமொன்று வெளியிடப்புறப்பட்டு அவளும் அலைந்து திரிந்து களைத்துப் போனாள். பதிப்பகங்களின் படியேறித் திரும்புவது வழமையாகிப் போச்சு. ஆக்கங்கள் அச்சேறும் கனவு கேள்விக்குறியாக, அடைபட்ட சிறைக்குள் குயிலன் சோர்ந்து போய் சாய்ந்திருந்தான். அப்போது அவனுடனிருந்த ஆசிரியர் சத்தியசீலன், “குயிலன்! நீங்கள் எழுதுவதை எக்காரணம் கொண்டும் கை விடாதீர்கள். அதுதான் உங்களை ஆற்றுப்படுத்தும். சில பெரிய பெரிய எழுத்தாளர்கள் கூட தமது படைப்புகளை பல வருடங்கள் கடந்துதான் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்” எனத் தட்டிக் கொடுக்கத் தவறவில்லை.  

கை தேர்வும் கால மாற்றமும் ஏற்பட பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அவ்வப்போது குயிலனின் படைப்புகளுக்கு களம் தந்தன. தனது படைப்புகள் புத்தகமாக மலரா விட்டாலும் பத்திரிகையில் வருகிறதே என மகிழ்ச்சியடைந்தான். தோள்கொடுத்த இதழ்களின் துணையோடு படைப்புலகில் மென்மேலும் வளர்ந்து தன்னைப் புறக்கணித்தவர்கள் திரும்பிப்பார்க்கும்படி சாதித்துக் காட்டவேண்டும் என்ற ஓர்மத்தோடு சிறைக்குள்ளிருந்து எழுதிக்கொண்டிருக்கின்றான் குயிலன். அவன் இரும்புக்கதவுக்குள்ளிருந்து வெளிவரும் முன்பு அவனது, ‘இரும்புக்கதவுக்குள்ளிருந்து...’ எழுதும் எழுத்துக்கள் அச்சு வாகனமேறி அவனது மண்ணில் உலாவர வேண்டும் என்பதே குயிலனின் இலக்கு.  

அப்படி இருக்கையில், அவனது தளர்வுறா தாகம் கண்ட சில பற்றாளர்கள் தாமாக முன்வந்து குயிலனின் படைப்புகள் சிலவற்றைப் புத்தகமாகப் பூக்கச் செய்யப் பச்சைக் கொடி காட்டியுள்ளார்கள். அதுவும் என்ன நிச்சயம்? என்றறியாது நூல் வெளியீட்டு நினைவுகளோடும் விடுதலைக் கனவுகளோடும் தலைநகர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளான் ஆயுள் அரசியல் கைதி குயிலன்.

விவேகானந்தனூர் சதீஸ்  
கிளிநொச்சி

Comments