அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கலாமா? | தினகரன் வாரமஞ்சரி

அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கலாமா?

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கின்ற போதிலும் அதற்கான சாத்தியங்கள் இல்லையென்று கூறுகின்றார் சீ.வீ.கே. சிவஞானம். கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதென்பது

அவ்வளவு இலகுவானதல்ல என்பது அவர் வாதம். இது சீ.வீ.கே. சிவஞானம் தினகரன் வார மஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.  

கே: - ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான இன்றைய நிலைமைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

ப: - ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு தமிழர்களைப் பொறுத்தவரையில் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது. அதுவும் குறிப்பாக துருவ மயப்படுத்தப்பட்ட நிலை தான் இப்போது இருக்கிறது.  

சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டில் ஒரு ஆட்சி அமைக்க வேண்டுமென்பதில் சிங்கள சமூகம் தெளிவாக இருந்தது. அவ்வாறான முடிவை சிங்கள மக்கள் தெளிவாக ஆதரித்தும் இருக்கிறார்கள்.  

அதே நேரம் சிறுபான்மையின மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சஜித் பிரேமதாசாவிற்கும் சிங்கள மக்கள் வாக்களித்திருந்தாலும் பெரும்பான்மை மக்களின் உள்ளக்கிடக்கையை இத்தேர்தல் உணர்த்தியிருக்கின்றது.  

புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இருக்கிறார்கள் தான். ஆனால் முஸ்லிம்கள் இல்லை. அதே போல சில தினங்களிற்கு முன்னர் நியமிக்கப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களில் கூட முஸ்லிம்கள் கிடையாது. ஆக முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படுவது போன்ற தோற்றப்பாடே இது எழுப்பியிருக்கிறது.  

மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் சரியோ பிழையோ ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதே போல் டக்ளஸ் தேவானந்தாவையும் அமைச்சராக்கியிருக்கின்றனர். இருந்தாலும் பெரும்பான்மை ஆதிக்கம் உருவாகியிருக்கிறது. அதைத்தான் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.  

கே: - - இவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தரப்புக்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்?  

ப: - தேசிய ரீதியாகப் பார்க்கின்ற போது; இந்த அரச தரப்பின் செயற்பாட்டை குறிப்பிட்ட காலத்திற்கு விமர்சிக்காமல் அமைதியாக அவதானித்து, அந்த அவதானிப்பின் அடிப்படையில் தான் விமர்சனங்களையோ எதிர்க் கருத்துக்களையோ சொல்லக்கூடியதாக இருக்கும். 

அவ்வாறு எங்களுக்கு இப்போது அவதானிப்பும்; அவதானமும் தேவை. அநாவசியமாக அவசரப்பட்டு அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதே நேரம் அவர்கள் செய்;யும் எல்லாத்தையும் நாங்கள் ஆதரிக்கிறது என்றும் இல்லை. ஆக அவர்கள் செய்கின்ற நல்ல விசயங்களை ஏற்றுக் கொள்ளலாம். பிழையாகப் படும் விஷங்களை தேவைப்பட்டால் விமர்சிக்கலாம்.  

கே: -புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கம் தொடர்பில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்? 

ப: - தமிழ் மக்களுக்கு இந்த அரசின் அரசியல் தலைமைத்துவத்தில் பங்கேற்பு இல்லை என்று தான் நான் கருதுகிறேன். குறிப்பாக அரசில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள் தான். ஆயினும் அதை பெரியளவில் பொறுப்பான அமைச்சர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனாலும் 16 அமைச்சர்களில் தமிழ் அமைச்சர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். 

ஆனால் எந்த அளவிற்கு இரு அமைச்சர்களினதும் செயற்பாடுகள் அல்லது அவர்களின் பலம் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவில்லை. ஆக தமிழ் அமைச்சர்களாக இவர்கள் இரண்டு பேர் இருந்தாலும் அரசாங்கத்தின் முடிவுகளில் இவர்களுடைய செயற்பாடுகள் எந்த அளவிற்கு தாக்கத்தை செலுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

கே: -  ஜனாதிபதி கோட்டபாய பல்வேறு அறிவிப்புக்களை விடுத்து வருகின்றார். அந்த அறிவிப்புக்கள் அல்லது அறிவித்தல்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

ப: நான் நிர்வாகத்தில் திறமை செயற்திறன் மற்றும் சிக்கனம் என்ற கோட்பாட்டைக் கொண்டவன் என்ற வகையில் புதிய ஜனாதிபதியின் சில அறிவிப்புக்களை வரவேற்கிறேன். குறிப்பாக புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்களின் படங்களை திணைக்களங்களில், அரச நிறுவனங்களில் மாட்டுகின்றனர் அல்லது தொங்கவிடுகின்றனர்.  

இதற்கு கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுகிறது. ஆகவே அவ்வாறு படங்களை மாட்ட வேண்டாம் என்று சொன்ன அவருடைய அந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அவ்வளவு பணமும் மக்களின் பணம் தான். அந்தப் பணம் அவ்வளவும் சேமிக்கப்படுகின்ற பொழுது ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்கு செலவழிக்க முடியும்.  

அரசியலில் கொள்கை அடிப்படையில் நாங்கள் முரண்பட்டாலும் கூட இப்படியான விசயங்கள் வரவேற்றக்கக் கூடியதாகவே இருக்கிறது.  

கே: இராணுவ அதிகாரியாக இருந்து ஜனாதிபதியாக வந்திருப்பதால் தன்னை ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்க வேண்டாமென்றும் தன்னுடைய எதிர்காலச் செயற்பாட்டை பார்த்து தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ள முடிமென்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றாரே? 

ப: -உண்மையில் அவர் சொல்வது போன்று இருந்தால் அனைவருக்கும் நல்லது தானே. எல்லாருமே அப்படித் தான் பார்க்கிறார்கள். ஏனெனில் அவரின் வரலாற்றுப் பின்புலம் அப்படி இருப்பதால் அவரை அப்படி பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது அவர் இராணுவத்தில் இருந்ததால் இராணுவ பின்புலம் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து செயற்பட்ட அடிப்படையில் தான் பார்க்கிறோம்.  

அவர் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாக வந்திருப்பதால் ஜனநாயக ரீதியாக அவரின் செயற்பாடுகள் இருந்தால் உண்மையில் அது வரவேற்கத்தக்கது.  

அண்மையில் தேரர் ஒருவர் வடக்கு கிழக்கைத்தான் தமிழர்கள் தாயகம் என்று சொல்கின்றார்கள் என்றும் அவர்கள் ஏன் இலங்கையை தாயகம் என்று சொல்வதில்லை என்றும் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ஆனால் நாங்கள் அந்த தேரருக்கும் அரசாங்கத்திற்கும் சொல்லக் கூடியது என்னவெனில் முதலிலே இலங்கைப் பிரஜைகள் என்று தானே எங்களை நாங்கள் என்பதைத்தான் சொல்கிறோம். அதே நேரம் இலங்கைக்குள்ளேயே எங்களின் பூர்வீக தாயகம் வாழ்விடங்கள் என்ற அடிப்படையில் வடகிழக்கை எங்கள் தாயகம் என்று சொல்கிறோம்.  

எங்களின் அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நாங்களும் இந்த நாட்டினுடைய சம உரிமையுள்ள பிரஜைகள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையை ஐனாதிபதி ஏற்படுத்துவராக இருந்தால் அது வரவேற்கத்தக்கது.  

கே:  ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் இலங்கை வந்த இந்திய அமைச்சர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் ஜனாதிபதியின் இந்திய பயணத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரஸ்தாபிக்கப்படுமா? 

ப: -இந்தியாவிற்கு இரண்டு பக்க அணுகுமுறை இருக்கிறதாக நான் நினைக்கிறேன். ஒன்று சர்வதேச ரீதியானது. அடுத்தது, அயல் நாடு என்ற ரீதியானது. ஆக இலங்கையினுடைய இறையாண்மைக்கு அமைவாக நல்லுறவைப் பேண வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கிறது. குறிப்பாக சீனாவினுடைய தலையீடுகள் அல்லது பெரிய பெரிய முதலீடுகள் ஏற்படுவதற்குரிய நிலைமைகளைச் சமன் செய்யக்கூடிய தேவை இந்தியாவிற்கு இருக்கிறது.  

அதே நேரத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் 1987 ஆம் ஆண்டிலேயே இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எழுதி அந்த நிறைவேற்றத்திற்கு உறுதிப்பாடு கொடுத்த ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. ஆயினும்; அதனூடாக தமிழ் மக்களின் வேணவாக்கள் அல்லது அபிலாசைகள் அல்லது அரசியற் தீர்வுகள் பூர்த்தியாக்கப்படவில்லை. ஆனாலும ;ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது அல்லது அது சம்மந்தமான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்கின்ற பொறுப்பு இந்தியாவிற்கும் உண்டு.   ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஏற்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது.  

கே: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்கு ஏத்தகைய உதவிகளை இந்தியா வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? 

ப: இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை என்பது தெரியும். ஆக நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. சுமஷ்டியை தானே கேட்கிறோம். அதனை சமஷ்டி என்று பெயரில் சொல்லாவிட்டாலும் அதிகளவில் உச்ச அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய கட்டமைப்பு என்று கூறலாம். அது மாகாண சபை முறைக்கூடாக அமைந்தால் அப்படியான ஒரு நகர்வை இந்தியா எடுக்க வேண்டும்.  

கேள்வி: புதிய ஜனாதிபதி தொடர்பில் தமிழ் மக்கள் அச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் இந்த அரசாங்கத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் நீங்கள் சார்ந்த கூட்டமைப்பினரே சொல்கின்ற நிலையில் இதில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றீர்கள்? 

பதில்: - இன்றைய இந்தச் சூழ்நிலையில் எந்தவொரு அரசியல்வாதியும் எந்த தீவிர சிந்தனை உள்ளவனும் கள நிலையைக் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அரசாங்கம் எங்களுடைய ஆதரவில் வரவில்லை என்பதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஆதரவில்லாமல் தாம் வெற்றி பெறுவோம் என்று சொல்லித் தான் இந்த அரசாங்கம் வந்திருக்கிறது.  

அவ்வாறு சொல்லிக் கொண்டு தான் இந்த அரசாங்கம் வந்தாலும் கூட ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய வெற்றி பெற்றவுடன் உடனடியாகவே தான் முழுநாட்டுக்கும் ஐனாதிபதி என்று சொல்லிருந்தார். அவ்வாறு முழு நாட்டுக்கும் ஜனாதிபதி என்றால் இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை மக்களுக்கும் அவர் தான் ஐனாதிபதி.  

ஆகவே அந்த பொறுப்பு அவருக்கு அங்கு வந்து சேருகிறது. அந்த பொறுப்பின் அடிப்படையில் அவர் செயற்படுவார் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  

ஆயினும் இதிலிருந்து விலகி ஒரு யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அதை முழுமையாக நாங்கள் நிராகரிக்கவும் ஏலாது. ஆனால் இப்பொழுது சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் அமைந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் கூட சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோட்டபாய எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  

கேள்வி: புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசுடன் பேசுவதற்கும் இணைந்து செயற்படுவதற்கும் தயாரென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றார்களே? 

பதில்: - அவ்வாறு சொல்வதென்பது நாங்கள் அரசுடன் இணைந்து செயற்படுவதல்ல. அதாவது அரசாங்கம் செய்யக் கூடிய எல்லா நல்ல காரியங்களுக்கும் அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி எங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக இருந்தாலும் சரி அந்த விடயங்களில் சாதகமான அல்லது சரியான விடயங்களை நாங்கள் எப்பொழுதுமே ஆதரிப்போம். அது யார் என்று பார்ப்பதில்லை. 

எங்களைப் பற்றி சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது நாங்கள் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் ஒன்றிணைந்துவிட்டோம் அல்லது சங்கமமாகி விட்டோம் என்று.  

எங்கள் வரலாற்றில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நின்ற காலங்கள் இருந்தன. அந்த இரண்டு கட்சியும் எங்களுக்கு ஒன்று தான். ஆனபடியால் மாற்றம் வருகிற பொழுது அதனை ஏற்றுக் கொள்கிறோம். அது எங்களுக்குப் பிரச்சினையில்லை.  

கேள்வி: - இந்த அரசில் கூட்டமைப்பினரும் அமைச்சுப் பதவிகளைப் பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளதே? 

பதில்: - இந்த அரச தரப்பினருக்கு எதிராக கூட்டமைப்பு வேலை செய்தது என்பது முழு நாட்டிற்கும் தெரியும். அதே நேரத்தில் அரசில் உள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. 

இதில் உண்மையைச் சொன்னால் நீங்கள் வாருங்கள் அமைச்சுத் தருகிறோம் என்று அவர்கள் எங்களுக்கு சொல்லவும் இல்லை. தாருங்கள் என்று நாங்கள் கேட்கவும் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் தந்தை செல்வநாயகம் காலத்தில் இருந்து எங்களின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை. அது பூர்த்தியாக்கப்பட வேண்டும். அதன் பின்னரே இது குறித்து பரிசீலிக்க முடியும். எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அமைச்சுக்களை பெற்றால் அரசாங்கம் செய்வது எல்லாவற்றுக்கும் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். ஆகவே எங்களுக்கு அது தேவையில்லை.  

கேள்வி: - இந்த அரசினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வை பெற முடியுமென்று நினைக்கின்றீர்களா? தமிழ் மக்களுக்கான தீர்விற்கு சர்வதேசம் உதவி செய்யுமெனக் கருதுகின்றீர்களா? 

பதில்: - இந்த அரசாங்கம் எங்களுக்கு உடனடியாக ஒரு தீர்வை தரக் கூடிய மனோ நிலையில் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து. அதேநேரம் இப்பொழுது சர்வதேசம் என்றதை விட இந்தியாவை தான் நாங்கள் கூடுதலாக நம்பலாம். அப்படி இந்தியாவை நம்பவும் வேண்டும். இந்தியாவினுடைய முன்னெடுப்புக்களின் அடிப்படையில் சர்வதேசம் அதற்கு ஆதரவாக நிற்கும் என்பது தான் என்னுடைய கருத்து. அதாவது எங்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் என்ற முன்னெடுப்புக்களை இந்தியா முன்மொழிகிற பொழுது சர்வதேசம் குறிப்பாக மேற்கத்தேய நாடுகள் இந்தியாவினுடைய அணுகுமுறையோடு ஒருமித்து வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. 

கேள்வி: புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? 

பதில்: - உண்மையாக நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அடிப்படையில் நாங்கள் இனவாதிகளும் அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு சிங்களவருக்கு தானே நாங்கள் ஐனாதிபதி தேர்தலில் வாக்களித்திருக்கிறோம்.  

அவர்களுக்கிடையில் கட்சி வேறுபாடு இருக்கட்டும். ஆனால் சிங்கள பௌத்தருக்கு தான் வாக்களித்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து நாங்கள் நாட்டைப் பிரிப்போம் என்று நினைக்கிற அந்த எண்ணக் கருவில் இருந்து சிங்கள தேசமும் அரசாங்கமும் விலக வேண்டும்.  

நாங்கள் எங்கள் தாயகத்தில் வடக்கு கிழக்கை இணைத்து எங்களுக்குரிய தன்னாட்சி நிர்வாகத்திற்கான கலை, கலாசாரங்களைப் பேணிக் கொண்டு இந்த நாட்டு பிரஜைகளாக ஒன்றாக இருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவது இந்த அரசாங்கத்தின் கடமை.  

கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கின்ற நிலையில் அதற்கான சாத்தியங்கள் உள்ளதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? 

பதில்: - என்னைப் பொறுத்தவரையில் இதற்கு எதிர்மறையான கருத்தையே கொண்டிருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தலைமைத்துவத்தின் கீழ் இருக்கிறது. எந்த தலைமைத்துவமும் அந்த தலைமைத்துவத்தை கரைத்து குடித்துவிட்டு இன்னுமொரு தலைமைத்துவத்திற்குள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி என்றால் கூட்டுத் தலைமைக்குள் வருவோம் என எடுத்துக் கொண்டாலும் அதுவும் பின்னர் முரண்பாடுகளையே உண்டாக்கும்.  

ஆக சாத்தியமான ஒற்றுமை என்னவெனில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது தனித்துவத்தைப் பேணிக்கொண்டு பொது இலக்கான கொள்கையை நாங்கள் பேச வேண்டும். எல்லாரும் ஒரே கருத்தைச் சொல்ல வேண்டும்.  

உதாரணத்திற்கு தன்னாட்சி என்றதிலும் சமஷ்டி முறை, வடகிழக்கு இணைப்பு, கலாசார பேணுதல்கள் என இவை எல்லாத்தையும் எல்லாரும் ஒன்றாகத்தான் பேசுகிறோம். இவற்றையெல்லாம் ஒரே குரலில் சொல்லலாம். அதனைவிடுத்து எல்லாரும் ஒன்றாக வேண்டுமென்றால் அதற்கான சாத்தியமே இல்லை. 

நேர்கண்டவர்: எஸ்.நிதர்ஷன்

Comments