இலங்கையின் நலனில் இந்தியாவின் கரிசனை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் நலனில் இந்தியாவின் கரிசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்று முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக, இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமான இராஜதந்திர உறவு மேலும் வலுவடைவதற்கான உறுதிப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் எளிமையான பயணத்தின் மூலம் இலங்கைக்குப் பல்வேறு நன்மைகள் கிடைத்திருப்பதுடன், அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்குமாக இந்தியா உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறது.

தேர்தல் முடிந்து கடந்த நவம்பர் 18ஆம் திகதி பதவியேற்றுக்ெகாண்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ​ெடாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், கொழும்பு வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்துப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தையும் அழைப்பையும் தெரிவித்திருந்தார். அதற்கமைய பதவியேற்ற இரண்டே வாரத்தில் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா, ஜனாதிபதிக்குச் செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. அது மாத்திரமன்றி ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' என்ற புதிய இலக்கை நோக்கிய பயணத்திற்கும் கை கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி பதவியேற்றது முதல், அவரது செயற்பாடுகள் தனித்துவமானதாகவே அமைந்து வருகின்றன. ஆடம்பரமில்லாத; பாதுகாப்பு இறுக்கமில்லாத எளிமையான வைபவத்தில் பதவியேற்றுக்ெகாண்டமை, தமது பயணத்தின்போது வீதித்தடைகள் ஏற்படுத்தக் கூடாது என்று வாகன நெரிசலுக்கு மத்தியில் பயணிக்கின்றமை. வீண் செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆளணியையும் வாகனங்களையும் குறைத்துக்ெகாண்டமை, தமது பெயரையோ படத்தையோ எவரும் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளையிட்டமை, அமைச்சர்கள் பதவியேற்றுக்ெகாண்டதும் உடனடியாகக் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்ெகாண்டமை எல்லாம், ஜனாதிபதி மீதான ஒரு தனி மதிப்பையும் மரியாதையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று தாம் பயணித்த வீதிகளில் அசுத்த நிலையைக் கண்டு உடனடியாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்ததைப்போன்று, இந்தியா செல்லும்போதும் எளிமையாக சாதாரண வாயில் வழியாகச் சென்று விமானப் பயணிகளின் அசௌகரியங்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீது நாட்டு மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு மேலதிகமாக அவரின் அணுகுமுறை நாளுக்கு நாள் வித்தியாசமானதாக இருப்பதாகவே விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதனைப்புரிந்துகொண்டுதான் வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமெனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார்.

அதற்கமைய, 400மில்லியன் அமெரிக்க டொலர் இலகு கடனுதவியாக விரைவில் இலங்கைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் அறிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு மேலும் 50மில்லியன் அமெரிக்க டொலர் இலகு கடனுதவியாக இலங்கைக்கு வழங்கப்படுமெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமது அழைப்பையேற்று இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு அரச முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தமையை அண்டைய நாடு என்ற வகையில் தமது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் அரச தலைவர்கள் இதன்போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் சர்வதேச சவால்களையும்,அதிகரித்துச் செல்லும் பூகோள அதிகாரத்தினை எதிர்கொள்ளும் வகையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் தந்திரோபாய நிலைப்பாடும், பூகோள பொருளாதார, வர்த்தகமும் மாற்றமடைந்துள்ளது. இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு எல்லை விரிவடைந்து இப்போது அதற்குள் பொருளாதாரப் பாதுகாப்பு, சுதந்திர வர்த்தகம், சக்திவலுப் பாதுகாப்பு, பொதுமக்களுடைய சமூகப் பாதுகாப்பு, பிரதேச ஒருமைப்பாடு போன்றனவும் முக்கியம் பெறுகின்றது.

அந்த வகையில், இருநாடுகளினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து செயற்படுதல் தொடர்பிலும் அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக அபிவிருத்தியின் தேவை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலப் பிரச்சினையாக காணப்படும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை தடுத்து வைத்திருக்கும் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்ைக எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையின்போது அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென நம்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தியிருக்கின்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கான முதலாவது அரசு தலைவராக இந்திய பிரதமரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்தியாவுடன் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாகவும் ஜனாதிபதி இந்திய பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், இன ஒற்றுமை தொடர்பான தனது அரசியல் நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி எனக்குக் கூறினார். தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை தொடர்பான அபிலாஷைகளை எதிர்கொள்ளும் வகையிலான நல்லிணக்க நடைமுறையை இலங்கை அரசு மேற்கொள்ளுமென நான் நம்புகிறேன்" என்றும் மோடி தெரிவித்தார்.

அத்துடன் நல்லிணக்க நடைமுறையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்ைக தெரிவித்திருக்கிறார்.

இலங்கை, -இந்திய உறவு இரு நாடுகளுக்கும் அப்பாற்பட்ட பிராந்திய ரீதியானது. அபிவிருத்தியும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையொன்றை உருவாக்க வேண்டுமென இந்தியா மட்டுமன்றி இந்து சமுத்திர பிராந்தியமே விரும்புகின்றது.

இந்தியா, பூகோள ரீதியாக இலங்கைக்கு மிக நெருக்கமான நாடு மட்டுமன்றி நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகவும் விளங்குகின்றது. எமது வரலாறு, இனம்,மொழி,கலாசாரம்,குடியேற்றங்கள் என்பன இரு நாடுகளதும் நெருக்கமான உறவுகளின் உறுதியான அடிப்படை ஆதாரங்கள்.

பூகோளரீதியாக எமக்கு மிக நெருக்கமான நாடு என்றதன் அடிப்படையிலும் 'எஸ்.ஏ.ஜி.ஏ.ஆர்' பிரகடனம் அடிப்படையிலும் நாம் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குகின்றோம். எமது இரு நாடுகளது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. அதனால், நாம் ஒருவருக்கொருவர் எமது பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டிய தேவையில் உள்ளோம்.

இன்று நானும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள், பல்தரப்பு ஆர்வங்கள் என்பன குறித்து ஆராய்ந்தோம். இருநாடுகளுக்குமிடையிலான உறவை கட்டியெழுப்புவோமென நாம் இதன்போது உறுதி பூண்டோம். இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயலாற்றுமென நான் ஜனாதிபதியிடம் உறுதியளித்தேன். புதிதாக வழங்கப்படவுள்ள 400மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியானது, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக அமையும். வடக்கு, கிழக்கில் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட 46ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன். அதேபோன்று, மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் 14ஆயிரம் வீடுகளும் தற்போது முன்னேற்றகரமான நிலையில் உள்ளன. இதனடிப்படையில், பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்தியா, இலங்கைக்கு 50மில்லியன் டொலர் வழங்குவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுபற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டமையையிட்டுத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. தீர்வு விடயத்தில் ஒரு புதிய நம்பிக்ைக பிறந்துள்ளதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்திருக்கிறார். 13 வது திருத்தத்திற்கும் அப்பால் சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்வை பெற்றுத்தருவாரென்ற நம்பிக்ைக இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த முப்பது ஆண்டுகளாகத் தாம் வலியுறுத்தும் ஒரு விடயமாக, பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கூற்றைத் தற்போது இந்தியா வலியுறுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் ஆய்வாளர்கள், ஜனாதிபதி தமது செயற்பாடுகளில் உலக மக்கள் நம்பிக்ைக வைக்கும் அளவிற்கு அவரின் நடவடிக்ைககள் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிலும் விசேடமாக, அமைச்சர்கள் பட்டாளத்தை அழைத்துச் செல்லாமல், பத்துக்கும் குறைவான அதிகாரிகளை மாத்திரம் அழைத்துச் சென்றமை, ஒரு முன்மாதிரியான செயற்பாடு என்று குறிப்பிட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி, தமிழகத்தின் அரசியல்வாதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்பில் மாறுபாடான கருத்துகளைக் கொண்டிருந்தாலும், மீன்பிடிப்படகுகளை விடுவிப்பதாகவும் நாட்டு மக்கள் அனைவருக்குமான ஒரு ஜனாதிபதியாகப் பணியாற்றுவேன் என்று தெரிவித்திருப்பதானது புதிய ஜனாதிபதி மீது புதிய நம்பிக்ைகயை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ​ெடாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்திய பாராளுமன்றத்தில் விபரித்திருக்கின்றார்.

பொதுவாக இலங்கையின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை என்பது முழு பிராந்தியத்திற்கும் பாதுகாப்பானது. இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் ஐம்பது ஆண்டுகால உறவு நிலவியபோதிலும், தமது பதவிக்காலத்தில் இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார்.

இலங்கையைப் பொறுத்தவரை சீனச்சார்பு, அமெரிக்கச் சார்பு நிலை என்றெல்லாம் அரசியல் அரங்கில் பேசப்பட்டாலும், இலங்கையின் நலனில் இந்தியாவும், இந்தியாவின் நலனில் இலங்கையும் பின்னிப் பிணைந்துள்ளதை மறுக்க முடியாது.

இந்திய -பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. மேலும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடுநிலையோடு பின்பற்ற வேண்டும் என்பதிலும் உறுதியுடன் உள்ளது. அதுமட்டுமன்றி, கிழக்கு ஆசிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்; கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் இன்னும் வலுப்பட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் நிலைப்பாடாக இருக்கிறது. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

தெற்காசியாவிலுள்ள இந்தியாவின் அயல்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இது பூகோள வல்லரசாக எழுகின்ற சீனாவினுடைய விருப்பத்தின் ஒருபகுதியாக இருக்குமாயின், தெற்காசியாவில் சீனாவின் வல்லாதிக்கத்திற்கு எதிரான தடைகளை ஏற்படுத்த இந்தியா விரும்பலாம்.ஆயினும், சீனாவுடன் நேருக்கு நேர் மோதுகின்ற நிலையினை இந்தியா விரும்பாது நட்புறவினை விருத்தி செய்யவே விரும்புகின்றது.அதாவது இருநாடுகளும் வெற்றி பெறும் (Win-Win Relation) உறவினைப் பேணவே இந்தியா விரும்புகின்றது.அதேநேரம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் நலன்களையும் இந்தியா பாதுகாத்துக் கொள்ளவிரும்புகின்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தளவில், தீர்க்க முடியாமல் தொடரும் பொருளாதார மந்தநிலை. சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் மீதான இராணுவ உத்திகள் ரீதியாக அடைந்த தோல்வி, சீனாவின் உற்பத்திப் பொருட்கள் உலகம் முழுதும் பரவுவதை தடுக்க இயலாமை எனத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி தன்னை உறுதியாக தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தோ பசுபிக் கடல் பகுதியில் தன்னுடைய ஐயத்துக்கிடமற்ற ஆதிக்கம் இன்றியமையாதது என கருதுகிறது அமெரிக்கா. ஏனென்றால், உலகின் இராணுவ வலிமை பெற்ற நாடுகளில் 7 நாடுகள் இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றன, அவற்றில் 6 நாடுகள் அணு ஆயுத வல்லமை கொண்டவை. பெரிய அளவில் போக்குவரத்து நடக்கும் 9 பெரும் துறைமுகங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. இதன் வழியே உலகின் ஒட்டு மொத்த கடல்வழி வணிகத்தில் 60 வீதம் இந்தப் பகுதியிலிருந்து தான் நடக்கிறது. எனவே, இதனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தோ பசுபிக் திட்டத்தை (Indo Pasific Strategy) செயல்படுத்தி வருகிறது.

ஆனால், இந்தியாவின் கடல்வலுவும்,அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் கூட்டு செயற்பாடுகளும் சீனாவின் கடல் சார்ந்த நலன்கள் மீது தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்பாடிற்குள் வைத்திருப்பதற்கு இந்தியா, ஐக்கிய அமெரிக்காவுடன் கைகோத்து நிற்பதுடன், பலமுனை அதிகார பூகோள அரசியலை இந்தியா ஆதரித்து நிற்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது.எனவே, துரித வளர்ச்சியடையும் சீன,இந்தியப் பொருளாதாரம் இந்து சமுத்திர, பசுபிக் சமுத்திரப் பிராந்திய கரையோர நாடுகளில் புவிசார் அரசியலை மீள ஒழுங்கமைப்பு செய்வதற்குரிய சாத்தியப்பாடுகளைக் கடுமையாக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

எனினும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இந்தியப் பிரதமருடன் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்புக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தி யில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ ​வெற்றி பெறுவார் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கி யஸ்தர் ெடாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசின் சார்பில் எதி ர்வு கூறியிருந்தார். அந்த அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வரவினை இந்தியா சாதகமாகவே கருதி எதிர்கால நடவடிக்ைககளை முன்னெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பற்றித் தமிழ்நாட்டில் நிலவும் அபிப்பிராயத்தையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீது இலங்கையில் தமிழர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டையும் சற்றேனும் மாற்றும் வகையில், ஜனாதிபதியின் இந்திய விஜயம் அமைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

விசு கருணாநிதி

Comments