பிசாசாக வர்ணித்தவர்கள் இன்று இணைந்து செயற்பட தயாரென்கின்றனர் | தினகரன் வாரமஞ்சரி

பிசாசாக வர்ணித்தவர்கள் இன்று இணைந்து செயற்பட தயாரென்கின்றனர்

ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட இந்த குறுகிய நாட்களினுள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை பலரும் சிலாகிக்கின்றர். ஜனாதிபதியின்  நடத்தைகளை சம்பிரதாய அரசியல்வாதிகளால் ஜீரணிக்க முடியுள்ளதாகத் தெரிகின்றதே? 

கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளது. ஊழல் மோசடிகளற்ற எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட அரசியல் ஒன்றுக்கான  தேவை என சமூகத்தினுள் உணரப்பட்டது. அதற்கான காரணம் கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறைகளாகும். அவரது நோக்கிற்கு அமைய வேலை செய்யும் அரசியல் கலாசாரத்துடனான சூழலை உருவாக்கும் தேவை அவரிடம் இருக்கின்றது. அடுத்த விடயம் இது ஒரு இடைக்கால அரசாங்கம். நாம் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் நாம் தேவையான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உண்மையில் கடந்த அரசாங்க காலத்தில் பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்படவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது அடிவருடிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டார்கள். தமக்கு கீழ் இருந்த பல நிறுவனங்களைச் சீர்குலைத்தார்கள். எனது அமைச்சின் கீழ் உள்ள லக் சதொச நிறுவனம் 600மில்லியன் நஷ்டத்தில் உள்ளது. சிலர் தேவையற்ற வகைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்திருக்கின்றார்கள். இவற்றை தடுக்க வேண்டும். இதற்காகச் சிறப்பு நிபுணர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கும் அது தொடர்பான விஷேட நிபுணத்துவத்தைக் கொண்டவர்களின் சேவையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

கடந்த காலத்தில் லக்சதொச நிறுவனம் மற்றும் வேறு துறைகளில் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீங்கள் கூறினீர்கள். லக்சதொச நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் கடந்த அரசாங்கமும் முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசின் மீது குற்றம் சுமத்தியதுதானே? 

கடந்த அரசாங்க காலத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கமான பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு தவறான முறையில் தண்டனைகளை வழங்கியதை நாம் அறிவோம். அது அரசியல் பழிவாங்கல்களாகும். அரசியல் பழிவாங்கல்களை நாம் செய்யப் போவதில்லை. இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுக்களைச் செய்யும் நடைமுறைகளை நீக்க வேண்டும் என்றே நாம் தொடர்ந்து கூறுகின்றோம். அதுதான் இடம்பெற வேண்டும். தமக்குள்ள சட்ட வரையறையினை நீக்கி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை கஷ்டத்தில் போடுவதற்காக பொய்களை உருவாக்கும் பொலிஸாரும் எமக்குத் தேவையில்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற  பொலிஸ் விசாரணைகளில் நாம் திருப்தியடையப் போவதில்லை. அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பவே ஏராளமான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்களுக்குத் தவறான முறையில் தண்டனை வழங்கும் நோக்கம் எம்மிடமில்லை. நேர்மையாகச் செயற்பட வேண்டும். அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் எம்மிடமில்லை. அது கடந்த மோசமான அரசாங்கம் செய்த வேலை. அந்த அரசாங்கம் தோற்றுப் போனதும் அதனால்தான்.  

19வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்து மீண்டும் அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றனரே? 

அது தொடர்பில் பேசுவதற்காக நேரம் கடந்து விட்டது. இதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமக்குத் தேவை.

19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருக்கும் தவறுகளை நாம் அறிவோம். ஜனநாயக கட்டமைப்பினுள் எவ்வாறு இதனைச் செய்வது என்பது தொடர்பில் பேச வேண்டும். 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளத் திருத்த வேண்டும்.  

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு உங்களது தரப்பின் ஆயத்தங்கள் எவ்வாறுள்ளது? 

நாம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்காகப் பயணிக்க மக்களுடன் பணியாற்ற வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும். இந்நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வாறு வீழ்ச்சியடைந்த துறைகளை சிறந்த நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதனடிப்படையில் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.  

சிறுபான்மையினரின் வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்காமை நாடு என்ற வகையில் மோசமான நிலை என்றும், இனவாதம், மதவாதம் போன்றன இதன் மூலம் தோன்றக் கூடும் என்றும் பலர் கருதுகின்றனரே?

இல்லை. அது தவறானது. சிறுபான்மை மக்களை அவர்களது தலைவர்கள் மிக மோசமான வழிநடாத்தியிருக்கின்றார்கள். வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக மோசமாக முறையில் வழிநடாத்தியுள்ளது. கோட்டாபய வந்தால் முஸ்லிம் மக்கள் தாக்கப்படுவார்கள் என்று அந்த மக்களுக்கு மத்தியில் சென்று கூறத் தொடங்கினார்கள். அப்பாவியான மக்களின் மனங்களில் நச்சு விதைகள் விதைக்கப்பட்டன. அவ்வாறில்லாமல் நியாயமாக அந்த மக்கள் நடந்து கொள்வதற்கு இடமளிக்கப்படவில்லை. அப்படி நடக்காவிட்டால் அவர்கள் சரியானதைத் தெரிவு செய்திருப்பார்கள். தன்னோடு இணைந்து ஒற்றுமையோடு இந்நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு கோட்டாபய அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார். எம்மை எந்தளவுக்குத் தாக்கினார்கள்? எமது வேட்பாளர் நியமிக்கப்பட முன்னரே பிசாசாக உருவாக்கிக் காட்டினார்கள். வடக்கின் சில பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு எதிராக எந்தளவுக்குச் செயற்பட்டன? நாற்பதாயிரம் தமிழ் மக்களைக் கொலை செய்தார் எனக் கூறத் தொடங்கினார்கள். இவ்விடயங்கள் தவறான வகையில் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு வழிவகுக்கப்பட்டது. இன்று அவர்கள் கோட்டாபயவுக்கு ஆதரவளிக்க தயார் எனக் கூறுகின்றார்கள். அவர்களது அரசியல் தேவைகளுக்காக அரசியல்வாதிகள் இந்த மக்களைப் பயன்படுத்துகின்றார்கள். சிங்கள பெளத்த மக்களுக்கு பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டன. அதனால்தான் சிங்கள மக்கள் இத்தீர்மானத்தை எடுத்தார்கள். சஹ்ரானிக் குழு ஏராளமாக மக்களைக் கொன்ற போதும் கடந்த அரசாங்கம் அதற்கு எதிராக என்ன செய்தது? தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை இருந்தது. சிங்கள இனத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில்  பெளத்த தேரர்களிடத்தில் வேறான பிரச்சினைகள் இருந்தன. என்ற போதிலும் மற்றைய இனத்திற்கு அநீதிகளைச் செய்யுமாறு எவரும் கூறவில்லை. இந்நாட்டில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. மதத் தீவிரவாதத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தை பெளத்த தேரர்கள் முன்னெடுத்தார்கள். எமது தேரர்கள் இன்றும் கூறுவது மற்றைய சமயங்களிடையே நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் என்றேயாகும்.  

சிங்கள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பெளத்த மக்களில் பெரும்பான்மையினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க காரணமாக அமைந்ததா? 

சிங்கள மக்கள், பெளத்த மக்களுக்கு மாத்திரமல்ல. கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் அனைத்து மதத்தைப் பின்பற்றுவோருக்கும் பாதுகாப்பற்ற நிலை காணப்பட்டது. எமக்கு வழியே இல்லை என்று பெளத்த தேரர்கள் கூறினார்கள். கடந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளினால் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது. தேசிய உணர்வு எழுச்சி பெற்ற சந்தர்ப்பம். இது ஏனைய இனங்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எமக்காக முன்வருவதற்கு ஒருவருமில்லை என்ற உணர்வின் பெறுபேறே இப்போது ஏற்பட்டிருக்கின்றது. 

தேசிய பாதுகாப்பு தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை? 

கடந்த அரசாங்கம் இந்நாட்டில் இருந்த புலனாய்வுத் துறையினை அழித்துவிட்டது. உளவுத் துறை சீர்குலைந்தது. அதன் பெறுபேறாக சஹ்ரானின் தாக்குதலினால் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். அங்கவீனமுற்றார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நகரில் ஹோட்டல் துறை நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு உள்ளானது. முதலீட்டாளர்கள் வருகை குறைந்து போனது. தேசிய பாதுகாப்பு இல்லாத நாட்டில் பொருளாதாரம் முன்னேற்றமடையாது. இதன் காரணமாகவே இராணுவத்தை அழைத்து, பொலிஸாருக்கு முழுமையாகவே தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆலோசனைகளை வழங்க சிறந்த பாதுகாப்புச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். தற்போது பொருளாதார கேந்திர நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி இந்நாட்டைக் கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கின்றோம்  

ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாற்றமான அரசியல் ஓட்டத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை? 

நேர்மை, உண்மை  கூறுதல், தொடரான பேச்சுக்கள், ஒற்றுமை, மக்களின் தேவைகளை இனங்கண்டு செயற்படுதல், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது என்பவை எமது குறிக்கோள்களாகும்.

சுபத்ரா தேசப்பிரிய
தமிழில்: - எம்.எஸ். முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)

Comments