போருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்புகளும் சறுக்கலும் | தினகரன் வாரமஞ்சரி

போருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்புகளும் சறுக்கலும்

இது உங்களுக்குத் தெரிந்த பழைய கதை. 

2010ல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இதில் மகிந்த ராஜபக்ஸவும் சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர்.  புலிகளைத் தோற்கடித்தது. ஈழப்போராட்டத்தை ஒடுக்கியது போன்றவற்றுக்குத் தாமே காரணகர்த்தர் என இருவரும் மாறி மாறி உரிமை கோரினார்கள். இதில் ஒரு எதிராளியை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதன்படி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பு பகிரங்கமாக மக்களிடம் கோரியது. அதாவது போர்க்கள நாயகனை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பு முடிவு செய்தது. கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்தைப்பற்றி அப்போது தொடக்கம் இன்றுவரையில் கடுமையான விமசர்சனங்கள் உண்டு. ஆனாலும் தான் பிடித்த முயலுக்கு இரண்டரைக் கால் என்றே இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது கூட்டமைப்பு. கூட்டமைப்பு இவ்வாறு சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் காரணம், அதனுடைய தலைக்குள்ளே நிறைந்து கிடப்பது பழைய – புழுத்துப்போன - அரசியலேயாகும். அதாவது எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் என்பதற்காகத் தம்முடைய மூக்கை உடைப்பது. இங்கே இது சற்று வேறுபடுகிறது. எதிராளி தப்ப வேண்டும் எனத் தம்முடைய தலையை உடைத்துத் தம்மைப் பலியிடுவதாக.  

இதற்குக் காரணம், அது இன்னமும் போருக்கு முந்திய அரசியலையும் போர்க்கால அரசியலையும் முன்னெடுப்பதாகும். இதனால்தான் அது இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்ட அரசியலை முன்னெடுத்தது. தந்திரோபாய அரசியலை – புத்திபூர்வமான அரசியலை முன்னெடுப்பதற்கு அது தயாரில்லை. அதற்கான சிந்தனையும் பயிற்சியும் கூட்டமைப்பிடமில்லை. அதாவது அவ்வாறானதொரு அரசியற் பாரம்பரியத்தையும் அரசியல் ஒழுக்கத்தையும் கூட்டமைப்புக் கொண்டதல்ல. எனவேதான் அது பழி தீர்க்கும் அரசியலையே (எதிர்ப்பு அரசியலை) முன்னெடுத்தது. பழிதீர்க்க முற்படுவதென்பது முற்றிலும் உணர்ச்சி வசப்பட்ட நிலையே. இதன் அடியோட்டமாக நிறைந்து கிடப்பது பகைமையே. 

ஆனால் யதார்த்தமோ பகை மறப்பையும் நல்லிணக்கத்தையும் கோரி நின்றது. இதையே சர்வதேச சமூகத்தினரும் எதிர்பார்த்தனர். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் கூட்டமைப்பு பழைய பாணியிலான அரசியலை – எதிர்ப்பு அரசியலையே பிரகடனப்படுத்தியது. மக்களுக்கும் இதுவே விருப்பமாக இருந்தது. அவர்கள் பழிதீர்க்கும் மனநிலையிலும் எதிர்ப்பு அரசியலிலும் பழக்கப்பட்டிருந்தனர். அதனால் அவர்களின் விருப்பம் அப்படியிருந்தது. 

ஆனாலும் எதிர்பார்த்ததற்கு மாறாக மகிந்த ராஜபக்ஸவே வெற்றியடைந்தார். நிலைமை தலைகீழாகியது. கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியவில்லை. சனங்களாலும்தான். பதிலாக வெறுப்பே வளர்ந்தது. ஆனாலும் கூட்டமைப்பின் மையப்பகுதியினர் தமக்குத் தேவையானவற்றைப் பின்கதவின் வழியாகப் பெற்றுக் கொண்டனர். இதற்காக அவர்கள் மகிந்த ராஜபக்ஸவுடன் ரகசிய உறவைப் பேணினர். இதை எனக்குச் சொன்னதே அன்று கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலர். பின்னாளில் அவர்களில் பலரும் சம்மந்தன், மாவை சேனாதிராஜாவின் தலைமையை நிராகரித்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டனர். ஒருவர் மட்டும் இன்னமும் கூட்டமைப்பில்தானிருக்கிறார். இவர்கள் வெளிப்படையாக அரச எதிர்ப்பையும் ராஜபக்ஸக்களுக்கான எதிர்ப்பு மனநிலையையும் சமூகத்தில் வளர்த்துக் கொண்டு, மறுபக்கத்தில்  தனிப்பட்ட நலன்களுக்காக ராஜபக்ஸக்களுடன்  நெருக்கத்தைப் பேணினர்.  

ஆக சனங்களுக்குரிய நலன்களைப் பேணுவதற்குப் பதிலாக தலைவர்களின் நலன் பேணுவது முக்கியமானதாக மாறியது. இதற்குத் தோதாக பலமான (அரச எதிர்ப்பு – தமிழ்த்தீவிர) வார்த்தைகளை அள்ளி வீசி, தமது அரசியற் குறைபாடுகளை மறைக்க முற்பட்டனர். இது போருக்கு முந்திய அரசியலை அல்லது போர்க்கால அரசியல் மாதிரிகளை முன்னெடுப்பதாகவே அமைந்தது. அதில்தான் தவறுகளையும் குறைபாடுகளையும் மறைக்க முடியும். அதாவது போர்ப்பிரகடனம் செய்தால் அல்லது அதை ஒத்ததாக பிரகடனங்களைச் செய்தால், தவறுகளையும் குறைபாடுகளையும் பற்றிக் கேள்வி கேட்பதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் என்ற உத்தியின் பாற்பட்டது. அப்படித்தான் நடந்ததும். இதனால் கூட்டமைப்பு தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் போன்றவற்றில் எல்லாம் அமோக வெற்றியைப் பெற்றது. 

ஆனால் இது காலப் பொருத்தமற்ற அரசியல். அதாவது காலம் கடந்த அரசியல். இவ்வாறான அரசியலை முன்னெடுப்பதென்பது கூழ் முட்டைக்குச் சமம். 

கூட்டமைப்பின் இத்தகைய குறைபாடுகளையும் தவறுகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய – மாற்று அரசியல் தரப்பாக அல்லது எதிர்த்தரப்புகளாக தம்மைப் பிரகடனப்படுத்துவதற்கு வேறெந்தப் புதிய சக்தியும் அப்போது காணப்படவில்லை. பதிலாக கூட்டமைப்புக்கு எதிரான – புலி எதிர்ப்பு அல்லது அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட (ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்) தரப்புகளே அரங்கில் காணப்பட்டன. இது போதாமையை உணர்த்தியது. கூட்டமைப்பிலிருந்து பிரியும் நிலையிலிருந்த அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (கஜேந்திரகுமார்) கட்சியிலும் எந்தப் புதுமைகளுமிருக்கவில்லை. 

இது புதிய – அறியப்படாத - சேதி 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்த்தரப்புகளின் போதாமைகள் நிறைந்த இந்தப்போக்கினை அனுமதிக்க முடியாது, இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலையில் சில நண்பர்கள் மாற்று அரசியலுக்கான உபாயங்கள் குறித்துச் சிந்தித்தனர். இந்த மாற்று அரசியலானது முற்போக்காக இருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். உண்மையை நோக்கியதாக இருக்க வேண்டும். சரியானதாக இருக்க வேண்டும். கடந்த காலப்படிப்பினைகளைக் கவனத்திற் கொண்டதாக இருக்க வேண்டும். விரிந்த நோக்குடையதாக இருக்க வேண்டும். மக்கள் மயப்பட்டதாக இருக்க வேண்டும். பன்மைத்துவமும் ஜனநாயக உள்ளடக்கமும் உடையதாக இருக்க வேண்டும். அறிவுபூர்வமாக எதையும் அணுகமுற்படுவதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிந்திக்கப்பட்டது. 

இவ்வாறான அடிப்படைகளைக் கொண்டமைந்த அரசியல் தரப்பொன்றை உருவாக்குவதன் மூலமாக காலம் கடந்த அல்லது காலப்பொருத்தமற்ற அரசியலை முன்னெடுக்கும் கூட்டமைப்பை நிராகரிக்க முடியும் என விவாதிக்கப்பட்டது.  

இந்த விவாதங்களிலும் இதையொட்டிய உரையாடல்களிலும் மாற்று அரசியல் சிந்தனையாளர்களும் புதிய அரசியலை முன்னெடுப்பதில் ஆர்வமுடையோரும் தொடர்ச்சியாக ஈடுபடத் தொடங்கினர். இது ஒரு கட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கட்டத்தை அடைந்தது. அப்படி வளர்ச்சிக் கட்டத்தை அடையும்போது இரண்டு விதமான யோசனைகள் எழுந்தன. ஒன்று ஏற்கனவே மாற்று அரசியற் தளத்தில் செயற்படும் அமைப்புகள், கட்சிகள் போன்றவற்றை ஒருங்கிணைக்க முயற்சித்தல். அவற்றுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை எட்டுதல் என்பது. இவற்றை ஒரு குடையின் கீழ் கொண்டு வரமுடியாது போனால், ஒரே வரிசையில் முதற்கட்டமாக நிறுத்துவது என்றவாறாக. இரண்டாவது யோசனை, தனியாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது என. இதற்கு போதிய நிதி, ஆளணி, தொடர்பாடல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மெல்ல மெல்ல ஒரு புதிய அரசியற் போக்கிற்கான வழித்தடத்தை உருவாக்க முடியும் என நம்பப்பட்டது. ஆனால், இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பாடுபட வேண்டும் என. 

இதன்படி முதற்கட்டமாக, முதலாவது யோசனையின்படி மாற்று அரசியற் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழர் சமூக ஜனநாகக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸிஸ – லெனினிஸக்கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, முன்னிலை, இலங்கைத் தலித் முன்னணி, சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்தவர்கள் போன்ற பல மாற்றுத் தரப்புகள் ஒன்று கூடின. யாழ்ப்பாண பொது நூலக விருந்தினர் மண்டபத்திலும் தேநீர் விடுதியிலும் தொடர்ச்சியாகப் பல சந்திப்புகள் நடந்தன. 

இந்தச் சந்திப்புகள் ஒவ்வொன்றும் நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவில் அமைந்தன. பரபரஸ்பரமாக உரையாடி, பல விடயங்களைக் குறித்தும் பேசக் கூடியதாக இருந்தது. இதன்போது பலவிதமான யோசனைகள் பலராலும் முன்வைக்கப்பட்டன. ஒரு புத்தாக்க நிலை தோன்றுவதற்கான அடையாளங்களை அதிலே நான் உணர்ந்தேன். இத்தகைய நம்பிக்கையும் உணர்நிலையும் ஏனையோருக்கும் எட்டியிருக்க வேண்டும். அவர்களும் ஆர்வத்தோடு இந்த நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்று வந்தனர். இதற்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து மாற்று அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலரும் ஆர்வத்தோடு வந்து பங்கேற்றனர். உண்மையில் ஒரு புதிய மாற்றங்களுக்கான சமிக்ஞைகள் மெல்ல மெல்லத் தென்பட்டது எனலாம். 

செயற்பாட்டுப் பலமல்லாமல் வெறும் வார்த்தை ஜம்பமடிப்பதாலேயே கூட்டமைப்பின் மேலான கோபமும் அதிருப்தியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே அதைப் போக்க வேண்டும். இதற்கு நாம் மக்களுக்கு நெருக்கமாக நின்று மக்களுக்கு வேண்டியிருக்கும் வேலைகளை நிறையச் செய்ய வேண்டும். அந்தப் பணிகளும் அவர்களோடு பழகும் முறைமையும் நம்மைச் சனங்களோடு பிணைக்கும். தங்கள் வாழ்வோடு யாரெல்லாம் கலந்து நிற்கிறார்களோ அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். ஆகவே இதைச் செய்யவேண்டும். இதைச் செய்வோம் என்றவாறாகப் புதிய திட்டங்கள் சிலவற்றைப் பற்றி ஆலோசிக்கப்பட்டன. 

இதில் முதற்கட்டமாக நிலமற்ற மக்களைக் கணக்கெடுத்தல். தொடர்ந்து அவர்களுக்கான நிலத்தைப் பெற்றுக் கொடுத்தல், வீட்டு வசதி, மலசல கூட வசதி, இடுகாடு, சுடுகாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், மயானங்களைப் பொதுவாக்குதல், பாரபட்சமற்ற முறையில் – பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வளமாக்குதல், வேலை வாய்ப்புத் தொடர்பாக பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், சுய உற்பத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல், புதிய திட்டங்களை உருவாக்குதல், பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமைகளை வழங்குதல், தொழில் மற்றும் கல்வியில் முடிந்தளவு அக்கறை காட்டுதல், இப்படி மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடியான – அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணுவது என்பது ஒரு வழியாகவும்.. 

இவற்றுக்கு நிகராக அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்றான அரசியல் தீர்வு என்பதை அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகக் கையாளுதல். அதேவேளை இதை நடைமுறை அனுபவங்களோடு சேர்த்து உருவாக்க வேண்டும். அப்படியென்றால்தான் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும்.

இதற்கு சர்வதேச அனுபவங்களையும் நமது அனுபவங்களையும் தொகுத்து, புதிய சாத்தியப்பாடுகளுடன்  தீர்வு முயற்சிகளைப் பற்றிச் சிந்திப்பது.

ஆனால், அதற்கு முன்பு சனங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு முதற்கட்டமாகத் தீர்வுகளைக் காண முயற்சிப்பது. சனங்கள் பலமான சூழலில் இருக்கும்போதே ஏனைய விடயங்களில் அவர்களில் அவர்களால் போராட முடியும். எனவே அதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு சில வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. 

இவ்வாறு பல கோரிக்கைகள், பிரகடனங்களோடு உரையாடல்களும் சந்திப்புகளுமாக நாட்கள் சென்றன. ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு சந்திப்புகளில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன? ஏன் இந்தப் பின்னடைவு நிகழ்ந்தது? அப்படியென்றால் மாற்று அரசியல் என்பதும் மாற்று அணி என்பதும் என்ன? 

(தொடரும்)   

கருணாகரன்  

Comments