எப்போதும் ஐ.தே.கவையே ஆதரிக்கும் கூட்டமைப்பின் சரணாகதி அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

எப்போதும் ஐ.தே.கவையே ஆதரிக்கும் கூட்டமைப்பின் சரணாகதி அரசியல்

ஜனாதிபதி தேர்தல்கள் தமிழ் சமூகத்தினரிடையே பெரும்பாலும் சிக்கல் நிலையையே ஏற்படுத்திவிட்டுப் போகின்றன. அண்மைக்கால ஜனாதிபதி தேர்தல்களின் போது தேர்தலை பகிஷ்கரிப்பதா இல்லை யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிப்பதா என்பதே தமிழர்கள் மத்தியிலான பேசு பொருளாக இருந்தது. பெரும்பாலும் தீவிர கொள்கைகளை பின்பற்றுபவர்களே பகிஷ்கரிப்பு பற்றி பேசுகின்றனர். இவ்வாறான தேர்தல் இலங்கையின் விவகாரம். அது தமிழர்கள் தொடர்பான விடயம் அல்ல என்று அவர்கள் தமது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நியாயப்படுத்துவார்கள். இந்தக் கூற்றை முன்வைத்தே 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்திருந்தனர். எனினும் மேற்படி தீர்மானம் விடுதலைப் புலிகளின் இருப்பையே இல்லாமற் செய்ததை மறந்துவிடக்கூடாது. 

பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் பொதுவாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை. தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதுடன் தெற்கில் இருந்து போட்டியிடும் தமக்குப் பிடித்த வேட்பாளரின் வாய்ப்பு தமிழர் ஒருவர் போட்டியிடும்போது எவருமே இல்லாமற் போகலாம் என்ற கருத்துமே இவ்வாறு தமிழர் போட்டியிடுவதற்கான நிலையை வேண்டாமென சொல்ல வைக்கின்றது. 2019 ஜனாதிபதி தேர்தலிலும் இது போன்றதொரு நிலை ஏற்பட்டதை அவதானிக்க முடிகிறது  

வழக்கத்தைப் போன்றே 2019 ஜனாதிபதித் தேர்தலையும் பகிஷ்கரிக்குமாறே ஆரம்பத்தில் கூறப்பட்டது. எனினும் தமிழர்களில் பலர் இதனை அலட்சியம் செய்துவிட்டனர். பகிஷ்கரிப்பு கோரிக்கைக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமைத்துவம் வழங்கினார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியது இது முதல் முறை அல்ல. 

எப்போதும் போல தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என்ற யோசனையே இல்லாமல் இருந்தது. எனவே தமிழ் மக்களுக்கு இருந்த ஒரே விருப்பம் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதேயாகும். தமிழ் வேட்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது என்ற கருத்து பெரும்பாலான தமிழ் வாக்காளர்களிடம் இருக்கவில்லை. மொத்தமாகவே அவருக்கு 0.09 சதவீத வாக்குகளே கிடைத்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் அவருக்கு 6845 வாக்குகள் (1.845) மட்டுமே கிடைத்தன. ராஜபக்ஷவுக்கோ பிரேமதாசவுக்கோ வாக்களிப்பதும் இலகுவாக இருக்கவில்லை. 

கோட்டாபய பற்றி தமிழர்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதற்காக தமிழ் வாக்காளர்கள் பிரேமதாசவை விரும்பினார்கள் என்றும் கருதமுடியாதிருந்தது. தமிழர்கள் எப்போதும் ஒரு நடுநிலை கண்ணோட்டத்திலேயே இருந்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் அவ்வாறான மனப்பாங்கும் நிலைப்பாடும் இருந்தன.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பிரேமதாசவுக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அத்துடன் தமிழ் மக்களுடன் தொடர்பில் இருக்க அவர் முயற்சிக்கவும் இல்லை. அவரது செயற்பாடுகள் தெற்கில் சிங்கள, பௌத்த பகுதிகளிலேயே இடம்பெற்றன. தமிழ் பிரதேசங்களில் அவர் அரசியல் வேலைகளிலோ அபிவிருத்தி செயற்பாடுகளிலோ ஈடுபட்டிருக்கவில்லை.  2015 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் வாக்காளர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் கடந்த ஐந்து வருட காலமாக நிறைவேற்றப்படாமலே இருந்து வந்தது. பலாலி விமான நிலைய திறப்பு போன்ற இறுதி நேர செயற்பாடுகள், தமிழர்களால் ஒரு அரசியல் வித்தை என்றே கருதப்பட்டது.  

எனவே பிரேமதாசவை தமிழர்கள் விரும்பினார்கள் என்று முற்று முழுதாக சொல்வதற்கில்லை. எவ்வாறெனினும் வேறு வழி இன்றி தமிழர்கள் பிரேமதாசவுக்கு அதிக அளவில் வாக்குகளை வழங்கினர். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் பிரேமதாசவுக்கு 80 சதவீத வாக்குகள் கிடைத்தன. உதாரணத்துக்கு பிரேமதாசவுக்கு யாழ் மாவட்டத்தில் 83.86 சதவீத வாக்குகளும் வன்னி மாவட்டத்தில் 82.12 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 

விக்னேஸ்வரன் நடவடிக்கை ஓர் ஆச்சர்யம் 

ஜனாதிபதி தேர்தல் 2019 பற்றி அறிவிக்கப்பட்ட போது,  ஐந்து தமிழ் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பொது அணுகுமுறையொன்றை பின்பற்றுவது தொடர்பான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK), தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (TELO), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (PLOTE) தமிழ் மக்கள் கூட்டணி (TMK) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகிய கட்சிகளே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

இந்த கட்சிகளிடையே தமிழ் மக்கள் கூட்டணியும் அதன் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனும் சேர்ந்துகொண்டமை வியப்பளிப்பதாக உள்ளது. இக் கட்சி சமீபத்தில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தது. இவ்வாறு பிரிந்தமைக்கு அடிப்படை கொள்கை வேறுபாடுகளே காரணமாகியிருந்தன.  

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்குமிடத்து இது தமிழ் மக்கள் கூட்டணி செய்த பாரதூரமான தவறு ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்புடனான வேறுபாடுகள் பற்றி தமிழ் மக்கள் கூட்டணி விளக்கிக் கூறியிருக்க வேண்டும். தமிழ் கூட்டணி விரைவில் பிளவுபட்டதற்கு விக்னேஸ்வரன்தான் காரணம். இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன்தான் இணையும் என்பது விக்னேஸ்வரனுக்கு தெரிந்திருக்க வேண்டும். 

த.தே.கூ.வின் தவறு 

எனினும் தமிழ் கட்சிகள் 13 அம்ச அறிக்கையொன்றை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்தன. எனினும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் அதனை நிராகரித்துவிட்டனர். அவ்வாறு நிராகரிக்கப்பட்டபோதும் இலங்கை தமிழ் அரசு கட்சி (அல்லது உண்மையான த.தே.கூ) மற்றும் PLOTE, TELO ஆகிய கட்சிகள் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரத்தில் இறங்கின. இங்குதான் தமிழ் கட்சிகள் பிழைசெய்தன. எந்தவொரு வேட்பாளரும் தன் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பகிரங்கமாக நிராகரித்துவிட்ட நிலையில் அவருடன் பேரம் பேசும் நிலைப்பாடு மிகவும் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. இவ்வாறான பேரம்பேசும் நிலைப்பாடு, தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமை, த.தே.கூட்டமைப்பையும் தமிழர்களின் பலவீனங்களையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. தனக்கு வாக்களிப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதை பிரேமதாசவுக்கு தெரிந்திருந்தது. தமிழர்களுக்கு, பிரேமதாசவுக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.  

ஒரு திறமையான அரசியல் கூட்டணி என்ற வகையில் த.தே.கூட்டமைப்புக்கு சில சலுகைகளை பிரேமதாசவிடம் கேட்டிருக்கலாம். ஏனெனில் த.தே.கூ்டடமைப்பின் ஆதரவு பிரேமதாசவுக்கு மிகுந்த பயனை கொடுத்திருக்கும் எனினும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் பிடிக்குள் த.தே.கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் இருந்ததால் வேறு சலுகைகளைப்பற்றி கூட்டமைப்பினர் யோசிக்கவில்லை. 

அடுத்த முறை இதேபோன்ற நிலை வரும்போது ஐக்கிய தேசிய கட்சி மிகுந்த நம்பிக்கையுடன் இல்லை என்று சொல்லிவிடும்,  ஏனெனில் த.தே.கூட்டமைப்பு இறுதியில் அவர்களிடம் சரணடைந்துவிடும் என்பது ஐக்கிய தேசிய கட்சிக்குத் தெரியும். எனவே பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் தமிழர்களின் கண்ணோட்டத்தில் மோசமான முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். 

அடுத்ததாக தோல்வி பெறும் நிலையில் இருந்த வேட்பாளரை ஆதரிப்பதற்கு அந்த வகையிலான சமரசத்தை செய்துகொள்ள வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இருக்கவில்லை. 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கான வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை பெறுவதற்கு அவர் பெருமளவு போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. இந்த போராட்டத்தில் தோல்வியடைய ரணில் விக்கிரமசிங்க பெரிதும் விரும்பியிருப்பார்.  

பிமேதாசவுக்கு ஆதரவை தெரிவிக்க தீர்மானிப்பதற்கு முன்னர் தேர்தல் பற்றிய சாத்திய பகுப்பாய்வினை மேற்கொள்ள கூட்டமைப்போ அல்லது அதன் தலைவர்களோ முடிவுசெய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் அதனை செய்தருக்க வேண்டும். எனவே அவர்கள் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியது மட்டுமன்றி அவருக்கு பிரசாரமும் செய்தார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. தமது தவறான வழிநடத்தலுக்காக  தமிழ் மக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை கூட்டமைப்புக்கு ஏற்படலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

என்னைப் பொறுத்தவரை தமிழ்க் கட்சிகள் 13 அம்ச அறிக்கையை முன்வைத்திருக்கக்கூடாது.  பிரேமதாசவுக்கு வெற்றிவாய்ப்புகள் இல்லையென்று தெளிவாக தெரியவந்த நிலையின் தமிழர்கள் நடுநிலை வகித்திருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே தமிழ் மக்கள் விரும்பியவாறு வாக்களிக்கலாம் என்று கூட்டமைப்பு கூறியிருக்கவேண்டும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஜே.விபியிடம் இருந்து சில விடயங்களை கற்றிருக்கலாம். அடுத்த முறை பிரதான தமிழ் கட்சி தனது வேட்பாளர்கள் ஒருவரை முன்னிலைப்படுத்தி பேரம் பேச வேண்டும். தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள முடியாமற்போனாலும் தமிழர்கள் போட்டியிடவேண்டும். ஏனெனில் அது அவர்களையும் சார்ந்த தேர்தலாகும்.  

எஸ். ஐ. கீதபொன்கலன்    

Comments