தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை: மருத்துவமனை சேவையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை: மருத்துவமனை சேவையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

கடந்த ஜனாதிபதி தேர்தல் தினமான 16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளுக்கு பொது மக்கள் சிகிசைக்காக சென்ற போது, இன்றும் நாளையும் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள் இல்லை என்றும் நாளை மறுதினம் வாருங்கள் என்றும் அங்கிருந்த ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் என பொது மக்களால் வினவிய போது குறித்த வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் வாக்களிப்பதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு விடுமுறை பெற்று சென்று விட்டனர். என பதிலளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையில் பணியாற்றுகின்றவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பு உரிமை தேர்தல்கள் சட்டத்தில் வழங்கப்படாததன் காரணமாக வெளிமாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றும் கிளிநொச்சி போன்ற பல மாவட்டங்களில் தேர்தல் தினத்தன்று விடுமுறை பெற்று சென்றமையினால் சுகாதார சேவைகள் முடங்குமளவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.  

சுகாதார சேவையானது உயிர்காப்புப் பணியினை உள்ளடக்கியது இதில் வைத்தியசாலைகள் அனைத்தும் இடையறாது 24 மணிநேரமும் இயங்கவேண்டியவை அவ்வாறு வைத்தியசாலைகள் இயங்குவதற்கு உரிய ஆளணி அவசியம். தேர்தலில் வாக்களிப்பதற்காக 2 அல்லது 3 நாட்கள் விடுமுறையில் சுகாதார ஆளணியினர் செல்லும்போது பல அத்தியாவசிய சேவைப் பிரிவுகளை இயக்குவதற்கான ஆளணி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான நோயாளர்களது உயிர்கள் பணயம் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் மூலம் சுகாதார சேவை ஆளணியினருக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.  

இந்த அனுமதி இவ்வருடம் இடம்பெறாததால் வடக்கின் பல வைத்தியசாலைகள் இயக்கமின்றி முடங்க நேரிட்டது. எனவே இதற்கு நிரந்தரத் தீர்வாக தேர்தல்கள் சட்டமூலத்தில் தபால் மூல வாக்களிப்பிற்குத் தகுதியானவர்கள் என்ற பிரிவின் கீழ் சுகாதார சேவைப் பணியாளர்களும் உள்ளடக்கப்படுவதே தீர்வாக அமையும். எனவே அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தி ஆவன செய்யவேண்டும்  

மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள், மருந்தாளர்கள், தாதியர்கள், மற்றும் துறைசார்ந்த பணியாளர்கள் வாக்களிப்பதற்காக விடுமுறைக்கு விண்ணப்பிக்கின்ற போது அவர்களை உயரதிகாரிகள் தடுக்கவோ, விண்ணப்பத்தை மறுக்கவோ முடியாது. வாக்களிப்பது என்பது அவர்களுடைய அடிப்படை உரிமை. அதேவேளை இந்த நாட்களில் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளைத் திருப்பி அனுப்பவும் முடியாது. அவர்களுக்குரிய மருத்துவ சேவைகள் வழங்கப்படப்படல் வேண்டும். அது நோயாளிகளின் உரிமை. எனவே இந்த நிலைமகள் கருத்தில் எடுக்கப்படல் வேண்டும்.

எதிர்காலத்தில் தேர்தல் காலங்களில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் சுகாதார துறைசார்ந்தவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையினை வழங்க வேண்டும். இதுவே இந்த நெருக்கடி நிலைமையினை தீர்ப்பதற்கான ஒரேயொரு வழி. தற்போதுள்ள தேர்தல்கள் சட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கும் வசதிக்குள் சுகாதார துறையினர் உள்ளடக்கப்படவில்லை. தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச ஊழியர்களுக்கே தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

மருத்துவ துறை அத்தியாவசிய சேவை என்பதனால் அவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட முடியாது என்பதால் அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.

என்ன காரணத்திற்காக மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லையோ, அந்தக் காரணம் நிறைவேறவில்லை. கிளிநொச்சி போன்ற பல மாவட்டங்களில் தேர்தல் காரணமாக இரண்டு, மூன்று நாட்களுக்கு விடுமுறையில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் செல்வதனால் மருத்துவமனைகள் ஸ்தம்பித்துப் போகின்றன. மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு தபால் மூல வாக்களிப்பு உரிமை வழங்கப்படவில்லையோ அது பொது நன்மை நிறைவேற்றப்படவில்லை. மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுப்பட முடியாது என்ற சட்ட ஏற்பாடுகள் இருந்தாலும் மறுபுறம் மற்றொரு பலவீனமான பக்கமும் உண்டு. எனவே நாட்டின் தேர்தல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கான தீர்வை காணமுடியும் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை வைத்தியசாலை வார்டுகளில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் தேர்தலுக்கு முதல் நாளும், தேர்தல் அன்றும் சிகிச்சை முடிந்து வெளியே செல்லும் நிலையில் இருந்த போதும் மருத்துவர்கள் இன்மையால் அவர்களால் வைத்தியசாலையினை விட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்களும் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர்.

இதனைவிட சிலவேளைகளில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு மருத்துவத்துறை சார்ந்த விடுமுறையில் சென்று தேர்தல் தினத்திற்கு மறுநாள் மீண்டும் கடமைக்கு திரும்பும் நிலையில் உள்ள போது நாட்டில் ஏதேனும் அமைதியின்மை ஏற்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தினால் விடுமுறையில் சென்ற மருத்துவர்கள் அன்றைய தினமும் கடமைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்களுக்கே முற்றுமுழுதான பாதிப்பு அதுவும் கிளிநொச்சி மாவட்டம் போன்ற மாவட்டங்களின் பிரதேச வைத்தியசாலைகளை நம்பியிருக்கின்ற பொது மக்களே அதிகளவு பாதிக்கப்படுவர்.  

ஆகவே அரசியல் தரப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இந்த விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தி இனி வருகின்ற தேர்தல்களின் போது மருத்துவதுறை சார்ந்தவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையினை வழங்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.

மு.தமிழ்ச் செல்வன்

Comments