பாடசாலை மாணவியர் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சினை | தினகரன் வாரமஞ்சரி

பாடசாலை மாணவியர் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சினை

உண்மையைச் சொல்வதா னால் பெண்களின் மாதவிடாய் ஒரு பிரச்சினையே கிடையாது. அது வெகு இயல்பானது இயற்கையானது. ஒரு பெண் இனவிருத்திக்குத் தயார் என்பதைச் சொல்வது. எப்படி இதில் எந்தவொரு புனிதமும் கிடையாதோ அதேபோல அபசகுனமும், அசூசையும், அசிங்கமும், அமங்களமும் கிடையாது. மாதவிடாய் தொடர்பான உண்மையான தகவல்களுக்கு மேலாக அது தொடர்பான கற்பனையான தகவல்களும் கதையாடல்களுமே மிக அதிகம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் பொது வெளியில் பேசப்பட வேண்டிய ஒரு விஷயமே மாதவிடாய். எதையும் பொதுவில் வைத்துப் பேசினால் அதில் உள்ள கற்பனையான விஷயங்கள் அகன்றுவிடும்.  

ஒரு தந்தை தன் மனைவிக்கு அல்லது மகள்மாருக்கு மாதவிடாய் துவாய் (PAD) வாங்கித்தர வேண்டும் என்று நினைப்பதே இல்லை. வீட்டுப் பெண்களும் அது பற்றி அவரிடம் பேசுவதும் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். மனைவி தன் கணவனிடம் மாதவிடாய் துவாய் பெக்கட்டுகளை வாங்கி வாருங்கள் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் அது ரொம்ப இயல்பான விஷயம் என்பது அக் கணவனுக்கு, தந்தைக்கு, ஆண், மகனுக்கு புரியும். இது ஒரு அசூசையான விஷயம் என்றுதான் ஆண்களுக்கு கற்றுத்தரப்பட்டுள்ளது. அதனால்தான் ‘வீட்டுக்கு விலக்காகி இருக்கிறா’ என்று சொல்கிறார்கள். இது அவசியமற்ற சொற்றொடர்.  

மாதவிடாய் காலத்தில் மங்களகரமான விஷயங்களில் பெண்கள் ஈடுபடக் கூடாது, கோவிலுக்கு செல்லக் கூடாது, சில உணவுகளை உண்ணக் கூடாது, மேலும் ஆண்களோடு பழகக் கூடாது. என்றெல்லாம் கட்டுப்பாடுகளை இன்றைக்கும் வீடுகளில் கமுக்கமாக பின்பற்றத்தான் செய்கிறார்கள். மாதவிடாய் தொடர்பாக ஊடகங்களில் ஏதேனும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்றால் இல்லை என்பதுதான் பதில். குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் மிகுந்த ‘ஆசார’த்துடன் தான் நடந்து கொள்கின்றன. அவ்வளவுக்கு பிற்போக்கான பார்வை! ஊடகங்களில் இது பேசாப் பொருளாக இருப்பதால் ஆண்கள் இது பற்றிய எந்த விழிப்புணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்கள். மாதவிடாய் தொடர்பில் ஆண்களுக்கு எந்த உணர்வும் இல்லை (பகிடியாகவும், தரக்குறைவாகவும் பேசத் தெரிந்திருப்பது வேறு விஷயம்) என்பதால் பெண்கள் இதை மூடு பொருளாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது. மூடு பொருளாக இது தொடர்வதால் தான் பெண்கள் பல சங்கடங்களையும் வேதனைகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது.  

நம்மில் எத்தனை பேருக்கு பள்ளி மாணவியர் பாடசாலைகளிலும் போக்குவரத்திலும் எதிர்கொள்ளும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினை புரியும்?  

பெரும்பாலான மலையகப் பாடசாலைகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. பாடசாலைகளை அடைவதற்காக மாணவியர் சில சமயம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். கரடு முரடான பாதைகள் வழியாக நடந்து செல்ல வேண்டியிருக்கும். பல மாணவியரின் குடும்பங்கள் வறுமை பாற்பட்டவை. ‘பேட்’ வாங்குவதற்கான பொருள் வசதி இருக்காது. பருத்தித் துணியுடன் நிலைமையை சமாளிக்க வேண்டியிருக்கும். கசிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு மட்டுமின்றி கிருமித் தொற்று ஏற்படுவதற்காக சாத்தியமும் உள்ளது. சில சிறிய பாடசாலைகளில் ஆண் ஆசிரியர் மட்டுமே கடமையில் இருப்பார். பாடசாலையில் வைத்து விலக்காகி விட்டால் ஆண் ஆசிரியர்/ அதிபரிடம் அதை எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்பது ஒரு பிரச்சினையாகி விடும் மாணவியருக்கு. எனவே கலவன் பாடசாலை என்றால் நிச்சயம் ஆசிரியை ஒருவராவது கடமையில் இருப்பதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.  

“பாடசாலைகளில் மாதவிடாய் காலங்களில் பெண்பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகவும் அதிகம். ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 50 பெண் பிள்ளைகளாவது மாதவிடாய்க்கு ஆளாகிய நிலையில் பாடசாலைக்கு வருகிறார்கள். இந்த எண்ணிக்கை கூடலாமே தவிர குறையாது. பெருந்தோட்ட பிள்ளைகள் தரம் 6க்கு மேல் கற்பதற்கு நகர்ப்புற பாடசாலைகளுக்கு பேருந்திலும் கால் நடையாகவும் பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். சில சமயம் மாதவிடாய் சிக்கலாக அமையும் பட்சத்தில் பிள்ளைகள் பாடசாலைக்கு ஐந்து நாட்களுக்கு மேல் சமூககளிக்காதும் இருந்து விடுகிறார்கள். இது கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தவும் செய்கிறது என்கிறார் மலையகத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகி.  

பெரும்பாலும் பாடசாலைகளில்தான் மாணவியர் பருவம் அடைகிறார்கள். இச் சந்தர்பங்களில் கூட அவர்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இருப்பதில்லை. அப் பாடசாலை கலவன் பாடசாலையாக இருக்கும் பட்சத்தில் அம் மாணவி கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது. இவ்வாறான தருணங்களில் ஆசிரியை இல்லாத பட்சத்தில் நண்பிகள் தான் உதவுவதாக மாணவிகள் கூறுகின்றார்கள். மாதவிடாய் காலம் எல்லா மாணவியருக்கும் ஒரே மாதிரியாக அமைவது இல்லை. பாடசாலையில் அதி கூடிய வயிற்று வலி, அதிக இரத்தப் பெருக்கு, தலை சுற்று, வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல், வயிற்றோட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மாணவியர் உட்படுகின்றார்கள். மாதவிடாய் குறிக்கப்பட்ட நேரத்தில் எல்லா பிள்ளைகளுக்கும் வெளியேறாது. எனவே இதற்கு பிள்ளைகள் தயாராக இருக்க வேண்டும். பாடசாலையில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் PAD பெற்றுக் கொள்வதற்கு இவர்களிடம் பணம் இருப்பதும் இல்லை. ஆண் ஆசிரியர்களிடம் காசு கேட்பதற்கு தயங்குகிறார்கள். அவ்வாறே பிள்ளையின் நிலை அறிந்து ஆசிரியர் உதவினாலும் ஆண் என்ற வகையில் ஒரு ஆசிரியருக்கும் அவப்பெயர் வந்து விடுகின்றது.  

வீட்டுக்குச் சென்று பாடசாலையில் விலக்கு வந்து விட்டது ஆசிரியர்தான் உதவினார் என்று அம்மாணவி சொன்னால் அதை சில பெற்றோர்கள் வேறு விதமாக எடுத்துக் கொண்டு ஆசிரியரைப் பாராட்டுவதில்லையாம். பதிலாக, ஒரு ஆணுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை. தன் வேலையை பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே என ஆசிரியரை பெற்றோர் திட்டுவதும் உண்டாம்!  

ஒவ்வொரு பாடத்திற்கும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இருப்பது போலவே மாதவிடாய் விடயத்தில் உதவுவதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியைமார் பாடசாலைகளில் இருக்க வேண்டும். பாடசாலை நேரங்களில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டு விட்டால் பிள்ளைகள் இடையில் ஆசிரியர்களிடம் கூறிவிட்டு வீட்டுக்கு செல்கின்றார்கள் வீடுகளுக்கு தனியாக அனுப்ப முடியாத சூழ்நிலை வந்தால் ஆசிரியைகள் தங்களுடைய பணத்தை செலவு செய்து வைத்தியசாலையில் அனுமதிப்பது, வீடுகளுக்கு அழைத்து செல்வது போன்ற காரியங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது.  

“மாதவிடாய் காலங்களில் கற்றல் செயற்பாடுகளுக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் கல்வியைத் தொடரவும் எங்களுக்கு உதவவும் எங்கள் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை மாணவியருக்கு ஏற்படுமாயின் பிள்ளைகள் மகிழ்சியாக பாடசாலைகளில் கற்றலில் ஈடுபடுவார்கள்.” என்கிறார் மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்.  

பாடசாலைகளில் முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இருப்பதைப்போலவே மாணவியருக்கு தேவையான பருத்தி, பஞ்சு, மாதவிடாய் துவாய், தலைவலி, வயிற்றுவலிக்கான மருந்து என்பனவற்றைக் கொண்ட ஒரு ஓய்வு அறை ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். பல பாடசாலைகளில் மகளிர் கழிப்பறைகள் வசதி கொண்டதாகவும் கழிவுத் தொட்டி கொண்டதாகவும் இருப்பதில்லை. உபயோகித்த ‘பேட்’டை எங்கே போடுவது என்ற பிரச்சினை பாடசாலைகளில் உள்ளது. பற்றி எத்தனை அதிபர்கள் சிந்திக்கிறார்கள்?  

பெற்றோர் கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பான விளக்கம் கொடுத்தால் எதிரான விமர்சனம் ஏற்படுகிறது என்று சில அதிபர்கள் நொந்து கொள்கிறார்கள். ஆனால் பெற்றோரை விழிப்படையச் செய்யத்தான் வேண்டும். தன் மகளுக்கு எப்போது மாத விலக்கு ஏற்படும் என்பதை தாயார் தெரிந்து வைத்திருப்பார். எனவே அப்பருவம் அண்மிக்கும் போது ஒரு துவாயை புத்தகப் பையில் வைத்திருக்கச் செய்ய வேண்டும். ஒரு தடவை மாணவிக்கு பாடசாலையில் மாதவிடாய் ஏற்பட்டு விடவே வேறு வழியின்றி மாணவி தான் அணிந்திருந்த ஜேர்சியை கழற்றி துவாயாக பாவித்துக் கொண்டாராம். பாருங்கள் எவ்வளவு பரிதாபமான நிலை என்று!  

தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது தமிழகம் இவ்விடயத்தில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எயிட்ஸ் நோய் தடுப்பில் ஆணுறை பாவனையை பிரபலப்படுத்துவதில் இந்திய அதிகாரிகள் எந்தத் தயக்கமும் காட்டவில்லை.

பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே அதைச் சொன்னார்கள். தமிழக தொலைக்காட்சிகளில் மாதவிடாய் ‘பேட்’ விளம்பரங்கள் வெளிப்படையாகவே காட்டப்படுகின்றன. அதை அணிந்து கொண்டால் ஆடலாம், பாடலாம், மலை ஏறலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பெருமளவிலான பெண்கள் இன்றைக்கும் பருத்தித் துணிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். எனவே துவாய்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.  

நம் மத்தியிலும் இதைத் தொடர்ந்தும் மூடு பொருளாக நாம் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதன் மீதான அசூசை எண்ணங்களை அகற்றி பேசு பொருளாக மாற்றி, மிக இயற்கையான உடல் இயக்கமாக இதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம்.  

ஆனால் இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மத்தியில் துவாய் பாவனை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் திருப்திகரமான அளவில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்களைப் போலத்தான் பெண்களும் போதிய விழிப்புணர்வு அற்றவர்களாக, தமது அசமந்த போக்கை தமது பிள்ளைகளுக்கு கடத்துபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பாடசாலைகளே சான்று. பல பாடசாலைகளில் குறிப்பாக மலையக, பின்தங்கிய பகுதி பாடசாலைகளில் இது தொடர்பான எந்த அறிவும் அற்றவர்களாகவே அதிபர்களும் ஆசிரியைமாரும் உள்ளார்கள். மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இதற்கு சான்று. எனவே விழிப்புணர்வு என்பது பெற்றோருக்கும், ஆண்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஒன்று. எல்லாப் பாடசாலைகளும் மாணவிகள் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சினைக்கு உதவும் வகையில் வசதிகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.    

வி. ஷாந்தி

Comments