வரிச்சலுகைகள் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பாரிய அடித்தளம் | தினகரன் வாரமஞ்சரி

வரிச்சலுகைகள் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பாரிய அடித்தளம்

பொது மக்களின் நலன்புரி விடயங்கள் வலுப்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைவடையச் செய்து புதிய மூலதனங்களை அதிகரிப்பதற்கும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வரி குறைப்பு அல்லது வரி சலுகைகள் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெரும் உதவியாக அமையுமென சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களும், ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர். 

வரிச் சுமையால் மக்களை நெருக்குதலுக்கு உள்ளாக்கி நாட்டுக்கு பொருத்தமில்லாத பொருளாதாரக் கொள்கைகளால் வீழ்ச்சிக்கண்டிருந்த நாட்டை, மீண்டும் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் வழிநடத்திச்செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே பல முடிவுகள் எடுத்துள்ளார். 

ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பில் பொருளியல் ஆய்வாளர் மாணிக்கம் லோகசிங்கம் கருத்து வெளியிடுகையில், 

புதிய அரசாங்கம் செய்துள்ள வரி குறைப்புகள் எவ்வித சிக்கல்களும் இல்லாது தொடர்ந்து அமுலில் இருந்தால் அடுத்துவரும் இரண்டு, மூன்று வருடங்களில் இலங்கை பாரிய அபிவிருத்தியை நோக்கி நகரும் என்பதுடன், மக்களின் வாழ்க்கைச் செலவு குறைவடைந்து உற்பதிகளும் பெருக்கமடையும். 

பொருட்கள், சேவைகள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் வரியாக வற் வரி காணப்படுகிறது. பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 8வீதமாக குறைக்கப்பட்டுள்ளால் பல நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக ஒரு பொருளின் விலை 100ரூபாவாக காணப்படுகின்ற போதிலும் வற் வரியால் அது 115ரூபாவுக்கே விற்பனை செய்யப்படும். தற்போது அது 108ரூபாவாக குறைவடையும் வாய்ப்புள்ளது. உடனடியாக அந்த விடயம் இடம்பெறாவிடினும் நீண்டகால இலக்குகளை அடையும் வழிமுறைகளுக்கு சாதகமாக அமையும். 

பணவீக்கம் குறைவடைந்து உற்பத்திகள் பெருக்கமடையும் என்பதுடன், இறக்குமதிகளும் குறைவடையும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் அதிகரிப்பர். சுற்றுலாத்துறையும் விருத்தியடையும். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில்  உற்பத்தி வளர்ச்சியானது 5.6சதவீதமாக காணப்பட்ட போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2.3சதவீதமாக அது குறைவடைந்தது. உண்மையான பொருளாதாரத்தின் செல்நெறியை நல்லாட்சி அரசாங்கம் அறிந்திருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது அவர்களால் இதனை கையாள முடிகிறது. 

வரிக் குறைப்பால் அரசாங்கத்துக்கு ஒருவகையில் வருமானம் குறைவடைகின்ற போதிலும், அதனை ஈடுசெய்ய அரச செலவீனங்களை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார் என்றார்.  

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொருளாதார நிபுணருமான வசந்த மார்டின் பெர்ணாந்து கருத்து வெளியிடுகையில்,  

புதிய அரசாங்கத்தால் மக்களுக்கு பாரிய அளவில் வரிசலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் மக்களை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் எடுக்கும் தீர்மானங்களை இலகுவாக நடைமுறைப்படுத்தவும் இது பெரும் உதவியாக அமையும். எமது நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மாத்திரமல்ல பாரிய வியாபாரிகளை வலுப்படுத்தவும் இந்த வரிசலுகைகள் உதவியாக இருக்கும். 

பொதுவாக  பொருளதாரம் விருத்தியடைய இதுதொரு சிறந்த அடிதளமாகும். வரி குறைவடைவதால் உற்பத்தி செலவீனங்கள் குறைவடையும். அதன்மூலம் உற்பத்தியாளர்கள் புதிய உத்வேகத்துடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட கொழும்பு அமைப்பாளர் தேவமுனிகே நிஷாந்த டி சில்வா கருத்து வெளியிடுகையில், 

ஜனாதிபதி, தனது தேர்தல் விஞ்ஞாபனாத்தில் கொடுத்திருந்த வாக்குறுதியின் பிரகாரம் எத்தகைய சவால்கள், தடங்கல்கள் வந்தபோதும் வற் வரியை 8சதவீதமாக குறைத்துள்ளார். ஜனாதிபதியின் வழிநடத்தலின் கீழ் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்லும் யோசனையாக இதனை கருத முடியும். வற் வரிக் குறைப்பை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஜனாதிபதியே கோட்டாபய ராஜபக்ஷ என்றார். 

பேராசிரியர் அமில கங்காதம்கே கருத்து வெளியிடுகையில், 

மக்கள் மீது வரிச் சுமையை ஏற்படுத்திய  எந்தவொரு நாடும் முன்னேறியதாக வரலாறுகள் இல்லை. உற்பத்தி பொருளாதாரத்தையும் சேவை பொருளாதாரத்தையும் விரிவுப்படுத்தி மக்களின் வருமானத்தை அதிகரிப்பதையே அரசாங்கமொன்று செய்ய வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கான முதல்படியை எடுத்துள்ளார். அது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். 

இரண்டாவது நடவடிக்கையாக அமைய வேண்டியது விவசாய, கைத்தொழில் உற்பத்திகளை பெருக்கி சேவைத் துறையை விரிவாக்கி ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்வதாகும். மூன்றாவது நடவடிக்கையாக எமது நாட்டுக்கு வெகுவிரைவாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவர நடவடிக்கையெடுப்பதாகும் என்றார். 

சிரேஷ்ட நிதி கொள்கைகள் தொடர்பிலான ஆய்வாளர் ரவி அபேசூரிய கருத்து வெளியிடுகையில், 

கொழும்பு பங்குச்சந்தையின் முதலீடுகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டமையால் அது புத்தாக்கமடையும். அதேபோன்று பொது மக்களுக்குச் சேவைப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பட்டியலும் அதிகரிக்கும். அத்துடன், நிதித் தேவைகளை வங்கித்துறையில் அல்லாது நிதிச் சந்தையில் பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படும். இது மிகவும் நன்மையானதாகும் என்றார். 

கொழும்பு மின் உபகரண வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் பி.ஜி.எஸ்.தம்மிக்க பெரேரா கருத்து வெளியிடுகையில், 

பாரிய வரி சுமைகள் வர்த்தகர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.. அதன் காரணமாக புதிய முயற்சியாண்மைகள் உருவாகவில்லை. புதிய ஜனாதிபதி வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதனால் உற்பத்திகளை அதிகரிக்க முடியும். 

எமது நாட்டின் வர்த்தகர்கள் கடன் கறுப்பு பட்டியில் உள்ளனர். அது அவர்களது தவறுகளால் இடம்பெற்றதல்ல. நடைமுறையில் உள்ள கசப்பான வியாபார சூழல் காரணமாகவே வர்த்தகர்கள் வீழ்ந்துள்ளனர். வங்கிக் கடன், குத்தகைகளை செலுத்த முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

அந்தச் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறாத வகையில் வர்த்தக சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி மீண்டும் கடன் தொகையொன்றை பெற்றுக்கொண்டு வர்த்தகர்கள் முன்னோக்கிப் பயணிப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். குறைக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் தேசிய உற்பத்தியாளர்களை வலுப்படுத்தி முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். தேசிய உற்பத்தியாளர்களுக்கு இலகுவாக களஞ்சியப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் புதிய தொழில்வாய்ப்புகளும் உருவாக்கும் என்பதுடன், உற்பத்திகளும் புதிய தெம்புடன் வெளிப்பாய்ச்சலை தரும் என்றார். 

கொழும்பு வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமிந்த விதானகம கருத்து வெளியிடுகையில், 

குடிசைக் கைத்தொழில் மற்றும் பொருட்கள் சேவைகள் மீது அறவிடப்படுகின்ற தேசத்தை கட்டியெழுப்பும் வரி, பொருளாதார சேவைகள் தொடர்பிலான வரி, நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி, வருமான வரி, வட்டிக்கு அறவிடப்படும் வரி, கடன் சேவை வரி, பங்குச்சந்தை வரி, தகவல் தொடர்பாடல் - தொழில்நுட்ப வரி உட்பட பல வரிகளை அரசாங்கம் நீக்கியதை நாம் வரவேற்கின்றோம். 

அதேபோன்று வற் வரியை 8சதவீதமாக குறைத்த தீர்மானத்தையும் வரவேற்கின்றோம். ஒரு மில்லியன் கையிருப்பை வைத்திருக்கும் நிறுவனங்கள் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளது. ஒருவருடத்திற்கு 300மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள் மீது வரி அறவீட்டை அதிகரிக்க எடுத்துள்ள தீர்மானங்களை வரவேற்கின்றோம். இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாரிய விருத்தியடையும் என்றார். 

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, 

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் மீதான வரிகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதால் இத் துறையில் அதிகம் ஈடுபட்டுள்ள இளம் சமுதாயம் பாரிய நன்மையடையும் என்பதுடன், தேசிய பொருளாதாரத்துக்கு அது வலுவானதாக மாறும். சிறிய முயற்சியாண்மைகள் அதிகரிக்கும். 

வரிக் குறைப்பினால் தற்போது அரச வருமானம் குறைவடைகின்ற போதிலும் நாம் வரியல்லாத முறையில் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக கொள்கைகளை வகுத்து வருகின்றோம். எதிர்வரும் ஆண்டு எமது அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் இதனையும் விட பல நன்மைகளை மக்கள் அடைவார்கள். 

புதிய அரசாங்கம் மக்கள் மீது கட்டுக்கடங்காத வகையில் சுமத்தியிருந்த நேரடி மற்றும் மறைமுக வரிகள் தற்போது  பாரிய அளவில் குறைந்துள்ளது. இதனைச் செய்ய முடியாதென எதிர்த்தரப்பினர் கூறியிருந்தனர். ஆனால், புதிய அரசு அதனைச் செய்து காட்டியுள்ளது. 

15சதவீதமாக இருந்த ‘வற்’ வரியை 8சதவீதமாக குறைத்துள்ளோம். அதன்மூலம் மக்கள் பாரிய நன்மையடைவார்கள். இது மக்களிடமிருந்து மறைமுகமாக அறவிடப்பட்ட வரியாகும். அனைத்துப் பொருட்கள் மீதும் வற் வரியே சுமத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் வாழ்கைச் செலவு பாரிய அளவில் அதிகரித்துக் காணப்பட்டது. பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டிருந்தது. பங்குச் சந்தை மற்றும் மூலதன வரியை நாம் குறைத்துள்ளதால் பங்குச் சந்தையில் பங்கு பரிமாற்றங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. 

தகவல் தொழில்நுட்பத்துறை மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன. வருமான வரி, ‘வற்’ அல்லது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளிலும் இருந்து இத்துறை விடுவிக்கப்படுள்ளது. 

இதனால் தகவல் தொழில்நுட்ப துறையில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். தகவல் தொழில்நுட்ப துறையின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கியுள்ள பாரிய பின்புலமாக இது அமையும். இந்த துறையில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் மென்பொருள் உள்ளிட்ட தயாரிப்புக்களை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். 

முன்னைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையின் காரணமாக இத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். இதனை கருத்தில் கொண்டே கோட்டாபய ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  விடயத்திற்கும் முக்கியத்துவம் வழங்கியிருந்தார்.   இத் துறையின் வரி மூலம் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இத்துறை மேலும் அபிவிருத்தி அடைவதுடன் நாட்டுக்கான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வருமானம் மேலும் அதிகரிக்கும். 

வருமான வரியை குறைக்கப்பட்டுள்ளது 1,50,000வருமானம் பெறுபவர்களுக்கும் கடந்த அரசாங்கத்தில் வரி விதித்திருந்தனர். இதனால் நடுத்தர அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பாரிய கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்தனர். 2,50,000இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களுக்கே தற்போது வரியை விதிக்கப்படுகின்றது. 

இரண்டரை இலட்சத்திற்கு 6சதவீத வரி அறவிடப்படும். அதுவும் மூன்று கட்டங்களாக அறவிடப்படுகின்றது. இரண்டரை இலட்சத்திலிருந்து இன்னும் இரண்டரை இலட்சம் அதிகரிக்கப்பட்டால் 6சதவீதத்திலிருந்து 12சதவீதமாக வரி வீதம் அதிகரிக்கும். ஆகக்கூடுதலாக 18சதவீதம் வருமான வரி அறவிடப்படும். ஆனால், கடந்த அரசாங்கம் எவ்வித முறைமைகளுமின்றி 24சதவீத வரியை அறவிட்டிருந்தது.    புள்ளி விபரங்களின் பிரகாரம் அரசாங்கத்தின் ஒருநாள் செலவு 7.2பில்லியன்களாகும். ஆனால், அரச வருமானம் 5.2பில்லியன்களாக தான் உள்ளது. ஆகவே, நாம் வினைத்திறனுள்ள வகையில் அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களை மாற்றியமைக்கவுள்ளோம். அதற்காகவே தொழில்வாண்மைமிக்க சிறந்த பணிப்பாளர்களையும், தலைவர்களையும் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார்.   அடுத்தாண்டு வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை 5சதவீதமாக பேணுவதே எமது இலக்காகும். அதற்காகவே அரச செலவீனங்களை பாரிய அளவில் குறைத்துள்ளோம். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உட்பட அரசின் அடிமட்டம் வரை செலவுகளை குறைத்துள்ளோம்.   ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் 10பேர் கொண்ட சிறிய குழுவொன்றே சென்றுள்ளது. இதற்கு முன்னர் ஒரு ஜனாதிபதி சென்றால் 150அல்லது 200பேர் வரை அவருடன் செல்வர். ஆகவே, நாம் புதிய முன்னுதாரத்தை காட்டியுள்ளோம். 

அதேபோன்று வங்கித் துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ச இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் உட்பட பணியாளர் குழாமுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். சகித்துக்கொள்ள முடியாத வகையில் கடன் சுமையிலுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா? என அவர் மத்திய வங்கி ஆளுநரிடம் வினவியுள்ளதுடன், ஒரு வாரகாலத்துக்குள் அதற்கு பதிலளிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். 

நிலையான வைப்புகளுக்கு கிடைக்கும் வட்டி மீதான வரியை நீக்குவதற்கு நாம் முடிவுசெய்துள்ளோம். குறிப்பாக அந்த   வட்டி வருமானத்தில்தான் ஓய்வுபெற்ற பல அரச ஊழியர்களும் சில முதியவர்களும் தமது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். குறிப்பாக தமதுக்குத் தேவையான மருத்துவச் செலவுகளையும் அதில்தான் அவர்கள் பூர்த்தி செய்கின்றனர். அதேபோன்று சிறுவர்களுக்காக பெற்றோர் சேமிக்கும் சிறுவர் கணக்குகளுக்கும் வரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே, இவை அனைத்தையும் நாம் நீக்கியுள்ளோம்.   நாம் செய்துள்ள இந்த மாற்றத்தின் பிரதிபலன்களை அடுத்தாண்டில் மக்கள் அனுபவிப்பர். என்றாலும், வரிக் குறைப்பால் உடனடியாகவும் சில பிரதிபலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நீண்டகாலமாக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகனை பயன்படுத்துபவர்கள் குறைந்தளவான கட்டணத்தையே செலுத்துகின்றனர். 30, 40வருடங்களாக இந்நிலை தொடர்கிறது. 

அதனை நாம் மாற்றி வரியற்ற முறையில் அரச வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளை செய்வோம். அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் இதனைவிடவும் பல நன்மைகள் கிடைக்கும். அத்துடன், மக்களுக்கான சலுகை பொதிகளும் விரைவில் வரும் என்றார்.    

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments