AIDS: பாதுகாப்பான பாலுறவொன்றே தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

AIDS: பாதுகாப்பான பாலுறவொன்றே தீர்வு

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு என்பது மனித சமுதாயத்தின் பெரும் சொத்தாக கருதப்படுகின்றது.  

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறிவைத்தனர் நமது முன்னோர். எவ்வாறாயினும் இன்றைய காலகட்டத்தில் விரைந்த சமுதாய பண்பாட்டு பொருளாதார மாற்றங்களினால் மனித வாழ்வின் ஆரோக்கியம் என்பதும் பல்வேறு சவால்களுக்கும் உள்ளாகியுள்ளது. புறவுலகை வெற்றி கொண்ட மனிதன், தனது அகவுலகை வெல்ல முடியாமல் கீழான உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து மனித மாண்பையே இழந்து வருகின்றான். இத்தகைய ஒழுக்க சீர்குலைவின் விளைபேறாக மனித குலத்தை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக கடந்த நூற்றாண்டில் அறியப்பட்டதே எயிட்ஸ் நோயாகும். அடிப்படையில் எயிட்ஸ் என்ற பதத்தின் விரிவாக்கம் Acquired Immuno Deficiency Syndrome (AIDS) என்பதாகும். மனித உடலில் உள்ள அடிப்படையானதும் பிரதானமானதுமான நோயேதிர்ப்பு சக்தி இல்லாமல் போகின்ற நிலையே இதுவாகும்.  

ஓவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ம் திகதி அனைத்துலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுவது யாவரும் அறிந்ததே. இத்தினத்திலே ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் தேசிய அரசாங்கங்கள், சுகாதார தொண்டு நிறுவனங்கள், வெகுசன தொடர்பு சாதனங்கள் வரையிலும் காத்திரமான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் அனைவரும் ஒன்றிணைந்து எயிட்சை இல்லாது ஒழிப்போம் என்பதாகும். எனவே காலத்துக்கு பொருத்தமான வகையில், அனைத்துலக எயிட்ஸ் தினத்தின் வரலாறு, எயிட்ஸ் நோயின் தாக்கம், இதன் மருத்துவ பக்கங்கள், எயிட்ஸ் இன் சமூக பண்பாட்டு பரிமாணங்கள், இந்நோயில் இருந்து மனித குலம் விடுபடுவதற்கான வழிவகைகள் என்பனபற்றி சுருக்கமாக சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

அனைத்துலக எயிட்ஸ் தினம்  

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் ஜெனிவாவில் இடம்பெற்ற உலக சுகாதார அமையத்தின் ஓர் உலக நிகழ்ச்சி திட்டத்தில் பங்கெடுத்த இரு அதிகாரிகளின் எண்ணக் கருவில்தான் இத்தினம் பற்றிய சிந்தனை உதயமாகியது. இதன் படி 1988ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி அனைத்துலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படலாகிற்று. முதலிரு வருடங்களும் எயிட்ஸ் தினத்தின் கருப்பொருள்களாக குழந்தைகளும், இளைஞர்களுமே இலக்கு வைக்கப்பட்டனர். ஏனெனில், இந்நோய் மூலமான மிகமோசமான எதிர்விளைவுகளை அவர்களே சந்தித்தனர்.  

இத்தகைய முன்னெடுப்புக்களின் வளர்ச்சி நிலையாக 1996 ஆம் ஆண்டு தொடக்கம் உலகளாவிய எயிட்ஸ் ஒழிப்பு, விழிப்புணர்வு, தடுப்பு முதலான செயற்பாடுகளில் ஐ.நா சபையும் அர்ப்பணிப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு அமைப்புக்களின் கோரிக்கைக்கு இணங்க எயிட்ஸ் தினம்   என அழைக்கப்படலாயிற்று. எயிட்ஸ் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் ஆற்றும் பொருட்டு எயிட்ஸ் உலகளாவிய நிகழ்ச்சித் திட்டம் எனும் தலைப்பில் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பானது பரந்த அடிப்படையில் எயிட்ஸ் தொடர்பான ஆய்வுகள், எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.  

எச்.ஐ.வி பற்றிய அடிப்படை உண்மைகள்   என்பதன் சுருக்கமே    என்பதாகும். இந்த வைரசானது என்று அழைக்கப்படுகின்ற மனித உடலின் மிகப்பிரதான கலங்களை மிகமோசமாக தாக்க ஆரம்பிக்கும். இதன் அடுத்த கட்டமாக உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாமல் போகும் அபாய நிலை ஏற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மரணத்தை தழுவும் நிலை ஏற்படலாம்.  

HIV தொற்றுக்கான காரணங்கள்  

HIV உண்மையில் ஒரு நோயன்று மாறாக அது ஓர் குறைபாடாகும். இத் தொற்று ஏற்படுவதற்கான காரணங்களாக மருத்துவர்கள் பின்வருவனவற்றை எடுத்துரைக்கின்றனர்.  

- இரத்தம்
- விந்தணுக்கள்
- பெண்உறுப்பு இழையம்/ பெண்உறுப்பு வாசல்
- பாதுகாப்பற்ற அல்லது
- எழுந்தமானமான இரத்தப்
- பரிமாற்றம்
- முகச்சவரம்
-இயற்கைக்கு மாறான/ பாதுகாப்பற்ற உடலுறவுச் செயற்பாடுகள் (வாய் வழி உறவு, குதவளி உறவு, தன்னின சேர்க்கை, வேறு செயற்பாடுகள்)
- தாய்ப்பால் 

மேலைத்தேயத்தை பொறுத்தவரையில் பாரம்பரியமான பண்பாட்டு விழுமியங்களின் வீழ்ச்சி, குடும்ப அலகின் உடைவு, தகாப்புணர்ச்சி, அதீத பாலியல் வேட்கை முதலானவையும் HIV தொற்றின் தீவிர பரம்பலுக்கு காரணங்களாக அமைகின்றன.  

இதேவேளை ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளமை பற்றி அறிந்து கொள்வதற்கான அறிகுறிகளாக பின்வரும் தன்மைகளை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

- தொடர்ச்சியான காய்ச்சல் 
- மூட்டுவலி 
- தசைநார்களில் வலி 
- தொண்டை வலி 
- இரவு நேரத்தில் அதிக வியர்வை 
- உடலில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள் 
- அதித களைப்பு 
- பலவீனம் 
- திடீரென்று ஏற்படும் உடல் மெலிவு 
- அதிக தாகம்  

கால ஓட்டத்தில் HIV தொற்றுக்கு உள்ளானவர் மிகப்பாரதூரமான தொடர் வியாதிகளுக்கு ஆளாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  

இலங்கையிலும் HIV பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம் என்பன கணிசமான ஈடுபாட்டுடன் செயற்படுகின்றன. 2017 ஆம் ஆண்டளவில் மட்டும் சுமார் 28.9 மில்லியன் அளவான மக்கள் உலகளாவிய ரீதியில் தமது இன்னுயிரை இழந்துள்ளனர். அதேவேளை 36.7 மில்லியன் மக்கள் HIV வைரசுடன் உயிர் வாழ்கின்றனர். ஆபிரிக்காவின் உபசகாரா பிராந்தியம், கிழக்கு மற்றும் தென்னாபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா பிராந்தியங்கள் இந் நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிய, பசுபிக் பிராந்தியங்களை பொறுத்தவரை தாய்லாந்து, மியன்மார், இந்தியா, கம்போடியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் இதன்தாக்கம் தனது சுவடுகளை பதித்துள்ளது. சமுக பண்பாட்டு ரீதியில் எயிட்ஸை இல்லாது ஒழிக்கும் கடப்பாடு நம் அனைவரையும் சேர்ந்ததாகும்.  

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்  ஐவத்தூறு போலக் கெடும் என்பது வள்ளுவம்.  

பாலியல் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதையும், அதற்கும் வரையறை உண்டு என்பதையும் மனிதர்கள் யாவரும் மனங்கொள்ளல் வேண்டும்.

ஒழுக்க விழுமியங்களை உயிர்நாடியாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர், மதத்தலைவர்கள் ஆகியோரின் பொறுப்பாகும். இன்றைய பூகோள மயமாதல் சூழலில் கையடக்க தொலைபேசி, இணையத்தளம், முகநூல், இதர நவீன தொடர்பாடல் முறைமைகளையும் கட்டுப்படுத்துதலும் அவசியமாகின்றது. எனவே, இவ்வருட தொனிப்பொருளுக்கு ஏற்ப எமது நாட்டு அரசாங்கம், சட்டவாக்க துறையினர், பெற்றோர், ஆசிரிய சமுகத்தினர், ஊடகத்துறையினர் யாவரும் ஒன்றிணைந்து எயிட்ஸ் எனும் பொல்லாத அரக்கனை சமூக கட்டமைப்பில் இருந்து விரட்டியடிப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோமாக.

எயிட்ஸ் கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால்...

ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை அவதானித்திருக்கலாம்.  இந்தச் சூழ்நிலையில் உடனடியாகச் செய்ய வேண்டியவை எவை? 

உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M.O.H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.   

எயிட்ஸ் நோயாளிகள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள்?

எயிட்ஸ் நோயாளிகள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எமக்கு எல்லோருக்கும் இருக்கும். இதற்கான ஒரே பதில் சரியான விழிப்புணர்வு இன்மை. இது எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை காணப்படும் பொதுக்கேள்வி, விழிப்புணர்வினாலும் தீர்க்கப்பட முடியாமல் இருக்கிறது. ஒரு HIV தொற்று அந்த நோயாளியின் உடல் சார்ந்த சகல அதிகாரத்தையும் இழக்கவைக்கிறது. அதாவது, அவர் தொடத்தகாதவர். அவர் உடலுறவு கொள்ள தகுதியற்றவர். அவர் சமூகத்தின் மத்தியில் ஒரு அடிநிலைத் தனியனாக மாறிப்போகிறார். அப்படி என்றால் உடலின் பாலியல் தன்மையை அது சார்ந்த எதிர், நேர் விடயங்களைக்கொண்டா ஒரு மனிதன் சமூகத்தில் பழகக்கூடியவன், பழகமுடியாதவனாக தீர்மானிக்கப்படுகிறான்? இதற்கு விடையளிப்பதற்கு எந்தப் பதிலும் இல்லாமல் போகிறது. ஆனாலும், எயிட்ஸ் நோயாளிகள் இயற்கை மரணத்தை விட சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்னொரு பகுதியினர் உயிரியல் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டு சமூகத்தில் பலருக்கு இந்த நோயைப்பரப்புவதில் தீவிரமாக இருக்கின்றனர். அதனால் நாம் சரியான விழிப்புணர்வுடன் அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்காமல் இருப்பது நமது கடமையெனக் கருதலாம்.   

முத்தமிடுவதால் HIV பரவுமா?

முத்தமிடுவதால் HIV பரவாது. கன்னத்தில் முத்தமிடுவது ஒரு பாதுகாப்பான முறை. அதேவேளை மற்றவருக்கு நோய்த்தொற்று இருந்தாலும் உங்களின் சேதமடையாத தோல் உங்களை பாதுகாக்கிறது. சாதாரண முத்தம் மூலமாகவும் கட்டித் தழுவுதல், கை குழுக்குதல் போன்றவற்றால் இந்நோய் பரவ வாய்ப்பில்லை. உதட்டோடு உதடுசேர்த்து முத்தமிடும்போது வாய் அல்லது உதடு காயமடையக் கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். அதன்போது HIV வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் நோய்க்கிருமிகள் வாயிலுள்ள காயம் அல்லது புண் ஊடாக மற்றவரின் உடலுக்குள் உட்புகும் சாத்தியக்கூறுகள் உண்டாகலாம்.    

சலூனில் முடிவெட்டிக்கொள்வதன் மூலம் அல்லது பச்சை குத்திக்கொள்வதன் மூலம் HIV பரவுமா? 

முடிவெட்டும்போது காயம் ஏற்பட்டு அதனூடாக நோய்த்தொற்றுக் காரணிகள் உடலுக்குள் செல்லாதவரை பிரச்சினையில்லை.

தற்பொழுது சலூன்களில் முடிவெட்டும்போது அல்லது சவரம் செய்யும்போது பாவித்துவிட்டு வீசும் பிளேட்களே (Blade) பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றன. இது ஒருவருக்கு மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இதனால் Hepatitis-B, HIV போன்ற நோய்க்கிருமிகள் இரத்தத்துடன் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறலாம்.  தொற்று நோய்க்கு ஆளான ஒருவரின் இரத்தத்தினால் மாசுப்படுத்தப்பட்ட உபகரணங்களை தொற்று நீக்காமல் வேறொருவரின் உடம்பில் பயன்படுத்துவதன் மூலம் HIV தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எவ்வாறாயினும் மக்கள் தங்கள் உடம்பில் குத்திக்கொள்வதற்கும், பச்சைக்குத்துவதற்கும் சர்வதேச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி உபகரணங்களை பாவிப்பது நல்லது. ஏனெனில் இவைகள் இரத்தம் மூலம் Hepatitis-B மற்றும் HIV போன்ற தொற்றுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

எச்.ஐ.வி தொற்று உள்ளவர் திருமணம் செய்யலாமா?  

எச்.ஐ.வி தொற்று உள்ளவர், தொற்று இல்லாத ஒருவரைத் திருமணம் செய்தால் அத்தொற்று அப்பாவியான துணைக்குத் தொற்றிவிடும். மூடி மறைத்து திருமணம் செய்வது பாவம். எனினும், எச்.ஐ.வி தொற்றுள்ளவர், இன்னொரு தொற்றுள்ளவரைத் திருமணம் செய்யலாம். மரணம் நிச்சயம் எப்பொழுதும் சம்பவிக்கலாம் என்பதை அறிந்துகொண்டு திருமணம் புரிய வேண்டும். திருமணம் செய்துகொண்டாலும் குழந்தைகளைப் பெறக்கூடாது. பிறக்கப்போகும் குழந்தைக்கு கருவிலோ அல்லது பிரசவத்தின்போதோ அல்லது குழந்தை பிறந்த பின்னர் பாலூட்டினாலோ தொற்று ஏற்படலாம். பிறக்கும்போதே எச்.ஐ.வி தொற்று என்பது எவ்வளவு கொடுமையானது!    

சந்திரசேகரன் சசீதரன்
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சமுகவியற்துறை,  கிழக்குப்பல்கலைக்கழகம்.     

Comments